ரௌத்திரம் பழகு


நித்யா இறையன்பு
ஓவியம் : விஜய்டாலி‘அமுதை பொழியும் நிலவே, நீ அருகில் வராததேனோ?’ என்ற பாடலைக் கேட்டு கால்களால் தாளம் போட்டுக்கொண்டே, குழைந்த பொன்னி அரிசி சாதத்தில், சுடச்சுட மிளகு ரசத்தை ஊற்றிப் பிசைந்து அப்பளத் துடன் ருசித்துக் கொண்டிருந்தார் ரத்தினம். வீட்டின் அழைப்பு மணி அழைக்க, வீட்டின் வெளியே கண்ணன் கையில் ஒரு பார்சலோடு நின்று கொண்டிருந்தான்.

கதவைப் பாதி மட்டும் திறந்து, “என்ன இந்த நேரத்துல?” என்று சலிப்புடன் ரத்தினம் விசாரிக்க,

“சார், பாட்டெல்லாம் பலமா இருக்கு. ஹ்ம்ம்... இந்த வயசுலயும் குதூகலமாதான் இருக்கீங்க” என்று தலையாட்டிச் சிரிக்க, “ஒழுங்கா வந்த விஷயத்த சொல்லு. அதிகப் பிரசிங்கித்தனமா பேசிட்டு...” என்றார் ரத்தினம் எரிச்சலுடன்.

“சிலிண்டர் வண்டி வந்திருக்கு. காலி சிலிண்டர் எடுக்க வந்தேன். அப்புறம் ராதாம்மாவுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு. பிரிச்சு பார்க்காம குடுத்துடுங்க” என்றான் கண்ணன் கண்களைச் சிமிட்டியபடி.

“அந்த இங்கிதமெல்லாம் நீ எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. சிலிண்டரை எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணு மொதல்ல. வரவர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிட்டே போகுது. எல்லாம் ராதா குடுக்குற இடம்” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்ற ரத்தினத்தைப் பார்த்து, கண்ணன் நமட்டுச் சிரிப்புடன் சிலிண்டரை எடுத்துச் சென்றதும் கதவை படாரென்று சாத்திவிட்டு மீதமிருந்த ரச

சாதத்தை ருசிக்க ஆரம்பிக்க, சாதம் ஆறிப் போய் விட்டிருந்தது.

அன்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பிய ராதா, தேநீர் பருகிக்கொண்டிருந்த மாமனார் ரத்தினத்திடம், “மாமா, எனக்கு ஏதாவது பார்சல் வந்ததா?” என விசாரிக்க ஆரம்பித்ததும், “ஹ்ம்ம், வந்துச்சும்மா. அந்தக் கண்ணனுக்கு வயசானவங்ககிட்ட எப்படிப் பேசணும், என்ன பேசணும்னு ஒண்ணும் தெரியறதில்ல... 65 வயசு முதியவர் கிட்ட என்னம்மா நையாண்டி வேண்டி கிடக்கு” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தவாறே பார்சலைக் கொண்டுவந்து ராதா கையில் கொடுத்தார் ரத்தினம்.

“என்னாச்சு மாமா, சொல்லுங்க? நான் கண்ணனைக் கண்டிக்கிறேன். அப்புறம் அந்த பார்சல் உங்களுக்குத்தான் மாமா. பிரிச்சுப் பாருங்க” என்றாள் ராதா.

“அப்படியா, எனக்கா?” என்ற இன்பம் கலந்த வியப்பில் கண்களை அகல விரித்து ராதாவை ஏறிட்டார் ரத்தினம்.

“ரொம்ப நாளா உங்க மகன்கிட்ட கண்ண தாசன் எழுதிய ‘அவளுக்காக ஒரு பாடல்’ நாவல் வேணும்னு சொன்னீங்கல்ல? அதுதான் இது.”

“ரொம்ப நன்றிம்மா ராதா. எனக்காக மறக்காம வாங்கிக்குடுத்ததுக்கு” என்றார் கலங்கிய விழிகளுடன்.

“எதுக்கு மாமா நன்றி சொல்லி சங்கடப் படுத்தறீங்க. நான் உங்கப் பொண்ணு. உங்களுக்குச் செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்.”

“எல்லாம் சரிதான் ராதா, உன் நல்ல மனசுக்குக் கடவுள் உனக்கொரு குழந்தையைத் தரத் தாமதிக்கிறாரே?”

“கடவுளுக்குத் தெரியும் மாமா. யாருக்கு எப்போ, எதை, எப்படித் தரணும்னு. தர வேண்டிய நேரத்தில் தருவார். கவலையை விடுங்க” என்று பேசிக்கொண்டே சமைய லறைக்குள் சென்ற ராதா, “மாமா, இன் னைக்கு வள்ளி வேலைக்கு வரலையா? வீட்ல எல்லாம் போட்டது போட்ட படியே இருக்கு?”

“இல்லம்மா, அவ குழந்தைக்கு காய்ச்சல் ஹாஸ்பிடல் போகணும்னு காலையில் சுஜி பாப்பாவைக் கூட்டிட்டு வந்து ஒருநாள் லீவு கேட்டா. சரின்னு ஒரு ஐநூறு ரூபாயைக் கையில் குடுத்து டாக்டர்கிட்ட அழைச்சுக் கிட்டு போகச் சொன்னேன்.”

“அடடா, அப்படியா! பாவம் வள்ளி, வாய் பேச முடியாத, மனநிலை சரியில்லாத அந்தக் குழந்தையோட ஆறு வருஷமா தனியா போராடிட்டிருக்கா... இந்த ஒரு மாசத்துல மூணாவது முறையா சுஜிக்கு காய்ச்சல் வந்திருக்கு. நாளைக்கு வள்ளி வந்தா என் னன்னு விசாரிக்கணும். கண்ணன்கிட்ட

சொல்லியிருந்தா பக்கத்து ப்ளாக்ல வேலைக்கு வர்ற வேற யாரையாவது வள்ளிக்குப் பதிலா ஏற்பாடு பண்ணிருப்பான். கண்ணன்னு

சொன்னதும்தான் நினைவுக்கு வருது மாமா. அப்போ கண்ணனைப் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்க. என்னாச்சு கண்ணனுக்கு?” என்று கேட்டாள் ராதா.

“அவன் ஒரு இங்கிதம் தெரியாத பையன்மா.”

“கண்ணன் நல்ல பையன் மாமா. அபார்ட் மெண்ட்ல எல்லோருக்கும் கண்ணன் இல் லேன்னா கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும். உங்க ளுக்கே தெரியும், கூரியர் டெலிவரி பண்ற வங்க, காய்கறி கொண்டுவர்றவங்க, டோர் டெலிவரி பண்றவங்கன்னு யாரும் கண்ண னைத் தாண்டி அபார்ட்மெண்ட்டுக்குள் அவ்வளவு சுலபமாக நுழையமுடியாது. சில நாட்கள்ல செக்யூரிட்டி வேலையையும்

சேர்த்து பார்ப்பான். பதினஞ்சு வயசு பையனா சொந்த ஊரவிட்டு பிழைப்புக்காக இங்க வேலைக்குச் சேர்ந்து பத்து வருஷம் ஆச்சு. இவ்வளவு வருஷமா இல்லாம கொஞ்ச நாளா உங்களுக்கு ஏனோ கண்ணனைப் பிடிக்கவே மாட்டேங்குது. எல்லோரையும் சிரிக்க வைக்க முயற்சி பண்ணி அது சில சமயம் சங்கடமா முடிஞ்சிடுது. நான் அவனுக்குப் புரியவைக் கிறேன் மாமா.”

மறுநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராதா, துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த வள்ளியிடம், “குழந்தைக்கு என்ன அடிக்கடி காய்ச்சல் வருது? இப்போ பரவாயில்லையா? டாக்டர்கிட்ட அழைச்சுக் கிட்டு போனியா?”

“இல்லம்மா. டாக்டர் இல்லேன்னு திரும்பி வந்து மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிக் குடுத்தேன். அய்யாதான் ஐநூறு ரூபா தந்தாரு. நான் வேண்டாம்னு சொல்லச் சொல்ல

சுஜி கையில திணிச்சுட்டார். இப்போ காய்ச்சல் இல்லம்மா, இன்னைக்கு ஸ்கூலுக்குக்கூட அனுப்பல.”

“டாக்டர்கிட்ட கேட்காம இப்படி உன் இஷ்டத்துக்கு மருந்து வாங்கிக் குடுக்கற பழக்கத்தை மொதல்ல நிறுத்து. இதுவரைக்கும் மூணு நாலு தடவை உடம்பு சரியில்லேன்னு சொல்லிருக்க. ஆனா ஒரு தடவை கூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போகல. ஆமா சுஜி எங்கே?” என்று ராதா கண்களால் தேட,

“ராதாம்மா... ஆஆஆ... சுஜியும் நானும் இங்கதான் இருக்கோம்” என்று சுஜியைத் தன் முதுகில் உப்பு மூட்டை தூக்கியபடி மாடிப் படிக்கட்டிலிருந்து இறங்கி ராதாவின் வீட்டின் கதவருகில் நின்றான் கண்ணன்.

சுஜியோ கண்ணனின் முதுகில் தன் கைகளால் மாறி மாறிக் குத்திக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.

“அவளை எதுக்கு இப்போ மாடிக்குக் கூட்டிட்டுப் போனே...?” என்று கண்ணனை முறைத்தாள் ராதா.

“சுஜிதான் மொட்டை மாடி போகணும்னு கையை மேல மேல காட்டி ஒரே அடம் பிடிச்சா. சரின்னு கூட்டிட்டு போனேன்.”

“ராதாம்மா, தம்பி என்கிட்டே கேக்காம குழந்தைக்கு அடிக்கடி ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பார்போல.. அந்த மஞ்சள் கலர்ல பந்து மாதிரி இருக்குமே அந்த டப்பா மட்டும் ஏழெட்டு வீட்டுல கிடக்குது.”

“இல்ல வள்ளியக்கா. நான் சுஜிக்கு இது வரைக்கும் ஐஸ்கிரீம் வாங்கித் தந்ததில்லை. பொய்யா என்மேல பழி போடாதீங்க” என்று கண்ணன் மறுத்தான்.

“என்ன கண்ணன், இப்போ எல்லாம் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க. நீங்க முன்ன மாதிரி இல்ல” என்ற ராதாவின் வார்த்தைகளைக் கண்ணன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தோள்களைக் குலுக்கியபடி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போலப் படிகளில் இறங்கி ஓடினான்.

ராதாவிடம், “வள்ளி அம்மா, கண்ணன் தம்பி நல்லவரு. நல்ல எண்ணத்துலதான் செய்வாரு. வாரத்துல சனி, ஞாயிறு ரெண்டு நாள்தான் பாப்பாவைக்கூட கூட்டிட்டு வரேன். அப்போ என்னை வீட்டு வேலை செய்ய விடாம, அபார்ட்மெண்ட்ல அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு ரகளை பண்ணுவா. கண்ணன்கிட்ட சொல்லிட்டா போதும் அன்னைக்கு நாள் பூராவும் அவளைக் கூடவே கூட்டிக்கிட்டு அவர் வேலையையும் பார்த் துட்டு இருப்பார்.”

இவர்களின் உரையாடலைக் கேட்ட ரத்தினம் கடுமையாக, “அதுக்காக அவன் கண்டதைக் குழந்தைக்கு வாங்கித் தரலாமா? நான்தான் சொல்லிட்டே இருக்கேனே? அவனுக்கு அதிகப்பிரசிங்கித்தனமா ஏதாவது செஞ்சுட்டே இருக்கணும். இப்போ கூட பாரு உன் புள்ளைய உப்பு மூட்டை தூக்கிட்டு வர்றான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் கண்ணன் கையில் பிஸ்கட் மற்றும் பழங்களுடன் வந்து கதவைத் தட்டி னான்.

வள்ளி கதவைத் திறக்க, “அக்கா, பாப்பா வுக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்” என்று வராண்டாவில் நின்றவாறு, “பாப்பா எங்கே?” என்று வீட்டிற்குள் கண்களை அலைய விட்டான்.

அதற்குள் ரத்தினம், “நீ எதுக்கு வள்ளியைக் கேக்காம குழந்தைக்கு இதெல்லாம் வாங்கிக் குடுக்கற? உடம்புக்கு ஏதாவது ஆச்சுன்னா நீயா சரி பண்ணப்போற? முதல்ல எல்லாத்தை யும் எடுத்துட்டு இடத்த காலி பண்ணு” என்று கதவைப் படாரென்று சாத்தினார்.

ஒரு மாதம் கழிந்தது.

“ராதாம்மா, என்னையும் சுஜியையும் ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று ரத்தினத்தின் காலில் வள்ளி தன் குழந்தை சுஜியுடன் விழப் போக, “என்ன வள்ளி இதெல்லாம்? என் கால்ல விழுந்துட்டு, என்ன விசேஷம்?”

“இன்னைக்கு சுஜிக்குப் பிறந்த நாளுங் கம்மா” என்றாள் வள்ளி.

வாழ்த்திக்கொண்டே, “நேத்தே சொல்லி யிருந்தா சுஜிக்குப் பரிசுப்பொருள் ஏதாவது வாங்கிக் குடுத்திருப்பேன். அய்யாவே பாப்பாவுக்கு கவுன் வாங்கிக் குடுத்திருக்கார். காலையில் வேலைக்கு வந்ததும் முதல்ல அய்யாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்னு வந்தா, அய்யா பாப்பாவை ஆசிர்வாதம் பண்ணி இந்த கவுனைக் கொடுத்தார். அவருக்கு எப்படி பாப்பா பிறந்த நாள் தெரியும்னு தெரியலம்மா?” என்றாள் பெருமிதத்தோடு.

“உன் மக பிறப்புச் சான்றிதழ்ல எழுத்துப் பிழை இருக்குன்னு நான்தானே என் நண்பன் கிட்ட சொல்லி ரெண்டு மாசமா அலைஞ்சு திரிஞ்சு வாங்கிக்கொடுத்தேன். ரெண்டு மாசமும் சான்றிதழ் என்கிட்டே இருந்த தால பிறந்த தேதி நல்லா நினைவுல இருக்கு இன்னும்” என்றார் ரத்தினம்.

“அட, ஆமாம்” என்று நாக்கைக் கடித்துக் கொண்டு தன் மண்டையில் அவளே குட்டிக் கொண்டாள்.

“எங்க ஊட்டுக்காரர் மட்டும் உயிரோட இருந் திருந்தா, எம்புள்ள இப்படி அழகா கவுன் போட்டுட்டு நிற்கறதைப் பார்த்தா அசந்து போயிருப்பார்” எனக் கண்கலங்க சுஜி, கண்ணன் பரிசளித்த கரடி பொம்மையை மடியில் வைத்து தன் மொழி யில் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“நல்ல நாள் அதுவுமா கண்ணைக் கசக் கிட்டு நிக்காம, வீட்டுக்குக் கூட்டிட்டு போய் திருஷ்டி சுத்திப்போடு. சுஜி இந்தப் பச்சை நிற வளையல்களைப் போட்டுக்க. உன் புது கவுனுக்குப் பொருத்தமா இருக்கும்” என்று ராதா வளையலைப் போட்டுவிட, சுஜி கையை மேலும் கீழும் ஆட்டி வளையலின் சப்தத்தை ரசித்தாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம், ராதா வும் அவள் கணவரும் ஒரு விசேஷத்திற்குச் செல்லும்பொழுது, கண்ணனின் அறையைக் கடக்க, சுஜியின் கையில் இருந்த காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்தான் கண்ணன். சுஜி பிய்ந்துபோன கரடி பொம்மையை இறுகக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஒன்றும் புரியாத ராதா, “என்னாச்சு?” என்று கேட்க, “என்னன்னு தெரியல. நான் சுஜிக்கு நேத்து பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்த கரடி பொம்மையை யார் என்ன பண்ணினாங்க தெரியல. அந்த பொம்மையைத் துண்டு துண்டா சேதப்படுத்தி குடுத்திருக்காங்க. அவளுக்கு என்ன நடந்ததுன்னு சொல்லத் தெரியல” என்று கவலையோடு கண்ணன் சொல்ல, அதைச் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத ராதா, “மொதல்ல சுஜியை வள்ளிக்கிட்டே கொண்டுபோய் விடு. நான் சாயங்காலம் வந்து உன்கிட்ட பேசறேன்” என்று விருட்டென்று நகர்ந்தாள்.

காரில் செல்லும் பொழுது அவள் கணவரிடம், கண்ண னைப் பற்றிப் புலம் பிக்கொண்டே சென் றாள். “எனக்கு கண்ணன் சொல்றது ஒண்ணும் புரியல. சுஜி கையில் காயம் எப்படி ஆச்சு? வள்ளிகிட்ட சொல்லலாம். அவனைத் தேடி எப்படி வந்தாள்? கண்ணன்கூட இருந்தாதான் அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா. இவன் எதுக்குத் தேவை இல்லாம மாமா சொல்ற மாதிரி அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிறான்? ராதாவிற்குக் குழப்பம் அதிக மாகியது. இனிமேல் கண்ணன் பொறுப்புல

சுஜியை விடாதேன்னு வள்ளிக்கிட்டே சொல்லணும். என்னவோ சரியாப்படல.

விசேஷம் முடிந்து திரும்புகையில் அபார்ட் மெண்ட் முன்பு பெரும் கூட்டமே கூடி யிருந்தது. “அய்யோ, என்னை அடிக்காதீங்க. நான் எந்தத் தப்பும் செய்யல” என்று ஒரு குரல் கதற, அது கண்ணன் குரல்தான் என்று மனதிற்குள் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள் ராதா. வேகமாகக் கூட்டத்தை நோக்கிச்

சென்றவள், கண்ணனின் நிலையைப் பார்த்து அதிர்ந்தாள்.

சட்டை கிழிந்து உதட்டிலும் கன்னத்திலும் குருதி வழிய, குடியிருப்பு வாசிகளிடம் அடி வாங்கிக்கொண்டிருந்தான்.

“இவன் கூடவே கூட்டிக்கிட்டு சுத்தும் போதே நெனச்சேன். அதென்னவோ வேலைக்காரி குழந்தையை இப்படி தாங்க றானேன்னு நானும் யோசிச்சேன். இவனை இனிமேல் இங்க வெச்சிருக்கவே கூடாது.” என்றார் ரத்தினம். இதற்கிடையில் ஒரு சிலர் “போலீசுக்குத் தகவல் தரலாம்” என்று

சொல்ல, “ரத்தினமோ போலீஸுக்கெல்லாம் சொல்ல வேண்டாம். விசாரணை அப்படி இப்படின்னு நம்மளை அலைக்கழிப்பாங்க. தேவையில்லாம நாமே அப்பா இல்லாத குழந்தை பேரைக் கெடுத்த மாதிரி ஆயிடும்.

சத்தமில்லாம அவனை இங்கிருந்து விரட்டற வழியப் பார்க்கலாம். ஏதோ தெரியாம பண்ணிட்டான். இனிமேல் இந்த ஏரியா பக்கமே வரக்கூடாது. அவன் சொந்த ஊருக்கே விரட்டிவிடுங்க” என்று ஆளாளுக்கு விவாதித்துக்கொண்டிருக்க,

ராதாவிற்கு அங்கே என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் தவிக்க, வள்ளி, பாப்பாவை மடியில் வைத்துக் கதறிக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருக்க, அருகில் சென்று குழந்தையைப் பார்த்ததும் குலை நடுங்கிப்போனாள் ராதா.

பிஞ்சுக் கன்னங்களிலும் கைகளிலும் நகக்கீறல்களுடன் ரத்தம் சொறிய தன் மிரண்ட பார்வையால், உடல் நடுங்கிக் கொண்டே தனது கைகளால் கண்ணனைச் சுட்டிக்காட்டி ராதாவிடம் சைகையில் ஏதோ சொல்ல முற்பட, நடந்தவற்றைப் புரிந்து கொண்டாள் ராதா.

அதற்குள்ளாக, அங்கிருந்தவர்கள் கண்ண னைச் சட்டையைப் பிடித்து அபார்ட் மென்ட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டனர். கண்ணன் ராதாவையே ஓரக்கண்ணால் ஒருவித அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டே சென்றான்.

பின்னர் ராதா தனது காரிலேயே வள்ளி யையும் குழந்தையையும் மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, “இதுக்கு முன்னாடியே இரண்டு மூணு முறை இந்தக் குழந்தையைச் சித்திரவதை பண்ணி ருக்காங்க. குழந்தைக்கு மனநிலை சரியில்ல. வாய் பேச முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு தவறா நடந்திருக்காங்க. அதனால் ரொம்ப கவனமா குழந்தையைப் பார்த்துக்கங்க. பக்கத்து வீட்டுக்காரர்தானே, தெரிஞ்சவங்கதானே, சொந்தக்காரங்க தானேன்னு பிஸ்கட், ஐஸ்கிரீம் எது குடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக்கூடாதுன்னு பெத்தவங்க குழந்தை களுக்குச் சொல்லிச் சொல்லி வளர்க்கணும். சின்ன வயசுல மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவங்கதான் அதிகமா இந்தத் தப்பையெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. இவங்களுக்கு கவுன்சிலிங் குடுத்துத் திருத்தமுடியாது. அதனால் பெத்த வங்கதான் கவனமா பார்த்துக்கணும். அதுவும் வாய் பேச முடியாத இந்தக் குழந்தையை இப்படியெல்லாம் தனியா யாரை நம்பியும் விடாதீங்க” என்று மருந்து மாத்திரைகளோடு அறிவுரையும் வழங்கினார் டாக்டர்.

“டாக்டர், பாப்பாவுக்கு உடம்புக்கு ஒண் ணும் ஆகாதில்ல. நான்தான் கவனமா இருந் திருக்கணும். இனிமேல் நான் பத்திரமா பார்த்துக்கிறேன்” என்று வள்ளி கூற, ராதாவும் வள்ளியும் சுஜியைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனையிலிருந்து விடை பெற்றனர்.

“வள்ளி, பாப்பாவைத் தனியா விட்டுட்டு எங்க போனே? கண்ணன் இப்படிப் பண்ணு வான்னு நான் கனவுலகூட நினைக்கல. போலீசுல பிடிச்சு சரியான தண்டனை வாங்கிக் குடுத்திருக்கணும். அதுக்குள்ளே மாமாதான் ரொம்ப கருணை காட்டிட்டார். போலீஸெல் லாம் வேண்டாம், கோர்ட் கேஸ்னு அலைய ணும், பெத்தவங்களுக்கும் குழந்தைக்கும் அவப்பேர் வரும்னு மறுத்துட்டார்.”

“ராதாம்மா, என் குழந்தை மேல் உண்மையா பாசமா இருக்கான்னு நெனச்சு ஏமாந்துட்டேன். படுபாவி இப்படி மிருகத் தனமா நடந்துக்குவான்னு தெரியாம போயிடுச் சும்மா. நம்ம வீட்ல அய்யாகிட்ட விட்டுட்டு தான் மொட்டை மாடில காயப் போட்ட துணி களை எடுக்கப்போனேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாப்பா அலர்ற சத்தம் கேக்குதுன்னு நம்ம அபார்ட்மெண்ட் புள்ளைங்க வந்து கூப்பிட்டாங்க. பதறிப்போய்க் கீழே ஓடி வந்தபோது நம்ம வீட்டுக்கு வெளியே அந்தப் படுபாவி கண்ணன் பாப்பாவை கையில் ஏந்திட்டு, என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்கிட்ட ஏதோ சொல்ல வந்தான். பாப்பா கன்னத்துல, கையில் நகம் கீறின காயம் இருந்துச்சு. அதுக்குள்ளே ரத்தினம் அய்யா வீட்டிலிருந்து வெளிய வந்து என்ன நடக்கு துன்னு நான் யோசிக்கறதுக்குள்ள கண்ணனை ஓங்கி ஒரு அறைவிட, பக்கத்து வீட்ல, மேல் வீட்ல, கீழ் வீட்ல எல்லோரும் கூட்டம் கூடிட் டாங்க. அவனை அடிச்சு வெளியே விரட்டும் போதுதான் நீங்க வந்தீங்க.”

“ஹ்ம்ம்... வீடு வந்திருச்சு. கவலைப்படாம போய் நிம்மதியா சாப்பிட்டு தூங்கு... அப்புறம் ரெண்டு நாளைக்கு நீ வேலைக்கு வரவேண் டாம். நான் பார்த்துக்கிறேன். குழந்தையை நல்லா கவனிச்சுக்க” என்றாள் கனத்த மனதோடு.

வீட்டிற்குத் திரும்பிய ராதா, ரத்தினத்தின் அறையில் ஏதோ உருட்டும் சப்தம் கேட்க, உள்ளே சென்று பார்க்க ரத்தினம் அறையைத் துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருந்தார்.

“மாமா, நீங்க எதுக்கு அறையைச் சுத்தம் பண்ணிட்டு இருக்கீங்க? துடைப்பத்தை என்கிட்டே குடுங்க” என்று துடைப்பத்தை வாங்கிக்கொண்டு தன் கண்களை அறைக்குள் சுழலவிட்ட ராதா மிகுந்த அதிர்ச்சியடைந்தாள்.

சுஜியின் கரடி பொம்மையின் சில பாகங் களும், ஐஸ்கிரீம் மஞ்சள் நிற டப்பாவிலிருந்து சிதறி, தரை, கறையுடன் காணப்பட்டது. பச்சைநிற வளையல்கள் உடைந்து சிதறிக் கிடந்தன.

மறுநாள் ஊடகங்களில் விரைவுச் செய்தி யாக, ‘ஆறு வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக ரத்தினம் என்ற 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.’ ஓடிக் கொண்டிருந்தது.

ராதா அலைபேசியை எடுத்து கண்ணனின் எண்ணிற்கு டயல் செய்தாள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :