மன தைரியம்தான் பெண்களின் சொத்து - வாணி போஜன்


ராகவ்குமார்



தமிழ் சினிமாவில் இல்லத்தரசிகளுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த நடிகை என்பவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் தற்போது முன்னணியில் இருக்கிறார் வாணி போஜன். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கிறார். தற்போது அதிக படங்களில் புக்காகியிருக்கும் அவர் ராதாமோகன் இயக்கத்தில் ‘மலேசியா டு அமினீஷியா’ என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே, வாணியின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

இந்தப் படத்தில் எப்படி வாய்ப்புக் கிடைத்தது?

“ என் படங்களைப் பார்த்து என்னை அழைத்தார் ராதாமோகன் சார். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பலர் தவம் கிடக்க, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது கடவுளின் கிருபைதான்.”

அழகான பெயர்களைத் தலைப்பாக வைக்கும் ராதாமோகன் ஏன் இப்படி ஒரு தடாலடியான தலைப்பை வைத்தார்?

“ ‘மலேசியா டு அமினீஷியா’ ஒரு காமெடி பின்னணி கொண்ட படம். இந்தத் தலைப்பி லேயே கதை உள்ளது. படம் வெளியான பின்பு ராதாமோகன் சார் இந்தத் தலைப்பு ஏன் வைத்தார் என அனைவருக்கும் புரியும். அதுவரை சஸ்பென்ஸ்.

பெரிய திரையில் முதன்முதலாக, முழு கதாநாயகியாக பெரிய டைரக்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

“ராதாமோகன் சார் அலுவலகத்தில் இருந்து உங்களை ஹீரோயினாக கமிட் பண்ணிருக்காங்க என போன் வந் தது. உடனே ஓகே

சொல்லிட்டேன். ராதா சார் ஆஃபி ஸில் ஒன் லைன் மட்டும் சொன்னார். ஒன் லைன் சொல்லாமல் போனால் கூட, ஓகே சொல்லி இருப்பேன். ராதா சார் நம்மகிட்ட இருக்கறதை வெச்சே நடிக்க வைத்துவிடுவார்.‘இப்ப கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கண்ணை உருட்டிப் பார்த்த மாதிரிப் பாருங்க போதும், இப்படி வலது பக்கமா நடந்து வந்தல்ல, இது மாதிரி நடந்து வா போதும்’ என்று நாம செய்றதை வச்சே அழகா வேலை வாங்குவார். அவருடன் ஒரு படத்தில் நடிக்கிறது ஒரு நடிப்பு ஸ்கூலில் கத்துகற மாதிரி.”

சீரியல் மூலமாக இல்லத்தரசிகளின் மனதில் நுழைந்த நீங்கள், இந்தப் படம் மூலமாக இளைஞர்கள் மத்தியில் நுழைவீர்களா?

“இப்ப சினிமாவில் சும்மா திரையில் வந்துட்டு அப்படியே போக முடியாது. ஆடியன்சிற்கு பிடித்த மாதிரி செய்யணும். ‘மலேசியா டு அமினீஷியா’ படத்தில் என் கேரக்டர் அனைத்து தரப்பு மக்களையும் அட்ராக்ட் பண்ற மாதிரி இருக்கும். ரெகுலர் ஹீரோயின் போல் இல்லாமல் வித்தியாசமான ஹீரோயின் கேரக்டரில் பண்ணியிருக்கேன். இளைஞர்கள் மனதை நான் எப்போதோ கவர்ந்துவிட்டேன்.”

இந்தப் படத்தில் உங்கள் ரோல் பற்றிச் சொல்லுங்களேன்?

“இது சஸ்பென்ஸ். இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும். சாரி.”

உங்கள் ரோல் பற்றித்தான் சொல்லமுடியாது. வைபவ் பற்றிச் சொல்லுங்களேன்?

“வைபவிற்கு மனைவியாக நடிக்கிறேன். டைரக்டர் சீனை எக்ஸ்பிளைன் பண்ணி, டேக்கிற்குப் போகும் நேரத்தில், நான் வைபவிடம் ‘இந்த சீனில் நல்லா நடிக்கணும்’ என்று

சொல்லுவேன். உடனே வைபவ் சிரிக்க ஆரம்பித்துவிடுவார். யார் சிரித்தாலும் நான் உடனே நிக்காமல் சிரிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வழியாக டேக்கிற்குள் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவிற்கு வைபவ் சார், ஜாலியாகப் பழக்கக்கூடிய டைப். படத்தில் அவர் ரோல் பற்றிக் கேக்காதீங்க?”

இப்போ நடிக்கவிருக்கும் படங்கள் என்ன?

“சூர்யா சார் தயாரிக்கும் படம், கார்த்திக் சுப்புராஜ் படம் என ஆறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். கொரோனாவில் சற்று நின்று கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு வேகமெடுக்கும்.”

இந்த லாக்டவுனில் உங்கள் சொந்த ஊரான ஊட்டி ஞாபகங்கள் வருகிறதா? லாக்டவுனுக்குப் பிறகு போவீர்களா?

“எந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவாங்க என எதிர் பார்த்து சொந்த ஊருக்கே போகலை. சொந்த ஊரின் பசுமை கண்முன்னே வந்து வந்து போகிறது. என்ன செய்ய?”

பெரிய திரை to ஓ.டி.டி. தளங்கள் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

“கண்டிப்பாகப் பிடிச்சிருக்கு. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வாய்ப்புக் கிடைத்து திறமையை நிரூபிக்க அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்காது. இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர இந்தத் தளங்கள் ஒரு வரப்பிரசாதம்.”

தமிழ் சினிமா நாயகிகள் சிலரின் தேவையற்ற தற்கொலைகள் நிகழ்கிறதே. பெண்களுக்கு மீடியா ஏற்புடையதாக இல்லையா?

“நூறு பேரில் ஒருவர்தான் இது போன்ற முடிவை எடுக்கிறார். இதுக்கும் மீடியாவுக்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் யாராக இருந்தாலும் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது மிகக் கவனம் தேவை. உடனே நம்பிவிடக் கூடாது. பிரச்னை என்றால் மனத்திற்கு நெருக்கமான மனிதர்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். அப்படிப் பேசினாலே இது போன்ற தற்கொலை கள் நடக்காது. பெண்களுக்கு மனத் தைரியம்தான் உண்மையான சொத்து.”




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :