குயிலு


சிறுகதை : சுசீலா அரவிந்தன்
ஓவியம் : ஸ்யாம்பத்து நாட்கள் கல்லூரி விடுமுறை. அப்பா அம்மாவுடன் சொந்த ஊருக்குப் பேருந்து பயணம். சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? காலையிலிருந்தே பரபரப்பு. சீக்கிரமா ஊருக்குப் போய்ச் சேரணும். போன வுடன் வயலுக்குப் போகணும். கால்கள் நனைய நனைய குளத்துமேட்ல உட்கார்ந்து இருக்கணும். உச்சிவேளையில ஆல விழுதுகளுக்கு மத்தியில இருக்கிற எல்லசாமி கோயில எட்டிப் பாத்துட்டு வந்து ராவெல்லாம் பயப் படணும். அம்மாச்சி கொடுக்கிற கருப்பட்டி காப்பியை ரசிச்சி ரசிச்சிக் குடிக்கணும். இப்படிப் பல கனவுகளுடன் பயணம்.

இதோ இன்னும் இரண்டே ஊர்கள்தான். கொளத்தூர் வந்துவிடும். சந்தோஷத்துடன் ஜன்னலை ஒட்டி அமர்ந்துகொண்டேன். பஸ் கலிங்கப்பட்டியில் நின்றது. சாலை ஓரத்தில் ஒரு சிறு பெண் வயது பத்து பன்னிரெண்டு இருக் கும். துறுதுறுப் பார்வையுடன் நன்கு புஷ்டியாய். ‘ரைட் ரைட்...’ பஸ்சை கை காட்டிய படியே கத்தியது.

எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். கள்ள மில்லாத ஓர் சிரிப்பு. மீண்டும் ரைட் ரைட்... ஓடிவந்து ஒவ்வொரு ஜன்னலாகப் பார்த்துக் கொண்டே வருகிறது. நான் அமர்ந்து இருந்த ஜன்னல் அருகே வந்ததும் ‘அக்கா’ என அழைத்து தலையைச் சாய்த்து ஓர் சிரிப்பு.

“அம்மா... அம்மா அங்க பாரேன். யாரோ ஒரு பொண்ணு என்னைப் பார்த்து சிரிக்குது” என்கிறேன்.

“பைத்தியம் போல இருக்கு. நீ பேசாம இந்தப் பக்கம் திரும்பிக்க.”

பஸ் கிளம்பியது. மெதுவாகத் திரும்பி பார்க்கிறேன். டாட்டா சொல்லியபடியே நின்றிருக்கிறது அப்பெண். ஐயோ பாவம். அதுக்கு அப்பா அம்மா இருக்காங்களோ என்னவோ. பைத்தியம் மாதிரி இருந்தாலும், அந்த முகத்தில்தான் என்ன ஒரு களை. அம்மாச்சிக்கிட்ட போனவுடன் முதல் காரியமா அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டேன்.

“கொளத்தூர் எல்லாம் இறங்கு...”

கைப்பையும் பெட்டியுமாக ஏகப்பட்ட சாமான்களுடன் இறங்கினோம்; நீண்ட பிரயாணக் களைப்பையும் சேர்த்துக் கொண்டு. பஸ் ஸ்டாண்டில் வில் வண்டி தயாராய்க் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டு கிராமத்து அழகை ரசித்தபடியே வீட்டை நோக்கிப் பயணித்தோம்.

அந்த அமைதியான அழகான சூழலிலும் கலிங்கப்பட்டியில் பார்த்த அப்பெண்ணின் நினைவு நெருடலாய் மனதினுள். வருவோர் போவோரின் வணக்கங்களை வாங்கியபடி, அப்பா, அம்மாவுடன் பேசிக்கொண்டே வந்தார்.

“வாங்க மாப்பிள்ளை... வாடி கண்ணு...” அணைத்துக்கொண்டார் அம்மாச்சி. களைப்பு நீங்க வெந்நீர்க் குளியல். காலை டிபன். அதன் பின், பண்ணை ஆட்களுக்கு வேலை பிரிப்பது அவர்களுக்கான சாப்பாடு என பரபரப்பான சூழ்நிலையில் அம்மாச்சியை பார்க்கவே முடியவில்லை.

மதியம் மணி மூன்று இருக்கும். கயிற்றுக் கட்டில். வேப்ப மரக்காற்று. அருகில் இருந்த தென்னை மரத்தில் இரண்டு அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடுவதைப் பார்த்துக் கொண் டிருந்தேன்.

“நல்லா இருக்கியா தாயி? படிப்பெல்லாம் எப்ப முடியுது?” அன்பாய் தலையை வருடிய படி அம்மாச்சி.

“இன்னும் மூணு வருஷம் இருக்கு அம்மாச்சி. சீக்கிரமா முடிச்சிட்டு இந்த ஊருக்கே டாக்டரா வந்துடுவேன்.”

“ஆமாண்டி கண்ணு. இங்க இருக்குற சனத்துக்கு ஒரு அவசர ஆத்திரமுன்னாலும் டவுனுக்குத்தான் போகணும்.”

அம்மாச்சியிடம் கேட்க நேரம் பார்த்திருந்த அந்தக் கேள்வியை அதுதான் அந்த மனவளர்ச்சி குன்றியப் பெண்ணைப் பற்றிக் கேட்டேன்.

“ம்ம்... அதுவா கண்ணு. அது அந்த ஊர்ப் பொண்ணுதானாம். பஸ் ஸ்டாண்டிலேயே திரிஞ்சுக்கிட்டு இருப்பாளாம்.”

“பஸ் வந்து நின்னா சிரிக்கிறதும்... கண்டக்டர் கணக்கா இவ ‘ரைட் ரைட்’ னு கத்தறதும் பாவமாத்தான் இருக்கு. பேரு கூட ஏதோ குயிலுன்னு சொன்னாங்க.”

“அவ ஆத்தா, அவள வீட்டில கட்டிக் கூட போட்டுப் பாத்துட்டாளாம். ஒரே ரகளையாம். அதான் அப்படியே விட்டுட்டா. பகலெல்லாம் இப்படி வெளிக்காட்டுல சுத்திட்டு ராத்திரி யானா வீட்டுக்குப் போய் படுத்துக்குவாளாம். பஸ்ல வர்றவங்க போறவங்க யாராவது பார்த்து இரக்கப்பட்டு அஞ்சோ பத்தோ கொடுத்தா வாங்கிக்கறா. யார் செஞ்ச பாவமோ போ” சலித்துக் கொண்டாள் அம்மாச்சி.

விடுமுறை முடிந்து ஊர் செல்லும் நாளும் வந்தது. அதே வில் வண்டி பயணம். பஸ் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவிடம் பத்து ரூபாய் தாளை வாங்கித் தயாராக வைத்துக் கொண்டேன் குயிலுக்குக் கொடுக்க.

பஸ் கலிங்கப்பட்டியில் நின்றதுதான் தாமதம். மூச்சிரைக்க ஓடி வந்தாள் குயிலு.

‘ரைட் ரைட்’ கைதூக்கி கத்தியவளை அழைத்தேன். பத்து ரூபாய் தாளை நீட்டினேன்.

‘படக்’ என பிடுங்கிக் கொண்டாள். ஒரு சிரிப்பை பதிலுக்குத் தந்து விட்டு. இப்போது ‘ரைட் ரைட்’ கொஞ்சம் கூடுதல் சத்தமாய்...

இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இந்த விடுமுறைக்கு மீண்டும் அம்மாச்சி வீடு செல்ல ஆயத்தமானோம்.வழக்கம் போல் பஸ் கலிங்கப்பட்டி யில் நின்றதும் கண்களால் பஸ் ஸ்டாண்டை துழாவி னேன்.

அதோ தூரத்தில்... யாரது குயிலியா? என் கண்களையே என்னால் நம்ப முடிய வில்லை. இடுப்பில் பிளாஸ்டிக் குடம் தளும்பத் தளும்பத் தண்ணீர் எடுத்துக் கொண்டு

செல்வது அவளேதான். எண்ணெய் வைத்து வழித்து சீவிய தலை. பாவாடை தாவணி அணிந்து பாங்காகச் சென்று கொண் டிருந்தாள்.

அம்மாச்சி வீடு சென்றதுதான் தாமதம்... குயிலியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டேன்.

“ஓ... அதுவா? அவ இப்போ ஒரு டீச்சரோட பாதுகாப்புல இருக்கா. அந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க போல இருக்கு. அவள தன்னோட வீட்டுல வெச்சுக்கிட்டு மூணு வேளை சாப் பாடும் போட்டு, நல்ல பழக்கவழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. போட்டுக்கப் புதுத் துணி அப்படி இப்படின்னு. இப்ப எல்லாம் அவ பஸ் ஸ்டாண்ட் பக்கம் கூட அவ்வளவா வர்றதில்லை யாம். ஏதோ சில சமயங்கள்ல பஸ் போறதையும் வர்றதையும் அமைதியாக நின்று பார்ப்பா. யாரு காசு கொடுத்தாலும் வாங்குறது இல்லை யாம்.”

எனக்கு மனம் ஆறுதலாய் இருந்தது. ஆங்காங்கே நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லீவு முடிந்து மீண்டும் ஊர் திரும்பும் போது கலிங்கப்பட்டியில் அனிச்சையாகக் கண்கள் குயிலுவைத் தேடின.

அதோ பஸ் ஸ்டாண்ட் ஓரமாய் உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறாளே. சைகையால் அருகில் அழைத் தேன். ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினேன்.

“ம்ஹீம். வேண்டாங்க. எங்க டீச்சர் திட்டுவாங்க. யார்கிட்டயும் சும்மா காசு வாங்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க...” வெகுளியான அதே சிரிப்பு.

மீண்டும் ஓடிச்சென்று மரத்தடியில் நின்று கொண் டாள்.

கண்மூடி கண் திறப்பதற்குள் ஐந்து வருடங் கள் ஓடிவிட்டன. அயல்நாட்டில் இரண்டு வருட மேற்படிப்பு எனப் பரபரப்பு வாழ்க்கை. முடிந்துவிட்டது. மீண்டும் இந்திய மண்... சொந்த ஊர்...

“டிரைவர் வண்டியை நிறுத்துப்பா...”

புரியாமல் சடன் பிரேக் போட்டு நின்றது கார். அது கலிங்கப்பட்டி. எங்காவது குயிலு தென்படுகிறாளா... கண்களால் துழாவினேன். ம்ஹூம். காணவில்லை.

தூரத்தில் பஸ் வரும் ஓசை. ‘இறங்கி யாரிடமாவது விசாரிக்கலாமா?’ என யோசித்துக் கொண்டிருந்த வேளையில்...

‘ரைட் ரைட்...’ மீண்டும் அதே குரல். அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன்.

குயிலுவேதான். அடையாளமே தெரியாமல்... இளைத்துக் கருத்துப் போய். அகன்ற அக்கருவிழிகள் சுருங்கி...

‘ஓ... என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு...?!’

அருகே டீக்கடையில் நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்து விசாரித்தேன்.

“அதுவாம்மா... அது இந்த ஊரு பொண்ணுதான். பேரு குயிலு. கொஞ்சம் புத்தி பத்தாது. கடவுள் அதுக்குப் போய் அழகான உடம்பைக் கொடுத்துட்டானேம்மா. புத்தி

சுவாதீனமில்லாத பொண்ணா இருக்கேனு கூட யோசிக்காம நாலைஞ்சு நாயிங்க அவள சீரழிச்சிடுச்சிங்க. அவ ஆத்தா ஒருத்திதான் இவளுக்காவ உசுரைக் கைல புடிச்சிக்கிட்டு இருக்கா. அன்னாடம் வேலைக்குப் போனாத்தான் கஞ்சி. ரெண்டு தடவ கருத்தரிச்சிப் போச்சாம். பெத்தவ என்ன செய்வா? மனசக் கல்லாக்கிக்கிட்டு கூட்டிட்டுப் போயி கருத்தடை ஆபரேஷன் செஞ்சிட்டு வந்துட்டான்னு சொல்றாங்க.”

ஆயிரம் தேள் கொட்டியது போன்று இருந்தது எனக்கு.

குயிலுவை அருகில் அழைத்தேன். நூறு ரூபாய் தாளை உருவிக் கொடுத்தேன். ‘படக்’ என வாங்கிக் கொண்டாள். தலையைச் சாய்த்து அதே சிரிப்பு.

“டிரைவர் வண்டிய எடுங்க” பின் சீட்டில் தளர்வாய் அமர்ந்தேன். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :