அம்மாவும் அக்கா குருவியும்..


சிறுகதை : அமுதா கிருபாநிதி
ஓவியம் : லலிதா“கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே...” என்று டிரான்சிஸ்டர் ரேடியோ லேசாகப் பாடிக்கொண்டிருந்ததை யாரும் கேட்கவில்லை. விடியற்காலையிலிருந்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு மதிய உணவை இரண்டரைக்குச் சாப்பிட்டுவிட்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டே அசந்துவிட்டாள் அம்மா. வெயில் மண்டையைப் பிளந் தாலும் விடுமுறை நாள் என்பதால் தோப்புக்குச் சென்று நன்றாக ஆடிவிட்டு வந்து குளித்து உணவருந்தி தூங்கிக்கொண்டு இருந்தார்கள் பாரதியும், அவள் தம்பி சேகரும், தங்கை யமுனாவும். சிறிது நேரம் கழித்து சைக்கிளில் வந்த தந்தை “இதென்ன ரேடியோவை அமர்த்தாமல் எல்லாரும் தூங்குகிறீர்கள்” என்று சொல்லி விட்டு நிலைமையைப் புரிந்து கொண்டார். பானையில் இருந்த மோரை எடுத்து நிதானமாகக் குடித்துவிட்டு ஒரு பாட்டு கேட்டபின் ரேடியோவை அமர்த்தி ஈசீ சேரில் சாய்ந்து அவரும் அசந்துவிட்டார். சூரியன் மனமிரங்கி வெய்யில் தணிந்த வேளையில் அந்த சாரலான தென்றல் வீட்டில் நுழைந்து அவர்களைத் தாலாட்டியது.

சுமார் ஐந்து மணிக்கு ஒன்றன்பின் ஒருவராக அனைவரும் எழுந்தனர். அம்மா காப்பி போட்டுக் கொண்டிருந்தாள். அப்பா பேசினார்: “நாளை ஆற்றில் தண்ணி வரப்போகுதாம்.”

அவ்வளவுதான்... ‘ஹேய்’ என்று துள்ளிக் குதித்தார்கள் குழந்தைகள்.

“ஆமா, இதைத்தான் அக்கா குருவி நாலு நாலாய்க் கூவிக் கூவிச் சொல்லிட்டிருக்கு” என்று தனக்கு முன்னரே தெரியும் என்று

சொல்லிக் காட்டி புன்னகைத்தாள் அம்மா.

“நாளைக்கே போகலாமா” என்ற யமுனா வின் ஏங்கலுக்கு, ‘நாளை போகலாம்... ஆனால் வேடிக்கைதான் பார்க்க முடியும். நாலைந்து நாட்களுக்கு தண்ணி சுத்தமாக இருக்காது” - பாரதி பதிலளித்தாள்.

“அது என்னம்மா அக்கா குருவி?” சேகர் கேட்டான்.

“ஒருமுறை ரெண்டு குருவிகள் இருந்ததாம். அவை ஆற்றில் விளையாடும்போது தண்ணி திடீர்னு வந்து ஒன்றை அடித்துச் சென்றதாம். அன்னி@ல யிருந்து இன்னொரு குருவி அக்கா, அக்கான்னு கூப்பிட்டுக் கொண்டே இருக்குமாம்” என்று அம்மா சொன்னவு டன், அதைக்கேட்ட குழந்தை கள் வாடிப் போனார்கள்.

“சரி, அந்த ரேடியோவை போடுங்க” என்று அம்மா திசை திருப்ப, ரேடியோவை போட்டார்கள். அதில் தற்செயலாக, ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை...’ என்ற

சினிமா பாட்டு பாடியது. பாடியதைக் கேட்ட வுடன் அவர்களுக்கு அழுகையே வந்தது. நிலைமையை மாற்ற, “டே, வாங்க களத்துல நொண்டி அடிப்போம்” என்று பாரதி அவர் களை அழைத்துச் சென்றாள். விளையாடும் போதே ஒரு மரத்தில் குருவிகள் நிறைய சுற்றித்திரிவதைப் பார்த்தார்கள். மனதுக்கு இதமாக இருந்தது. யமுனாவின் முகத்தில் புன்னகை தோன்றவே, பாரதி பெருமூச்சு விட்டாள்.

யமுனா என்னவோ அக்கா குருவியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். அம்மா ஏதோ புரிந்துகொண்டவள் போல, “குருவியை மறக்கவில்லையா?” என்றாள்.

“அம்மா, வெளியே சில குருவிகளைப் பார்த்தேன். நம்முடைய வீட்டிலும் வளர்க்கலாமா?”

“அதற்கென்ன செய்வோம்” என்ற அம்மாவைச் செல்லமாகக் கிள்ளினாள் யமுனா.

அடுத்த நாள், அம்மாவை தவிர எல்லோரும் ஆற்றுக்குக் கிளம்பினார்கள். பாரதியும் சேகரும் விரைவாக நடந்து செல்ல, யமுனா அப்பாவுடன் சைக்கிளில் வந்தாள். பாலத்துக்கு அருகே ஒரே கூட்டம். மாதக்கணக்காய் வறண்டு போய் பாலம் பாலமாக வெடித்து இருந்த கால்வாயில் தண்ணீர் அடித்துக்கொண்டு வந்ததைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தண்ணீரில் இருந்து அழுக்கு நுரை நுரையாக அடித்துக்கொண்டு காற்றில் பஞ்சுமிட்டாய் போல பறந்து சென்றதைக் கண்டு சிறுவர்கள் ஆரவாரமிட்டார்கள்.

ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கோயில்களில் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இரண்டாவது மூன்றாவது நாட்களிலும் வேடிக்கை பார்க்கக் கூட்டம் கிளம்பியது,

சினிமாவுக்குச் செல்வதைப் போல. அம்மாவுக் கும் இது சந்தோஷமாக இருந்தது. பிள்ளைகளை ஆற்றங்கரையில் குளிக்க வைத்து துணிகளை யும் துவைத்து எடுத்து வந்தார்கள்.

வீடு திரும்பியவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வீட்டின் ஓரச்சுவற்றுக்கும் ஓடு களைத் தாங்கியிருந்த மரச் சட்டங்களுக்கு மிடையே அழகாகத் தொங்கிக் கொண்டிருந் தது ஒரு குருவி வீடு. “அம்மா, சூப்பர்மா... எப்படிச் செய்தாய்?” என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டாள் யமுனா.

அங்கே சில தானியங்களைப் போட்டுவர, இரண்டே நாட்களில் இரண்டு குருவிகள் வந்து தங்கின. அவற்றின் சந்தோஷமான ஒலிகளை கேட்க இனிமையாக இருந்தது. ஒன்று அக்கா, மற்றொன்று தங்கை என்று மனதில் எண்ணிக் கொண்டாள் யமுனா.

அடுத்த நாள் குளிக்கச் செல்ல வேண்டும். “ஏங்க, பிள்ளைகளுக்குத் தண்ணீல கண்டம் ஏதாவது இருக்குமான்னு பாருங்க” என்று அம்மா வினவ, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ பயப்பட வேண்டாம். நான் துணைக்கு வருகிறேன்” என்றார் அப்பா.

வெயில் காலமாக இருந்ததால் சீக்கிர மாகவே கிளம்பி ஆற்றங்கரைக்குச் சென்றார் கள். வயல்வெளிகளில் நுழைந்து நடந்து சென்றது மனதுக்கு இனிமையாக இருந்தது. தண்ணீர் சுத்தமாக இருந்தது. அன்று குளித்த குளியல் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

துள்ளி குளியல் போட்ட சிறுவர்கள், தள்ளித் தள்ளிக் குளித்த பெண்கள், தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்த இளசுகள், கால்களை வருடி

சுத்தம் செய்யும் மீன்கள், சிறு அலைகளாக வந்து உடம்பில் அலசிய தண்ணீரின் ஓசைகள் என அன்று பல அனுபவங்கள் மனதில் படிந்தன.

தண்ணீருக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது காவிரி ஆற்றுத் தண்ணீர்.

விடுமுறைக்குப் பின் பள்ளி துவங்கியது. மாணவர்கள் எல்லோரும் சுத்தமாக வந்தி ருந்தனர். ‘போன வருடம் குறைவாக மார்க்குகள் எடுத்திருந்த பாடப்பிரிவுகளில் அதிக மார்க்குகள் எடுக்க வேண்டும்’ என்று நினைத்திருந்தார்கள் இம்மூவரும். தண்ணீர் கொடுத்த புத்துணர்ச்சி அவர்களை சிறப்பாகப் படிக்க வைத்தது. சற்று கடினமாக இருந்த தமிழ் வார்த்தைகளும் இப்போது இலகுவாகப் புரிந்தது.

மாதப் பரீட்சை நெருங்கவே, யமுனாவைப் பற்றி கவலைப்பட்டாள் பாரதி. முக்கியமாக தமிழ் இரண்டாம் பகுதியில் சிறிது பலவீனமாக இருந்தது பற்றி. ஆனால், இம்முறை அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி ஆறுதல் தருவ தாக இருந்தது.

ஆனால், யமுனாவுக்கு மனத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழ் இரண்டாவது தாள் பரீட்சைக்குச் சென்று வீடு திரும்பிய யமுனாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. மிகவும் நன்றாக எழுதியதாக அவள் சொன்னாள்.

அந்த வாரக் கடைசியில் மார்க்குகள் வெளி வந்தன. யமுனா வகுப்பில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள். தமிழ் இரண்டாம் பேப்பரில் தொண்ணூறு மார்க்குகள் எடுத்து அசத்தியிருந்தாள். “சரி, விடைத்தாளைக் கொடு” என்று பாரதி கேட்டு படித்துப் பார்த் தாள். பெற்றோரிடமும் படித்துக் காண்பித்தாள். அம்மாவினால் கண்ணீரை அடக்க முடிய வில்லை. தான் வெகுவாகப் படிக்காவிட்டாலும் பிள்ளைகள் நன்கு படிப்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. “அம்மா, எல்லாமே உன்னால்தான்” யமுனா அம்மாவின் கையைப் பற்றினாள்.

கதை, கட்டுரை இரண்டிலுமே அக்கா குருவியும், காவிரி ஆற்றுத் தண்ணீரும் வளமாக இடம்பெற்றிருந்தன. அவளுடைய அனுப வங்கள் அவளை ஒரு கதாசிரியையாக மாற்றி யிருந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :