அரக்கு வளையல்கள்!

களஞ்சியம்
லக்ஷ்மி ரமணன்திருமணங்கள், பண்டிகை நாட்கள், புதுமனை புகுவிழாக்கள் போன்ற சுபகாரியங் களின்போது பெண்கள் கைகளில் அரக்கு வளையல்களை அணிவது சௌபாக்கியமான தாகக் கருதப்படுகிறது. வளைகாப்பின்போது, முதலில் ஒரு ஜோடி அரக்கு வளையல்களை யாவது அடுக்கி விட்டுத்தான் மற்ற வளையல் களை அடுக்குவார்கள். இவை ரட்சை மாதிரி கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

அரக்குக்கு அப்படி என்ன மகத்துவம்? ஏன்... எதனால்...? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

அரக்கு (ஆங்கிலத்திலும் இந்தியிலும் இதை ‘லாக்’ என்கிறார்கள்.) உற்பத்தி செய்யும் லார்வா புழுக்கள் பலாச மரம், அரச மரம் ஆகியவற்றின் மீது வளர்க்கப் படுகின்றன. இந்தப் புழுக்கள் லாக்கி ஃபையர், லாக்கா ‘குசும்’ என்கிற பெயர்களால் அறியப் படுகின்றன. இவை தம் உணவிற்காக மேற்சொன்ன மரங்களைச் சுரண்டும்போது இவற்றின் வாயிலிருந்து உற்பத்தி யாகும் ஒருவித பிசின் இம்மரத்தின் கிளைகளில் படிகிறது. இதை ‘ஷெல்லாக்’ அல்லது ‘லாக்’ என்கிறார்கள். வளையல்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த அரக்கு புனித விருட்சங்களின் கிளைகளில் படிந்து செதுக்கி எடுக்கப்படுகிறது என்பதாலோ என்னவோ, இவை மகத்துவம் வாய்ந்ததாக எண்ணப்படுகிறது.

பீஹார், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரக்கு அதிக அளவில் கிடைக்கிறது. காடுகளிலிருந்து அரக்கை சேகரித்து எடுத்து வந்து விற்பது ஆதிவாசிகளின் வேலையாக இருந்தது. இப்போது முறைப்படி மேற்சொன்ன மரக்கிளைகளில் இப்புழுக்களை வளர்த்து, அவை உற்பத்தி செய்யும் அரக்கைச் சேகரிப்பது என்பதைப் பலர் தொழிலாகவே மேற்கொண்டு நடத்துகிறார்கள். அரக்கை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்றும் பரிசோதித்து வருகிறார்கள்.

மரச் சாமான்களுக்கு பாலிஷ் போட அரக்கு பயன்படுகிறது. சோஃபாக்கள், நாற்காலிகள், டீபாய்கள், மேஜை விளக்குகள், மர விளை

யாட்டுச் சாமான்கள் இத்யாதிகளை பாலிஷ் செய்யும்போது அரக்கு அதில் ஒரு பளபளப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறதாம்.

முன் காலத்தில் பதிவு தபால்களை அனுப்பும் முன், உறையின் மீது அரக்கை உருக்கி உறையை அழுத்தி மூடும்படி, ‘சீல்’ பதிந்து அனுப்புவது பழக்கத்தில் இருந்தது. அந்த ‘சீல்’ முத்திரையை அகற்றாமல் கடிதத் தைப் பிரிக்க முடியாது.

மின் பல்புகளை சீல் வைக்கவும் அரக்கு பயன்படுகிறது. புகைப்பட நெகட்டிவ்களைப் பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்பட்டதாம். இப்போது அரக்கில் பூக்கூடைகள், அழகு சாமான்கள், குங்குமச் சிமிழ்கள், பாசிமணி பதித்த பொத்தான்கள், நெக்லஸ் கள் என்று பல சாதனங்களைத் தயாரிக்கிறார்கள்.

அரக்கு வளையல்களை எல்லோராலும் செய்துவிட முடியாது. இவற்றைத் தயாரிக்கிற ‘மணிஹார்’ குடும்பங்கள் ஜெய்பூரிலும், ஹைதராபாத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டளவிலேயே சின்ன ஃபாக்டரிகளில் இவற்றைச் செய்கிறார்கள். இவர்கள் வசிக்கும் தெருவுக்கு ‘மணி ஹாரோகா ராஸ்தா’ (வளையல்காரர்கள் தெரு) என்றே பெயர்.

அரக்கை மேற்சொன்ன விருட்சங்களிலிருந்து சேகரித்த பின் அவை இருந்த கிளைகளை வெட்டி விடுகிறார்கள். அரக்கை சுத்தப்படுத்த காஸ்டிக் ஸோடா பயன்படுத்தப்படுகிறது. பிறகு அதை ஒன்று சேர்த்து இறுக்கமாக்கி இரண்டு முதல் மூன்று அங்குல அகலமுள்ள உருளைக் குச்சிகளாக செய்துகொள்ளுகிறார்கள்.

அடுத்து சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று பலவித வண்ணங்களில் இந்த அரக்கு உருளைக் குச்சிகளை சாயம் ஏற்றிக் கொள்கிறார்கள். வெள்ளை நிறத்துக்கு மட்டும் அரக்கை சாயம் ஏற்றாமல், ‘பிளீச்’ செய்ய வேண்டி இருக்கிறது.

இதன் பிறகு இரண்டு கரும் கற்பலகைகளுக்கு மத்தியில் (இடுக்கில்) மிதமான நெருப்பை மூட்டி அந்த அனலில் அரக்கு உருளையை லேசாகக் காட்டும்போது அது நெகிழ ஆரம்பிக் கும். இவற்றைச் சுழற்றிச் சுழற்றி அனல் ஒரே விதமாகப் படும் வகையில் காட்ட வேண்டு மாம். இல்லையேல் அதிகச் சூட்டில் அரக்கு தனது நிறத்தை இழந்துவிடுமாம்.

அடுத்து, பல அளவுகளில் மரக்குச்சிகளில் வளையல்களுக்கான அளவுப்படி, இரும்புக் கம்பிகளை வளைத்து அடுக்கிக்கொண்டு அவற்றின் மீது இளகிய அரக்கை நூலாக இழுத்துப் படிய விடுகிறார்கள். வளையல்கள் தயாரிக்கப் பயன்படும் இக்குச்சிகளுக்கு,

‘ஸேல்’ என்று பெயர். வளையல் களை இவற்றிலிருந்து சுலபமாகக் கழற்ற இதன் மீது எண்ணெயைத் தடவுகிறார்கள்.

மழுமழுப்பான முகப்பு வர வளையல்களில் படிய விட்ட அரக்கை அதற்கென்றே இருக்கும் கட்டையால் லேசாகத் தேய்க்கிறார்கள். அனுபவம் மிக்கவர்கள் கை உறை அணிந்து விரல்களாலேயே இதைச் செய் கிறார்கள். தேவையான மழுமழுப்பு வந்ததும் இதைக் குளிர்ந்த நீரில் முக்கி எடுத்துவிட்டு வளையல்களின் மீது விதவித வடிவங்களில் கண்ணாடித் துண்டுகளையும், பாசி மணிகளையும் செயற்கை கற்களையும் லேசாக சூடுபடுத்தி விட்டு பதிக்கிறார்கள்.

வேலைப்பாடுக்கேற்ற விலையும் நிர்ணயிக்கப் படுகிறது.

பின்னல் வளையல்கள், கங்கணம், பட்டை வளையல்கள் என்று பல ரகங்களில் அரக்கு வளையல்கள் தயாராகின்றன. ஜெய்பூரில் மட்டும் இந்தத் தொழிலில் சுமார் ஐயாயிரம் பேர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். முஸ்லிம் குடும்பங்கள்தான் இந்தத் தொழிலில் அதிகமாகஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வளையல்களை அப்பழுக்கில்லாமல் செய்து முடிக்க நல்ல அனுபவமும் துரிதமாய் செய்யும் சுறுசுறுப்பும் வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே இதைப் பார்த்தறிந்த அனுபவசாலிகளே முதலில் இந்தத் தொழிலில் ஈடுபட்டார்களாம். தற்போது பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. எளிதில் உடைந்து போகாத உறுதியான அரக்கு வளையல்களையும் தற்போது இவர்களால் தயாரிக்க முடிகிறதாம்!

(மங்கையர் மலர் பிப்ரவரி 2000 இதழிலிருந்து...)

(இதுபோன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளையும் இதர படைப்புகளையும் www.kalkionline.com இணையதளத்தில் ‘களஞ்சியம்’ பகுதியில் படித்து மகிழலாம்.).
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :