மனித நேயம் மலர்ந்த நேரம்!


ராஜி ரகுநாதன்அவர் யாரும் கண்டுகொள்ளாத அநாதை. பைத்தியம் என்று ஊரார் பழித்த பெண்மணி. தன் இஷ்டத்துக்கு வாழ்ந்து வந்தார். நினைவுக்கு வந்த பாடல்களைப் பாடிக்கொண்டு வீதிகளில் அலைந்து வந்தார். யாராவது பேச்சுக் கொடுத் தால் பதில் பேசுவார். பசிக்கும்போது கிடைத் ததைத் தின்பார். அல்லது பட்டினி கிடப்பார்.

ஆந்திர மாநிலம், விஜய நகரம் மாவட்டம் பொப்பிலி நகரில் திரிந்து வந்த அந்தப் பெண்மணி மனநலம் சரியில்லாதவர். நகரில் அலைந்தபடியே சாலையோரத்தில் கிடக்கும் பழைய துணிகளையும் கயிறுகளையும் பொறுக்கி தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அலைவது இவரது வழக்கம். அந்தக் கயிறுகள் கழுத்தில் தூக்குக் கயிறு போல இறுக்கியிருத்தன. ‘அந்தக் கயிறுகளால் தனது உயிருக்கு ஆபத்து’ என்று அந்தப் பைத்தியக்காரப் பெண்மணிக்குத் தெரியவில்லை. அந்தப் பக்கம் போகும் யாருக்கும் அதைப் பார்த்து உதவும் எண்ணமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பெண்மணி நமக்கு முன் எதிர்ப்பட்டால், நாமும்தானே அப்படி விலகிப் போவோம்!

ஆனால், அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த, ‘ஹோம் கார்டு’ ஜான்சிராணி என்பவர் கண்ணில் இந்தக் காட்சி தென்பட்டது. பெயருக்கேற்ப செயற்கரிய செயலைச் செய்ய முனைந்தார் இந்த ஜான்சிராணி. மனிதத் தன்மை மலர்ந்த நேரம் அது.

‘ஐயோ...!’ என்று பதறிப்போ இன்னும் சிலரை அழைத்து, அவர்களுடைய உதவியோடு அந்தப் பெண்மணியை சமாதானப்படுத்தி அருகில் அழைத்து, சிறிய கத்தியால் கழுத்தில் இருந்த ஒவ்வொரு துணிக் கயிற்றையும் கத்தரித்தார்.

அருகில் அரவணைத்து கெஞ்சி, சாமர்த்தியமாகப் பேசி அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றி தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பெண்மணியிடம் பேச்சு கொடுத்து, உனது பெயர் என்ன?" என்று கேட்டார் ஜான்சிராணி.

ஜெயலக்ஷ்மி" என்று பதில் அளித்தார் அந்தப் பெண்மணி.

நீ என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்டபோது, ‘ஆறாம் வகுப்பு’ என்று பதில் வந்தது.

இவ்வாறு பேசிக்கொண்டே அவரது கழுத்தில் இருந்த அனைத்து கயிறுகளையும் விலக்கியதோடு, அந்தப் பெண்மணியைக் குளிப் பாட்டி சுத்தம் செதார் ஜான்சிராணி. பின்னர், ஒரு நைட்டியை அவருக்கு அணிவித்ததோடு, வயிறு நிறைய சாப்பாடு போட்டு தனது நல்ல மனதை நிரூபித்தார். எனது வீட்டுக்கு வருகிறாயா?" என்று ஜான்சிராணி கேட்டபோது, ஊகூம்... வர மாட்டேன்!" என்று கச்சிதமாகக் கூறி விட்டார் அந்தப் பெண்மணி.

இது குறித்து ஜான்சிராணி விவரிக்கையில், நம் குடும்ப அங்கத்தினராக இருந்தால், இவ்வாறு செய்ய மாட்டோமா என்ன? என்னைப் பொருத்தவரை இந்த பெண்மணி ஒரு தாயார்... ஒரு மாமியார்... என்று தோன்றியது’ என்று கூறி, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

மன நலம் சரியில்லாத அந்தப் பெண்மணிக்கு பணிவிடை செய்த ஜான்சிராணியை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஜான்சிராணி போல், அந்தப் பெண்ணின் வீட்டாரே அவரை அன்போடு அரவணைத்திருந்தால்

இதுபோன்று பைத்தியமாக அவர் தெருவில் அலைய வேண்டிய கொடுமை நேர்ந்திராது அல்லவா? சிந்திபோம்... தோழிகளே!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :