விசாக நட்சத்திர நாயகன்

வைகாசி விசாகம் (25.05.2021)
தொகுப்பு: சேலம் சுபாஉலகத்தினை நல் வழிப்படுத்தும் நோக்கில், கடவுள் உருவங்களை பல சான்றுகளுடன் அறிமுகப் படுத்தி அருள்கிறது ஆன்மிகம். அப்படி உலகம் உய்யத் தோன்றிய வரே தமிழ்க் கடவுளாக உருவகப்படுத்தி வழிபாடு செய்யப்படுகிற முருகப்-பெருமான். தாமரை போன்று சிவந்த அழகிய திருவடிகளும், பவளம் போன்ற செம்மையான மேனியும், குன்றிமணி போன்ற சிவந்த ஆடையும் அணிந்த சேவல் கொடி-@யானாம் முருகனின் அருளால்தான் இவ்வுலகு நலம் பெற்றுத் திகழ்கிறது என சங்கத்தமிழ் நூலான குறுந்தொகை முருகனின் பெருமையை நவில்கிறது. ஆகவேதான் ஆதிசங்கரரும் தாம் வகுத்த ஷண் மதங்களில் (ஆறு சமய வழிபாடுகள்) கௌமாரம் என முருக வழிபாட்டையும் ஒன்றாக்கி ஓதினார்.

நம் சமகாலத்து மகானான வள்ளலார் அநேக தெய்வங்கள் இருந்தும் முருகப் பெருமானையே அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு மனம் ஒன்றினார். ‘அப்பா என் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும். அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்’ என தீப ஒளியில் முருகனை கொண்டாடினார்.

அனேக புராணக் கதைகள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட புனை கதைகளாக இருந்தாலும், அவற்றை நாம் புறந்தள்ளுவதில்லை. ஆனால், முருகனின் வரலாறு மனித இனத்தின் கோட் பாடுகளான வீரம், பாசம், இல்லறம், மொழிப் பற்று, நட்பு, கருணை போன்ற பலவற்றை உள்ளடக்கி நம்மை நம்ப வைக்கிறது. இவற்றிற்கு சான்றாகத் திகழ்கின்றன முருகனின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலங்களான அறுபடை வீடுகள்.

முருகனின் மேல் அளப்-பரிய பக்தி கொண்டு பலரின் நெஞ்சங்களை தன் ஆன்மிகப் பேச்-சால் கொள்ளைகொண்ட மறைந்த முருகனடியார் கிருபானந்த வாரியார் அவர்கள் கூறியதுபோல், ‘மு’ என்றால் முகுந்தன், ‘ரு’ என்றால் ருத்ரன், ‘கா’ என்றால் பிரம்மாவாக முப்பெரும் தெய்வங்-களின் பிரதிநிதியாக ‘முருகா’ என்றழைப்-பவரின் கவலைகளை தீர்க்கும் தெய்வமாக விளக்குகிறார் முருகப் பெருமான்.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றவர் முருகப் பெருமான். சரி இவருக்கும் விசாகத்துக்கும் என்ன தொடர்பு?

இதோ, தந்தை ஈசனின் நெற்றிக்கண் வழியே வந்த நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்து பொற்றாமரைக் குளத்து தாமரைகளில் புன்னகைக்க, அன்னை உமா தேவி அவர்களை அப்படியே வாரி அணைத்து ஒரே குழந்தையாக்கிய, அதாவது முருகனாக அவதரித்த நன்னாள்தான் வைகாசி விசாகம். உலகத்து மக்களை அசுரர்களிட

மிருந்து காக்க ஈசனின் திருவிளையாடலால் தோன்றியவரே வேல் கொண்டு வினைகளைத் தீர்க்கும் வேலவன். அட... முருகனின் பிறந்த நாள்தான் விசாகம்!

தோற்றமும் திருக்கரங்களின் சிறப்பும் : ‘முருகன் எனும் சொல்லுக்கு அழகன் என்ற பொருளும் உண்டு’ என்று சான்றோர் கூறி உள்ளனர். ‘முருகு’ என்றால் அழகு என்பது பொருள். முகத்தில் பொழியும் கருணையும் உதட்டில் மலரும் மந்தஹாசப் புன்னகையும் நம் உள்ளத்துக் கவலைகளைக் கழித்து நல் வாழ்வைத் தரும் அழகுதான் முருகனின் திருவுருவம்.

வீரமும் விவேகமும் ஞானமும் நிறைந்த ஆறுமுகனுக்கு பன்னிரண்டு திருக்கரங்கள். அவற்றில் பன்னிரு ஆயுதங்களை ஏந்தி அரக்கனை வென்ற தேவர்களின் சேனாபதியாக கம்பீர அழகுடன் திகழ்கிறார் முருகப்பெருமான். பன்னிரண்டு திருக்கரங்களில் இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது. நான்காவது கை ஆபத்தில் உள்ள பக்தரைக் காத்து ரட்சிக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் எதிரியை நோக்கி வேலை சுழற்றுகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு உறவாடுகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்க வைத்து, அருளோசையை எழுப்புகிறது. பதினோராவது கை மழையை அருளி வளம் தருகிறது. பன்னிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது... என்றெல் லாம் முருகனின் பெருமைகளை விவரிக்கின்றன கந்தனைப் பற்றிய வரலாறுகள்.

ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி மந்திரங்கள் கொண்டு உபாசிக்கப்படுவார்கள். அவ்வரிசையில் முருகனின் மந்திரம் ‘ஷடா க்ஷரீ’ எனப்படுகிறது. ஐந்தெழுத்துக்களால் ஆன மந்திரம் பஞ்சாட்சரம் எனவும் ‘சரவண பவ’ எனும் ஆறெழுத்துக்களால் அமைந்த முருகனின் மந்திரம் ‘ஷடாக்ஷரீ’யாகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது.

(இரு இடங்களில், ‘வ’ எனும் எழுத்து வருவதால் முதலில் வரும், ‘வ’, ‘ஹ’ எனும் எழுத்தாக ஒலிக்கப்படுகிறது. அதாவது சரஹணபவ என்று.)

‘ச’ எனும் முதல் எழுத்து ‘ஸ்ரீ’யான மகா லக்ஷ்மியையும், ‘ர’ எனும் எழுத்து கரை கடந்த கல்வியையும், ‘வ’ (ஹ) எனும் எழுத்து போக, மோஷம் எனும் இம்மை மறுமைப் பயன்களை யும், ‘ண’ எனும் எழுத்து சத்ரு சம்ஹாரத்தையும், ‘ப’ எனும் எழுத்து ம்ருத்யு ஜயத்தையும் ‘வ’ எனும் எழுத்து நோயற்ற வாழ்வையும் குறிப்ப தால் இந்த மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபம் செய்பவர்கள்

வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று ஏற்றம் பெறுவர்.

ஆலயங்களில் விசாக வழிபாடுகள் :

முருகனின் முதல் படைவீடான திருப்பரங் குன்றத்தில் அன்றைய தினம், ஷண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து விசாகக் குடிலில் எழுந்தருளுவது சிறப்பு.

திருத்தணியில் உள்ள குமார தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபடுவதால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

பழனியில் இன்று தேரோட்டம், திருக்கல்யாணம் போன்றவை விமரிசையாக நடை பெறும். பக்தர்கள் பலவித காவடிகளை தோள்களில் சுமந்து பாத யாத்திரையாக வந்து முருகனின் அருளைப் பெற்றுச் செல்வார்கள்.

திருச்செந்தூரில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இங்கு விசாகப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஜெயந்திநாதர் தன் துணைவியர் சகிதம் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைவது கண்கொள்ளாக் காட்சி. மேலும், கருவறையில் நீர் நிறைத்து முருகனுக்கு வெப்பம் தணிக்கும் உஷ்ண சாந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் விசாக தினத்தன்று நடைபெறும் ஏக வசந்தம் ஆராதனை யில் ஈசனுக்கு அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்யப்படுகிறது.

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு கொடியேற்றத்துடன் பதினான்கு நாட்கள் நடைபெறும் விசாகப் பெருவிழா பிரசித்தி பெற்றது. முதல் மூன்று நாட்கள் மலை மீது நடக்கும். நான்காம் நாள் இறைவன் நகருக்கு இறங்கி வந்து மலையடிவாரத்தில் நிகழும்.ஒன்பதாம் நாள் திருவிழா விசாகத்தன்று நடைபெறும். அன்று தேரில் இறைவன் நகர்வலம் வருவார்.

பதினான்காம் நாள் நிறைவாக மீண்டும் மலைக் கோயிலுக்குத் திரும்பிச் செல்வதுடன் விழா நிறை வடையும்.

விசாகம் அம்மனுக்கும் உகந்த நாள் என்பதால் இன்று தீமிதி விழாக்கள் அம்மன் ஆலயங்களில் விமரிசையாக நடைபெறும். முருகன், சிவன், அம்பிகை ஆலயங்கள் அனைத்திலும் விசாக விழா சிறப்புடன் நடைபெறும்.

விசாக விரத பலன்கள் :

விசாகன் என்றால் பறவை மீது (மயில்) பயணிப் பவன் என்று அர்த்தம். தன் பக்தர்களின் வேண்டுதல் களை பறந்து வந்து தீர்த்து வைப்பவன் முருகன் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விசாக தினத்தன்று விரதமிருந்து முருகனை பூஜை செய்து வழிபடுவோருக்கு பகை விலகும். துன்பங்கள் நீங்கி, வளங்கள்

பெருகும். புத்திர பாக்கியம் கிட்டும். திருமணத் தடைகள் நீங்கும். அன்று குடை, நீர் மோர், பானகம், செருப்பு, தயிர் சாதம் போன்ற வெப்பம் தணிக்கும் பொருள்களை தானம் செய்வது நிறைந்த பலன்களைத் தரும். வாருங்கள்... விசாக தினத்தன்று முருகனை முழு நம்பிக்கையுடன் வழிபட்டு, நோய் நொடியின்றி வாழ வேண்டுவோம். டூ

விசாக தினத்தின் ஆன்மிகச் சிறப்புகள்!

சிவபெருமானுக்கும் விசாகத்துக் கும் தொடர்புகள் உண்டு. முருகன் அவ தரிக்கக் காரணமான சிவனுக்கும் முக் கிய தினமாகவே விசாகம் அமைகிறது.

திருமழப்பாடி எனும் ஊரில் மழு எனும் ஆயுதம் ஏந்தி சிவபெருமான் நடனம் ஆடிய நாள் வைகாசி விசாகம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற அருளாளரான வள்ளலார் வடலூரில் சத்யஞான சபையை நிறு வியது வைகாசி விசாகத்தன்றுதான்.

மகான் புத்தர் அவதரித்த நாளும் இதுவே. போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாளும், பரிநிர்வாணம் அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்றே. திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் விசாகத்தன்றே.

தேவர்களின் அரசனான இந்திரன் வலிமை இழந்த நேரத்தில் சுவாமி மலை முருகனை வணங்கி வழிபட்டு மீண்டும் வலிமை பெற்றது ஒரு விசாக தினத்தில்தான்.

இதுபோன்ற பல தெய்வீக சிறப்புகளைப் பெற்ற அற்புத நாள்தான் வைகாசி விசாகம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :