சபாபதி

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்வருட ஆரம்பத்தில் ‘நீங்கள் இறப்பதற்குள் பார்க்க வேண்டிய முக்கியமான தமிழ்த் திரைப்படங்கள்’ என்ற ஒரு கட்டுரையைப் படித்தேன். அதில் ‘சபாபதி’ என்ற திரைப் படம் முதல் இடத்திலிருந்தது.

1941ல் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் போது ‘எப்ப தலை மீது குண்டு விழுமோ?’ என்று இருந்தவர்களை குஷிப் படுத்த வெளிவந்த முழு

நீளத் தமிழ்த் திரைப்படம் ‘சபாபதி’. தொலைக்காட்சி யில் அடிக்கடி வரும் என்றா லும், நான் அதைப் பார்த்தது இல்லை. முகக்கவசம் போட் டுச் சிரிப்பை மறைக்கும் இந்தக் காலகட்டத்தில் இப் படத்தைப் பார்க்கலாம் என்று தேடினேன்.

யூடியுபில் துண்டுத் துண் டாகக் கிடைத்தது. பட்டம் வால் போல் அவற்றை ஒட்ட வைத்துப் பார்த்தபொழுது நிஜமாகவே சிரிப்பு வந்தது. முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்கிற ஆசை பிறந்து முகநூலில் ‘சபாபதி படம் பார்க்க ஆசை. எங்கே கிடைக்கும்?’ என்கிற ஒற்றை வரி கேள்வி கேட்டேன். நிச்சயம் பதிலும் படமும் கிடைக்கும் என்று நம்பி னேன்.

நம்பிக்கைக்குக் காரணம் மால்கம் க்ளேட்வெல்! அவர் எழுதிய ‘டிப்பிங் பாயின்ட்’ என்ற புத்தகத்தில் ‘சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷன்’ என்ற கோட்பாடு பற்றி விவரித்திருப்பார். அதில் மனிதர்கள் ஒருவருக்கொரு வர் எப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொள் கிறார்கள் என்று சின்ன பரிசோதனை மூலம் இரண்டு நபர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துவதற்கு ஐந்து அல்லது ஆறு இணைப்புகளே போதும் என்று எழுதி யிருப்பார்.

அதாவது நீங்கள் ‘ஜோ பைடன்’ அல்லது ‘ஜோதிகா’வை வெறும் ஐந்து அல்லது ஆறு இணைப்புகளில் தொடர்பு கொண்டுவிடலாம். இன்றைய டிவிட்டர், முகநூலில் இரண்டு, மூன்று இணைப்பில் இது சாத்தியம். அதனால் ‘சபாபதி’யின் தாத்தாவைக் கூட சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

கேள்வி கேட்ட பத்தாவது நிமிஷத்தில், ‘நாளை மாலை இந்த சேனலில் ஒளிபரப்பு’, ‘இங்கே கேட்டுப் பாருங்கள்’, ‘இங்கே தேடிப் பாருங்கள்’ என்று பலர் ஆலோசனை கொடுத் தார்கள். அதில் ஒருவர் ‘உங்கள் முகவரி கொடுங்கள். சி.டி.யை வாங்கி அனுப்பு கிறேன்’ என்றார் பிடிவாதமாக. ஒரு வாரம் கழித்து அந்த முகம் தெரியாத நண்பரிடமிருந்து ‘சபாபதி’ கூரியரில் வீடு தேடி வந்தார்.

பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’ என்ற நாடகத்தைப் பார்த்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார் இதைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ‘சூப்பர் ஹிட்’ திரைப்படம் ‘சபாபதி’. கொஞ்சம் முட்டாளான ‘சபாபதி’ ஜமீன்தார், அவருக்கு வடிகட்டின முட்டாளாக ஒரு வேளைக்காரன். அவன் பெயரும் சபாபதி என்று அந்த காலக் கல்கி ‘காலக்ஷேபம்’ பக்கத் துணுக்குகள் போல் நல்ல நகைச்சுவை அடங்கிய எளிமையான கதை. படத்தை எங்கும் ‘ஓட்டாமல்’ பாடல்களுடன் சிரித்து, ரசித்து முழுமையாகப் பார்க்க முடிந்தது. இதிலிருந்து சில காட்சிகள் பல, இன்றைய திரைப்படங்கள், நாடகங்களில் நாம் பார்க்க லாம்.

இந்தப் படத்துக்கு ஆன செலவு சுமார் 40,000. கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச் சந்திரன் சம்பளம் ரூ.35. கதாநாயகிக்கு, வேலைக்காரராக நடித்த காளி என்.ரத்தினத் துக்கு அவரைவிடச் சம்பளம் அதிகமாம்!

அதில் ஒரு நகைச்சுவை காட்சியில், புகை வண்டியைப் பற்றி பதினெட்டு பக்கம் கட்டுரை எழுதியிருப்பார் சபாபதி. ‘குப் குப் குப்’ எட்டு பக்கம், ‘கட கட பட பட’ என்று பத்துப் பக்கம் ரயில் ஓசையை எழுதியிருப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிச்சயம் சிரிப்பு வராமல் இருக்காது.

துயரமான செய்திகள் வந்துகொண்டு சற்று மனச்சோர்வாக இருந்த, சென்ற வாரம், சபாபதியை மீண்டும் கொஞ்ச நேரம் பார்த்துச் சிரிக்கலாம் என்று அந்த சி.டி.யைத் தேடி னேன். கிடைக்கவில்லை. பிறகு மறந்து போனேன்.

சில நாட்களுக்கு முன் எனக்கு சி.டி.யை அனுப்பிய அந்த முகம் தெரியாத நண்பர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியை அவர் தம்பி மூலம் அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

அன்று சி.டி. வந்தபோது ‘நன்றி’ என்று மெசேஜ் அனுப்பியிருந்தேன். தொலைபேசி யில் பேசியிருக்கலாமே என்று இன்று தோன்றுகிறது.

இன்று ‘சபாபதி’ சி.டி. கிடைத்தது. ஆனால் மீண்டும் சிரிக்க முடியுமா என்று தெரியவில்லை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :