அந்த நாள் ஞாபகம்!


பி. சுவாமிநாதன்
ஓவியம் : ஓவியம் : லலிதாசென்னைவாசிகளில் உங்களுக்குப் பழக்கம் இல்லாத ஒரு பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து, ‘உங்களது சொந்த ஊர் எது?’ என்று கேட்டுப் பாருங்கள்.

‘கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர்...’ என்று வெவ்வேறு ஊர் பெயரைச் சொல்வார்கள். அல்லது அதற்கு அருகே இருக்கிற கிராமத்தின் பெயரைக் குறிப்பிடு வார்கள்.

சென்னையில் வசிக்கிற பலருக்கும், சென்னை சொந்த ஊர் அல்ல. வாழ வந்த ஊர்; வாழ வைக்கும் ஊர். கிராமத்தை விட்டு வந்தோம். கிராமத்தில் கற்றுக் கொண்ட நல்ல பழக்கங்களையும் அங்கேயே விட்டு விட்டு வந்தோம்.

கொரோனா தாக்கம் சென்னையில் சூடு பிடித்தபோது கிராம வாழ்க்கையின் ருசியைப் பலரும் உணர்ந்தார்கள். பெட்டிப் படுக்கையோடு டூ வீலர், கார்களில் இடம் பெயர்ந்தார்கள். பல மாதங்களை சொந்த கிராமத்தில் கழித் தார்கள்.

வருடத்தில் எப்படியாவது ஒரு முறை அல்லது இரு முறை ஏதேனும் உல்லாச டூர் போகிறோம் அல்லவா? அதுபோல், வருடத்தில் ஒரு முறை பிள்ளைக் குட்டிகளுடன்

சொந்த கிராமத்துக்குப் போய் வாருங்கள்.

தோப்பு நிழல் வாசம், பம்ப் செட் குளியல், இலை போட்டுச் சாப்பிடுவது, கிராமக் கோயில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது, பழைய பாச உறவுகளைப் பார்த்துப் பேசுவது என்று ஒரு நாலைந்து நாள் இருந்து பாருங்கள்...

அந்த உற்சாகம் அடுத்த ஆறு மாதத்துக்கு கியாரண்டி!

பாரத தேசத்தின் முதுகெலும்பே கிராமங்கள் தான். நகரங்களின் வளர்ச்சியையும், நாட்டின் உயர்வையும், மனிதர்களின் கலாசாரத்தையும் கிராமங்கள்தான் தூக்கி நிறுத்துகின்றன.

இன்றைக்கு ஐம்பது வயதை ஒட்டி முன்னும் பின்னும் இருக்கிறவர்கள், இந்தக் கிராமத்துச் சுகங்களை நன்றாகவே அனுபவித்தவர்கள். அதன் பின்புலத்தில் வளர்ந்தவர்கள்.

நான் பிறந்த ஊர் திருப்புறம்பயம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ.! என் தந்தையார் பிச்சை ஐயர், புரோகிதத் தொழில் பார்த்து வந்தார்.

ஒரு புரோகிதருக்கு என்ன வருமானம் வந்து விடும்? ஒரு பத்து ரூபாய் தாளை பார்த்து விட்டால், விழிகள் வியப்பில் விரிகிற காலம் அது.

ஊரில் பிரதானமாக இருக்கிற சாட்சிநாதர் ஆலயத்தில் ஒரு கல்யாணத்தை என் அப்பா நடத்தி வைத்தால், கோயிலில் இருந்து இரண்டு ரூபாய் சம்பாவணையாகத் தரு வார்கள். கூடவே, ஒரு ரசீதில் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள். அந்த இரண்டு ரூபாயையே சந்தோஷத்துடன் வாங்கி, கண்களில் ஒற்றிக்கொண்டு பிறகு வேஷ்டியில் முடிந்து கொள்வார் அப்பா.

விவசாயக் குடும்பங்களில் இருப்பவர்கள் அவர்கள் வீடுகளில் திதி வந்தால் புரோகிதம் செய்து வைக்கும் என் அப்பாவுக்கு என்ன தருவார்கள்?

அவர்கள் எவற்றைப் பிரதானமாக விளை விக்கிறார்களோ, அவற்றையே தருவார்கள்.

பச்சரிசி... பெரும்பாலும் ஒரு படி அல்லது ஒண்ணரை படி இருக்கும். காய்கறிகள் (கொத்தவரங்காய், வாழைக்காய், அவரைக் காய், பூசணி, பரங்கி - இப்படித்தான்) தருவார்கள். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இத்யாதிகள். காய்கறிகள் எல்லாமே அவர்களின் வயல்களில் விளைபவை.

எங்கள் இல்லத்தில் நாங்கள் அதிகம் சாப் பிட்டது கொத்தவரங்காய், வாழைக்காய் கறிதான். சாம்பார், வத்தக்குழம்பு என்று எடுத்துக் கொண்டால் பூசணியும் பரங்கியும்தான் அதிகம்.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது எனது பெரியப்பா நாகராஜன் (அப்பாவின் அண்ணன்) பம்பாயில் இருந்து திருப்புறம்பயத்துக்கு வந்தார். கூடவே அவரது இரண்டு மகன்களையும் கூட்டி வந்தார்.

கர்ம வீரர் காமராஜர் இறந்து போன வருடம் அது. பம்பாயில் இருந்து அவர் கொண்டு வந்த கையடக்க டிரான்ஸிஸ்டரில்தான் காமராஜர் இறுதி ஊர்வல வர்ணனை கேட்டோம்.

சின்ன வயசிலேயே எங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு பம்பாய்க்குப் போய் விட்டார் பெரியப்பா. அங்கே தன் தகுதியை வளர்த்துக் கொண்டு ஏர் இண்டியாவில் பணியில் சேர்ந் தார். அவர் பயணிக்காத உலக நாடுகளே கிடையாது.

பெரியப்பாவின் குடும்பம் பம்பாயிலேயே வளர்ந்தது. அவருடைய குழந்தைகள் பிறந்த தெல்லாம் அங்கேயேதான்.

பெரியப்பாவின் மகன் குமாருக்கு ஒரு நாள் இளநீர் ஒன்றை வெட்டிக் கொடுத்தோம். அதை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி, எப்படி வைத்துக் குடிப்பது என்று தெரியாமல் -

சட்டை முழுக்க வழிந்து ஒரு மாதிரி சமாளித்துகுடித்து முடித்தார். காலி இளநீரை என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். பிறகு, ‘வாவ்... இந்தத் தண்ணி ரொம்ப டேஸ்ட்டா இருக்கு. இந்தத் தண்ணியை இதற்குள் எப்படி நிரப்புகிறார்கள்?’ என்று என் கையில் இருந்த காலி இளநீரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

அப்போது நாங்கள் சிரித்தோம் - ‘இதுகூடத் தெரியவில்லையா?’ என்று.

இப்போது சிந்திக்கிறோம் - நமது பிள்ளை களைப் பார்த்து. ‘அடடா... நமது குழந்தை களுக்குக் கிராமத்து வாசமே இல்லாமல் போய் விட்டதே’ என்று.

திருப்புறம்பயம் அருள்மிகு சாட்சிநாதர் ஆலயத்துக்கு என்று வாத்தியக்காரர்கள், மணியம், குருக்கள், உதவியாளர், பரிசாரகர், பூ கட்டுபவர், துப்புரவுப் பணியாளர்கள், கணக்குப்பிள்ளை என்று எல்லோருமே உண்டு.

விசேஷ காலங்களில் ஆலயத்தின் பெரிய பிராகாரத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கும். ராஜம் குருக்கள், ரமணி குருக்கள் இருவரும் தான் சாட்சிநாதர் ஆலயத்தின் பிரதான

அர்ச்சகர்கள். விசேஷ காலம் என்றால், சாமா குருக்கள் கும்பகோணத்தில் இருந்து வருவார். ஸ்வாமிக்கு அலங்காரம் நன்றாகப் பண்ணுவார்.

எங்கள் ஊர் கோயிலின் ஆஸ்தான நாகஸ்வர வித்வான் - நடேசன். நாகஸ்வர வாசிப்புக்கு உதவி அவரது மகன் ஞானசுந்தரம்.

தவில் - சம்பந்தம். கூடவே சேகர்.

சங்கீதத்தில் எனக்கு ‘அ’னா, ‘ஆ’வன்னா தெரியாவிட்டாலும்கூட, அதில் ஒரு லயிப்பை ஏற்படுத்தியவர்கள் மேலே சொன்ன வித்வான்கள்.

இவர்களுக்கெல்லாம் என்ன பெரிய சம்பளம் வந்துவிடப் போகிறது? எல்லாம் சொற்பமே! ஆனால், கோயிலில் ஒரு திருவிழா, புறப் பாடு என்றால் சற்றும் சளைக்காமல் விளாசித் தள்ளுவார்கள்.

இவர்களின் நாகஸ்வரக் கச்சேரியைக் கேட்கிற பலரும் சங்கீதத்தின் அரிச்--சுவடியை அறியாதவர்கள். என்றாலும், ரசிக்கின்ற விதத்தைப் பார்த்தால் திக்குமுக்காட வைக்கும்.

பெரிய பிராகார வலத்தின்போது நடேசன் குழுவினர் ‘மல்லாரி’ வாசிப்பார்கள். ஒரு இடத்--திலேயே சுமார் இருபது நிமிடம் நின்றெல்லாம் வாசித்திருக்கிறார்கள். பக்தர்களோடு அருள்மிகு சாட்சிநாதரும் அருள்மிகு கரும்படுசொல்லி-யம்மையும் நிச்சயம் அந்த நாதத்தைக் கேட்டு இன்புற்றிருப்பார்கள். அந்த அளவுக்கு இடை-யூறுகள் இல்லாத இனிய நாதம்.

அப்போதெல்லாம் யூ டியூப் வசதிகள் இருந்து, நடேசனது நாகஸ்வரமும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு உலகம் புகழும் அளவுக்கு நடேசனின் வாசிப்பு பேசப்பட்டிருக்கும்.

திருப்புறம்பயத்தில் இருக்கிற ஒரே கடைத் தெரு அதுதான். பஸ் ஸ்டாண்டும் அதுதான்.கும்பகோணத்தில் இருந்து 6ஆம் நம்பர் டவுன் பஸ், 18ஆம் நம்பர் டவுன் பஸ் வரும்.

இரண்டில் பெரும்பாலும் ஒரு பஸ் மட்டுமே எங்க ஊர் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும். கும்பகோணம் செல்லும் திருப்புறம்பயம்வாசிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் கிளம்புகிற-போது, அடுத்த பஸ் பாலக்கரை மன்னியாற்றுப் பாலத்தில் ஏறி ஊருக்குள் வந்து கொண்டிருக்கும். ஒரு பஸ் கிளம்புகிறபோது இன்னொரு பஸ் எதிரில் வருகிற இந்த நிகழ்வு, தற்செயலாகவே நடப்பதுதான்.

இது தவிர தளிக்- கோட்டை, எஸ்.ஆர். வி.எஸ். பஸ்களும் எங்கள் ஊருக்கு குறிப் பிட்ட சில சர்வீஸ்கள் வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

கடைத் தெரு என்றால் தி.நகர் ரங்க நாதன் தெரு மாதிரி நினைக்கக் கூடாது. இந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அவ்வளவுதான். மளிகை, ஓட்டல், தையலகம், உர மருந்து எல்லாமே உள்ளூரில் உண்டு. கடைகளைத் தாண்டி ஒரு ஓட்டல். ‘ஜகதீச ஐயர் ஓட்டல்’ என்று அழைப்போம்.

ஓட்டலுக்குப் பக்கவாட்டில் பின்பக்கமாக ஒரு செக்கு. எப்போதும் எண்ணெய் ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். மாடுகள் இழுத்துக் கொண்டு செல்லும்.

வீட்டின் எண்ணெய்த் தேவைக்கு அவ்வப் போது என்னை செக்கு இருக்கும் இடத்துக்கு அனுப்புவார்கள். தேவைப்படுகிற எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றித் தருவார்கள். அப்போதுதான் ஆட்டிய எண்ணெய் என்பதால்,

பாத்திரத்தைக் கையில் வாங்கும்போதே சூடாக இருக்கும்.

எண்ணெய் வாங்கும்போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் சாம்பார் வாசனை காற்றில் கலந்து வந்து மணக்கும்.

அப்பா எப்போதாவது காசு கொடுப்பார். வலது உள்ளங்கையில் சில்லறைக் காசுகளை வைத்துக் கொண்டு பார்வையைக் குறுக்கியபடி ஐந்து காசுகளையும் பத்து காசுகளையும் பிரித்து எண்ணி அப்பா கொடுக்கும் அழ@க தனி.

காசுகளைக் கையில் வாங்கிய மறுகணம் டிராயர் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு சிட்டாகப் பறந்து ஜகதீச ஐயர் ஓட்டலில் போய் அமருவேன். உட்காரு வதற்கு மர பெஞ்ச். இலைகள் போடு வதற்கு அதை விட உயரமான மர பெஞ்ச்.

தொப்பைக்கு மேல் ஏற்றி வேஷ்டி கட்டி இருக்கும் ஜகதீச மாமா டேபிள் அருகே வருவார். அதிர்ந்து பேசாத அவரது முகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘என்னடா அப்பா காசு குடுத்தாளா? என்ன வேணும்?’ - ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டே இலை போடுவார். அவரே ஜலம் தெளிப்பார்.

‘இட்லி மாமா...’ - சொல்லும்போதே பார்வை இட்லிகள் அடுக்கி இருக்கிற கண்ணாடி ஷெல்ப்புக்குள் போய் நிற்கும். இன்னும் ஒரு சில விநாடிகளில் சட்னி மற்றும் சாம்பாரில் தோய்ந்த இட்லிகளைச் சாப்பிடப் போகிறோம் என்கிற அந்தப் பரபரப்பு

இருக்கிறதே... அந்த சுகமே தனி. இன்றைக்கு எத்தனை காஸ்ட்லி ஓட்டலுக்குப் போய் இட்லி, வடை சாப்பிட்டாலும் ஜகதீச ஐயர் ஓட்டலில் பரபரப்போடு அமர்ந்து சாப்பிட்ட அந்த சுகம் இல்லை.

இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஜகதீச ஐயர் சாம்பார் வாளியோடு வந்து பதமாக இட்லி மேல் ஊற்றிக்கொண்டே இருப்பார். காசு வாங்கிக்கொண்டு

‘ஜாக்கிரதையா போடா... ஓடாம போ’ என்று எச்சரிக்கை செய்து அனுப்புவார் மாமா.

திருப்புறம்பயத்தில் அருள்மிகு சாட்சிநாதர் ஆலயத்தில் தேனபிஷேகப் பிள்ளையார் உலகப் பிரசித்தம். ஒரு பிள்ளையார் சதுர்த்தியின்போது ஊருக்குப் போயிருந்தேன். நானும் கணக்குப் பிள்ளையாத்து நடராஜனும் பேசிக் கொண்டிருந்தோம்.

ஜெகதீச ஐயர் ஓட்டல் பற்றி அப்போது பேச்சு வந்தது. அதற்கு நடராஜன், ‘ஜகதீச ஐயரின் பையன்கள் நன்னா இருக்கா. டெல்லியிலும் கோயம்புத்தூரிலும் இருக் காளாம்’ என்று சொன்னபோது இனம் தெரியாத பரவசம். ‘எங்கிருந்தாலும் அவரது குடும்பத்தினர் நன்றாக இருக்கட்டும்’ என்று மனசாரப் பிரார்த்தித்தேன்.

நல்ல சாப்பாட்டை எங்கு - எத்தனை வருடங்களுக்கு முன் சாப்பிட்டாலும் மனசு மறக்கவே மறக்காது. இன்றும் பசுமை போல் அதை அசை போட்டுக்கொண்டே இருக்கும்.

இன்றைக்கும் திருப்புறம்பயம் செல்லும் போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் இருந்த இடத்தைப் பார்ப்பேன்.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி விட்டது. ஆனாலும், அந்த சாம்பார் வாசம் மட்டும் மனசுக்குள்! ஜகதீச ஐயர் எனது கண்களுக்குள்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :