வல்லமை தாராயோ...!


கவிதா ஹரிஹரன்
ஓவியம் : தமிழ்தற்கொலை செய்துக்கறதப் பற்றி இதுவரைக்கும் அவள் நினைத்துப் பார்த்ததே இல்ல. கோழைத்தனம் என்று சொல்லுவாள்.

ஆனா இப்ப அகல்யாவுக்கு அவசரமா சாகணும்னு தோனிச்சு.

“உன்னைப் பார்க்கறதுக்கே பிடிக்கலை... ஊருக்குள்ள தல காட்ட முடியல... நடந்ததை நினைத்து அருவருப்பாக இருக்கிறது...”

“அப்ப நான் செத்துப் போகட்டுமா?

சொல்லுங்க.”

“முதல்ல அத செய்... என்னைவிட்டுப் போய்த் தொலை... நீதி, நியாயம்னு என் பேச்சைக் கேட்காமல், போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனியே? அவ்வளவு தைரியம் இருக்கறவளுக்கு இந்த வீட்ல இடம் இல்ல...”

நிஜமாகவே சரி என்றுதான் சொல்கிறானா?

அப்ப நான் செத்துடணுமா?

உயிரை விட நேசித்தவனே, உயிரை விடச் சொல்கிறானே?

‘அகி.... அகி...’ என்று எப்பொழுதும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து உருகியவனா? இன்று அக்னித் துண்டுகளாய் அவளைத் துளைக்கிறான்?

‘பொய்யா இருக்கக்கூடாதா?’ என்று ஏக்க மாக இருந்தாலும், அவனது அலட்சியப் பார்வையும், அருவருப்பான எண்ணங்களும், வார்த்தைகள் எனும் அமிலங்களாக

கௌசிக் வாயிலிருந்து கொட்டியது.

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியவன், கதவைப் பூட்டிக்கொண்டான். கட்டியவன் கைவிட்டதும் வேறு வழியின்றி பெண் மனம் தகப்பனை, தஞ்சமடையத் தேடியது.

ஆட்டோவில் வந்து இறங்கியவளைக் கண்டதும் தம்பி மனைவி, முகம் சுளித்தாள். அவள் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில், அகல்யாவைக் காண அப்பாவே வெளியே வந்தார்.

வரும்பொழுதெல்லாம், ‘வாம்மா’ என்று வாய் நிறைய வரவேற்பவர், அன்று வாசலி லேயே நிற்க வைத்துப் பேசினார். “எதுவா இருந்தாலும் மாப்பிள்ளை கூட அனுசரித்துப் போமா, அகல்யா...”

“அப்பா... என் மீது எந்தத் தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் பிரச்னைக்குக் காரணமே அவர்தான்...”

“அவர் சொன்னதால்தான் அங்கே வேலைக்குப் போனேன்.”

“இப்ப நடுத்தெருவில் நிற்கிறேன்.”

“உன் நிலைமை புரியுது, அகல்யா. ஆனா நானும் வயதானவன் உன் தம்பி தயவில் இருக்கிறேன்..”

“நடந்தது தெரிந்து அவனுக்கு உன் மேல ரொம்ப கோபம். நிச்சயமாக உன்னை இந்த வீட்டில் சேர்த்துக்க மாட்டான்.”

“அவனை மீறி என்னால் உனக்கு எதுவும் செய்ய முடியாது.”

“அப்ப, நான் என்னதான் செய்யணும்?”

“சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச்

சண்டைக்காரன் காலில் விழுவதேமேல்...”

“எப்படியாவது மாப்பிள்ளை மனசை மாற்று.”

“அப்பா...”

“என்னை மன்னித்துவிடுமா...”

தட்டிக்கேட்க வேண்டியவரின் கையாலா காத்தனம், அவளைத் தவிர்க்கத் துடித்தது. பெற்ற தந்தையே சுயநலமாகக் கடமையைத் தட்டிக்கழித்ததை நினைத்து, மனம் இன்னும் வலித்தது.

இனி எங்கே போவது? யார் காலில் விழு வது? அப்படியாவது இந்த உயிரை வளர்க்க வேண்டுமா?

‘யாருக்காக... எதற்காக...?’

எல்லாமே சூன்யமானது போலத் தெரிந் தது. ஒரு முடிவுக்கு வந்தாள். புயல் அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் கடற்கரை யில் கூட்டம் இல்லை.

நுரையுடன் ஓடிவந்து கரையில் வேகமாக முட்டிக் கொண்டிருந்த அலை களில் ஆக்ரோஷம் தெரிந்தது.

மனக்குமுறலின்

சத்தம் அவளுக்குள் அதிக மாக, அதிகமாக நிரந்தர மான அமைதியைத் தேடி மெல்ல மெல்லக் கடலுக் குள் இறங்கினாள்.

உடலெங்கும் உப்பு வாசம் பரவ, கண்ணீரின் உப்பு கடலில் கலந்தது.

மிதப்பது சுகமாக இருந்தது.

மூச்சுத் திணறியது.

யாரோ நெஞ்சை அழுத்தி சுவாசம் கொடுக்கிறார்கள்.

மயக்கத்தில் வேண்டாம் என்று மறுக்க நினைத்து மனம் தவித்தது.

கண்களுக்குள் திறக்கமுடியா மல் எரிச்சலாக இருந்தது.

“நீங்க ஏன் இப்படி செய்தீங்க? என்னை எதற்காகக் காப்பாத்தி னீங்க?”

தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் கேட்டவாறே கைகளில் முகம் புதைத்து அழுதாள்.

“காலாற நடந்து வர்றப்ப, நீ தண்ணிக்குள்ள விழுந்ததைப் பார்த்துட்டு காப்பாற்றினோம்.”

“படிச்சப் பொண்ணு மாதிரி இருக்கே..? இது தப்புன்னு தெரியாதா?”

“நீ யாரும்மா? ஏன்மா இப்படித் தப்பான முடிவெடுத்த...?”

ஆச்சர்யமாக இருந்தது. அவளை அவர் களுக்கு அடையாளம் தெரியவில்லை. திரைக் கதை, வசனத்துடன் காட்சிகளாக அரங்கேறி யது இவர்கள் அறியவில்லையா?

அந்தளவிற்கு இவர்கள் சமூகத்தில் அந்நிய மானவர்கள் என்று புரிந்தது. இன்றைய தேதியில், டாக் ஆப் த சிட்டி அகல்யா மேட்டர் தானே?

அனைத்துப் பத்திரிகைகளிலும், சில வலைதளங்களிலும் இவளது கதை, எதையும் மறைக்கத் தோன்றவில்லை.

எல்லா உண்மைகளையும் ஒன்றுவிடாமல் சொல்லி விட்டாள்.

“ஆண்டவன் படைப்புல எங்கக்கிட்ட மட்டும்தான் தப்பு நடந்துப்போச்சுன்னு நினைச்சா, எங்களைத் தவிர அம்புட்டு பேரும் தப்பா இருக்காங்க.”

“தப்பானவங்களே வாழத் துடிக்கறப்ப, நீ எதற்காக உயிரைவிட ணும்? இப்படிப் பாதிக் கப்பட்ட எல்லாரும் முடிவெடுத்தா, இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லாமல் போய்டும். கவலைப்படாதம்மா... உன் மனசுக்குச் சரியா தோணற தையே தைரியமாச் செய்.”

“உனக்கு நடந்த அநியாயத்திற்கு நிச்சய மாகத் தட்டிக் கேட்கவேண்டும்.”

“எதுவாக இருந்தாலும் நாங்கள் இருக் கிறோம்.”

“உனக்குச் சம்மதம் என்றால், நீயும் எங்க கூடவே இருக்கலாம்...”

ஆளாளுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

“அச்சச்சோ... வேண்டாம்.”

“உங்களுக்கு என்னால் எந்தச் சிரமமும் வரக்கூடாது...”

“அட போதாயீ.. எங்கள் பிறப்பே சிக்கல் தான்..”

“நெறயப் பார்த்தாச்சு. பிரச்னைகள் எங்களுக்குப் புதுசு இல்ல...”

உதாசீனத்தின் வலியை அனுபவித்தவர்கள் அல்லவா! அதனால்தான் உதவி செய்யத் தயாராக இருந்தார்கள். அவர் கள் மூன்று பேர்.

கண்ணகி அம்மா பக்கத்து ரெடிமேட் கடைகளில் வெறும் துணிகளை வாங்கிக் குழந்தைகளுக்கான ஆடைகளை டிசைன் செய்து, தைத்து, அவர்களி டமே விற்பவர். வயதான வர்.

அவருக்குத் துணையாக சீதாக்கா வேலை செய்ய,

சாவித்திரி அக்காவுக்கு வீட்டு வேலைகள் முழுவதும் பொறுப்பு.

சொந்தங்களால் புறக்கணிக் கப்பட்டு, எங்கிருந்தோ வந்து இன்று ஒரே குடும்பமாக இருப்பவர்களுக்கு அகல்யா செல்லத் தங்கையானாள்.

அகல்யாவின் வரவிற்குப் பிறகு, அவளது ஐடியாக்கள் காரண மாக ரெடிமேட் வியாபாரம் சூடு பிடித்தது. ஒரு பக்கம் நீதிமன்றத்தில் அவளது வழக்கு விசாரணை துரிதமாக நடக்க, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினாள்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் மொத்தமாக ஸ்டாக் டெலிவரி முடித்துவிட்டு, கண்ணகி அம்மாவுடன் வீட்டுக்கு வந்த அகல்யா, தந்தை ராமநாதனை அங்கே எதிர் பார்க்கவில்லை. அதுவும் அருகே கௌசிக் வேற...

அவர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை. ஒரு கணம் அதிர்ந்தாலும் கோபத்தைக் காட்டி னாள்.

“அப்பா... நீங்க எதுக்கு வந்தீங்க?”

“கோபப்படாத அகல்யா. எப்படி இருக்கே? உன்னை நினைச்சு ரொம்ப கவலையா இருந்துச்சு. நீ நல்லா இருக்கறதைப் பார்த்து இப்ப நிம்மதியா இருக்கு. அப்புறம் கடவுள் இருக்காரு அகி. உனக்கு நடந்த அநியாயத்திற்குப் பதில் கிடைக்கப் போகிறது.”

“என்னப்பா சொல்றீங்க? கொஞ்சம் புரியற மாதிரிப்

பேசுங்க?”

“உனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மாப்பிள்ளை உன்னை ஏற்றுக்கொள்ளப் போகிறார்.”

“ஆமா அகி. நாம் மறுபடி யும் சேர்ந்து வாழலாம்.”

“நான் அன்றைக்கு உன்னை அசிங்கமாப் பேசினதுக்கு என்னை மன் னித்துவிடு.”

“என்ன மிஸ்டர் கௌசிக், திடீரென்று? என்னால் எதையும் நம்ப முடியவில்லை.”

“எனக்கும்தான் அகி. நம்பவே முடிய வில்லை.

நீ ஜெயிச்சுட்ட, அகி... நமக்குப் புதிய வாழ்க்கை அமையப் போகுது.”

“கொஞ்சம் நேரடியாக விஷயத்திற்கு வர்றீங்களா?”

“சொல்றேன்... ஆனா என் மேல உனக்கு நிறைய கோபம் இருக்குன்னு தெரியும். பொறுமையா எல்லாத்தையும் கேள்.

அவசரப்பட்டு அதிர்ஷ்டத்தை மட்டும் தட்டி விட்றாதே...”

“நீங்க என்ன பேசறீங்கன்னு எனக்குப் புரியல. எதுவா இருந்தாலும் தெளிவா சொல் லுங்க?”

“ஓகே... ஓகே... நான் சொல்றத அமைதியா கேள். அந்த தேவராஜுக்கு எதிராக எல்லாச் சாட்சியும் ரொம்ப தெளிவாக இருக்கு. அவனோட வீடியோவே அவனுக்கு எதிரான ஆதாரமா இருக்கு. அதனால அவனுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி!”

“இதுக்காகத்தானே, நான் இந்தளவுக்குக் கஷ்டப்பட்டுப் போராடினேன்? இது நான் எதிர்பார்த்ததுதான். சரி... இதற்கும் அதிர்ஷ்டத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“நீ ஜெயித்துவிட்டாய், அகி... ஆனால் தேவராஜுக்குத் தண்டனை கிடைப்பதால் உனக்கு எந்த லாபமும் இல்லையே.”

“புரியலயே?”

“எனக்கு... இல்லல்ல.... நமக்குச் சொந்த மாக ஒரு எஸ்டேட் கிடைக்கப் போகிறது.”

“நாம் எந்தக் கஷ்டமும் இல்லாமல், ஜாம் ஜாம்னு இருக்கலாம்.”

“அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“தேவராஜுக்கு எதிரான வழக்கை நீ வாபஸ் பெறவேண்டும். அவன் லாயர்

சொல்றதயெல்லாம் செய்யணும். அதற்குப் பதிலாகத்தான் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது.”

“அதாவது பணத்திற்காகத்தான் என்னைத் தேடி வந்திருக்கீங்க?”

“அகல்யா, கோபப்படாமல் மாப்பிள்ளை சொல்றதை கேளுமா.”

“உங்களுக்கு எவ்வளவுப்பா கிடைக்கும்?”

அகல்யாவின் வார்த்தைகள் அவரைச்

சுட்டிருக்க வேண்டும். மௌனமாய்த் தலை குனிந்திருந்தார்.

“என்னம்மா இது?”

“அப்பாகிட்ட இப்படிப் பேசக்கூடாது.”

கண்ணகி அம்மா குரலில் கொஞ்சம் கோபம் இருந்தது.

“இல்லை அம்மா. அன்னிக்கு நடந்த கொடுமைக்கப்பறம் என் நிலைமை பற்றி யோசிக்காமல் தன்னைப் பற்றி மட்டும் கவலைப்பட்டவர். கல்யாணம் செய்துகொடுத் ததுடன் கடமை முடிந்துவிட்டதாகச் சொல்லி, நான் நடுத்தெருவில் நிற்கும்பொழுது தம்பிக்குக் கட்டுப்பட்டு ஒதுங்கியவர். அன்னிக்கு கடலில் விழுந்தவளை, கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி, கைக்கொடுத்தவங்க நீங்க. ஆனா இவர், மகளைக் கைகழுவியவர். இன்று எனக்கு வாழ்க்கை அமைத்துத் தர வந்திருப்பதை ஏத்துக்க முடியவில்லை.”

“இந்தப் பாரு அகி... நடந்தது நடந்து விட்டது. இப்ப அந்த தேவராஜுக்கு எதிராக கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. நீ மட்டும் சம்மதிச்சா, நல்லா வாழலாம். நல்ல சந்தர்ப்பம். கை விட்டுவிடாதே...”

கௌசிக் பேசப் பேச வெறுப்பாக இருந்தது.

“பணம் கிடைச்சுட்டா, எனது கற்பு திரும்பக் கிடைத்துவிடுமா, கௌசிக்? நான் புனிதமாகி விடுவேனா?”

“நீங்க சொன்னதுக்

காகத்தான், அந்த காலேஜ்ல வேலைக்குப் போனேன். மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்ஸ் கொடுத்து, தேவ ராஜ் என்னைச் சீரழித்தான். அந்த வன்புணர்வை வீடியோ எடுத்ததுடன், அதைப் பணயமாக வைத்து வேறு சிலரிடம் பணியவைக்க என்னை மிரட்டினான். நான் நினைச்சிருந்தா அதை உங்கக்கிட்ட மறைச் சிருக்க முடியும். ஆனா உண்மையைச் சொல் லிக் கதறினேன். கோடீஸ்வர திமிறில் என் னைப் போன்ற பல பெண்களை நாசமாக்கிக் கொண்டிருந்த வனைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அது தவறா? என்னைப் பழி வாங்கும் நடவடிக்கையாக, தேவராஜ் அந்த வீடியோவைச் சமூக வலை தளங்களில் வெளி யிட்டபொழுது உங்களுக்கு அவமானமாக இருந்தது. அகி அகி என்று கொஞ்சிய வாயால் செத்துடுன்னு சொன்ன வர்தானே நீங்க?

அவன் உன்னைக் கொன்னிருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொன்னப்ப உங்கள் கோழைத்தனத்தை நினைத்துத்தான் வேதனைப்பட்டேன். ஆனா இப்ப, பணத்திற்காக என் கற்பை விலை பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல?

எப்ப என்னைச் செத்துடுனு சொன்னீங் களோ, அப்பவே உங்களுக்கு என் மீது எந்த உரிமையும் இல்லை. உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து அருவருப்பாக இருக்கிறது.

என்னை மாதிரி நிறையப் பெண்களுக்கு அநியாயம் நடந்திருந்தாலும், நான் மட்டும் தான் போராடினேன். இதே மாதிரி பாதிக் கப்பட்டு அதனால் தற்கொலை பண்ணிக் கிட்டு செத்தவர்கள்கூட, தப்பு பண்ண வனைக் காட்டிக்கொடுத்து தண்டனை வாங்கித் தர நெனக்கல... ஏன்னா பயம். யாரைப் பார்த்து? அந்தப் பணக்கார ரவுடி களையா? இல்ல. சொந்தக் குடும்பமே அவமானம்னு தூக்கி எறியு மோங்கற பயம். தன்னைச் சேர்ந்த உறவுகளை பிரச்னை களோட சந்திக்கப் பயம்.

பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நாங்க இருக்கோம்னு குடும்பமே சொல்றப் பத்தான், நிர்பயாக்களுக்கு

நீதி கிடைக்கிறது.

சதைப்பசி தீர்க்க சித்ரவதை செய்து துடிக்கத் துடிக்க வன்புணர்வு என்பது கொலையைவிடக் கொடூரமானது என்று புரிய வைத்தால்தான் சமூகத்திற்கும் தனது தப்பு புரியும். இல்லாட்டி பொள்ளாச்சி சம்பவங்கள் தொடரும்.

அந்த வீடியோவை ஆயிரம் பேர் பார்த்

தப்பக் கூட, எனக்கு நான் உத்தமிதான்,

கௌசிக். என்னைப் பொறுத்தவரை கற்புங் கறது உடம்பு சம்பந்தப்பட்டது இல்ல. யாருக்கும் தெரியாமல் காசு வாங்கி என் னையே நான் களங்கப்படுத்தத் தயாரில்லை. நீங்க சொல்றபடி கேட்டு, ஒரு விலைமகளாக என்னால் வாழ முடியாது.

இனி உங்களுக்கும் எனக்கும் இடைல ஒண்ணும் இல்ல. சீக்கிரமே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் இருவரும் போகலாம்.”

கௌசிக் அவமானத்தில் தலைகுனிந்து வேகமாக வெளியேற, தந்தையின் தலை கொஞ்சம் நிமிர்ந்திருந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :