லாக்டவுன் காலம் - இதைக் கடைபிடிப்போம் நாளும்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க..
ஆதிரை வேணுகோபால், சென்னை.காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து, இறைவனை வணங்குங்கள். அதுவே நீங்கள் உங்கள் வீட்டினருக்குச் சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.

உங்கள் துணிகளை நீங்களே துவைக்கப் பழகுங்கள். இது உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.

எங்கெல்லாம், எப்படியெல்லாம் வீட்டில் உள்ளவர்க்கு உதவி செய்ய முடியுமோ, அப்படியெல் லாம் உதவுங்கள். (சமையல் அறை யிலும்தான்) உங்களைப் பார்த்துத்தான் மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வரவேண்டும்.

தயவு செய்து எதற்கும் குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால், பொறுமையாக நல்ல முறையில் எடுத்துக் கூறுங்கள். கோபமும் அதட்டலும் ரத்த அழுத்தத்தை மட்டுமே தரும்.

உணவு உண்ணும் முன் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம், ‘சாப்பிட்டு விட்டீர்களா?’ என்று கேளுங்கள். பிள்ளைகளையும் கூப்பிட்டுக் கேளுங்கள்.

முடிந்தவரை எங்கு சென்றாலும் நடந்து செல்லுங்கள். பணம் மிச்சம், கஞ்சத்தனம் என்று இதில் எதுவும் இல்லை. நமது கால்கள் நடக்கக் கற்றுக்கொண்டால், வாழ்வின் இறுதிநாள் வரை, நாம் நமது காலில் நின்றும் நடந்தும் வாழலாம். இது, நமக்கு வாழ்க்கையை கற்றுத்தரும் அழகான பாடம்.

அடுத்தது, மிக முக்கியமானது. நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. தொல்லைக்காட்சி. அது, கத்திக்கொண்டு இருந்தாலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் செலுத்துங்கள். பிள்ளை களும் உங்களைப் பார்த்து படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் அழகான பாடம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றனர். எனவே, நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடனும், அன்புடனும் பழகுங்கள். புத்தகங்களை விட, மனிதர்கள்தான் வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுக்கின்றனர்.

எந்த விஷயம் பிடிக்கிறதோ அதிலேயே உங்கள் கவனத்தையும் நேரத்தையும் செலவழியுங்கள். அது ஓவியம் வரைவதாக இருந்தாலும்; வாத்தியக் கருவிகளை கற்றுக் கொள்வதாக இருந்தாலும்; சமைப்பதாக இருந்தாலும்; சுத்தம் செய்வதாக இருந்தாலும்; இப்படி எதுவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். மற்ற தேவையற்ற விஷயங் களுக்காக அதிக நேரத்தை தயவுசெய்து செலவழிக்காதீர்கள்.

தினமும் அதிகாலையில் எழ பழகுங்கள்.வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

மனம் விட்டு சிரிக்கப் பழகுங்கள். அது, நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல நட்புகளையும் பெற்றுத் தரும். சிரிப்பு - அது நீக்கும் உங்களது மனக் களைப்பு.

தேடித் தேடிச் சென்று நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். எங்கு சென்றாலும் கையில் புத்தகம் இருக்கட்டும். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். அது தன்னம்பிக்கையைத் தரும் புத்தகமாக இருக்கலாம். நல்ல நாவல்களாக இருக்கலாம். இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

தினமும் உங்களுக்கு மிகவும் பிடித்த நல்ல இசையைக் கேளுங்கள். இது துள்ளலான நம்பிக்கையைத் தரும். புன்னகையையும் உற்சாகத்தையும் தரும். இசையை காதல் செய்யுங்கள். சந்தோஷமாக இருக்கும்பொழுது பாடலின் இசை பிடிக்கிறது. துக்கமாக இருக்கும்பொழுது பாடலின் வரிகள் புரிகிறது. ஆக, இழுத்து போர்த்திக்கொண்டு இசையின் சுவாசத்தில் நம் கவலைகள் கழுவப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

உங்கள் பிரச்னைகளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்பொழுது உங்களின் மன பாரம் கணிசமாகக் குறையும். அதற்கான தீர்வும் சுலப மாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்களுக்கு நீங்கள் தரக்கூடிய பதில் பரிசு அவர்களுடன் அதிக நேரம் செல வழிப்பதே.

உங்கள் தொலைபேசி/ கைபேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக் கும் ஒவ்வொரு முறை யும் நீங்கள் எடுத்துப் பேச வேண்டும் என்பதில்லை.

முக்கியமான வேலைகளின் நடுவே இருக்கும்போது தொலைபேசி மணி அடித்தாலும் தயவுசெய்து எடுத்துப் பேசாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த ஒரு புதுப் பழக்கமும், நல்ல பழக்கமும், நல்ல விஷயங்களும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே, தயவு செய்து உங்களுக்கு மிகவும் பிடித்தமான, தேவையான விஷயங்களை, திரும்பத் திரும்ப செய்து பழகுங்கள்.

எவ்வளவுதான் வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும் எளிமையான மனிதராக இருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

இந்தக் கடுமையான சூழலில் மிக மிக முக்கியமானது... எல்லா வசதிகள் இருந்தும், அதைத் தேவையில்லை என்று நினைத்து, உபயோகப் படுத்தாமல் வாழ்வதுதான் சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் தரும். ஆயுளைக் கூட்டும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :