இங்கு செவிக்கும் வயிற்றுக்கும் ஈயப்படும்!


எம்.கோதண்டபாணிகொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலரும் வேலையிழப்பு, வருமானமின்மை போன்றவற்றால் அல்லல்படுவதை அனுதினமும் காண்கிறோம். பெற்றோர்கள் வருமானமின்றி அவதியுறுவது அவர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பம் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

மிகவும் இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் கல்வியுமின்றி, உணவுமின்றி பசியால் வாடும் பள்ளிச் சிறுவர்களுக்குத் தனது சொந்த பணத்தில் அவர்களின் பசியைப் போக்குவதோடு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கா.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றும் ஜெயமேரி எனும் ஆசிரியைதான் இந்த அரும்செயலைச் செய்து வருகிறார். அதோடு, தான் பணியாற்றும் பள்ளியையும் ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் பேசினோம்.

பள்ளிச் சிறுவர்களின் பசியாற்றும் இந்த எண்ணம் தோன்றிய எப்போது?

“நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்துவிட்டார். உடன் பிறந்த அண்ணன்கள் நான்கு பேர், அக்காள்கள் இரண்டு பேர் என அனைவரையும் எனது அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தார். நான் அரசுப் பள்ளி ஆசிரியையாக ஆவதற்கும் எனது அம்மாதான் காரணம். அவர் சத்துணவுக் கூடத்தில் பணியாற்றி சத்துணவை ஊட்டி வளர்த்துதான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினார்.

சமூகத்தில் இன்று நான் நல்ல நிலைக்கு உயர்ந் திருந்தாலும், சிறுமியாக இருந்தபோது நான் பட்ட கஷ்டங்களை, இப்போது படிக்கும் பிள்ளை கள் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் என்னால் இயன்ற உதவிகளை ஏழைச்

சிறுவர், சிறுமிகளுக்குச் செய்து வருகிறேன்.

நான் பணியாற்றும் இந்தப் பகுதியில் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம். பெரும் பாலான சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் அங்கு பணியாற்றுபவர்களே. இதில் துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் அதிகம். இவர்களின் பெற்றோர்கள் பெரும் பாலும் காலை 6 மணிக்கே வேலைக் குச் சென்று விடுவார்கள். அதனால் பள்ளிக்கு வரும் பெரும்பாலான

சிறுவர்கள் காலையில் சாப்பிடா மல்தான் வருவார்கள். மதிய உணவு வரை அவர்கள் பசியைத் தாங்க வேண்டும்.

ஒரு நாள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறுவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காமல் சோகமாக இருந்ததைப் பார்த் தேன். மதியம் சத்துணவு பெல் அடித்ததும் அந்தச் சிறுவன் ஓடிப்போய்த் தட்டை எடுத்துக் கொண்டு முதல் ஆளாக நின்றான். இது எனக்குள் பெரும் கேள்வியை எழுப்பியது. அதோடு, அந்தச் சிறுவன் மிகவும் பசியோடு இருந்ததும் புரிந்தது. அதன் பின்னர் எனது வகுப்புப் பிள்ளை களிடம் விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர்களில் பெரும்பாலானவர்கள் காலையில் உணவே சாப்பிடுவதில்லை என்று.

பெற்றோர்கள் பட்டாசுத் தொழிற்சாலைக் குப் போனதும், முதலில் சாப்பாட்டுத் தட்டை எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டு, அதன் பின்னர்தான் புத்தகங்களை பைக்குள் வைப்ப தாக அவர்களே தெரிவித்தனர். அதோடு, பன்னிரண்டு மணிக்கு அடிக்கும் சத்துணவு பெல் லுக்காகத் தாங்கள் பசியோடு காத்திருப்பதாக வும், இதனால் பல சமயம் பாடங்களைக் கூட தாங்கள் கவனிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த விஷயம் எனது மனதில் மிகவும் நெருடலாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் எனது வகுப்புச் சிறுவர், சிறுமிகள் முப்பது பேருக்கு மட்டும் காலையில் சிறு தானியத்தால் செய்யப் பட்ட உணவைத் தயார் செய்து கொண்டுபோய் கொடுத்தேன்.

அடுத்த ஆண்டு எனது வகுப்பில் இருந்து தேர்ச்சி பெற்று மேல்வகுப்புப் போன ஒரு சிறுமி என்னிடம், “டீச்சர், காலையில் எதுவும் சாப்பிடாததால் எனக்குப் பசிக்குது. சாப்பிடு வதற்கு ஏதாவது இருந்தால் கொடுங்களேன்” என்று கேட்டாள். அதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட நான், வாரத்தில் ஒரு நாள் காலை அவர்களுக் குக் கடலை உருண்டை போன்ற சத்துமிக்க நொறுக்குத் தீனியைக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனாலும், இதைத் தின மும் அவர்களுக்குக் கொடுக்க முடியவில் லையே என்ற வருத்தம் என் னுள் இருந்தது.

அந்த வருத்தத்தைக் குறித்து எனது முகநூலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலரும் உதவி செய்தார்கள். அந்த உதவியைக் கொண்டு பள்ளியில் படிக்கும் 130

சிறுவர், சிறுமிகளுக்கும் கேப்பை ரொட்டி, கடலை உருண்டை போன்ற இணை உணவுகளை தினமும் கொடுத்து வந்தேன். பசியோடு படிக்க வரும் சிறுவர், சிறுமிகளும் இதனால் கவனம்

சிதறாமல் சிறப்பாகப் படிக்க முடிந்தது. இதனைப் பாராட்டும்விதமாக தமிழக அரசின் ‘கனவு ஆசிரியர்’ விருதுக்கு 2016ல் நான் தேர்வு செய்யப்பட் டேன்” என்ற ஜெயமேரி மேலும் தொடர்ந்தார்,

“இந்தச் சமயத்தில்தான் 2020ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாகப் பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டன. பசியால் தவித்துப்போன பிள்ளைகள் பலரும் எனக்கு போன் செய்து, தாங்களது பசிக் கொடுமையைப் பற்றிக் கூறினர். அதைத் தொடர்ந்து கொரோனா நோய் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமிகளைத் தேடிச்சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு கட்டுப் பாடுகள் அதிகமானதால் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் பிள்ளைகளின் வீடு களுக்கே தேடிச்சென்று கொடுத்து வந்தேன்.

தனி ஒரு ஆளாய் இந்தப் பணியைச் செய்ய முடியாது என்பதால், என் கணவரும் எனக்கு இந்தப் பணியில் உதவிக்கரம் நீட்டினார்.

சென்ற வருடம் அட்சய திரிதியை அன்று இந்தப் பணியை ஆரம்பித்தோம். முதல் கட்டமாக, மடத்துப்பட்டியில் உள்ள முப்பது சிறுவர்களுக்கு உணவு கொடுத்தோம். பின்னர் அந்த எண்ணிக்கை ஐம்பதாக உயர்ந்தது. இப் போது நூறு சிறுவர்,

சிறுமிகள் வரை தினமும் உணவு கொடுத்து வருகிறோம். முகநூலில் இது பற்றிய புகைப்படங் களை நான் பகிர்ந்து வருகின்றேன்.அதைப் பார்க்கும் பல ரும், தங்களுடைய பிறந்த நாள், திருமண நாட்களின்போது இந்தப் பணியில் தாங்களும் பங்கெடுப்பதாகக் கூறி எனக்கு நிதி உதவி செய்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு இன்னும் அதிகம் செய்ய முடிகிறது.”

சரி, குழந்தைகள், பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

“சிறுவர்கள் எங்களைப் போன்றவர்களை வெறும் ஆசிரியைகளாக மட்டும் பார்ப்பதில்லை. தங்களின் அம்மாவாகவும் பார்க்கின்றனர். அவர் களது பெற்றோர்களும் நம்பிக்கையாகப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக அவர்களின் வேலையைப் பார்க்கின்றனர். பிள்ளைகளின் பசி தீர்வதால், அவர்களிடம் உள்ள தனித்திறமைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குள் அசாத்திய திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை வெளிக் கொணர் வதற்காக அவர்களின் விருப்பங்களைக் கேட் டறிந்து அவர்களை ஊக்குவித்தும் வருகின்றோம். இதனால் பெற்றோர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்கள் பசியாற்றும் உங்கள் விருப்பப்படி நல்லா படிப்போம் என் கிறார்கள் சிறுவர்கள். கொரோனாவால் ஏற்பட்ட பசிப்பிணி எனும் இந்த அவலநிலை மாறி, பசி யில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.”

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இவரிடம் படித்த சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்து ஓவியம் வரைதல், அறிவியல் கண்டுபிடிப்பு கள் பற்றி அறிய வைத்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார் ஆசிரியை ஜெயமேரி.

அப்துல் கலாம் கனவை நனவாக்கும் ஆசிரியர் பணி தொடரட்டும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :