நீங்கள் கேட்டவை

நிதியமைச்சர் எழுப்பிய நியாயமான கேள்வி!
தராசுஅனுராதா குமார், காஞ்சிபுரம்

? ஜி.எஸ்.டி. கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசப்படுகிறதே?

நிச்சயமாக மாற்றப்பட வேண்டிய முக்கிய விஷயம்தான். அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் கூறிய கருத்துகள், அவர் அணுகுமுறை மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கோவா போன்ற மிகச் சிறிய மாநிலத்தையும் தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தையும் ஒரே தராசில் வைப்பது அபத்தம் என்று கூறியதை இதற்கு முன்னர் யாரும் சிந்திக்கவில்லையே ஏன் என்று புரியவில்லை. மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்களையும் மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழ்நாட்டையும் ஒரே தராசில் இடுவது எப்படி ஏற்புடையதாகும் என்ற கேள்வி நியாயமானதே. அவ்வாறே எல்லா மாநிலங்களுக்கும் ஒரே ஒரு வோட்டுதான் என்பதும் அபத்தமே. தமிழக நிதி அமைச்சர் போட்டிருக்கும் பிள்ளையார்சுழி சுபமாக முடியும் என நம்புவோம்.

கல்கி நேசன், மதுரை

? மறைந்த கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் குறித்து?

மிக எளிய குடும்பத்தில் பிறந்து, மிகப் பெரிய உயரங்களைத் தொட்ட மனிதர். தொழிற்நுட்பக் கல்வியில் பல வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவந்தவர். கணினியில் தமிழ் இன்று பவனிவரக் காரணமாக இருந்தவர் அவர் என்பது பலர் அறியாத செய்தி.

பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணனை நினைக்கும்போது பாரதி சொன்ன மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த

சித்தம் இவைதான் கண்முன் தோன்றுகின்றன. அவர் சிரிக்கும்போது இதழ் மட்டுமல்ல, கண்ணாடிக்குள் ஒளிரும் விழிகள் மட்டுமல்ல, முகமே சிரிக்கும் என்கிறார் மாலன்.

முகமது உசைன், திண்டுக்கல்

? பெட்ரோல் விலை இனி குறையாதா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் என்ன விலை விற்றாலும் தங்களுக்கு வர வேண்டிய வரி வருமானம் குறையக்கூடாது என்கிற மத்திய அரசின் கொள்கை முடிவு மாறாத வரை, குறைய வாய்ப்பில்லை. நாம் கொடுக்கும் விலையில் 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசுகளுக்கு வரியாகப் போகிறது.

மஹாலட்சுமி, மதுரை

? மருத்துவமனைக்கு ஸ்டாலின் முகக்கவச உடையில் சென்று ஆய்வு செய்திருக்கிறாரே?

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித் தார் என்கிறது செய்தி. இத்தகைய செயல்கள் மருத்துவர்கள் முன்களப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும். தமிழகம் ஒரு மாறுபட்ட முதல்வரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

லோகேஸ்வரி, சென்னை

? யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத் துறை தொடர்பாகக் கூறிய அவதூறு கருத்துகளுக்கு ‘மன்னிப்புக்கோராவிடில், 1000 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று இந்திய மருத்துவச் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதே?

‘அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்’ எனப் பேசியிருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால் மருத்துவக்கழகம் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதனைக் கண்டிக்கும் வகையில் அவ்வாறு பேசுபவர்களின் ‘அப்பாக்கள் வந்தால்கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது’ என்று அகங்காரமாகப் பேசியிருப்பது அவருக்கு ஆன்மிகச் சக்தியையும் தாண்டியிருக்கும் அரசியல் சக்தியைக் காட்டுகிறது.

வண்ணை கணேசன்

? கொரோனா எப்போது ஒழியும்?

எவராலும் உடனாடியாகப் பதில் சொல்லும் கேள்வி இது. மருத்துவர்களும் வல்லுநர் களும் உயிர் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகவாதிகள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் ஒழியும் முன் சமாளிக்கும் வழி வகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

? ஆஞ்சநேயர் அவதரித்த இடம் கிஷ்கிந்தா என்றும், திருமலை அஞ்சனாத்திரி மலை என்றும் நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து?

ராமாயணத்தில் வரும் கிட்கிந்தை என்ற இடம் ஹம்பியும் அதைச் சுற்றிய வனப்பகுதிகளுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஹம்பியில் உள்ள மலைக் குகைகளில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மனிதர்களுக்கு வால் இருப்பது போன்ற காட்சிகள் வரையப் பட்டுள்ளன.

திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்று அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி மலை. இந்த மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அனுமன் இந்த மலையில்தான் அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆறு நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து புராணங்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வு தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும் அதன் முடிவாக அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்த முடிவதாகவும் தெரிவித்தது. இதற்கான ஆதாரங்களை வழங்க உள்ளதாகத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதிக்கு அருகில் இருக்கும் மலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரி என்பது அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்த இடம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அங்குதான் அனுமன் அவதரித்தார் என்று சொல்வதற்கு இல்லை. ராமாயணத்தில் வரும் கிட்கிந்தா என்பது பெல்லாரி மாவட்டத்தில் இருக்கும் ஹம்பியே என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களை நம் முன்னோர் வழங்கியுள்ளனர் என்கிறார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர்.

சக்தி வாய்ந்த தெய்வமாக மதிக்கப்படும் அனுமன் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டினால் பாராட்டலாம். அதைத் தவிர்த்து இப்படி அனாவசிய ஆய்வுகளைச் செய்து சர்ச்சையைக் கிளப்புபவர்களிடமிருந்து மக்களை அனுமன்தான் காப்பாற்ற வேண்டும்.

மாடக்கண்ணு, பாப்பான்குளம்

? அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே?

முகக்கவசம் அணியக் கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமைக்கு எதிரானது என வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதன் முடிவு வருவதற்குள் அமெரிக்க அரசின் மருத்துவத் துறை உயர்மட்ட அமைப்பு அவசியமில்லை என அறிவித்திருக்கிறது. அந் நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்குமேல் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டார்கள். அறிவிப்பு வந்தாலும் பல பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்தே இருக்கிறார்கள்.

சங்கர்ராமன், ஈரோடு

? தடுப்பூசி போட்டுக் கொள்ளா விட்டால், கட்சிப் பதவி பறிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளாரே?

நல்ல முடிவு. இதற்காக அமைச்சருக்கு ஒரு சபாஷ் சொல்லாம்.

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்

? கேரள அரசு அளிக்கவிருந்த ஓ.என்.ஏ. விருதைத் திரும்ப அளித்துவிட்டாரே கவிப் பேரரசு வைரமுத்து?

திரும்ப அளித்தாரா? திரும்பப் பெறப் பட்டிருக்கிறதா?

ஈஸ்வரி, சிதம்பரம்

? பாலியல் தொல்லைகளுக்கு என்னதான் தீர்வு?

அளிக்கப்படும் புகாரில் ரகசியம் காக்கப் பட்டு பாரபட்சமற்ற விசராணை, விரைவான தீர்ப்பு, கடும் தண்டனை அளிக்கப்பட்டால், வரும் காலங்களில் இந்தத் தொல்லைகள் குறையும். எல்லாவற்றையும்விட அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் ஒதுங்கி இருந்து நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்.

கண்ணன், நெல்லை

? ‘கொரோனா தொற்றைத் தடுப்பதற்குத் தேவை யான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் எனத் தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு தருகிறது; எந்தக் குறையும் இல்லை’ என தி.மு.க. கூறியுள்ளதே, இதை காங்கிரஸ் எப்படி எடுத்துக்கொள்ளும்? உண்மையைச் சொல்லும்போது யாராக இருந் தாலும் ஏற்கத்தானே வேண்டும்?

நெல்லை குரலோன்

? கொரோனா பரவியது குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தர விட்டுள்ளாரே?

முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த நோய்க் கிருமி சீனா, அமெரிக்கா மீது தொடுத்த கிருமிப் போர் என்றும், அந்த வைரஸ்சை சீன வைரஸ் என்று அழைத்திருந்தார். இதன் உண்மை நிலையை அறியத்தான் இப்போதைய அதிபர் நடவடிக்கை எடுக்கிறார்.

ராஜாராம், சென்னை

? எது விருது? எது புகழ்?

தகுதியானவர்களைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட் டால் அந்த விருது புகழ் பெறும்.

குமரப்பன், விழுப்புரம்

? ‘பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை இல்லையேல் ஆட்சிக் கலைப்பு’ என்று சுப்ரமணிய சுவாமி கூறுகிறாரே?

முதல் நாள் இரவில் அவர் இந்தியக் குடியரசுத் தலைவராகிவிட்டதாகக் கனவு கண்டிருப்பாரோ?
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :