காலத்தை வென்ற கதை சொல்லி!

கி. ராஜநாராயணன்
மாலன்பல வருடங்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில உள்ளடங்கிய கிராமங்களுக்குப் போயிருந்தேன். வறுமை கவ்விய கிராமங்கள். நான் போன ஒரு கிராமத்தில், ஊரிலிருந்த பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், வயோதிகர்களைத் தவிர அத்தனை பேரும் கிராமத்தைவிட்டு வெளி யேறி, பக்கத்து நகரங்களில் வேலை தேடிப் போயிருந்தார்கள். வறுமை காரணமாக இடம் பெயர்வதைக் குறித்துத் தகவல் சேகரித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுபோகும் நோக்கத்தோடுதான் எங்கள் குழுவினர் அங்கு போயிருந்தோம்.

எங்கள் குழுவைப் பார்த்ததும் ஒரு கயிற்றுக்கட்டிலை எடுத்து வந்து போட்டார்கள். மேலே ஒரு கறுப்பு பின்னி கம்பளியை விரித்தார்கள். கை குவித்து வணக்கம் சொன் னார்கள். அவர்களுக்குக் கால்சட்டை, முழுக்கைச் சட்டை அணிந்தவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகள், அல்லது போலீஸ்காரர்கள்.

ஒரு சிறுவன் என்னருகில் பச்சையாக ஒரு தாவரத்தை ஒரு கட்டு கொண்டுவந்து வைத் தான். என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அதைக் கட்டிலின் ஓரமாக வைத்துவிட்டு நான் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். ஓர் ஆட்டுக்குட்டி அந்தக் கட்டை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சிறுவன் வந்து அதைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு மறுபடியும் என் முன் அந்தத் தாவரக் கட்டை எடுத்து வைத்தான்.

“எதற்கு? என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு நான் கேட்டது புரியவில்லையோ அல்லது ‘சர்க் கார்’ ஆசாமிகளிடம் பேசக்கூடாது என்று வாயைக் கட்டி வைத்திருந்தார்களோ என் னவோ, அவன் பேசாமல் நகர்ந்துவிட்டான்.

நான் திருதிருவென்று விழிப்பதைக் கண்ட, ஒரு இளம் பெண் வந்து அந்தச் செடி களில் இருந்த துவரைக்காய்களைப் பிரித்து, அந்த மணிகளை வாயில் போட்டு மென்று காட்டினாள். ஏதோ சாப்பிடக் கொடுத்திருக் கிறார்கள் என்று புரிந்தது.

ஒன்றிரண்டு மணிகளை உதிர்த்து வாயில் போட்டுக் கொண்டேன். ஆனால் ஒருவித பச்சை மணத்தோடு இருந்த அந்த மணிகளை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதை என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்ட இன்னொரு பெண்மணி, அந்தத் தாவரக் கட்டை எடுத்துக்கொண்டு போனார்.

சற்று நேரம் கழித்துப் பார்க்கிறேன். சிறிது தொலைவில் அவர் உலர்ந்த சருகுகளையும் ‘செத்தை’களையும் குவித்துக்கொண்டு அவற்றில் நெருப்பு மூட்டி அந்த மணிகளை வறுத்துக் கொண்டிருந்தார். நான் கிளம்பும் முன் பச்சை வாசனை நீக்கப்பட்டிருந்த மணிகளை ஒரு ‘சொளகி’ல் வைத்து என் னிடம் நீட்டினார். செம்மண்ணோ, சாணியோ கொண்டு மெழுகப்பட்டிருந்த அந்தச் சிறிய முறம் கோலங்கள் வரையப்பட்டு அழகு செய்யப்பட்டிருந்தது. தாவரங்களிலிருந்து கிடைத்த வண்ணங்களைக் கொண்டு ஒரு கிளியும் அந்த முறத்தில் அமர்ந்திருந்தது.

அந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்துவிட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள்! சோற்றுக்கு வழியில் லாமல் ஊரைவிட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள்!

முறத்தில் வந்தமர்ந்திருந்த அந்தப் பச்சைக் கிளி! அந்தக் கோலம்! வாழ்க்கை ஈரலைப் பிய்த்துத் தின்னும் தருணத்தில் கூட கைகள் கலை பேசுமா?

கி.ரா.வின் ‘கதவு’ ஞாபகம் வந்தது. ‘அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனிவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகுபடுத்துகிறார்கள். வரி பாக்கிக்காக அந்தக் கதவு ஓர் நாள் ‘ஜப்தி’ செய்யப்படுகிறது. திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக்குழந்தை குளிர்காற்றைத் தாங்க முடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் ‘கண்டெடுக்கிறார்கள்’. லட்சுமி தன் பாவாடையால் அதில் படர்ந்திருந்த கரையான் களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன’ எனக் கதை முடிகிறது.

வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுத்த கதை. இந்தக் கதையைப் படித்து நெகிழ்ந்த தருணத் தில் வாய்விட்டு விசும்பி அழுதிருக்கிறேன். மறுபடியும் மனதில் அந்தக் கதவு மத்தியப் பிரதேசத்தில் திறந்து மூடியது.

கி.ரா. 1958ல் தனது ‘மாயமானு’டன் தமிழ்ச் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்தபோது, அதை ஒரு பொற்காலம் கடந்து போயிருந்தது. எனினும் அந்தப் பொற்காலத்தின் நிழல்கள் அங்கு படிந்து கிடந்தன. அவர் முன் ஏராளாமான முன்னுதா ரணங்கள் இறைந்து கிடந்தன. புதுமைப் பித்தன், கல்கி என்ற இரண்டு பிரம்மராக்ஷசன் கள் அழுத்தமாகத் தங்கள் தடங்களைப் பதித்துக் கடந்து போயிருந்தார்கள்.

மணிக்கொடிக்காரர்கள் தாங்கிப் பிடித்த ஐரோப்பியப் பாணியில் அமைந்த நவீன வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையே ‘இலக்கியத் தரம்’ வாய்ந்ததாக அப்போதும் விமர்சகர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இந்தியச் சுதந்திர அரசின் முதல் பத்தாண்டுகளில், விடுதலை நாள்களில் பீறிட்டுப் பெருகிய லட்சியங்கள் வற்றிப் போக, இடதுசாரிகளின் சோஷலிச யதார்த்தம் கவனமும் வரவேற்பும் பெறத் தொடங்கி யிருந்தன.

ஆனால், பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்ற, நகர்மயமான, நடுத்தர வர்க்க, பிராமண, இளைஞர்களினால் உந்தப்பட்ட மணிக்கொடியினருக்கு, கிராமங் களின் ஆன்மாவை, அதிலும் ஏழைமக்களின் மன உணர்வுகள், பரிச்சயமாகியிருக்கவில்லை. அதை, அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரை களில் அமர்ந்து, தங்களது பொருளாதாரக் கோணத்தில் மட்டுமே பார்த்து, தங்கள் இஷ்டம் போல் புரிந்துகொண்டு, கதை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பிரசவத்திற்கு மனைவி அவளது தாய் வீடு சென்றிருக்கும் வேளையில், விரக உணர்வில் தவிக்கும் ஒருவன் கீரை விற்க வந்த இளம் பெண்ணை இரவில் உறவுக்கு வருமாறு அழைப்பதைக் கருவாகக் கொண்ட மணிக் கொடி எழுத்தாளரின் கதை ஒன்றை அவரது கதைத் தொகுதியில் பார்க்கலாம். காய்கறி விற்பவளாக இருந்தால், அவள் காசு கொடுத் தால் ‘வந்து’விடுவாளா?

ஏழைகளாக இருந்தால் என்ன, அவர் களுக்கு ஒழுக்க நெறிகள், அற உணர்வுகள் இருக்காதா? கணவனையும் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் காப்பாற்ற நாலைந்து வீடுகளில் உடல் நோக உழைக்கிற பெண்கள் இப்போதும் சென்னை நகரச் சேரிகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னகரம் படைக்கப் புதுமைப்பித்தனுக் குக் கிடைத்த பெண் வேறு மாதிரி. கதையின் சுவாரசியத்திற்காக மனிதர்களைத் திருகுகிற கொடுமை இது.

இன்னொருபுறம், மார்க்சியர்களின் முற் போக்கு இலக்கியம், கட்சியின் Mச்ணடிஞூஞுண்tணி

விற்கு எழுதப்பட்ட உரைகளாகவும் உதாரணங்களாகவும் அமைந்திருந்தன. அவற்றில் நாம் சந்திக்க நேர்ந்த ஏழைகள் வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான மனிதர்களாக மட்டும், ஓர் ஒற்றைப் பரிணாமத்தில் சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் அத்தனை எளிமையானதாக இருந்ததில்லை. காலம் காலமாக அந்த எளிய மக்கள் சுரண்டல்களை யும், வறுமையையும் மீறி, தங்கள் படைப் பூக்கத்தால், நாட்டார் இலக்கியத்தையும், கலையையும் செழுமைப்படுத்தி வந்திருக் கிறார்கள். அவர்கள் அன்றாடம் தங்கள் பேச்சினிடையே வழங்கிவரும் சொலவடை களே அவர்களது கற்பனைத் திறனுக்கும்,

சொல்லாட்சிக்கும் ஒரு சான்று.

இந்த இரண்டு தரப்பின் சாரங்களையும் தன்னுள் வாங்கிக்கொண்டவராக எழுத வருகிறார் கி.ரா. வடிவ அமைதியை வற்புறுத்தும் கட்சி முன்வைக்கும் ஐரோப்பிய வடிவத்தை முற்றிலும் நிராகரித்துவிடாமல், அதை வாய் மொழி வழக்கில் உள்ள, கதை ‘சொல்லும்’ மரபோடு இணக்கமாகப் பிணைத்துத் தனக்கென ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத் துக் கொள்கிறார். அந்த வடிவத்திற்குள், அவர் அறிந்த வாழ்க் கையை, அதைச் சுமக்கும் மனிதர் களை முன்நிறுத்தி அவர்கள் வழியே அதை நமக்கு அளிக் கிறார். அதனால் அவை வெறும் கலைப்படைப்பாகவோ அல்லது பிரசாரமாகவோ இல்லாமல், ஒரு வாழ்க்கைச் சித்திரமாக மலர்கிறது.

கி.ரா.வின் கதை மாந்தர்கள் கடுமை யான சுரண்டலுக்கும் வறுமைக்கும் உள்ளானவர்கள். ஆனாலும் அவர் கதைகளில் புலம்பலைப் பார்க்க முடியாது. ‘கதவு’ ஓர் உதாரணம். அவரது அப்புராணி நாயக்கர் ஓர் உதாரணம். ‘கனிவு’ கெண்டையா ஓர் உதா ரணம். மாயமானின் நாயக்கர் ஓர் உதாரணம்.

உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கையில் எந்தக் குறிப்பும் இல்லா மல், நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகங் களைப் புரட்டினால் இன்னும் நூறு சொல்வேன்.

அவரது மொழியைப் பற்றியும் அவரது உவமைகளைப் பற்றியும் நூறு சொல்லலாம். (பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரையின்மீது பால் பீச்சியது போன்ற குறட்டை ஒலி, வெண்டைப்பிஞ்சின் மேற் புறம் போல மினுமினுக்கும் விடலைப் பருவத்து இளைஞனின் மீசை.) ஆனால் அவரது மனிதர்கள் எனக்கு முக்கியமானவர்கள். அவர்கள் சொல்லும் வாழ்க்கை முக்கிய மானது. இன்று எழுதவருகிறவன் இந்த மனிதர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.

இந்த மனிதர்கள் இருக்கும்வரை கி.ரா. இருப்பார்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :