பூரணத்துவம்


டி.இரத்தினசாமி
ஓவியம் : ஓவியம் : கமலக்கண்ணன்மொத கொழந்தை வயித்திலிருக்கறப்போவே இது பொட்டப் புள்ளையா இருக்கோணும்னு லதாவுக்கு ரொம்ப ஆசை. என்னடான்னு பாத்தாக்கா பாலாஜி பொறந்தான். சரி! ரெண்டாவது கொழந்தையாவது பொட்டப் புள்ளையா இருக்காதான்னு ஏங்கிக்கிட்டு இருந்தா... அடுத்தாப்பல கிரிதர்!

இதோட போதும்... பரிபூரணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தாச்சு. ஆனாலும், எங்கே பொட்டக் கொழந்தைங்களைக் கண்டாலும் ஒரே குதூகலமாயிடுவா.

பாலாஜிக்கு ரெண்டு வயிசாகிற வரைக்கும் ஜடை பின்னல்தான். வேட்டமங்கலம் குந்தாணி பாளையத்திலிருக்கிற அங்காளம்மன் கோயில்ல முடியெடுத்த பொறகுதான் பாலாஜிக்கு கிராப்பே வெச்சோம் அப்படின்னா பாத்துக்குங்களேன்!

துணிக் கடைக்குப் போனாலும் பொட்டக் கொழந்தைங்க ட்ரஸ் செக்க்ஷன் பக்கம் போயி ஆசையா பாப்பா. ஸ்கூல்ல பசங்களைக் கொண்டுபோயி விட்டுட்டு வந்தா, அங்க வந்த பொட்டக் கொழந்தைங்களைப் பத்தியே பேசிட்டு இருப்பா.

சரின்னு ஒரு ஓசனை பண்ணுனோம். ‘நாமளே ஒரு பொட்டைய வளத்துனா என்னா’ன்னு தோணுச்சு. நெறையப் பேருக்கிட்டே சொல்லி வெச்சோம். கடைசீலே நல்லபடியா அமைஞ்சது.

ரெக்கார்டுகளெல்லாம் பக்காவா இருந்துச்சு. ஒரு நல்ல நாள்லே அந்தப் பொட்டக் குட்டி ஊட்டுக்கு வந்தா. லதாவுக்கு ஒரே சந்தோசம். பாலாஜி லண்டன்ல கென்சிங்டன்னில படிக்கிறதால, ‘கென்சி’ன்னு பேரும் வெச்சிட்டா.

எப்பப் பாத்தாலும் கொஞ்சல்தான். இப்பத்தான் என்னென்னமோ புதுப் புது ஊசி, மருந்து, சொட்டு மருந்து இதெல்லாம் இருக்கே! அதெல்லாம் தவறாம கொடுத்தா. கண்ணுங்கருத்துமா பாத்துக் கிட்டா. நல்லபடியா வளர்றா கென்சி.

நான் கன்னிகட்டின்னு ஒரு திக் ஃபாரஸ்டுக்குள்ளே இருக்கிறப்போதான் அந்த நியூஸ ரொம்ப சந்தோசமா போனில சொல்றா லதா.

மச்சா! நம்ம கென்சி பெரிய மனுசி ஆட்டாளுங்க!"

‘ஓ! காலந்தான் எவ்வளவு வேகமாப் போவுது. இயற்கை ஒரு தாள கதியில தனது கடமையைச் செதிட்டு போயிக்கிட்டே இருக்கே! பெண் பிறவி பூரணத்துவம் அடையற நிகழ்ச்சியாச்சே இது! O! Nature! You work like a magic wand! How wonderful! The biological clock makes its routine without anybody`s monitoring! அப்படின்னெல்லாம் எமோஷனலா நெனைச்சுக்கிட்டே கேம்ப் முடிஞ்சு ஊட்டுக்கு வந்தேன்.

லதா பால் பாயசங் காச்சி, ஒப்புட்டுச் சுட்டு அக்கம் பக்கத்துக்கெல்லாம் குடுத்து அட்டகாசம் பண்ணிப்போட்டா.

மெள்ளமா கென்சி கிட்டப் போயி! Kensi! Are you O.K?ன்னு கேக்குறேன்.

கென்சி சந்தோஷமா கத்துறா...

லொள்...! லொள்...!"

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :