தென் கயிலாய தரிசனம்


எஸ்.குமரேசன்
ஓவியம் : படங்கள்: தமிழ்செல்வி



பார்க்கும்போதே பிரமிக்க வைக்கும் மலைத்தொடர். பகல் நேரத்திலேயே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஓசை. மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மனோன்மணி அம்பிகை சமேத வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் மலை ஏறுகின்றனர்.

கோவையிலிருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூண்டி. இங்குதான் இருக்கின்றது, ‘தென்கயிலாயம்’ எனப் பெயர் பெற்ற வெள்ளியங்கிரி மலை. மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள ஏழு மலைகளின் தொகுப்புதான் வெள்ளியங்கிரி மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,800 அடி உயரம். கடினமான மலைப்பாதை. கொங்கு மண்டலத்தைச் சுற்றியுள்ள பகுக்தர்கள் 48 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு தங்கள் ஊரில் இருந்து பாத யாத்திரையாக மலையேறி, வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விரதம் இருந்து வெள்ளியங்கிரி மலை யாத்திரை மேற்கொள்கின்றனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி அடிவாரத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு சுந்தர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் புதிதாக ஒரு அழகிய கற்கோயிலை எழுப்பினர். மலை ஏறி ஈசனை தரிசிக்க முடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரிநாதர் - மனோன்மணி அம்பிகையை வணங்கிச் செல் கின்றனர். பாத யாத்திரை செல்ல விரும்பியும், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வருபவர்களின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

வெள்ளியங்கிரி மலைப் பயணத்தை ஜனவரி யில் தொடங்கி, மே மாதம் வரை மேற்கொள்ள லாம். மற்ற நேரங்களில் கடும் குளிர், பனிப் புயல், தொடர் மழையால் வெள்ளம், வன விலங்குகள் நடமாட்டம் போன்றவற்றால் யாத்திரை மேற்கொள்வது கடினம். ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி தினம் இங்கு

விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையாக இங்கு வருகின்றனர். ஆறு, மலை களைத் தாண்டி ஏழாவது மலையில் சுயம்புவாக அருளும் வெள்ளியங்கிரிநாதரை தரிசிப்பதில் பக்தர்களுக்கு அளவில்லாத ஆனந்தம்.

முதல் மலைக்குப் பெயர் மூங்கில்திட்டு. இம்மலையைச் சுற்றிலும் மூங்கில் காடுகள். ஒருபுறம் மேடு. மறுபுறம் சரிவு!

இரண்டாவது மலை வழுக்குப்பாறை. பாதிக்கும் மேல் வழுக்கும் பாறைகளால் ஆனது. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இம்மலையில் மூங்கில் கம்போடுதான் நடக்க முடியும். கல்லும் முள்ளும் நிறைந்த இந்த மலையை செப்பனிட்டு பாதையை உருவாக்கியவர் ஒட்டர் என்ற சித்தர்.

மூன்றாவது மலை தேக்குத்திட்டு. இதுவும் வழுக்கும் பாறைகளால் ஆனது. ஒரு பாதம் மட்டுமே பதியும் அளவுக்கு படிக்கட்டுகள் போல வெட்டி வைத்துள்ளனர். இருபது வருடங்களுக்கு முன்பு வரை கயிறு கட்டியே இந்த மலையை பக்தர்கள் கடந்து செல்வார்கள். மிகுந்த கவனத்தோடு இம்மலையைக் கடக்க வேண்டும்.

நான்காவது மலை ஈச்சல்திட்டு. இதமான தென்றல் வீசும் மலை இது.

ஐந்தாவது மலை காத்தாதி திட்டு. இங்குள்ள மண் திருநீறு போலவே இருப்பதால் இம்மலை, ‘திருநீற்று மலை’ எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டு மலைகளிலும் படிகள் இல்லை. கரடு முரடான பாதையில் பாறைகளின் மீது ஏறியே நடக்க வேண்டும். ஐந்தாவது மலைப் பாதை ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஒரு அடி தவறினாலும் அதல பாதாளத்தில் விழ வேண்டியதுதான்.

ஆறாவது மலை ஆண்டிசுனை. காஞ்சி மாநதி இங்குதான் உற்பத்தியாகிறது. இந்த நதியே அடிவாரத்தில், ‘நொய்யல்’ எனப்படு கிறது. இம்மலையின் முடிவில் ஆண்டிசுனை உள்ளது. இதில் பக்தர்கள் நீராடுவது ஆனந்த அனுபவத்தைத் தரும்.

ஏழாவது மலை சாமி கிரி. இதுதான் ஈசனின் உறைவிடம். நந்தி வடிவில் உள்ள இம்மலையின் உச்சியில் உள்ளது சிறு திட்டு. அதில் உள்ள குகைக்குள் ஈசன் பஞ்ச லிங்கங்களாகவும் வெள்ளியங்கிரி நாதராகவும் உமையவள் மனோன்மணி அம்மையோடு காட்சி தருகிறார். இறைவனைக் கண்டதும் பக்தர்கள் எழுப்பும், ‘நமசிவாய’ முழக்கம் வெள்ளியங்கிரி மலை முழுவதும் எதிரொலிக்கிறது.

இம்மலை முழுவதும் நெல்லிக்காய், கடுக் காய், தான்றிக்காய், மாசிக்காய், பூச்சகொட்டை, வெண்மருது,வேங்கை, ருத்ராட்சம், யானை யின் தும்பிக்கையைப் போல் சுருண்டு கிடக்கும் யானை வணங்கி, யானைமிரட்டி, கல்ப மூலிகையான ஆரோக்கிய பச்சை, கருடபச்சை, முடவாட்டுக்கல், தட்டுக்கொடி, சிறுகுறிஞ் சான் போன்ற மூலிகைகள் குவிந்து கிடக்கின்றன.

மலையில் பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, ஆண்டி சுனை என மூன்று அபூர்வ நீரூற்றுகள் உள்ளன. சிவபெருமானே தவம் புரிந்த இடம் இதுவென்பதாலும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், தவசிகள் என பலரும் தவ மியற்றும் இடம் என்பதாலும் இங்கு அமைதியும் சாந்தமும் நிலவுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் திரிசூலங்கள் செய்து அர்ப்பணிக்கின்றனர். அந்த சூலங்களே கிரிமலை திட்டில் வேலிகளாக அமைந்துள்ளன.

பக்தர்கள் மலை மேல் ஏறுவதற்குப் பயன் படும் மூங்கில் கம்பை பக்தியோடு கொண்டு சென்று தங்கள் பூஜை அறையில் வைத்து வழி படுகின்றனர். செங்குத்தான மலை, கரடு முரடான பாறைகள், வாய் பிளந்து நிற்கும் அதல பாதாளம், யானை, செந்நாய் போன்ற வனவிலங்குகள், மலை மேல் செல்லச் செல்ல வாட்டும் குளிர் பனி போன்ற சிரமங்களை தாங்கித்தான் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலையேறி உச்சியில் உறைந்திருக்கும் ஈசனை தரிசிக்க முடியும்.

கொரோனா நோய்த் தொற் றின் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆண்டும் கொரோனோ பரவல் காரணமாக மே மாதத்தில் மலைக்குச் செல்பவர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

எட்டாத உயரத்தில் இருந்தாலும் எளியோருக்காக இரங்கி வந்தருளும் வெள்ளி யங்கிரிநாதரின் அருளால் நிலைமை விரைவில் சீராகி, பக்தர்கள் மன நிறைவோடு வழி பட அந்த ஈசன்தான் அருள்புரிய வேண்டும்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :