அருள்வாக்கு

ஞானியும் வெள்ளிரிக்காயும்
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்வெள்ளரிப்பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன்.

அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான்.

வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டுப் படரவிடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படரவிடுவது. அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உசரக்க ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழமுடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே!

கொடிபாட்டுக்குப் படர்ந்துகொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத் தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் அந்தண்டை நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற காரியத்தைக் கூடப் பண்ணுவதில்லை!

இதேபோலத்தான் - ஞானி, சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருட்சம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும் தான்பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே காரியம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல்தான் இருப்பான்.

சம்சாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோட்சம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற காரியம் அவனுக்கில்லை. த்வைதிகள்தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோட்சத்திற்குப்போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும்போதே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோட்சம் என்பது.

‘விடுபட்ட’ என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் காரியம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் சாட்சாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்துகொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், சம்சார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஓடிப் போய்விடும்.

வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந் தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும்!

இதுதான் வெள்ளரிப்பழ முக்தி!

இது வழக்கமாக நான் சொல்வது. இதைக் கேட்டு விட்டு ‘இதற்கு’ மேலேயும் ஒரு வித்வான் ஒன்று சொன்னார். ஆனால் ‘மேலே’ என்று இதோடு சேர்த்துக் கொள்ளும்படியாக அவர்

சொல்லவில்லை. நான் சொன்ன மாதிரியே, ‘வெள்ளரிப்பழ முக்தி’ என்பதற்கே இன்னொருவித எக்ஸ்ப்ளனேஷனாக அவர் நினைத்து வந்ததைத்தான் சொன்னார். ‘அது’ என்னவென்றால் - பழுத்த பழமாக இருந்த இடத்திலேயே கிடக்கும் வெள்ளரி அப்புறம் ஒருநாள் படாரென்று வெடித்து, என்ன ஆச்சு, எங்கே போச்சு என்றே தெரியாமல் போய் விடுகிறதல்லவா? மற்ற பழங்கள் மாதிரி அது அழுகி, துர்கந்தம் பிடித்து, புழுத்து அற்றுப் போவதில்லையோல்லியோ? இப்படித்தான் ஞானம் என்பது ஒரு ஊடூச்ண்ட-ல் வந்தவுடனேயே மாயை அப்படியே பட்டென்று வெடித்துப் போய்விடுகிறது - கொஞ்சம் கொஞ்சமாக அழுகி கிழுகி அவிந்து போகாமல் ஒரே போட்டில் போன இடம் தெரியாமல் போய்விடுகிறதென்று தாம் அந்த மந்திரத்தைப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி வந்தததாக அவர் சொன்னார்.

‘இருந்த இடத்திலேயே முக்தி’ என்று இதை நீங்கள் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருப்பதே இன்னம் பொருத்தம் என்று இப்போது தெரிகிறது. ‘பந்தத்திலிருந்து விடுதலை’ என்று மந்திரத்தில் வருவது சம்சாரக்கொடி பழத்தைவிட்டு விலகி அதற்கு விடுதலை தருவதற்கே பொருத்தமாயிருக்கிறது. பழம் வெடிப்பதை ‘விடுபடுவது’ என்பது அவ்வளவு பொருத்தமாகத் தானில்லை” என்றார்.

அவர் அப்படிச் சொன்னாலும் எனக்கு அவர் நினைத்துவந்த விளக்கத்திலும் ‘பாயின்ட்’ இருப்பதாகப் பட்டது. சித்தே ‘சற்று’ யோசித்துப் பார்த்து நான் சொன்னதை அப்படியே வைத்துக்கொண்டு, அதற்கு மேலே அவருடைய அடிப்படை பாயிண்டை - வெள்ளரிப்பழம் வெடித்துப் போய்விடுவதை - வேறே மாதிரி அர்த்தம் பண்ணிச் சேர்த்து, நான் சொன்னது ஜீவன் முக்தி, அவர் சொன்னது அதற்கப்புறம் வரும் விதேஹ முக்தி என்று கம்ப்ளீட் பண்ணினேன்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :