அருள்வாக்கு

தமிழ் வித்வான்களும் ஸ்ரீமடமும்!
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்எப்படியாவது தமிழ்ப் பெரியார்களுக்கெல்லாம் மடத்திலே ஒரு சம்பந்தம் ஏற்படுத்திப் பார்ப்பதில் எனக்கு ஒரு திருப்தி. ஏனென்றால், நம் மடம் என்றால் வெளியிலே என்ன நினைக்கிறார்கள்? அங்கே சம்ஸ்கிருதத் துக்குத்தான் எல்லா முக்கியமும் என்றே நினைக்கிறார்கள்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ‘உபய வேதாந்தம்’ என்று சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டையும் போஷிக்கிறாற்போல், இந்த ஸ்மார்த்த மடத்தில் இல்லையே என்று நினைக்கிறார்கள். இதற்கு ஹிஸ்டாரிகலாக ஒரு காரணம் உண்டு. ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ‘ஆல் இண்டியா பேஸி’லேயே (அகில இந்திய அடிப்படையிலேயே) தம்முடைய அவதார காரியத்தைச் செய்தவர்.

இந்தப் பெரிய தேசத்தின் தக்ஷிணத்தில் காஞ்சிபுரத்திலும், சிருங்கேரியிலும் செய்தாற்போலவே வடக்கு-மேற்கு-கிழக்கு எல்லைகளிலும் முறையே பத்ரி, துவாரகை, பூரி ஜகந்நாதம் ஆகிய இடங்களிலும் அவர் மடங்கள் ஸ்தாபித்து, இன்றளவும் அந்தப் பீடங்களில் ஆசார்யர்கள் இருந்து வருகிறார்கள். ஆகையினால் எந்த ஒரு பிரதேசத்தையும் சேர்ந்ததாக இன்றி, தேசம் பூராவுக்கும் உள்ள சகல வேத - சாஸ்திரங்களுக்கும் உரிய சம்ஸ்கிருதத்தோடு மாத்திரம் சங்கர மடங் களுக்கு விசேஷ சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் நம்முடைய மடத்துக்குத் தமிழ் சம்பந்தமும் இல்லாமல் போய்விடவில்லை. அந்தந்தக் காலத்தில் இருந்து வந்திருக்கிற ஆசார்யர்களிடம் தமிழ்ப் புலவர்கள் தங்கள் புலமையைத் தெரிவித்துக் காட்டி பிரசாதம், சம்பாவனை பெற்றுப் போயிருக்கிறார்கள். ஸ்வாமிநாதையரே சொல்லியிருக்கிறார் - அவருடைய இளவயசிலே, அவருக்குப் பதினெட்டு இருபது வயசு இருக்கிறபோது, அதாவது இந்த 20-ஆம் நூற்றாண்டு பிறப்பதற்கு இருபது இருபத்தைந்து வருஷம் முந்திகூட அவர் நம்முடைய மடத்துக்கு வந்திருக்கிறார். மடத்துப் பண்டிதர்கள் அவருடைய பிரசங்கங்களைப் பாராட்டியிருக்கிறார்கள். அப்போது ஆசார்யர்களாக இருந்த இளையாத்தங்குடிப் பெரியவாளிடம் அவர் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார்.

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் பேதப்பட்டு நிற்க ஆரம்பித்தது முக்கியமாக இந்த 20-ஆம் நூற்றாண்டில்தான். இதை எப்படியாவது ஆதியில் இருந்த மாதிரி ஐக்கியப்படுத்திவிட வேண்டும்; எல்லோரையும் சந்திரமெலீஸ்வரர் சந்நிதானத்தில் அவர் குழந்தைகளாக ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் எனக்கு எப்போதும் நினைப்பாயிருக்கிறது. அதனால் சம்ஸ்கிருதப் பண்டிதர்களைப் போலவே தமிழ் வித்வான்களையும் ஸ்ரீமடத்தில் ஆதரித்து சம்மானிக்க ஆரம்பித்தது. இந்த ரீதியிலேதான் ஸ்வாமிநாதையரையும் மடத்தின் பக்கம் வரப்பண்ணி, தத்-த்வாரா (அதன்மூலம்) தமிழுலகத்துக்கு வைதிகாசாரங்களில் அபிமானம் வளர்வதற்குச் சகாயம் செய்ய நினைத்தது.

உ.வே.சா. செய்த பணி தமிழ்ப்பாட்டி தானே ஒரிஜினலாகப் பாடியவள். பாட்டினால் தர்ம போதனை பண்ணினவள். தமிழ்த் தாத்தா முக்கியமாக ஆராய்ச்சியாளர்தான். ஏற்கெனவே இருந்த நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தவர். அரைகுறையாய்க் கிடைத்த பல நூல்களை முழுதாகக் கண்டுபிடித்து பூர்ணரூபத்தில் கொடுத்திருக்கிறார். மூலம் அடியோடு மறைந்தே போய், எங்கேயோ மேற்கோள்களில் பிரஸ்தாபிக்கப்பட்டதால் மட்டும் துளித் துளி தெரிந்த நூல்களையும் தேடு தேடு என்று தேடிப்போய், கண்டுபிடித்துப் பிரகாசப்படுத்தியிருக்கிறார். எங்கேயாவது ஒரு அபூர்வமான சுவடி இருக்கிறது என்று கேள்விப்பட்டுவிட்டால் போதும், உடனே எப்பாடுபட்டாவது, எத்தனை அலைச்சல் அலைந்தாவது, யாரானாலும் அவரிடம் கெஞ்சி மன்றாடியாவது அதைப் பெற்றுவிடுவார். இப்படி அவரால் புத்துயிர் பெற்ற தமிழ் நூல்கள் ஏராளம்.

அவருடைய பதிப்புகளிலெல்லாம் இருக்கிற விசேஷம் என்னவென்றால், பல பிரதிகளை ஒப்பிட்டு பாட பேதங்கள் கொடுத்திருக்கும்; விளக்க வேண்டிய விஷயங்களுக்கெல்லாம் ‘விசேடக் குறிப்பு’ என்று கொடுத்திருப்பார்; பழைய உரைகளில் தமக்குப் புரியாத மேற்கோள் களைத் தனியாக, ‘விளங்காமேற்கோளகராதி’ என்று கொடுத்திருப்பார். ஒரு ரிசர்ச் - ஸ்டடிக்கு இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் அவற்றில் சிறப்பாக இருக்கும்.ஆனால் தமிழ்ப் பாட்டியைப் போல் இந்தத் தாத்தாவுக்கு நீதி போதனைக்காக ஏற்பட்ட ஒன்றாக பாஷை இல்லை. பாஷைக்காகவே பாஷை என்று பணி செய்தார். அதனால் வைதிக தர்மத்துக்கு வேறான சமண சமயத்தை சமயம் நேர்ந்தபோதெல்லாம் வலியுறுத்தும் ‘சீவக சிந்தாமணி’ போன்ற நூல்களைக்கூடப் பதிப்பித்திருக்கிறார். நம்முடைய தமிழின் உயர்ந்த இலக்கிய பாரம்பரியம் தெரிவதற்கு அவருடைய இந்தத் தொண்டு நிரம்ப உபகாரம் செய்துதான் இருக்கிறது. அதனால், அவர் செய்த ஆராய்ச்சிப் பணிகளைக் கவனித்து அவ்வப்போது அவரைப் பாராட்டி ஊக்கி, அவரை மடத்தின் பக்கம் நெருங்கிவரப் பண்ணினேன்.

அவர் பெரிசாகத் தமிழ் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறாரென்றால் நானும் ஏதோ கொஞ்சம் இந்த விஷயத்திலே என் ‘சாமர்த்தியத்’தைக் காட்டியிருக்கிறேன். இதிலே ஒன்று, இரண்டு அவர் வருகிறபோது ‘அவிழ்த்து’விடுவேன். அவருக்கு உச்சி குளிர்ந்துவிடும். சம்ஸ்கிருதத்துக்கு என்றே ஏற்பட்ட மடம் என்று நினைக்கப்படும் ஒன்றின் ‘தம்பிரான்’ தமிழில் கைவரிசை காட்டுகிறாரே என்பதில் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷம் வளர்ந்து வளர்ந்து, நம்முடைய மடத்தில் நல்ல அபிமானமும், பகவத்பாதாளிடம் பக்தியுமாக உறுதிப்பட்டன. காலக்கிரமத்தில் நமக்குத் தப்பாமல் வியாஸ பூஜா காணிக்கை அனுப்ப ஆரம்பித்துவிட்டார்! நான் ஆசைப்பட்ட படி நம் தர்மாசாரங்களில் அவருக்கு நல்ல பற்று ஏற்பட்டுவிட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :