சிவாஜி உயிர் தப்பினார்!

திரைக்கடலில் எழுந்த நினைவலைகள் - 6
எஸ்.சந்திரமௌலிஒரு பைலட், (இவரை ‘கேப்டன்’ என்று தான் கூப்பிடுவது வழக்கம்) ஒரு நாவிகேட்டர் (வழிகாட்டி) என்று இருவர் அடங்கிய குழு ஹெலிகாப்டருடன் வந்து சேர்ந்தது. மீனம்பாக்கத்தில் வந்து இறங்கிய சில மணி நேரங்களுக்குள் அந்த கேப்டன் எனக்கு ரொம்ப நண்பராகிவிட்டார். அவர் பெயர் யாதவ். அழகான, துறுதுறுப்பான முப்பது வயது இளைஞர். சினிமா படப்பிடிப்புக்காக ஹெலி காப்டர் ஓட்டியது அந்த இளைஞருக்குப் புதிய அனுபவமாகயிருக்கலாம்.

செங்கல்பட்டு அருகே லொகேஷன். அங்கு மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை எண்ணினால் எனக்கு இப்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும்.

குண்டு வீசும் காட்சியில், ஒரு கட்டத்தில் ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து, சிவாஜியைத் துரத்துகிறது. சிவாஜி ஓடுகிறார்! கேமரா இதைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போது, எனக்கு ஹெலிகாப்டர் தேவைக்கு அதிகமாகவே தாழ்வாகப் பறப்பதாகத் தோன் றியது. அடுத்த சில நொடிகளில் சிவாஜியின் தலையை உரசிவிடவும் கூடும்! படப்பிடிப்புக் குழுவினர் எல்லோருமே என்னைப் போல் ‘ஓ’வென்று அலற, ஹெலிகாப்டர் போட்ட சத்தத்தில் அது சிவாஜி காதில் விழவும் இல்லை.

சிவாஜி, நடிக்க ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவதுதான் வழக்கம். ஆனால், யார் செய்த புண்ணியமோ, அன்று நடிப்பை மறந்து ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். ஹெலிகாப்டர் மிகத் தாழ்வாகப் பறப்பதைக் கண்டு அடுத்த கணத்தில் தரையில் விழுந்து உருண்டார். உயிர் தப்பிப் பிழைத்தார்!

அன்று அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால், எண்ணிப் பார்த்தாலும் உடல் நடுங்குகிறது. கலை உலகுக்கு எப்பேர்ப்பட்ட நஷ்டமாகி யிருக்கும்!

ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சவால்

தமிழ், இந்தி இரண்டு மொழிப் படம் என்றாலும், பம்பாயிலிருந்து வந்த ஆர்ட் டைரக்டர் சாந்திதாஸ் நான் எதிர்பார்த்தபடியே அற்புதமான முறையில் பிரம்மாண்ட செட் களை அமைத்தார். படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்தது.

ஆனால், சாந்தி தாஸுக்கே சோதனையான ஒரு கட்டம் வந்தது! அது என்ன தெரியுமா? கதைப்படி ஆற்றின் ஒரு கரையில் மதுக்கடை யுடன் இணைந்த உணவகம், மறுகரையில் புரட்சியாளர்களின் மறைவிடம். அவர்கள் அவ்வப்போது இக்கரைக்கு வந்து, உணவருந்திவிட்டு மறுபடி அக்கரைக்கு நீச்சலடித்துப் போய் விடுவார்கள்.

இந்தக் காட்சியை இரவில் எடுக்கவும் வேண்டும். இதற்கேற்ப அவுட்டோர் லொகேஷன் எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை என்பதுடன், ‘இரவுக் காட்சியை எடுக்க ஸ்டூடியோவில் செட் போடுவதுதான் வசதி’ என்று ஒளிப்பதிவாளர்கள் சொன்னார்கள். ‘லைட்டிங் இங்கே வசதியாக அமைத்துக்கொண்டு அரையிருளில் நடப்பது போல் படமெடுக்கலாம்; அவுட்டோரில் இருட்டின் ஆதிக்கம் அதிகமிருக்கும்.’

ஒளிப்பதிவாளர்கள் இப்படிக் கூறிவிட்டாலும் சுழித்தோடும் ஆறு, ஆற்றங்கரை, அதில் உணவகம், எதிர்ப்பக்கம் புரட்சியாளர் களின் மறைவிடம் எல்லாம் செட்டில் எப்படி அமைப்பது? ரொம்பக் கஷ்டம் என்பது எனக்குத் தெரிந்திருந்ததால், சாந்திதாஸிடம்

சவால் விட்டேன்.

‘குறைந்தபட்சம் நான்கு, ஐந்து அடி ஆழம் ஆறு வேண்டும்; அதில் தண்ணீர் சுழித்து ஓட வேண்டும்... முடியுமா, முடியாதா!’

‘சவாலை ஏற்க விரும்புகிறேன் சார். ஆனால் நான் ஒருவனாக இதைச் செய்ய முடியாது. இதற்கு ஒரு நல்ல இன்ஜினீயரின் உதவிவேண்டும். அவர் பிளான் போட்டுத் தந்தால் நான் செயல் வடிவம் தருகிறேன்’ என்றார். எனக்கும் அவர் கோரிக்கை நியாயம் என்று பட்டது.

வாஹினி ஸ்டூடியோவில் உள்ள எட்டாம் நெம்பர் படப்பிடிப்புத் தளம் ஆசியாவிலேயே பெரியது என்பார்கள். அதை ‘புக்’ பண்ணி னேன். பிறகு குமாரசாமி என்ற இன்ஜினீயரை அணுகினேன். அவர் அமைச்சர் நெடுஞ்செழி யனின் உறவினர். பூண்டியில் இருந்தார். நேரில் சென்று விஷயத்தைச் சொன்னேன்.

‘சினிமா செட்டுக்குள் ஆறு ஓடுவதாவது? அதுவும் வெள்ளம் சுழித்தோடுவதா! அதெல் லாம் ஒண்ணும் சாத்தியமில்லை’ என்றார்.

‘இங்கே உட்கார்ந்தபடியே முடியாது என்றால் எப்படி? ஃபுளோரை நேரில் வந்து பாருங்கள்’ என்று கூறி வற்புறுத்தி அழைத்துப் போனேன். வாஹினியின் எட்டாம் நெம்பர் தளத்தைப் பார்த்தார் குமாரசாமி, ஓரளவு நம்பிக்கை பிறந்தவராக, ‘செய்யலாம்; ஆனா ரொம்பக் கஷ்டம்’ என்றார்.

‘கஷ்டம் என்பது தெரிந்துதானே உங்க ளிடம் வந்தேன்’ என்று அவர் தன்மானத்தை நான் உசுப்பிவிட, அவரும் ரோசமடைந்தவராக ஃபுளோரின் நீள, அகலம், உயரம் எல்லாம் அளக்க ஆரம்பித்தார். செட் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எங்கள் தேவைகளைக் குறித்துக் கொண்டார்.

‘சரி, ரெண்டு வாரம் சென்று வாங்க’ என்றார். இரண்டு வாரம் என்பது நாலு வாரம், ஆறு வாரம் என்று இழுக்கடித்தது. ஏழெட்டு முறை பூண்டி சென்று வந்துவிட்டேன்.

எட்டாவது தடவை போனபோது குமார

சாமி, ‘நான் ரெடி’ என்றார். ஆனால், அவர் சொன்ன விவரங்களைக் கேட்கக் கேட்கத் திகைப்பு வந்துவிட்டது!

‘ஒண்ணரை லட்சம் காலன் தண்ணீர் வேண்டும்; அந்தத் தண்ணீரை ஒரு பெரிய தொட்டி கட்டித் தேக்க வேண்டும். தேக்கிய தண்ணீரை மடை திறந்துவிட்டு செட்டில் பாயச் செய்த பிறகு, அது மறுபடி தொட்டிக் குள்ளேயே போகிற மாதிரி விசை இயந்திரம் வைத்து பம்ப் (கீஞுஞிதூஞிடூடிணஞ்) செய்ய வேண்டும். இல்லையெனில் ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளக்காடாகி விடலாம்!’

‘இந்த ஆபத்தான காரியத்தில் இறங்குவதா? இறங்க நாம் தயாராக இருந்தாலும், ஸ்டூடியோ அதிபர் நாகிரெட்டி சம்மதிப்பாரா?’ கேள்வி கள் என் முன் விசுவரூபமெடுத்து நின்றன!

ஸ்டூடியோவுக்கு ஆபத்து

நான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ எடுத்தபோது, படப்பிடிப்பு தளத்தின் சுற்றுச்சுவரை இடித்து விடவும் அனுமதி அளித்தவர் நாகிரெட்டி. இப்போதும் துளிகூடத் தயங்காமல் அனுமதி தந்தார்.

மளமளவென்று செட்டுக்கு வெளியே பிரம்மாண்டமான தொட்டி உருவாகியது. பெரிய தடாகம் போல் காட்சியளித்தது. தடிமனான களிமண் சுவர். தளத்தினுள்ளே நாற்பது அடி அகலத்துக்கு ஆறு. ஒரு கரையில் மதுக்கடையுடன் கூடிய உணவகம், மறுபக்கம் புரட்சியாளர் ஒளிந்து மறைவாக வாழ ஏற்ற பகுதிகள். ஆர்ட் டைரக்டர் சாந்திதாஸும் இன்ஜினீயர் குமாரசாமியும் நன்கு ஒத்துழைத் துச் சிறப்பாகச் செய்தனர்.

லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து தொட்டியை நிரப்பினோம். ஒரு தடவை

ஒத்திகை பார்த்துவிடலாம் என்று தீர்மானித் தோம். தொட்டி திறந்துவிடப்பட, குபுகுபு வென்று தண்ணீர் செட்டுக்குள் அமைந்திருந்த ஆற்றில் ஓடியது. திரும்ப வும் தொட்டிக்குள்ளேயே போய்ச்

சேர்ந்தது. எல்லாம் சரியாக இயங்கவே ஒரே சந்தோஷத்துடன், ‘சபாஷ் குமாரசாமி, வெல்டன் சாந்திதாஸ்’ என்று கைகுலுக்கி, தட்டிக்கொடுத்து மகிழ்ந்தேன். வெற்றிகர மாகவே வேலை முடிந்ததும் பசி தெரிந்தது. எல்லோரும் ஸ்டூடியோவிலேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். ஐந்து நிமிஷம் ஆகியிருக்கும்.

‘ஐயோ! ஐயோ!’ என்று அலறியபடி ஆர்ட் டைரக்டர்களின் உதவியாளர்கள் இருவர் எங்களை நோக்கி ஓடி வந்தனர்.

‘என்ன? என்ன?’

தொட்டி உடைத்துக்கொண்டது!’

எல்லோரும் கையை உதறிவிட்டு ஓடினோம்.

ஒன்றரை லட்சம் காலன் தண்ணீர் நிறைந்த தொட்டி அடியில் சற்று விரிசல் ஏற்பட, அது வழியே தண்ணீர் பாய, சீக்கிரமே ஓட்டை விழுந்தது. குபுகுபுவென்று நீர் பெருக்கெடுத் தது. உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் தண்ணீர் முழுவதும் வெளியேறி, எங்கள்

செட்டை மட்டுமின்றி, மற்ற படப்பிடிப்புத் தளங்களையும் நாசமாக்கிவிடும்! உடைப்பு அகலமாகிக்கொண்டே போக, இன்ஜினீயர் குமாரசாமி கையைப் பிசைந்தார்.

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அதை எங்கள் நல்ல காலம் என்று சொல்லுங்கள்; அல்லது தெய்வ சித்தம் என்று வர்ணியுங்கள். எவ் வாறாயினும் சரி, நாங்கள் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். உயர மான மேல்பகுதியிலிருந்து ஒரு பெரிய களிமண் பகுதி கட்டியாக உடைந்து, உள்ளுக்குள் விழுந்து, வெளியேறும் தண்ணீரால் ஈர்க்கப்பட்டு, உடைப் புப் பகுதிக்கு வந்து அதை அடைத்துக்கொண் டது. தண்ணீர் வெளியேறுவதும் நின்றது.

‘ஆண்டவன்தான் காப்பாற்றினான்’ என்று எங்களை அறியாமல் கைகூப்பியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். இதன் பிறகு நானும் இன்ஜினீயர் குமாரசாமியும் இனி ரிஸ்க் எடுக்கக்கூடாது’ என்று தீர்மானித்து, களிமண்ணுக் குப் பதில் கான்கிரீட் தொட்டியே கட்ட முடிவு செய்தோம்.

நாகிரெட்டியிடம் மறுபடி அனுமதி கோர, அவர், ‘என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்; ஆனால் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது படப்பிடிப்புத் தளம் முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் விட்டுச் செல்லுங்கள்’ என்றார்.

சிவந்த மண்

மறுநாளே சிமெண்ட் மூட்டைகளும் கருங்கல் ஜல்லியும் இரும்புக் கம்பிகளும் வந்திறங்க, தொட்டி கட்டும் வேலை மறுபடி யும் தொடங்கியது. போட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் செலவு பல மடங்காகிவிட்டது. ஆனால் சிக்கனம் பார்க்கக்கூடிய விஷயம் இல்லையே இது!

தொட்டி தயாரானதும் பத்திரிகையாளர் களை அழைத்துக் காண்பித்தேன். செட்டுக் குள் ஆற்றில் ஒரு கரையிலிருந்து குதித்து, மறுகரைக்கு ஒருவரை நீச்சலடித்துப் போகச் சொன்னேன். பத்திரிகையாளர்கள் அசந்து விட்டனர். இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில்தான் படத்துக்குப் பெயரும் சூட்டினேன். மூலக்கதையின் பெயர் நினைவிருக்கிற தல்லவா? ‘அன்று சிந்திய ரத்தம்’. அதுதானே சிவாஜிக்காகச் சில மாறுதல்களுடன் திரைப் படமாக உருவாகி வருகிறது? ரத்தம் மண்ணில் சிந்தினால் என்ன ஆகும்? அதனால் இதற்குச் ‘சிவந்த மண்’ என்று பெயர் வைத்தேன்.

இரவு நேர எஃபெக்ட், பகல் நேரக் காட்சி என்று ஆறு ஓடிய செட்டில் சிறப்பாக எடுத் தோம். பரிசல் கூடச் செலுத்திப் படமெடுத் தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஆற்றங்கரைக் காட்சிகளெல்லாம் எடுத்து முடித்த பிறகு, அதே தளத்தில் பிரமிட் செட் போட்டார் சாந்திதாஸ். தானாகச் சுற்றி வரும் வகையில் ஒரு மேடை அமைத்து, அதில் போடப்பட்ட எகிப்திய பிரமிட் செட்டில்

சிவாஜி சவுக்குச் சொடுக்க, காஞ்சனா ஆடுவார். ‘சவுக்கு டான்ஸ்’ என்று இந்த ஆடல் பாடல் காட்சி ரசிகர்களால் பின்னால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அயல்நாடுகள் சிலவற்றில் நடைபெறும் சம்பவங்களையும் என் திரைக்கதையில் அமைத்திருந்தேன். ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து ஆகிய தேசங்களில் படப்பிடிப்பு என்று தீர்மானமாகியது. ஆர்ட்டிஸ்டுகளிடம் கால்ஷீட் வாங்கி, அவர்களுக்கும் டெக்னீஷியன்களுக்குமாகச் சேர்த்து பாஸ்போர்ட், விசா எடுத்து, இதர ஏற்பாடு களையும் கவனித்தவர் சித்ரா கிருஷ்ணசாமி. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர். அனுபவ

சாலியான அவர், எல்லாவற்றையும் கச்சித மாகச் செய்து முடித்தார்.

நாங்கள் புறப்பட வேண்டிய தேதிக்கு இருபது நாட்களுக்கு முன்பு என்னை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இரண்டு மூன்று நாட்களில் நோயின் கடுமை மிக அதிகமாகி விட்டது.

எனக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் குறைந்தது ஆறு வார காலம் நான் தவறாமல் ஓய்வெடுக்க வேண்டுமென்றும் மீறினால் நோய் கடுமையாகி உயிருக்கே ஆபத்தாக முடியு மென்றும் கூறி எச்சரித்தனர்.

நான் திடுக்கிட்டேன். முடிவாக எனக்கு வைத்தியம் பார்க்க டாக்டர் திருவேங்கடம் வந்தார். ‘டாக்டர், நான் தவறாமல் சினிமா படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்றே ஆக ணும். அதுவும் குறிப்பிட்ட ஜூன் 9ம் தேதி புறப்பட்டே ஆகணும். நீங்கள்தான் ஏதேனும் செய்து என்னை குணமாக்கணும்’ என்றேன்.

‘என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லி ஒரு ஊசி போட்டார்.

சென்னைவாசிகளுக்கு டாக்டர் திருவேங் கடத்தின் கைராசி பற்றி நன்றாகத் தெரியும். எனக்கு வேகமாக உடல்நிலை குண மானது. டாக்டரின் கட்டளைப்படி உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தேன். டாக்டர் திருவேங்கடத்தின் தயவால் மஞ் சள் காமாலையிலிருந்து விடுபட்டேன்.

டாக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு குறிப்பிட்ட தேதியில் எங்கள் பயணம் தொடங்கியது. இத்தாலி, ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து என்று வரிசையாக ஷூட்டிங். ஆண்டவன் அருளால் எனக்கு எவ்வித உடல்நலக் குறைவும் உண்டாக வில்லை. ஆனால் பாரிஸிலிருந்தபோது ஒரு செய்தி இடியாக வந்து தாக்கியது.

(தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :