தலையங்கம்

ஏன் இந்தத் தடுமாற்றம்?கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை என்றாலும், தடுப்பூசிகள் மூலம் அந்த நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசித் திட்டம் உலகின் வேறு எந்த நாட்டையும்விடக் குறுகிய காலத்தில் மிக அதிகமாக 17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது என்று தொடக்கத்தில் வந்த செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் அண்மைக் காலச் செய்திகள் அச்சமுறச் செய்கின்றன.

தடுப்பூசித் திட்டம் ஓரளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றாலும் அரசின் அணுகுமுறைகளில் ஒரு பதற்றமும் தடுமாற்றமும் தெரிகிறது என்பதுதான் உண்மை.

நோய்த்தொற்றின் 2வது அலை தீவிரமாகப் பரவி 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. போதுமான அளவு தடுப்பூசி மருந்துகள் தயாராகியிருப்பதாகவும் அரசு அறிவித்தது.

ஆனால், மத்தியப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே கையிருப்பு இருக்கும் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த மட்டுமே இருப்பதாக அறிவித்ததோடு திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபடி தொடங்க முடியாத நிலையையும் அறிவித்தன.

தொடர்ந்து இரண்டாவது கட்டத் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் காத்திருப்பவர்களுக்கு உரிய தேதிகளில் போடவேண்டிய தடுப்பூசி மருந்துகளும் போதுமான அளவு மருத்துவமனை களில் இல்லை என்ற நிலை எழுந்திருக்கிறது.

கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டும் சேர்ந்து மாதத்திற்கு 8.5 கோடியில் இருந்து 10 கோடி வரை உற்பத்தி செய்யப்படும். உற்பத்தித் திறன் ஜூன் முடிவில் 20 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும். கூடவே சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களும் மற்ற தடுப்பூசித் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அறிவித்திருந்தார். ஆனால் இன்று இந்தக் கணக்கின்படி உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை.

வெளிநாடுகளிலிருந்து 5 கோடி வாக்ஸின்களை இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அதிலும் தெளிவில்லை. ஃபிசர் நிறுவனம் இந்தியாவுக்கு 5 கோடி வாக்ஸின்களை வழங்கும் என்கிறது. ஆனால் அது ஜூலையில் 1, ஆகஸ்ட்டில் 1, செப்டம்பரில் 2, அக்டோபரில் 1 என்ற கணக்கில்தான் 5 கோடி வழங்கும். அதையும் மத்திய அரசுக்கு மட்டுமே வழங்கும் என்று தங்கள் செய்திக்குறிப்பில் சொல்லுகிறது.

மாடர்னா, இந்தியாவுக்காக சிங்கிள் டோஸ் வாக்ஸின் குப்பிகளைத் தயாரிக்க சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுவும் 2022ல் தான் இந்த வாக்ஸின் தயாராகும். 2022ல் 5 கோடி வாக்ஸின்கள் தயார் செய்து தரமுடியும் என்று சொல்லுகிறது. அதாவது இவையெல்லாம் உடனடியாக கைவசம் கிடைக்கக்கூடியவை இல்லை.இப்போதைக்கு கோவாக்சினும் கோவிஷீல்டும் மட்டும்தான் உள்ளன. ஸ்புட்னிக்-வி வரத் தொடங்கியிருக்கிறது. கோவிஷீல்ட்-கோவாக்சின் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும், எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படும், உள்நாட்டுக்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என எந்தத் தகவலும் இல்லை. கோவிஷீல்ட் அதிக உற்பத்தி செய்ய அரசுத்தரப்பில் ஏதேனும் ஊக்கமளித்ததாகவும் தெரியவில்லை.

உலக நாடுகள் அனைத்துமே நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் தடுமாறத்தான் செய்கின்றன. நாம் விதிவிலக்கு அல்ல. ஆனால் அந்த நாட்டு அரசுகளின் வெளிப்படைத்தன்மை நமது அரசிடம் இல்லை. இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் இயலவில்லை. இதுதான் மாற்று ஏற்பாடு, மக்கள் அஞ்ச வேண்டாம் என்று நம்பிக்கையூட்டும் அறிவிப்போ செயல் திட்டமோ அறிவிக்கப்படவில்லை.

இதுவரை மக்கள் தொகையில் 3.1 விழுக்காடுதான் (4 கோடி பேர்) இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது. 11 சதவிகிதம் பேருக்குத்தான் (15 கோடி) ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்ஸின் போட ஆரம்பித்தது 16 ஜனவரி. இப்போது மே முடிந்துவிட்டது. ஆக நான்கு மாதங்களில் முழுமையாகப் போடப்பட்டது 3.1 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 65 சதவிகிதம் - சுமார் 70 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இந்த 70 கோடி பேருக்கும் இரண்டு டோஸ் வாக்ஸின் போட்டு முடிக்கப்போவது எப்போது என்ற பெரிய கேள்வி நம் முன்னே நிற்கிறது.

இதை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று மக்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டியது மத்திய அரசின் கடமை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :