யார் கடவுள்?


வசந்தா
விஜய்டாலிதிருவல்லிக்கேணி தேரடித் தெரு விடிகாலை நான்கு மணிக்கே விழித்துக் கொள்ளும். பால்காரர்களும் பேப்பர்க்காரர் களும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள். முகுந்தனுக்கு விழிப்பு வந்து விட்டது. மணி பார்த்தார். நாலு மணி. நாலரைக்கு அலாரம் அடிக்கும். வத்சலா எழுந்து விடுவாள். அவர்களுடையது ஒரு படுக்கையறை வீடு. வீடு என்று சொல்வதை விடக் கொஞ்சம் பெரிய ஸ்டோர் ரூம் என்று சொல்லலாம். வீட்டுச் சொந்தக்காரர் இவர் நிலையைப் பார்த்து 9000 ரூபாய் வாடகை போதும் என்று சொல்லிவிட்டார். இந்த இடத்தில் குறைந்தது 10,000 போகும். ரொம்ப நாள் இதே வீட்டில் இருப்பதால் இந்தச் சலுகை. இதுவே அவருக்குக் கொஞ்சம் அவமானமாய்த்தான் இருக்கும். யாரிடமும் எந்தச் சலுகையும் பெறக்கூடாது என உறுதி யாய் இருந்தார். இவர் வாங்கும் சம்பளத்தில் ஏறத்தாழ முக்கால் பங்கு மூத்த பையன் சரவணனுக்கே போய் விடுகிறது.

அவனைத் திரும்பிப் பார்த்தார். இரவு விளக்கு வெளிச்சத்தில் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது. அவன் பெயருக்கேற்ற மாதிரிக் கொள்ளை அழகு. அழகைக் கொடுத்த ஆண்டவன் குழந்தையை நடமாடவிடாமல் பண்ணிவிட்டானே எனப் பெருமூச்சு வந்தது. போன ஜென்மத்தில் என்ன பாவம் செய் தேனோ என யோசனை வந்தது.

சென்ற வாரம் அவரது குடும்ப டாக்டர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவனுக்கு ஆரம்பம் முதலே இவர்தான் பார்த்து வருகிறார். முதலில் எத்தனையோ மருத்துவ மனைகளுக்கு அலைந்து பார்த்துவிட்டு கடைசியில் இவர்தான் சரவணனின் நிலை மையை உண்மையாய்க் கூறினார். மற்றவர் களெல்லாம் பொய்யான நம்பிக்கை அளித்துப் பணம் பிடுங்குவதில்தான் குறியாய் இருந் தனர்.

ஐந்து வயது வரை குழந்தை ஓடி ஆடி விளையாடிக்கொண்டுதான் இருந்தான். அவன் சிரிப்பும் பேச்சும் எல்லோரையும் அவன் பால் ஈர்க்கவைக்கும். பார்க்கும் எவரும் அவனைப் பார்த்து அவனைக் கொஞ்சிவிட்டுத்தான் கடந்து போவார்கள். இப்போதும் இவனைக் கூட்டிப்போனால் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள்தான். ஆனால் பார்வைதான் வித்தியாசப்படுகிறது. இப்போது பார்வையில் பச்சாதாபம் மட்டுமே. இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போதுதான் சரவணனுக்குப் பெயர் தெரியாத ஒரு காய்ச்சல் வந்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. கையும் காலும் உதறியது. உடனே பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். என்னென் னவோ டெஸ்ட் எடுத்தார்கள். டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தினார்கள். உதறல் நின்றதே யொழிய கையும் காலும் இயங்கவில்லை. அவர்களிடமிருந்த சேமிப்பும் போய் வத்சலா விடமிருந்த ஒன்றிரண்டு நகையும் அடகு வைத்தாயிற்று. இதற்கிடையில் பிரசவ வலி வந்து அவளை வீட்டுச் சொந்தக்காரரின் மனைவிதான் பக்கத்திலுள்ள கோஷா ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனாள். யார் செய்த புண்ணியமோ சுகப்பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை.

முகுந்தனின் பெற்றோர் அவருக்குக் கல்யாணம் முடிந்தவுடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்கள். இளம் தம்பதி தனியாகக் கொஞ்ச நாள் இருக்கட்டுமே என்று நினைத் துத்தான் கிளம்பினார்கள். பாதி யாத்திரையின் போதே பேருந்து விபத்தில் இறைவனை நேரில் பார்க்கவே போய் விட்டார்கள். வத்சலா அம்மா கொஞ்சம் உடம்பு முடியாத வர்கள். சரவணன் பிறக்கும்போது உதவிக்கு வந்த அவருக்கு இவர்கள்தான் உதவும்படி யாகி விட்டது. கிராமத்தில் வத்சலாவின் அண்ணன் வீட்டில் ஏதோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவை யாவது பார்த்துக் கொள்கிறார்களே என்று இவர்களும் அண்ணனைத் தொந்தரவு செய்வ தில்லை.

இன்னிக்கு என்னவோ நினைக்கத் தொடங்கி எங்கெல்லாமோ மனது போகிறதே என நினைத்தார். திரும்பவும் டாக்டர் சொன் னது நினைவுக்கு வருகிறது.

“உங்கள் மகன் உட்கார முடிந்தால் போதும் எனப் போன முறை வந்தபோது சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் போன வாரம் ஒரு கருத்தரங்குக்கு சிங்கப்பூர் போயிருந்தேன். சரவணன் போன்ற இதே பிரச்னையுள்ள ஒரு குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணி இப்போது அவனால் உட்காரமுடி கிறதாம். கொஞ்ச நாளில் வாக்கர் துணையுடன் நடக்கக்கூட முடியலாம் என்று சொன்னார் கள். எனக்குச் சரவணன்தான் நினைவுக்கு வந்தான். ஆனால் அதற்கு ஆகும் செலவைக் கேட்டால் எனக்கே தலை சுற்றியது. போக வர, தங்குவதற்கு, ஆபரேஷனுக்கு எல்லாம் சேர்ந்து நம்முடைய பணத்தில் ஏறத்தாழ எழுபத்தைந்து லட்சம் ஆகுமாம். அதுதான் என்ன செய்ய முடியும் என எனக்கும் தெரியலை” என்று சொன்னார். இதைக் கேட்டதிலிருந்து இவருக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் யோசனை ஓடிக் கொண்டே இருக்கிறது.

அலாரம் அடித்துவிட்டது. அரைமணி நேர மாக வாழ்க்கையையே ஒரு ரவுண்டு வந்துட் டோமான்னு நினைத்துக்கொண்டே படுக்கை யிலிருந்து எழுந்திருக்கிறார். அவரும் சரவண னும் பெட்ரூமில் அவனுக்குக் கட்டில் இவர் கீழே. திடீரென்று இரவில் பாத்ரூம் கூட்டிப் போக வேண்டியது வரும். அதனால் அவர் இங்கே. அம்மாவும் பெண்ணும் ஹாலில்.

வத்சலா எழுந்து வந்து, “என்ன நீங்களும் எழுந்திட்டீங்களா? கூடக் கொஞ்ச நேரம் படுத்திருங்க. நான் பல் தேய்த்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போய் விட்டாள்.

இவருக்குப் படுக்க மனசில்லை. வாசல் கதவைத் திறந்து பால் பாக்கெட்டுகளை எடுத்துவந்து மேடையில் வைத்தார். காபி போடுவதற்கான பாத்திரத்தை எடுத்துத் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஃபில்டரில் காபிப் பொடி போட்டு அதை லேசாக அழுத்தி, கொதித்த தண்ணீரை மெதுவாக விட்டார். அதற்குள் வத்சலா வந்துவிட்டாள்.

“நான் பார்த்துக்கறேன். நீங்க போய் ‘பிரஷ்’ பண்ணிட்டு வாங்க” என்றாள்.

இவர் போய் விட்டு ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட்டார். அதற்குள் சுவாமி விளக் கேற்றிப் பால் நைவேத்தியம் செய்துவிட்டு இவருக்குக் காபி கலந்து தந்தாள்.

குளித்துவிட்டு சமையல் செய்ய ஆரம்பித் தாள். இவர் காய் நறுக்கிக் கொடுத்து, தேங்காய் துருவிக் கொடுத்து, சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் செய்து கொடுத்தார்.

ஏழு மணியாகிவிட்டது. புவனாவை எழுப் பினார். அவள் சிணுங்கிக்கொண்டே எழுந் தாள். மணி பார்த்துவிட்டு அவளே மடமட வெனத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண் டாள். இந்த வயதிலேயே குடும்ப நிலை புரிந்து கொண்டவள்.

அவள் பாத்ரூமிலிருந்து வந்தவுடன் முகுந்தன் சரவணனை எழுப்பினார். அவன் எழுந்து உட்கார முயற்சி செய்தான். இவர் உதவினார். அப்போதும் அவனால் உட்கார முடியவில்லை. ஒரு பக்கமாகச் சரிந்தான். மெதுவாய் பாத்ரூமுக்குத் தூக்கிப் போனார். அவரால் இப்போதெல்லாம் அவனைத் தூக்க முடியவில்லை. வத்சலாவும் ஒரு பக்கம் தாங்கிக்கொண்டாள். புவனா வழக்கம் போல் பிளாஸ்டிக் சேரை கொண்டுவந்து போட்டாள். அவர்கள் வெளியே சென்ற பின் இவர் அவனுக்குக் காலைக்கடன் முடித்திட உதவி னார்.

“அவனுக்கு இப்போதெல்லாம் ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. இதைக்கூட என்னால் தானாகச் செய்ய முடியாமல் போய்விட்டதே” எனக் கலங்கினான்.

போன வருடம் வரை நடக்க முடியவில்லை யென்றாலும் உட்காரவாவது முடிந்தது. அப்போதெல்லாம் இவர் கொண்டு விட்டு விட்டு வெளியில் நிற்பார். திரும்ப அவன் கூப்பிட்டதும் வருவார். அவர் வந்து கொஞ்சம் உதவி செய்தால்தானே சுத்தம் செய்து கொள் வான். இப்போது நேராக உட்காரக் கூட முடியாததால் முழுக்க அவரே எல்லாம் செய்யவேண்டியுள்ளது.

அவனுக்கு எல்லாம் முடித்து அவனைக் கொண்டு ஹாலில் உள்ள திவானில் படுக்க வைத்தார். பகல் பொழுது முழுக்க அங்கு தான் இருப்பான்.

தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த சங்கீதம், செய்திகள், அவனுக்குப் பிடித்த டிராவல் புரோகிராம் எல்லாம் பார்ப்பான். புவனா பக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பதால் அவளே நடந்து போய் விடுவாள்.

முகுந்தன் கிளம்பி அலுவலகம் வந்து விட்டார். மாநில அரசின் ஒரு துறையின் தலைமை அலுவலகத்தில் கிளார்க். இப்போது நான்கைந்து மாதங்களாக ஒரு புது இருக்கை யில் வேலை பார்க்கிறார். இது மாநில அளவில் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் வழங்குவது தொடர்பானது என்பதால் இதற்குப் போட்டி அதிகம்.

தற்போதுள்ள அலுவலர் நேர்மையானவர் என்பதால் தனக்கேற்றவாறு தனக்குக் கீழ் உள்ளவரும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் இவரை இவ்விருக்கைக்குச் சிபாரிசு செய்து ஆணை வழங்கச் செய்தார். அவர் நம்பிக்கைக்கு ஏற்ப முகுந்தன் உடனுக் குடன் நடவடிக்கை எடுத்துத் தகுதியில்லாத வற்றை நிராகரிக்கப் பரிந்துரை செய்தார். அலுவலரும் இதையே விரும்பியதால் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந் தது. நிறுவனத்தாரும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.

புத்தாண்டுக்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் தனியார் நிறுவனங்களிலிருந்து டயரி, காலண்டர் இவற்றுடன் ஸ்வீட் பாக்ஸ், சின்னச் சின்னப் பரிசுப் பொருட்கள் எல்லாம் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார் கள். காசு வாங்காதவர்கள் கூட இதெல்லாம் வாங்குவதில் தவறில்லை என்ற எண்ணத்

துடன் வாங்கிக் கொள்வார்கள்.

முகுந்தனுக்குத் தவறு என்றால் இதுவும் தவறுதான் என்ற எண்ணம். வருபவர்களிடம் சிரித்துக்கொண்டே மறுத்துவிடுவார். பெரும் பாலும் நிறுவனத்தின் சாதாரண நிலை ஊழியர்கள்தான் வருவார்கள். இவர் வேண்டாமென்றால் தங்களுக்கு வேண் டியவர்களுக்குக் கொடுத்துக் கொள்ளலா மென எடுத்துச் சென்று விடுவார்கள்.

மூன்று மணி வாக்கில் சிரித்த முகத்துடன் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். இவரிடம் அவரது நிறுவன டயரி மற்றும் விலை உயர்ந்த ஒரு பென் செட் ‘அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்’ என்று சொல்லி நீட்டினார்.

இவரும் பதிலுக்கு விஷ் பண்ணிவிட்டு “உங்கள் வாழ்த்துக்கள் மட்டும் போதும்” என்று சிரித்தபடி சொன்னார். வந்தவர் விடாப்பிடியாக “இது எங்கள் நிறுவன விளம்பரத்துக்காகத்தான் கொடுக்கிறோம். இதில் தவறேதுமில்லை” என்று சொன்னார்.

பதிலுக்கு இவர், “நீங்க சொல்றது கரெக்ட் தான். இதை வாங்கிக் கொண்டால் உங்கள் நிறுவன விண்ணப்பங்கள் வரும்போது தவறிருந்தால் திருப்பி அனுப்பும்போது எனக்கு ஒரு உறுத்தல் வந்துவிடும். அதனால் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

உடன் வந்தவர், “என்னை கம்பெனிக் காரனாய் நினைக்க வேண்டாம். உங்கள் உடன் பிறந்த தம்பியாய் நினைத்து வாங்கிக் கொள் ளுங்கள்” என்றார்.

அதற்கு இவர் “அண்ணன்னு சொல்றீங்க. உங்க அண்ணன் என்றால் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன் என்பது பெருமையா, அல்லது இந்த கிஃப்ட்டை நான் வாங்கிக் கொள்வது பெருமையா?” என்று கேட்டார்.

வந்தவருக்குப் பளீரென்று கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அவரைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு அலுவல ரிடம் வந்தார்.

அலுவலருக்கு அவர் யாரெனச் சற்று முன் தான் அறிமுகம் செய்திருந்தார். நிரஞ்சன் இந்தியா முழுக்கக் கிளைகள் உள்ள ஒரு பெரு நிறுவனத்தின் தலைவர். எப்போதும் லைசென்ஸ் ரெனியூவல் பண்ணு வதற்கு விண்ணப்பித்த பின் பலமுறை நினை வூட்ட வேண்டும். அல் லது நேரில் வந்து கவனித் தால்தான் நகரும். இந்த முறை அவர் விண்ணப்பித்து நான்கைந்து நாட்களிலேயே பதிவுப் தபாலில் லைசென்ஸ் ரெனியூவல் வந்துவிட்டது. அவர் தேவையான டாக்குமெண்ட்ஸ் இணைத்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அது சீக்கிரம் வந்ததால் பக்கத்து மாநில டென்டரில் கலந்து கொண்டு ஒரு பெரிய ஆர்டர் கைக்கு வந்தது.

அதனால் நேரில் வந்து அந்த அலுவலருக்கு நன்றி சொல்வதற்கே வந்தார். அலுவலர் ஏதும் எதிர்பார்க்க மாட்டார் என்பது தெரிந்த தால் நேரில் நன்றியாவது சொல்லலாம் என்று தான் வந்தார். இதற்கு முக்கிய காரணம் முகுந்தன் என்பது தெரிய வர நிரஞ்சன் அவரிடம் தன் நன்றியை இப்படியாவது தெரிவிக்கலாமே என்று நினைத்துத்தான் அவரை வற்புறுத்தினார்.

அவர் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவரைப் பற்றி உயர் அலுவலரிடம் விசாரித்தார். பேச்சு வாக்கில் அந்த அலுவலர் முகுந்தனின் நிலை பற்றிச்

சொன்னார். நிரஞ்சனுக்கு இதைக் கேட்டதும் இவ்வளவு நேர்மையானவருக்கு இப்படி ஒரு சோதனையா? இவர் எனக்குச் சகோதரர் என்று சொன்னேனே, அப்படியெனில் அந்தக் குழந்தை எனக்கும் குழந்தை மாதிரிதானே! அப்பா பெயரில் உள்ள டிரஸ்ட் மூலம் எத்தனை ஏழைகளுக்கு உதவிக் கொண்டிருக் கிறோம், வருடாந்திர லாபமான 100 கோடியில் 10% ஆன 10 கோடி டிரஸ்ட்டுக்குத்தானே போகிறது? இவர் தெரிந்தால் தன் உதவியை ஏற்க மாட்டார் என நினைத்தார்.

உயர் அலுவலரின் உதவியுடன் சரவண னுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரைத் தொடர்பு கொண்டார். அவரிடம் எவ்வளவு செலவானாலும் தான் ஏற்றுக் கொள் வதாகவும் ஆனால் முகுந்தனுக்கு மட்டும் எக்காரணம் கொண்டும் இது குறித்துத் தெரிவிக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். மருத்துவரும் முகுந்தனை அழைத்து “ஒரு தொண்டு நிறுவனம் சரவணனது சிகிச்சைக்கான செலவு முழுவதையும் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சரவணனுக்கு உடனே சிகிச்சை எடுத்தால் நல்லது. இல்லையெனில் அவன் குணமடைந்திட வாய்ப்பு மிகக் குறைவு” எனத் தெளிவுபடுத்தினார். ‘இவர் மகனுக்கு வேண்டாமெனில் வேறு யாருக்கோ உதவப் போகிறார்கள். அதனால் உங்கள் மகன் என்ற ஒரே காரணத்தால் அவன் வாழ்க்கை முழுவ தும் கஷ்டப்படணுமா?’ என்று கேட்டார்.

முகுந்தனுக்கோ இதை ஏற்கலாமா என மனதில் போராட்டம் நடந்தது. சரவணனைத் தன் மகனாகப் பார்க்காமல் தனி ஒரு ஜீவனாக எண்ணிப் பார்த்தார். அவன் படும் அவஸ்தை களை நினைத்துப் பார்த்தார். இது போன்ற சந்தர்ப்பம் வரும்போது தமது கொள்கைக்காக அவனைக் கஷ்டப்படுத்துவது ஒரு மனிதனாக எந்தவிதத்திலும் நியாயம் இல்லை எனத் தோன்றியது. ஒரு முடிவுடன் டாக்டரைப் பார்த்து, “எப்பப் போகலாம்?” என்று கேட் டார். டாக்டருக்கோ மகிழ்ச்சி பிடிபடவில்லை. “அதை நான் பார்த்து ஏற்பாடு செய்துவிட்டுச்

சொல்கிறேன்” என்றார்.

முகுந்தன் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னார். சரவணனின் கண்களில் ஒரு மின்னல். வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் அவன் முகம் இப்படி மலர்ந்திருக்கு. வத்சலாவோ மகிழ்ச்சியில் அழுது விட்டாள். புவனா, “அண்ணா, இனிமேல் நீ என் கூட விளையாடு வியா?” என்று சந்தோஷ மாய்க் கேட்டாள். முகுந்தன் தனது உயர் அலுவலருக்கு போன் பண்ணி விவரம் சொன்னார். அவருக்கு இது யாருடைய ஏற்பாடு எனத் தெரிந்திருந்தாலும் “ரொம்ப சந்தோஷம். லீவு பற்றிக் கவலைப் படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னார். முகுந்தன் சாமி படத்துக்கு எதிரில் வந்து நின்றார்.

“நீ எங்கும் நிறைந்திருக்கிறாய் என்று தெரிகிறது. என்னைச் சுற்றி எவ்வளவு நல்ல வர்கள். எல்லோரும் நல்லா இருக்கணும்” என்று கண்ணீர் மல்க வேண்டினார்.

மறுநாள் டாக்டர் போன் செய்து “இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பணும். அப்பாய்மெண்ட் பிக்ஸ் பண்ணிட்டேன். மற்ற ஏற்பாடுகளுக்கு ஆள் அனுப்புகிறேன். அவர் பார்த்துக் கொள் வார். அவர் சொல்றபடி நீங்கள் செய்தால் போதும்” என்று சொன்னார்.

முகுந்தன் அவரிடம் மெதுவாக, “எங்க ளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் எதுன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அவர்கள் விளம்பரம் தேடுபவர்கள் இல்லை. அதனால் யாரிடமும் விவரம் சொல்லக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். என் மேல் உங்களுக்கு நம்பிக்கை உண்டு தானே?” என்று சொன்னார்.

இதற்குமேல் அவரை நச்சரிக்கக்கூடாது என விட்டுவிட்டார். அவருக்கும் சரவணனுக் கும் பாஸ்போர்ட், விசா எல்லாம் ஏற்பாடு களும் செய்தார்கள். மளமளவென எல்லாம் முடிந்தது.

அவர்கள் கிளம்பும் நாள் வந்தது. வத்சலா வுக்குத் தன்னால் உடன் போக முடிய வில்லையே எனக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இவ்வளவு செய்கிறார்களே என முகம் தெரியாத ஒருவருக்கு மனதிற்குள் வாழ்த்தினாள். சரவணன் மனதளவில் உற்சாகமாக இருந்ததால் அவனுக்கு வலிகூடக் குறை வாய்த் தெரிந்தது. விமானத்தில் அவன் நிலை பார்த்து அவ னுக்குக் காலியாக இருந்த

பிசினஸ் கிளாஸ் சீட் கொடுத்தார்கள். பணிப் பெண்கள் அவனைப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். முகுந்தனுக்கு விமானப் பயணம் படபடப்பாய் இருந்தது. மேகத்திற்கிடையில் போகும்போது ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல் தோன் றியது.

விமானம் தரை இறங்கியதும் டாக்டர் ஏற்பாடு செய்த ஒருவர் வந்து நேராக மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். வரும் வழியில் உள்ள கட்டடங்களை அப்பா வும் மகனும் பிரமிப்புடன் பார்த்தனர். சரவ ணன் உட்காருவதற்கு ஏற்றவாறு சீட் பெல்ட் உடன் வசதியான இருக்கையாக இருந்ததால் அவனால் உட்கார முடிந்தது. மருத்துவமனை ஏதோ ஹோட்டல் போல் பிரமாதமாக இருந் தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையும் மிக வசதியாக இருந்தது.

வந்து சேர்ந்தவுடன் மனைவிக்கும், டாக்ட ருக்கும் தகவல் தெரிவித்தார். டாக்டருக்கு மறக்காமல் நன்றி சொன்னார். கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின் டாக்டரின் நண்பர் வந்தார். “நான் டாக்டர் ஸ்ரீனிவாசனின் (இவ்வளவு நேரமாய் அவர் பெயர் சொல்லாததற்கு மன்னிக்கவும்) ஃப்ரென்ட். என் பெயர் தேவ

சகாயம். நான்தான் உங்கள் மகனுக்கு ஆபரேஷன் பண்ணப் போறேன்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவரைப் பார்த்தவுடனேயே மனதில் நம்பிக்கை பிறந்தது. மளமளவென டெஸ்ட் எடுத்தார்கள். அவனுக்கு வேறு எந்தக் கோளாறும் இல்லாததால் இரண்டு நாட்களில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லாதது எல்லாருக்கும் நிம்மதி அளித்தது.

நான்கு நாட்களில் அவனால் கொஞ்ச நேரம் நேராக உட்கார முடிந்தது. டாக்டர் ஸ்ரீனிவாசன் அவ்வப்போது அவரது நண்பர் டாக்டர் தேவசகாயத்திடம் அவனது உடல் நிலை குறித்துக் கேட்டுக்கொண்டார். அவனது கை, கால்கள் கூடக் கொஞ்சம் உணர்வு பெற்ற மாதிரி இருந்தது.

சரவணனுக்கு நேராக உட்கார முடிந்ததே ஏதோ சிம்மாசனத்தில் உட்கார்ந்த மாதிரி அவ்வளவு சந்தோஷமாய் இருந்தது. இன்னும் இரு வாரங்கள் இருக்க வேண்டும் என்றார்கள்.

தேவசகாயம் அவனைப் பார்க்க வரும் போதெல்லாம் அவனிடம் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் ஆரம்பித்து அதில் கேள்விகள் கேட்பார். அவன் எல்லாவற்றுக்கும் டக் டக் கென பதில் சொல்வான். அவன் பொழுது போக்கே டி.வி.யில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதுதான். அத்துடன் அவனுடைய அபார ஞாபகசக்தியும் சேர்ந்து என்ன கேட் டாலும் அவனால் பதில் சொல்ல முடிகிறது.

முகுந்தனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இரு வாரங்களில் ஐந்து மணி நேரம் தொடர்ச்சி யாக உட்கார முடிந்தது. தேவசகாயம் வந்து “எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. எல்லாமே நம்பிக்கை அளிக்கிறது. இனிமேல் நீங்கள் சென்னைக்குப் போகலாம். பிசியோதெரபி பண்ணினால் போதும். இனிமேல் ஸ்ரீனிவாசன் டாக்டர் பார்த்துக் கொள்வார். இனிமேல் உட்காருவது அவனுக்குப் பிரச்னை இருக் காது. கை, கால் அசைவுகள் நாளாக நாளாகக் கொஞ்சம் சரியாக சான்ஸ் இருக்கு. நம்பிக்கை யுடன் இருங்கள்” என்று சொன்னார்.

சரவணனிடம் “இனிமேல் உன் முயற்சியில் தான் எல்லாம் இருக்கிறது” என்று ஆதரவாக அவன் முதுகைத் தட்டினார்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் கிளம்பியது. சரவணன் ஜன்னல் அருகே உள்ள சீட்டில் உட்கார்ந்து சிங்கப்பூர் பின்னால் நகர்வதைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். விமானம் சென்னையில் தரையிறங்கியது. அவர்களை வரவேற்க வத்சலா, புவனாவுடன் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூட வந்தது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

சரவணன் சக்கர நாற்காலியில் மகாராஜா மாதிரி கம்பீரமாய் அமர்ந்திருந்ததைப் பார்த்த அவர்கள் கண்களில் எல்லாம் ஆனந்தக் கண்ணீர்.

இந்தக் கதையில் யார் கடவுள் என்று நீங்களே சொல்லுங்கள்?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :