வெளுத்ததெல்லாம் பால் இல்லை

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு வந்த பதப்படுத்தப்படாத பாலில் ஒரு வித வாசனை வந்தது. நம்ம வீட்டில் கரண்ட் கட் என்றால் அடுத்த வீட்டில் வருகிறதா என்று பார்ப்பது போல “மற்ற வீடுகளிலும் இதே போல் வாசனை வருகிறதா?” என்று கேட்டேன். எல்லோரும் கோரஸாக “ஆமாம்” என்றார்கள்.

பால் விநியோகம் செய்தவர் “பண்ணையில் இருக்கும் ஒரு மாட்டுக்கு ஐந்து நாள் முன் நுண்ணுயிர்க்கொல்லி ஊசி (அணtடிஞடிணிtடிஞி) போட் டார்கள். அதனால் அந்த வாசனை” என்றார்.

‘நாங்க அப்படியே சாப்பிடுவோம்!’ என்று வரும் ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி நகரத் தில் பாலையும் தண்ணீரையும் இன்று அப்படியே குடிக்கமுடியாது. துரதிர்ஷ்டவச மாக பாக்கெட்டில்தான் வாங்க வேண்டியிருக் கிறது. கங்கை என்று சொன்னாலே நாம் புனிதம் ஆகிவிடுவோம் என்று ஆழ்வார் பாடிய கங்கையில் படகில் செல்லும் எங்கும் தண்ணீர். ஆனால் அந்தப் படகிலும் பாட்டி லில் தண்ணீர் விற்கிறார்கள்!

நகரத்தில் கறந்த பால் வாங்குவது ‘ரெம் டெசிவிர்’ மருந்து வாங்குவதைவிடக் கஷ்டம். என் அனுபவத்தைச் சொல்லுகிறேன்.

சென்னையில் தாம்பரத்தில் சில வருடங் களுக்குமுன் குப்பை கொட்டினேன். (விட்டு வாசலில் குப்பைத் தொட்டி வேறு இருந்தது). ஒரு நாள் காலை முழிப்பு வந்து நான்கு மணிக்கு எழுந்தபோது, “கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்ற திருப்பாவை பாசுரம் நினைவுக்கு வந்தது.

இன்று கறந்த பாலில் காபி சாப்பிடுவது என்று முடிவு செய்து, வீட்டு வாசலில் இருக் கும் பால் பூத்துக்குச் சென்று விசாரித்தேன்.

“கறந்த பால்தான்... ஆனா பாக்கெட்டில் இருக்கு” ஜோக்கிங் செய்து, “எதுக்கு சார்... ஏதாவது மருந்துக்கா?” என்றார்.

சிரிப்புடன் நழுவியபோது ஒரு தாத்தா மூச்சிரைக்க என்னைத் தொடர்ந்து வந்து “இங்கிருந்து நேரா மூன்றாவது ரைட். அங்கே ஒரு வீட்டில் கிடைக்கும்” என்றார்.

இரண்டே முக்கால் ரைட் போனபோது அங்கே ஒரு மாடு இருந்தது. அந்த வீடாகத் தான் இருக்கும் என்று மாட்டுக்கு அருகில்

சென்றபோது அது சூடாக உச்சா போனது. என் பாட்டி கையில் எடுத்துத் தலையில் தெளித்துக் கொள்வாள் என்று நினைவு வந்தது. மூச்சா போன மாடு அங்கே இருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்த வஸ்துக்களைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஒரு மாதவிடாய் டயப்பர் அடக்கம்.

வீட்டிலிருந்து வெளியே வந்தவர், “என்ன?” என்று விசாரிக்க, தயக்கத்துடன் “பால்” என்றேன்.

“இந்த வீடு இல்லை... அங்கே மணல் கொட்டியிருக்கு பாருங்க, அந்த வீடு” என்று காண்பித்தார். சென்றேன்.

வாயில் நுரையுடன் கூடிய டூத்பிரஸுடன், ஒருவர் என்னைப் பார்த்துத் துப்பிவிட்டு, “என்ன வேண்டும்?” என்று புத்துணர்வு அளிக்கும் வாசனையுடன் கேட்க, “பால்” என்றேன்.

“பாலா? மாடு இன்னும் வீட்டுக்கு வர வில்லையே. அதோ அந்த மாடுதான். ஏழு மணிக்கு வாங்க. அப்பதான் அது வீட்டுக்கு வரும்” என்றார்.

ஓடி வந்துவிட்டேன்.

தேடலை மறுநாள் தொடர்ந்தேன். பழைய சைக்கிளில் வந்த ஒருவர் “கறந்த பால் கிடைப்பது கஷ்டம்... பேசாம சேலையூர் மடத்துக்குப் போங்க. அங்கே மாடு இருக்கு. கேட்டுப் பாருங்க” என்றார்.

பால் வாங்க பஞ்சகச்சமா? அந்த யோசனையை நிராகரித்தேன்.

இந்த விஷயங்களை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பெண்களிடம்தான் கேட்க வேண்டும். அப்போதுதான் சரியான பதில் கிடைக்கும். ஒரு பூ விற்கும் பெண்மணியிடம் கேட்டேன்.

“மணிமேகலைத் தெருவில கேட்டுப் பாருங்க” என்று விரலால் மேப் வரைந்து காண்பித்தார்.

மணிமேகலை தெருவில் நுழையும்போது மாடுகளும் மாடு சார்ந்த இடமும் என்று மாட்டுத் தொழுவம் வாசனை காட்டிக்

கொடுத்தது. இன்று மணிமேகலைக் காப்பி‘யம்மி’யாக இருக்கப் போகிறது என்று உள் மனது கூறியது.

அங்கே மாடுகள் ஒழுங்காகக் கட்டப்பட்டு வைக்கோல், புண்ணாக்கு இத்யாதி சாப் பிட்டுக்கொண்டு இருந்தன. அந்த இடமே ஒரு மினி கிராமம் மாதிரி இருந்தது.

முண்டாசு தாத்தா “என்ன தம்பி...?” என்றார்.

“பால்...” என்றேன்.

உள்ளேயிருந்து ஒரு சின்னப் பெண் ஓடி வந்து, “இன்னும் ஆஃபனவர் ஆகும்” என்று நுனிநாக்கு ஆங்கிலம் பேசியது, பெரிய வியப்பாக இருந்தது.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று முகத்தைப் பார்த்த தாத்தா பாட்டியிடம், “உள்ளே கறந்த பால் இருந்தா கொடுத்துவிடு” என்று சொல்ல, பாட்டி பாலை எடுத்து வந்தாள்.

“எதுல வாங்கிப்பீங்க? பாத்திரம் இருக்கா?”

கேரிபேக் கலாசாரத்தில் வளர்ந்த நான் பாத்திரம் பற்றி யோசிக்கவே இல்லை.

“பாத்திரம் இல்லை... திரும்ப வரேன்...” என்றபோது பாட்டி முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

பாத்திரத்துடன் வந்து பால் வாங்கி, அதில் இரண்டு முறை காபி சாப்பிட்ட பின் முடிவு செய்தேன்.

அடுத்து ஒரு மாடு வாங்க வேண்டும் என்று.

அமேசானில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :