முதலும் கடைசியுமாய்...

(நிஜமல்ல கதை)
லதானந்த்
ஓவியம் : ஓவியம் : தமிழ்லேசான பதற்றம் எனக்குள் இருந்தது.

‘முதல் சந்திப்பு’ - அதுதான் கவியரங்கத்தின் தலைப்பு. எத்தனையோ போட்டிகளில் கலந்து கொண்டு - ஏறக்குறைய கலந்து கொண்டவற்றில் எல்லாமே பரிசுகள் வாங்கியிருந்தாலும், படபடப்பு மட்டும் கூடிக் கொண்டே இருந்தது. இவ்வுணர்வை கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முழுதாக உணர்ந்திருக்க முடியும்.

அதுவும் தலைப்பை போட்டியின்போதுதான் அறிவித்தார்கள். முப்பது நிமிட கால அவகாசத்தில் கவிதை எழுத வேண்டும். பின்னர் சுமார் ஆயிரம் மாணவப் பார்வையாளர் கள் முன்னிலையில், எழுதியதை வாசிக்க வேண்டும். குலுக்கல் முறையில் போட்டி யாளர்கள் கவிதை வாசிக்க அழைக்கப்படுவர்.

சென்னை, பெண்கள் கிறித்தவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கலந்துகொள்ள நகரின் முக்கியக் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் வந்திருந்தனர்.

விவேகானந்தா கல்லூரியின் பிரதிநிதியா நானும், சற்றே நெர்வஸாக ஒரு வகுப்பறையில் அமர்ந்து மற்ற 25 மாணவ, மாணவியருடன் எழுதிக் கொண்டிருந்தேன். சரியாக முப்பது நிமிடம் கழித்து ஒரு மிகப் பெரிய

ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பிரமாண்டமான மேடை. நவீன ரக ஒலிபெருக்கிகள். அரங்கம் நிறைய இளமைத் துள்ளலுடன் மாணவ, மாணவியர். ஒவ்வொரு போட்டியாளரும் மைக் முன் வரும்போது அரங்கமே குலுங்கும் அளவுக்குக் கைதட்டல். இவையனைத்துமே எனக்குள் மெலிதான நடுக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

எனக்கொரு வழக்கம். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ளுகிறபோது இதர போட்டியாளர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிக்கவே மாட்டேன். நான் எப்படிப் பேச வேண்டும் என்பதிலேயே கவனமாக இருப்பேன்.

என் முறை வந்தது. என்ன வரிகள் எழுதிப் படித்தேன் என்று இப்போது எனக்கு சரியாக நினைவில்லை.

நடுவராக இருந்த கவிஞர் சுரதாவை நோக்கி, ‘மாடு முட்டி கோபுரங்கள் சாவதில்லை என்ற மகத்துவத்தைச் சொன்ன கவி சுரதா வாழ்க!’ என்று ஆரம்பித்தது மட்டும் நினைவில் இருக்கிறது.

மிகவும் உணர்ச்சிப் பிழம்பா, ‘காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி’ என்பார்களே, அப்படி குரலில் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து, மிகச் சரியான உச்சரிப்புடன், ஓசை நயத்துடன் பத்து நிமிடம் வாசித்தேன். கிட்டத்தட்ட ஏழெட்டு முறை இடையில் மகிழ்ச்சிக் கரவொலி. வாசித்து முடித்துக் கீழே இருக்கைக்கு வரும் வரை ஆரவாரம்.

அப்போதுதான் நீலாவதியை முதன்முதலில் பார்த்தேன். எங்கள் கண்களுக்கும் அதுதான் முதல் சந்திப்பு. முகமெல்லாம் விகசிப்புடன் கண்கள் விரியக் கைதட்டிக் கொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த கண்ணாடி வளையலில் ஒன்றிரண்டு நொறுங்கியதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

லேசான சதுர முகம்... சீரான புருவம்... கருந் திராட்சைக் கண்கள்... மாநிறம் அந்தப் பெண்ணுக்குக் கூடுதல் வசீகரத்தைக் கொடுத்திருந்தது. அவளது ஒரு கன்னத்தில் புதிதாகப் பூத்திருந்த சின்னஞ்சிறு முகப்பரு ‘இன்னொரு முறை என்னைப் பாரேன்’ என்றது. அந்த

உதடுகள்... அடடா! அதிலும் அந்தக் கீழுதடு சராசரிக்கும் கூடுதலான அளவுள்ளதா பருத்து, நீரோட்டத்துடன் மினுங்கிக் கொண்டிருந்தது.

அற்புதமா இருக்கு! நிச்சயம் உங்களுக் குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். சந்தேகமேயில்ல!" என்று சொல்லிக்கொண்டே இயல்பாக் கை குலுக்க, கையை நீட்டினாள்.

அவளது விரிந்த வலது கையில் மருதாணி வைத்திருப்பாள் போல! விரல் நுனிகள் தொப்பி போட்டதைப் போலச் சிவந்து காணப்பட்டன. நகங்கள் முறையாகப் பேணப் பட்டு, ஓவல் ஷேப்பில் அழகா மிளிர்ந்தன.

தயக்கத்துடன் மெல்லக் கையை நீட்டினேன். அவளாக முன்வந்து கையைப் பற்றியபோது, ‘இப்படியும் ஓர் அதிர்வலையை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் தருமா?’ என மனசு தத்தளித்தது. ரோஜா மலரின் இதழ்களைத் தொட்டால் இந்த மாதிரித்தான் இருக்கும்போல! சட்டென்று கையை உருவிக்கொண்டேன்.

இருங்க! என் பேர் கூப்பிடுறாங்க! ஏதாவது சொதப்பிட்டு வந்திடுறேன்" என்றபடி எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெல்ல நடந்து மைக் முன் நின்றாள்.

அருவியாக் குளிர்ந்தும், அலையெனச் சுழன்றும், நீதி கேட்ட கண்ணகியாச் சீறியும் பிரமாதமா அவள் கவிதை வாசித்தபோது, அரங்கமே எழுந்து நின்று ஆர்ப்பரித்தது.

வாசித்து முடித்து அருகில் வந்து அமர்ந்தாள். இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அவளது பவுடர் பூச்சின் மணமும், அவளது உடல் மணமும், லேசான வியர்வை மணமும் ஓர் உன்னதக் கலவையா நாசியில் புகுந்து

மனசைக் கிறங்கடித்தது.

எனக்குக் குரல் வறண்டுவிட்டது. மிக அழகான பெண்கள் ஓரளவுக்கு மேல் அறிவுடன் இருக்க மாட்டார்கள் என்பது எனது அப் போதைய எண்ணம். அதை நான் மாற்றிக் கொண்டேன். அதன் பின்னர் இன்று வரையிலும் சில விதிவிலக்குகளை நான் பார்த்திருக்கிறேன் என்பது வேறு விஷயம்.

எனக்கே கேட்காத குரலில், வாழ்த்துக்கள்! ரொம்ப நல்லா இருந்துச்சு!" என்றேன்.

தேங்க்ஸ்!"

போட்டியின் இறுதியில் முடிவுகளை அறிவித்தார்கள். எங்கள் இருவருக்குமே முதல் பரிசு!

மறுபடியும் கை குலுக்கிக் கொண்டோம். இந்த முறை அவளது கை மிகவும் சூடாயிருந்ததுபோல உணர்ந்தேன். வெளியே வந்து கல்லூரி சாலையில் மெல்ல நடந்து வந்தோம். மாலை மணி ஏழு இருக்கும்.

மிஸ்டர் மாதப்பன்... சாரி! எல்லாரும் உங்களைக் கூப்பிடுற அந்தப் பேரை விட ஒங்களை அனில்னு கூப்பிடட்டுமா?"

ஓகே! நீலாவதி, அப்படியே கூப்பிடுங்க."

அனில்! எப்படியும் போட்டி முடிய ஒம்பது மணியாடும்னு வீட்டில சொல்லியிருக்கேன். அதனால, சுதந்திர தினப் பூங்காவில் கொஞ்ச நேரம் ஒக்காந்து பேசலாமா?"

பேசினோம்... நிறையப் பேசினோம். அதற்கப்புறமும் பல இடங்களில்... பல தடவை... பல விஷயங்கள் பற்றிப் பேசினோம்.

அந்தக் காலத்தில் கல்லூரி மாணவர்கள் பைக் வைத்திருப்பது ரொம்பவும் அபூர்வம். நான் வைத்திருந்தேன். ஜாவா என்ற மோட்டார் சைக்கிள்.

அதில் நானும் நீலாவதியும் சென்னை ஈ.ஸி.ஆர். வழியே பலமுறை பயணித்தோம்.

நான் எம்.எஸ்ஸி. பாட்டனி இரண்டாம் ஆண்டு மாணவன் என்பதாலும், அவள் எத்திராஜில் மூன்றாம் ஆண்டு பாட்டனி மாணவி என்பதாலும் படிப்பு தொடர்பான பல நுட்பமான ஆலோசனைகளைத் தருவேன். ஏறக்குறைய எங்களது நட்பு ப்ளாட்டானிக் லவ் ஆகவே இருந்தது. மெல்ல மெல்ல அது டைட்டானிக் லவ் ஆக மாறியது.

நன்கு ஞாபகம் இருக்கிறது. ஈ.ஸி.ஆர். வழியே ஒரு நாள் காலை 11 மணியளவில் ஜாவாவில் பறந்து கொண்டிருந்தோம்.

அனில்! இங்கே நிறுத்துப்பா! அப்படியே பீச் வரை போ வரலாம்."

போனோம். சவுக்குத் தோப்புகளின் அடர்த்தியான இருட்டில் அவளையே உற்றுப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட ஆறு மாசமாப் பழகுறோம். எதுக்கும் ஒரு அடையாளம் வேண்டாமா அனில்?"

வேணும்தான்! என்ன பண்ணணும்?"

இதோ! இந்தப் புத்தகத்திலே ஏதாவது எழுதிக் குடுங்க."

ம்ம்ம்! கொண்டா" எழுதினேன்.

என்ன எழுதியிருக்கீங்க மாது... சாரி அனில்?"

படி..."

"Heard melodies are sweet!

But those of unheard are sweeter!``

இதுக்கு என்ன அர்த்தம் அனில்?"

அதையெல்லாம் கோனார் நோட்ஸ் மாதிரி விளக்க முடியாது! நீ கேட்டியே அது ஒரு அடையாளம். இந்த அக்கேஷனை என்னிக்கும் ஞாபகப்படுத்திட்டே இருக்கும்."

அனில்! உங்களுக்கும் நான் ஒரு அடை யாளம் தரட்டுமா?"

தாயேன்..."

-----

இதுவும் ஒரு விதமான முதல்

சந்திப்புதான். இதழ்களின் முதல் சந்திப்பு இல்லியா?"

இருக்கலாம்."

எப்படி இருக்கு அனில்?"

உலகத்தின் உச்சியிலே இருக்கிற மாதிரி!"

அதை இங்கிலீஷிலேயே சொல்லுங்களேன்?"

"" I feel on top of the world.``

சரி! சரி! நாளைக்கு எங்க ஹாஸ்டல் டே! மறந்திடாதே! கட்டாயம் வந்திரு நீலா! சிவாஜி கணேசன் வர்ராரு. அந்த வருஷம் பூரா நான் வாங்கின பரிசுப் புத்தகத்தையெல்லாம் மறுபடியும் அவர் கையால தர ஏற்பாடு பண்ணியிருக்காங்க. சுமார் அம்பது புத்தகம் இருக்கும் - ஜெயகாந்தன், லா.ச.ரா, ஓ ஹென்றி இவங்களோட புக்கெல்லாம். எல்லாத்திலேயும் லேபிள் மாதிரி ஒட்டியிருப்பாங்க. அத்தனை யிலேயும் சிவாஜி கையெழுத்தையும் வாங்கி முன் அட்டையின் பின் பக்கத்திலே ஒட்டியுமாச்சு. எல்லாம் நீ சொன்னியே அந்த மாதிரி ஒரு அடையாளத்துக்குத்தான்!" ஃபங்க்ஷன முடிச்சிட்டு...?"

நாமதான் ஏற்கெனவே முடிவு பண்ணி யிருக்கோமே? மகாபலிபுரம் பக்கத்திலே என்னோட ஃபிரண்டு, டே ஸ்காலர் ஆனந்தோட பண்ணை வீடு ஃப்ரீயாத்தான் இருக்குன்னு... அங்கே போ மிச்சமிருக்கிற நம்ம முதல் சந்திப்புக்களை முழுமையாக்கிரலாம்!"

சீ! நாட்டி!"

மறு நாள் ஹாஸ்டல் டேவின்போது எனது கெஸ்ட் ஆக நீலாவதி வந்திருந்தாள். மிக உன்னதமாகத் தன்னை அலங்கரித்திருந்தாள். இருவருக்குமே பலமான எதிர்பார்ப்பும் பதற்றமும் இருந்தன. விழாவில் சிவாஜி கணேசன் பரிசளித்தார்.

என்ன பிள்ளை! இத்தனை பரிசையும்

நீ ஒருத்தனே வாங்கிட்டயா? ஹா! ஹா! ஹா!"

லேசாகப் புன்னகை பூத்தபடி நன்றி கூறி, மேடையை விட்டுக் கீழே இறங்கிப் பெரிய மைதானத்தில் பஃபே முறையில் பௌர்ணமி நிலவொளியில் உணவருந்தினோம்.

அனில்! பௌர்ணமி நிலா எவ்ளோ அழகாயிருக்கு பாத்தீங்களா? ஒங்க வாழ்நாள் பூராவும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் என்னை நெனைச்சுக்குங்க. நானும்தான். சரியா?"

நிச்சயமா..."

என்னென்ன புக்குன்னு நான் பாக்கலாமா?"

ம்..."

அட! எல்லா புக்கும் ரொம்ப நல்லாருக்கே! நான் எடுத்துக்கவா?"

எடுத்துக்கோயேன். நீ அடிக்கடி சொல்ற அடையாளமா ஒங்கிட்டயே இருக்

கட்டுமே?"

அடுத்து, அவள் ஒரு காரியம் செய்தாள்.

அத்தனை புத்தகத்திலும் இருந்த பரிசு விவரங்கள் ஒட்டிய லேபிள்களை ஒவ்வொன்றாய்ப் பிய்த்துப் போட்டாள்.

இதுகள் இருந்தா வீட்டில அனாவசியப் பிரச்னை வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு!"

அவள் கிழித்து முடிக்கும் வரை பொறுமை யுடன் இருந்தேன். அந்த நிமிடம்தான் எங்களது கடைசிச் சந்திப்பு நிகழ்ந்த நிமிடம்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :