சில்பியின் சிஷ்யர்

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்சிறு வயதில் கோடை விடுமுறைக்கு என் தாத்தா வீட்டுக்குச் செல்வேன். அங்கே ‘ஸ்டோர் ரூமில்’ பழைய கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர்கள் குவிந்து இருக்கும். அவற்றில் உள்ள ஓவியங்களை ரசிப்பது எனக்குப் பொழுதுபோக்கு. குறிப்பாக சில்பி, மணியன், எஸ்.ராஜம் போன்ற ஓவியங்கள் இன்னும் என் நினைவில் இருப்பது அதனு டைய அமரத்தன்மையை நிரூபிக்கிறது.

இன்று பல ஓவியர்களையும் ஓவியங்களையும் பார்க்க முடிகிறது. அவை வண்ணமயமாக இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள ஓவியங்களைப் போல் அவை ‘கிளாசிக்’ வகையில் சேர்க்க முடியாது. அதற்குக் காரணம் பல ஓவியங்கள் இன்று டிஜிட்டல் முறையில் தீட்டப்பட்டு அவற்றில் ஒருவிதச் செயற்கைத்தன்மை ஒளிந்துகொண்டு இருப்பதை கவனிக்கலாம்.

ஓவியர் மணியத்தின் ஓவியங்கள், அந்தச் சோழ காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். ஓவியங்களில் ஒரு முழுமை இருக்கும். பொன்னியின் செல்வனில் நந்தினி போன்ற கதா பாத்திரங்களின் கண்களிலும் முகபாவங் களிலும் ஓவியத்தின் நளினங்களை அங்குலம் அங்குலமாக இன்றும் ரசிக்கலாம்.

ஓவியர் ராஜம் அவர்களின் ஓவியங்கள் அஜந்தா சுவர் சித்திரம் போன்றவை. இதமான வண்ணத்தில் ஒருவிதப் பழமை யான மியூரல் டச் இருக்கும்.

சில்பியின் ஓவியங்களில் பல நுணுக் கங்கள் காணலாம். கூர்ந்து கவனித்தால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் எல்லாம் நம் கண்களுக்குத் தெரியும். எதையும் விடமாட்டார்.

சில்பி வரைந்த சிம்மாச்சலம் ஓவியத்தை எப்பொழுதோ பார்த்திருக்கிறேன். அந்தப் பிம்பம் என் மனதில் ஆழப் பதிந்திருந்தது. சில வருடங்களுக்குமுன் சிம்மாச்சலம் சென்ற பொழுது நல்ல மழை. கோயில், சில்பி வரைந்த மாதிரி இல்லை. அவர் எங்கே உட்கார்ந்து வரைந்திருப்பார் என்று கோயிலைச் சுற்றி வந்தேன். பிறகு செங்குத்தான இடத்துக்கு மேல் ஏறினேன். கீழே பெரும் பள்ளம். அங்கே சில்பி வரைந்த ஓவியத்தின் கோணம் கிடைத்தது. முதல் சினிமா பார்த்த அனுபவம் போல ஆனந்தமாக இருந்தது. சில்பி வரைந்த ஓவியம், நான் எடுத்த படம் இரண்டும் கொடுத்திருக் கிறேன். சில்பியின் நுணுக்கங்களை அதில் கவனிக்கலாம்.

சமீபத்தில் திருமங்கை ஆழ்வார் ஓவியம் ஒன்றைப் பார்த்து சில்பி வரைந்தது என்று ஏமாந்தேன். ஓவியத்தை அனுப்பிய நண்பர் வெங்கட் கிருஷ்ணாவிடம் விசாரித்ததில் வரைந்தவர் பாலாஜி ரவி என்று தெரிந்து கொண்டு ஒரு ‘ஃபிரண்டு ரிக்வெஸ்ட்’ கொடுத்து நண்பராகி இரவு கூப்பிட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.

சிறு வயதில் தன் தாய் மாமாவிடம் ஓவியம் கற்க ஆரம்பித்தார். பிறகு அவர் தந்தையின் வேலை காரணமாக கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே ‘சாந்திநிகேதன்’ ஓவியக் கல்லூரியில் வாட்டர் கலர் பயின்று பிறகு

சென்னை வந்தவர், அமரர் சில்பியின் ஓவியத் தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு சில்பி யின் மகனான மகாலிங்கம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு சில்பியின் படைப்புகளை ஆழ்ந்து நோக்கி, அதன் நுணுக் கங்களை ஆராய்ந்து, அவர் எப்படி வரைவார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அது போல வரைய ஆரம்பித்தார்.

தான் வரைந்த ஓவியங்களை ஓவியர் எஸ். ராஜம் அவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெற்றார். இதைத் தவிர சிற்பச் சாஸ்திரம் பற்றிய பல விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டார்.

பல கோயில்களுக்குச் சென்று, ஓவியர் சில்பியைப் போல் கருவறையின் முன் அமர்ந்து ஓவியங்களைத் தீட்டுகிறார். ‘ஓர் ஓவியம் வரைந்து முடிக்க பத்து நாட்களுக்கு மேல் ஆகும்’ என்றார். ‘சில சமயம் ஓவியத்தில் எதை யாவது வரைய மறந்துவிட்டால் அதைத் தன் யூகத்தின் அடிப்படையில் வரைந்தாலும் அது சரியாகவே அமைந்துவிடுகிறது’ என்கிறார் இந்த முப்பத்தாறு வயது இளைஞர்!

அவருடைய ஓவியங்களில் சில்பி மீண்டும் தெரிகிறார்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :