முதுமரத்தாணி


விஜய் பீமநாதன்
ஓவியம் : விஜய் டாலிஅமெரிக்காவிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. சொந்த ஊரின் மண் வாசனை எப்படி இருக்கும் என்பதே மறந்து போயிற்று. படிக்கும் காலத்திலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதித்துவிட மாட்டோமா, ஒருமுறையாவது வானவூர்தியில் பயணம் செய்துவிட மாட்டோமா, தேவையான பொருட்களைத் தயக்கம் இன்றியும், பணக் கணக்கு இன்றியும் வாங்கிவிட மாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்திருந்த மனதிற்கு, இப்போது அப்படி ஆசைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ் கிறோம் என்று கூறினால் அது ஏற்புடையதாக இல்லை. பல எண்ணங்கள். தேவையான பணம் இருக்கிறது. ஆனால், என்னவோ தெரியவில்லை, வாழ்க்கையில் நிறைவு இல்லை. கண்களை மூடினால், மனம் விழித்துக்கொண்டு பாடாய்ப் படுத்தும்.

என் கைபேசி அதிர்ந்தது. இந்தியாவிலிருந்து வந்த வாட்ஸாப் அழைப்பு.

“ஹலோ... சொல்லுங்க மாமா. என்ன சமாச்சாரம்?”

“இல்லப்பா, இன்னும் ஒரு மாசத்துல காப்பு கட்றோம்.”

“என்னது மாமா, புரியலயே?”

“அட, நம்ம குலதெய்வக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சொன் னேனே...”

“ஆமாம்... ஆமாம்... இப்பதான் ஞாபகம் வருது.”

“இதுக்காவது வாப்பா... உங்களையெல்லாம் பாத்து ரொம்ப வருஷமாச்சு. உன் பொண்ணு நல்லா வளந்துட்டா. நேத்துதான் வாட்ஸாப்ல பாத்தேன்.”

“ஆமா. மாமா, 17 வயசாகுது. நல்ல வாயி. பேசி ஜெயிக்கவே முடியாது.”

“ஹா... ஹா... நல்லது... சரி, எப்போ வர்ற? அத சொல்லு மொதல்ல.”

அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. வார்த்தைகளை மென்று விழுங்கி னேன். சொல்லப்போனால், என் மகளுக்கு எங்களது குலதெய்வத்தின் பெயர் என்னவென்பது தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால், குலதெய்வம் என்றால் என்ன என்பதுகூட அவளுக் குத் தெரியாது. அவள் இங்கேயே வளர்ந்த பெண். தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற தலைப்புகளை நான் எடுத்தாலே, அவள் ஓட்டம் பிடித்துவிடுவாள். அவை அவளுக்குச் சற்றும் ஒட்டவில்லை. தமிழ்நாட்டிற்குச் செல்ல அவளுக்குக் கடுகளவும் விருப்பம் இருந்ததேயில்லை.

“வரமுடியுமான்னு தெரிலமாமா. மாலதி இப்ப தான் கம்பெனி மாறினாள். அவளுக்கு லீவு கிடைக்காது. நம்ம குட்டி ஜன்னிக்கு இப்பதான் லீவு. அதனால...”

“இப்பவும் வரமுடியாதுன்னு இவ்ளோ நீட்டி முழக்கிச் சொல்ற. என்னமோ பண்ணுங்க. ஒருவேளை வர்ற மாதிரி இருந்தா ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லு” என்று கூறி விரக்தியுடன் போனை வைத்தார்.

எனக்கு மாமா என்றால் மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பாக நான் வரவில்லை என்று கூறி னால், பலமுறை என்னை வற்புறுத்துவார். ஆனால், இப்போதெல்லாம் வற்புறுத்தலும் குறைந்துவிட்டது. அழைத்தலும் குறைந்துவிட் டது. இவ்வாறு என் எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டிருக்கும்பொழுது, வெளியே சென்றிருந்த என் மனைவி மாலதி வீடு திரும்பினாள். மாமாவின் அழைப்பைப் பற்றி அவளிடம் சொன்னேன்.

“அட ஆமாம்... இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல். என்னோட அத்தை, மாமா அறுபதாம் கல்யாணத்துக்கே போகலையாம், இதுல கும்பாபி ஷேகம் வேற!”

இந்தப் பதில் எனக்குச் சற்றும் வியப்பளிக்க வில்லை.

“இங்கதான் பிள்ளையார் கோவில் கட்டி கும்பாபிஷேகம்லாம் பண்ணோம்ல.. அப்புறம் என்ன? ஆனாலும் எனக்கும் ஆசையாதான் இருக்கு. என்னத்த பண்றது...” என்று பெருமூச்சு விட்டவாறே என் அருகில் அமர்ந்தாள். நான் எதுவும் பதிலளிக்கவில்லை. கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டாமல், எண்ணங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்பொழுது, மகள் ஜனனி யைப் பற்றிப் பேசினாள் மாலதி.

“நம்ம பொண்ணு நேத்து கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போறோம்னு தெரிய லீங்க.”

“ஆமாம்டி, என்னால் ஜீரணிக்கவே முடியல. இந்த வெள்ளைக்கார பசங்க வேணும்னா பண்ணிட்டு போகட்டும். ஏன் அவளும் அதையே பண்ணணும்னு சொல்றா?”

“நீங்கதாங்க, அவகிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க சொன்னாலாவது அவ கேப்பா!”

“ஹ்ம்ம்... பேசிப் பாக்கறேன்!”

என் மகள் பூப்பெய்திய நிகழ்வை விமரிசை யாக நடத்தவேண்டுமென்று பல நாள் கனவு கண்டிருக்கிறேன். அவளோ, “நோ... அப்பா... தட்ஸ் நாட் நெசசரி... இட்ஸ் நேச்சுரல்!” என்று சர்வசாதாரணமாகக் கடந்து சென்றுவிட்டாள். நான் எவ்வளவு கட்டாயப்படுத்தியும் அது நிறைவேறவேயில்லை. இதேபோல் நிறைவேறா மல் இருக்கும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங் களின் பட்டியல் மிக நீளமானது. பெருமூச்சுடன் புத்தகத்தைப் படிக்கலானேன். அன்று மாலை என் மகள் வீடு திரும்பினாள்.

“ஹலோ டாடி... டிஸைடு பண்ணிட்டீங்களா?”

“நான்தான் என் முடிவைச் சொல்லிட்டேனேமா. எனக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம்கூட விருப்பமேயில்லை. நீதான் அடம்பிடிக்கிற...”

“ ‘அடம்’ அண்ட் ஆல் நோ அப்பா!”

ஜனனியால் சரளமாகத் தமிழில் பேச முடியாது. மிகவும் சிரமப்படுவாள். அவள் பிறந்ததிலிருந்தே அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தேன். பள்ளிக்கூடம் செல்லும் வரை அழகாகத் தமிழ் பேசுவாள். அந்த மழலைத் தமிழை நான் ரசிக்காத நாள் இருந்ததில்லை. அவள் வளர்ந்தாளே தவிர அவளது மழலை வளரவில்லை . 17 வயதாகியும் சிறு குழந்தையைப் போலவே தமிழ் பேசுவாள். குறிப்பாக, என்னிடம் ஏதேனும் காரியம் ஆக வேண்டுமெனில் தமிழிலேயே பேசி என்னை மயக்குவாள். அன்று திடீரென்று தமிழில் பேசத் தொடங்கினாள்.

“அப்பா, என்னை எல்லாரும் ரொம்பவும் டீஸ் பண்றாங்க. அதனாலேதான்...”

“அமெரிக்கன்ஸ் வேணும்னா அப்படிப் பண்ணட்டும். நீயும் ஏன் அப்படி பண்ணணும்னு சொல்ற!”

“அப்பா, நானும் ஒரு அமெரிக்கன்தான் அப்பா. அமெரிக்கால பிறந்து வளர்ந்த என்னை, இந்திய ட்ரடீஷன்படி ஏன் வாழச் சொல்றீங்க?”

அதட்டிப் பேசத் தோன்றினாலும் வயதுக்கு வந்த மகள் என்பதால் மனம் வரவில்லை. அவள் கேட்பதும் நியாயமாகத்தான் பட்டது. அது என் அறிவுக்குத் தெரிந்தாலும் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

அவள் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள். நான் முன்பு கூறியது போலவே அவளைப் பேசி வெல்வதென்பது எளிதல்ல. நான் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடினேன்.

“ஜனனி, என்னால இதுக்கு ஒரு பொழுதும் சம்மதிக்கமுடியாது. உன் விருப்பப்படி செய்!”

அவள் மொழியில் தமிழ் மறைந்து ஆங்கிலம் மீண்டும் பிறந்தது.

“தட்ஸ் மை டாடி. தேங்க்ஸ்...” என்று சொல்லி என்னைக் கட்டித் தழுவி இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். நான் எப்படியும் பேசி சமாளித்து, மகளின் மனதை மாற்றிவிடுவேன் என்ற என் மனைவியின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு வேறொரு ஊரிலிருந்து என்னை அழைத்து, தான் ஒரு போட்டியில் இருப்பதாகவும் அவளுக்கு வீடு மாற்ற நான் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள் ஜனனி. எங்களுக்குத் திருமணமான பொழுது, நானும் மாலதியும் எக்காரணத்தைக்கொண்டும் தனிக் குடித்தனம் என்ற சிந்தனைகூட வரக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட எங்களுக்கு எங்கள் மகள் 17 வயதிலேயே தனிக்குடித்தனம் போவாள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவில் பிள்ளைகள் 16-17 வயதில் வீட்டைவிட்டு வெளியேறுவது ஓர் இயல்பான வழக்கமே.

“இது எப்படியும் நடக்கும்னுதான் பல தடவ சொன்னேனே. கேட்டாதானே” என்றேன் மாலதியிடம்.

“அட போங்கங்க. நாமகூடத்தான் தனிக்குடித்தனம் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம். நடந்தது என்ன? கல்யாணம் ஆகி மூணே வருஷத் துல, அம்மா, அப்பா, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே யூ.எஸ்.சுக்கு வந்தோம்ல. நம்ம பண்ணது மட்டும் சரியா?”

மாலதிக்கும் எனக்கும் வழக்கம்போல் வாக்குவாதம் அதிகமானது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ‘இப்போ போயிடலாம், அப்போ போயிடலாம்’ என்று பல மைல் கற்களைத் தாண்டிவிட்டோம். என் மேல் எனக்கே அதிக கோபம். இதை அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் பொருளாசை யாரைவிட்டது? தாய், தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தபொழுது, அருகில் இருந்துகூட பார்த்துக்கொள்ளவில்லை. ஒரு செவிலியை வைத்துத்தான் பார்த்துக்கொண் டோம். ஹ்ம்ம்... அவர்களது இறப்பிற்கும், நேரத்திற்குப் போக முடியவில்லை.

இவ்வாறாக எனது மனதுடன் தர்க்கம் செய்துகொண்டே எனது மகளின் அறைக்குச் சென்று வீட்டை மாற்றத் தேவையானவற்றைச் செய்ய ஆரம்பித்தேன். மகள் திருமணமாகிச் செல்லும் பொழுது சீருடன் அனுப்பவேண்டிய நான், இதைச் செய்து கொண்டிருக்கிறேன்.

இரண்டே நாட்களில் அனைத்தும் தயார். ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து பொருட்களை ஏற்றினர். வண்டி புறப்படத் தயாரானது. ஏதேனும் ஜனனியின் அறையில் எடுக்காமல் விட்டுவிட் டோமா என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்தேன். ஒரு குப்பைத் தொட்டியைத் தவிர வேறெதுவும் இல்லை. அறையே காலியாக இருந்தது. கோபத்தில் அந்தக் குப்பைத் தொட்டியை எட்டி உதைத்தேன். குப்பைகள் சிதறின. அதில் கர்ப்பத்தைப் பரிசோதனை செய்யும் கருவி இருந்தது. அதில் இரு கோடுகள் இருந்தன. இடிந்து உட்கார்ந்தேன். அதைக் கண்ட என் மனைவி பரபரப்புடன் வந்து அதை வாங்கிப் பார்த்தாள். அவளுக்குக் கோபமும் குழப்பமும் தலைக்கேறின. ஜனனியை போனில் அழைத்து, ஒலிபெருக்கியில் போட்டாள் மாலதி.

“என்னடி இது? ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்லாம் உன் ரூம்ல இருக்கு. அது யார்து?”

“அத சொல்ல மறந்துட்டேனே... என்னுது தாம்மா. இப்ப ஒண்ணும் பிராப்ளம் இல்ல. நேத்து நைட்தான் அபார்ட் பண்ணினேன்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினாள்.

ஜனனியின் வார்த்தைகள் எங்களுள் முதுமரத் தாணியாக இறங்கி மனதை இரண்டாகப் பிளந்தது.

“ஐயகோ! தெரிந்தே பெண்மையை இழப்பது தான் பெண்ணுரிமையோ? அல்லது முற்போக்குச் சிந்தனையுடன் முடிவுகளைத் தானே எடுப்பதுதான் பெண்ணுரிமையோ? அல்லது பெண்ணுரிமைக் கான புது இலக்கணம்தான் தேவைப்படுகிறதோ?

பெண்ணடிமை காலத்தே பெண்ணியம் பேசிய பாரதி, இக்காலத்திற்கான புது பெண்ணிலக்கணம் எழுத மீண்டும் ஒருமுறை வந்திடமாட்டானோ? அப்படி வந்தால் முதுமரத்தாணிகளால் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாய் அமைந்திடுமே.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :