வானவில் பக்கம்

ஜாம், ஊறுகாய் போன்றவை காலி யானதும், அந்த பாட்டிலின் உட்பகுதியைக் கழுவுவது கடினம். வேகவைத்து உரித்த முட்டைத் தோலை பாட்டிலில் போட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும். முட்டையின் ஓடு பாட்டிலின் உள்ளே உள்ள பிசுபிசுப்பை உறிஞ்சிவிடும்.

புதினா காய்ந்துவிட்டதா? காய்ந்த புதினாவுடன் மிளகு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, உப்பு சேர்த்து வாணலியில் வறுத்துப் பொடியாக அரைக்கவும். இதை இட்லி தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

வெங்காயம், பூண்டு உரித்த பிறகு கையில் அந்த வாடை வீசுகிறதா? சிறிது தக்காளியை கையில் தேய்த்துக் கழுவினால் அந்த வாடை தெரியாது.

பாத்திரம் துலக்கும்போது உணவு மிச்சங்கள் சேர்ந்து சிங்க் அடைத்துக் கொள்கிறதா? பழைய டீ வடிகட்டியை சிங்க்கின் மேல்புற ஓட்டையின் மேல் வைத்தால் உணவு துகள்கள் அதில் தங்கிவிடும். அதைக் கொட்டிவிட்டு, வடிகட்டியைச் சுத்தம் செய்து வைக்கவும்.

- எஸ்.சித்ரா, சென்னை

தினமும் வாசல் தெளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

கங்கை நீரே!

கோதாவரியே!!

கொளப்படி சாணமே!!!

அள்ளித் தெளிக்கின்றேன்

ஐஸ்வர்யம் பெருக வேண்டும்!

கரைத்துத் தெளிக்கின்றேன்

கைலாசம் சேர வேண்டும்!

இருளோடு போ மூதேவி!

பொருளோடு வா ஸ்ரீதேவி!!

- சௌமியா சுப்பிரமணியன், சென்னை

பிசாசின் சாணம் (Devi`s Dung), யானைக்கால் கிழங்கு, உருவரிசி, பஞ்சம்தாங்கி, கொரவல்லி இதெல்லாம் நாம் சாப்பிடும் பொருட்கள்தான்! பயப்படாதீங்க. பிசாசின் சாணம் என்றால் பெருங்காயம்தான்.

யானைக்கால் கிழங்கு எனப்படுவது சேனைக்கிழங்கு. உருவரிசி என்று கொத்துமல்லிக்கு ஒரு பெயர். பஞ்சம்தாங்கி என்ற பெயர் முருங்கை மரத்துக்குரியது. கொரவல்லி என்பது பலாவின் ஒரு பெயர்.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி

வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பு தாம்பூலம் தரிப்பது என்ற வெற்றிலை பாக்கு போடுகிற பழக்கத்துக்கு ஒரு வழி முறையே வகுக்கப்பட்டுள்ளது.

காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு போடுகிற தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண் டும். காரணம், மதிய நேர வெப்பம் அதிகமாகிற போது உடலில் பித்தம் ஏறாமல் பாதுகாக்கும்.

மதிய உணவுக்குப் பிறகு சுண்ணாம்புச் சத்து அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அது உணவில் உள்ள வாதம் என்ற வாயுவைக் கட்டுப்படுத்திவிடும்.

இரவில் வெற்றிலையை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நெஞ்சில் கபம் தங்காமல் பாதுகாக்கும். மேலும், பாக்கில் இருந்து வெளியாகிற துவர்ப்புத் தன்மை பித்தத்தைக் கண்டிக்கும். காரம் வாதத்தை அகற்றும். வெற்றிலையின் உறைப்புத்தன்மை கபத்தை நீக்குகிறது!

- ச.லெட்சுமி, செங்கோட்டை

அரசமரம், வேப்ப மரம், ஆலமரம் மூன்றும் மேடையில் வளர்ந்து காணப்படுவது, திரிவேணி மரங்கள் எனப்படும்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி யில் ஜோதிர்லிங்கமான மகா காளேஸ்வரர் தரிசனம் முடித்து வெளிவரும்போது மிகப் பெரிய பிரகாரத்தில் திரிவேணி மரங்கள் உள்ளன. விருட்ச திரிவேணி என்று ஹிந்தி யிலும், ஆங்கிலத்திலும்போர்டு வைத்துள் ளார்கள். அதன் கீழ் சிறிய ராமர்கோயில் உள்ளது சிறப்பு.

- பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய

துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரில் அரை தம்ளருடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து தொடர்ந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும்.

பாகற்காய் இலையை சாறு பிழிந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து 1 கரண்டி தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.

- ஆர். கீதா, சென்னை

சோளப் பணியாரம்

தேவையானவை : தோல் நீக்கிய சின்ன வெள்ளைச் சோளம் - 3 கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - 1லீ கப், துவரம் பருப்பு - 1லீ கப், உளுத்தம் பருப்பு - 1லீ கப்,

கறிவேப்பிலை - கொஞ்சம், தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை : சோளத்தோடு எல்லா பருப்புகளையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து, அதோடு தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுப்பதற்கு முன் நறுக்கிய வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு முறை சுற்றி எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை எட்டு மணி நேரம் கழித்து பணியாரக் கல்லில் ஊற்றி பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும். தேங்காய் அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- சீதா ரவி, சென்னை
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :