மூவர்ணக்கொடியில் தெரிந்த முகம்!

நூல் அறிமுகம்
சுப்ர.பாலன்“சரி சரி, சீக்கிரம் போவோம். மூணு மணிக்கு மகேஸ்வரிக்கு மருந்து கொடுக்கணும்” என்ற சீதாவை ஆழ்ந்து பார்த்தாள் சரோஜா.

ஒரு சிறுகதையில் வருகிற சாதாரண உரையாடல் வரியாக இதைப் பார்க்கமுடியவில்லை. ‘கருணை’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள சிறுகதை யில் வரும் உணர்ச்சிகரமான நிகழ்வு களில் முக்கியமான பகுதி இது. இதுதான் கதையின் ஜீவன் என்றாலும் மிகை யில்லை!

இனி குணப்படுத்தவே முடியாது என்கிற நிலையில், தான் பெற்ற குழந்தை யையே கருணைக் கொலை செய்துவிட லாம் என்கிற முடிவோடு உரிய அனுமதிக்காக நீதிமன்றத்தை நாடி யிருந்த ஒரு பாசமுள்ள தாய். அந்த நிலையிலும் வீட்டில் பசியோடிருக்கும் குழந்தையைப் பற்றி அவள் நினைப் பது என்பது ‘முரண்’ போலத் தோன்றி னாலும் அதுதானே தாய்மையின் யதார்த்தம்?

எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டில் நாள் முழுவதும் தனி யாக விடக்கூடாது என்று சட்டம்கூட இருக்கிறதா என்ன, அமெரிக்கா வில்?

பல ஆண்டுகளாகத் தொடர்பில்லாமலே இருந்த மகனின் ‘அழைப்பின்’ பேரில் வேண்டாத விருந்தாளியாக அந்நிய மண்ணில் வந்து விழுந்து அல்லாடுகிற கோபால் நாயக்கரின் கதை யாரையும் உலுக்கும்.

வழி தெரியாமல், போக்கிடம் புரியாமல், எதற்காக வாழவேண்டும் என்கிற மனநிலை யில், அலைந்த ஊர் பேர் தெரியாத அந்தப் பெரியவரைக் கணவன் வீட்டுக்கு அழைத்து வருகிறபோது, ‘ஐயா... கும்பிட்டிக்கிறேன்’ என்று மூன்று முறை காலில் விழுந்து வணங்கி வரவேற்றுப் பெற்ற தகப்பனைப்போல் உபசரிக்கிற செண்பகம் கற்பனைப் பாத்திர மாகவே தெரியவில்லை.

“நான் உங்களப் பெரியப்பான்னு கூப்பிடலாமில்ல?” என்று ‘அன்பா, மரியாதையா, ஏதோ ஒரு இனம்புரியாத காரணத்தால் அந்தப் பெண் சொன்னதையெல்லாம் கேட் டார் கிழவர்’ என்று படிக்கிறபோது, அனுபவ எழுத்தின் இமயம் லா.ச.ரா. அவர்கள் ஒரு முறை உரையாடுகிறபோது சொன்னதுதான் நினைவில் வந்தது.

“நாங்கள்ளாம் வயசானவா... அன்புக்கும்; பாசத்துக்கும்தான் ஏங்கறோம்.” அந்த அன்பு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடத்தில் கிடைக்காததால்தானே பல வயசாளிகள் காற்றுப்போன பந்தாக உதைபட நேர்கிறது? அழுத்தமான பிரச்னையை மனதில் தைக்கிற மாதிரி சரளமாகச் சொல்லிப்போகிறது ‘வைராக்கியம்’ கதை.

அதிகார துஷ்பிரயோகத்தால் கைதியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அப்பாவி ஒருவனைப் பற்றிய கதையில் சொல்லியிருப்பதைவிடவும் கதை படிக்கிறவ னின் மனோதர்மத்தைத் தட்டியெழுப்புகிற விதமாகச் ‘சொல்லாமல் விட்டிருப்பதே’ அதிகம்!

“உங்கள் ஊர்க்காரர்கள் யாரும் தீவிரவாதி களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சாட்சி சொல்ல வர மறுத்துவிட்டார்கள். கிடைத்த ஆவணங்களை வைத்து வாதாடியிருக் கிறேன். பார்ப்போம்” என்று அவனுடைய வழக்குரைஞரே சொல்லிவிட்ட நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருப்பது, அந்த அப்பாவி மட்டுமில்லை, சிறை வேலையாக அவன் தச்சு வேலை செய்து முடித்திருந்த அந்த மர நாற்காலியும்தான்.

நீதிபதி அமரப்போவது குற்றவாளி செய்து தந்திருந்த அதே நாற்காலியில் தான்! வித்தியாசமான சிறுகதை.

‘காணாமல் போய்த் திரும்பக் கிடைக்கிற ஒரு குழந்தை, ஒரு மனநிலை பிழன்ற பெரியவர். இருவரைப் பற்றிய கதைகள் ‘அப்பா’, ‘தேடல்’.

சமகால அரசியல் அவலங்களைக் கண்முன் காட்டுகிற கதைகள் ‘செருப்பு’, ‘இடைவெளி’ இரண்டும்.

அவ்வாறே எல்லைக் காவல் பணியிலிருந்தபோது உயிர் துறக்கும் இளம் கணவனின் ‘பேழை’யின் மீது போர்த்தி யிருந்த மூவர்ணக் கொடியை ‘முக்கோண வடிவில் ராணுவ ஒழுங்கில் மடித்து’ ஓர் அதிகாரி சல்யூட் செய்து தருகிறபோது, அதைப் பெற்றுக்கொள்ள நேர்கிற வள்ளி யின் கதை. அவனுடைய முகமும் சேத மடைந்திருந்ததால் அதைப் பார்க்கவும் அவளுக்கு அனுமதியில்லை. ‘கண்ணீர் மறைக்கும் வள்ளியின் கண்களுக்கு (கொடி யிலிருந்த) அந்த அசோகச் சக்கரம் தெரிய வில்லை. அதில் தெரிந்தது ஆறுமுகத்தின் முகம்.’

இந்தத் தேசத்துக்காக எல்லையில் தினம் தினம் உயிர் துறக்கும் எத்தனையோ முகம் தெரியாத ‘ஆறுமுகங்’களை நினைத்துக் கைதொழ வைக்கிற கதை.

உணர்ச்சிகரமான பத்துக் கதைகளின் அழகான தொகுப்பு. எல்லாமே நம்மைச் சுற்றி அன்றாடம் ‘கடைவிரித்து’ ஆடுகிற நிகழ்வுகள்தாம். ஆனாலும் சொல் நேர்த்தி அற்புதம்! வழக்கமான சிறுகதைத் தொகுப்பு களைப் போலில்லாமல் வார, மாத இதழ்களில் கதை படிக்கிற சுகமான அனுபவத்தோடு படிக்கும் விதமாக நிறையப் படங்களோடு வித்தியாசமான ‘லே அவுட்’டில் வெளியிட்டிருப்பதையும் அவசியம் பாராட்டியாக வேண்டும்.

முகம் (சிறுகதைகள்), ரமணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017, போன். 044-24342810 விலை : ரூ. 130.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :