தடைகள் தாண்டி லட்சியங்கள் தேடி.. சுமைகள் தாங்கி சிகரங்கள் நோக்கி...


தொகுப்பு : ராஜி ரகுநாதன்ஒரு கிராமப் பெண்மணியின் உயர்ந்த இலட்சியத்தைப் பாருங்கள்! ஜீவ நதிகளின் தூய்மையையே லட்சியமாகக் கொண்டு தொண்டு புரிகிறார் லக்ஷ்மி துர்கா. கோதாவரி, கிருஷ்ணா, யமுனை, காவிரி ஆகிய நதிகளோடு கூட இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளை சுத்தம் செய்வதற்கு எப் போதும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அதற்காக அவர் ஒரு சுற்றுச்சூழல்வாதியோ என்று எண்ணினால் அது தவறு.

ஏழாம் வகுப்பு படித்து மாவு மில் நடத்தும் ஒரு சாமானிய பெண்மணி. மறுபுறம் அனாதைகளுக்கும் துணையாக இயங்கி வரு கிறார் இவர். இவருடைய லட்சியங்களின் பின்னால் இருக்கும் கதையை அறிந்து கொள்வோம்.

இவர் கூறுகிறார், “எங்களுடையது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பைடிபர்ரு என்ற கிராமம். என் தந்தை சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். தாயார் இல்லத்தரசி. மூன்று குழந்தைகளில் நான் மூத்தவள். ஏழாம் வகுப்பு வரை படித்தேன். என் பதினைந்தாம் வயதில் எங்கள் உறவினர் மகனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். மூன்று குழந்தைகள் பிறந்த பின் என் கணவருக்கும் எனக்கும் மனஸ்தாபம் வந்ததால் நான் குழந்தை களையும் என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு ஹைதராபாத் வந்துவிட்டேன். குடும்பத்தை நடத்துவதற்காக மாவு மில்லை நடத்தி வருகிறேன். போதும் போதாத வருமானத்தோடு மிகவும் கஷ்டப்பட்டேன். என் தந்தையும் ஒரு சிறு கடை நடத்தி வந்தார். அந்தச் சூழ்நிலையில் குழந்தைகளை

வளர்ந்து பெரியவர்களாக்கி அனைவருக்கும் திருமணமும் செய்து கொடுத்து விட்டேன். அனைத்தும் நன்றாகவே இருக்கின்றது என்று எண்ணிய சமயத்தில் என் பெரிய மகன் இறந்து விட்டான். அவனுடைய மரணம் என்னை மிகவும் கலக்கி விட்டது.

அந்த நேரத்தில் குழந்தை களிடமிருந்து தொலைவாக தனிமையில் அநாதைகளாக வேதனைப்படும் பெற் றோர் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். அப் படிப்பட்டவர்களை அர வணைக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கு உள்ள வசதியைக் கொண்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் எல்லையில்

காஞ்சனவன சிங்காரம் என்ற கிராமத்தில் ஒரு முதியோர் இல்லத்தை தொடங்கினேன். முதலில் 30 பேருக்கு அங்கு அடைக்கலம் அளித்தேன். என்ஜீஓக்கள் அளிக்கும் உதவி தொகையால் அந்த ஆசிரமம் எந்தக் குறையுமின்றி நடந்து வருகிறது.

அதன் பின் என் பார்வை எதிர்பாராமல் நதிக்கரைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளின் மீது விழுந்தது. சிறு வயதிலிருந்தே கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நதிகள் குப்பைகளால் வீணாவது மனதுக்குத் துன்பத்தை அளித்தது. என் சிறு வயதில் எங்கள் கிராமத்தில் இருக்கும் கால்வாய் நீரை அப்படியே குடித்து வளர்ந் தோம். கால்வாய் நீரானாலும் சிறிய ஜலதோஷம் கூட எங்களுக்கு வந்ததில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது. நல்ல குடிதண்ணீர் கூட காசு கொடுத்து வாங்குகிறோம். என்ன காரணம் என்றால் நதி நீரில் குப்பைகள் கலந்து மாசுபடுவதாலேயே.

நதிகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். அதே சமயத்தில் எங்கள் முதியோர் இல்லத்தில் ஒருவர் இது குறித்து என்னிடம் பேசினார். அவர் அளித்த உற்சாகத்தால் ‘ஜீவநதி பௌண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். 2018ல் “புண்ணிய நதிகள் நம் வாழ்வின் ஆதாரம்... அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் மீது உள்ளது”

என்று எல்லோரிடமும் புரிதல் ஏற்படுத்த ஆரம்பித்தேன்.

முதலில் தெலங்கானாவில் சரஸ்வதி தேவி கோயில் கொண்டிருக்கும் பாசரா நகரத்தில் கோதாவரி நதி தீரத்தில் வந்து குவிந்த பிளாஸ்டிக் குப்பைகளை நாங்கள் நீக்கினோம். எனக்குத் துணையாக ஒன் பது பேர் தன்னார்வ தொண் டர்கள் உதவினர்கள். அதன் பிறகு விஜயவாடாவில் கிருஷ்ணா நதி தீரத்தை சுத்தப்படுத்தினோம்.

அந்தப் பணி முடிந்தபின் நதி நீர் சுத்த மாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அந்தந்த இடங்களில் உள்ள முக்கியஸ் தர்களை அழைத்து கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்தோம்.

இதுவரை கோதாவரி, கிருஷ்ணா, யமுனை, காவிரி, பிராணஹிதா, துங்கபத்ரா என்று ஆறு நதிக்கரைகளில் உள்ள குப்பைகளை நீக்கி இருக்கிறோம்.

உள்ளூர் மக்களும் என்ஜீஓக்களும் தன்னார்வலர்களாக மாறி இந்தச் சேவையில் பங்கு பெறுகிறார்கள். தற்போது ஜீவநதி பௌண்டேஷனுக்காக சுமார் நாற்பது பேர் தொண்டாற்றுகிறார்கள்.

அதோடுகூட கோயில்களையும் சுத்தப்படுத்துகிறோம். இந்தியாவில் புராதன கோயில்கள் பல உள்ளன. அவற்றைப் பாதுகாப்பது எத்தனை முக்கியமோ அவற்றின் சுத்தம் சுகாதாரம் பேணுவது கூட அதே அளவு முக்கியம். அந்தத் திசையில் ஆலோசித்து கர்னூல் அருகிலுள்ள அலம்பூர் ஜோகுளாம்பா சக்தி பீடத்தை சுத்தம் செய்தோம். அதோடு கூட சிவராத்திரி, கார்த்திகை மாதம் போன்ற பண்டிகைகளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபடும்போது புராதன கோயில்களைக் குப்பையாக்கி விடுகிறார்கள். அவற்றை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் இறங்கி பணி செய்து வருகிறோம்” என்கிறார் லட்சுமி துர்கா.

லட்சுமி துர்கா கல்லூரியில் படிக்கவில்லை. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசவில்லை. நவ நாகரீகமாகத் தென்படவில்லை. ஆனால், மிக உயர்ந்த லட்சியங்களோடு முன்னேறுகிறார். இவர் வெறும் ஏழாம் வகுப்பு மட்டுமே படித்த கிராமத்துப் பெண்மணி. ஆனால், உயர்ந்த லட்சியங்கள், சமுதாய முன்னேற்றம், நாட்டு நலன் இவற்றை நோக்கமாகக் கொண்டு இவர் செய்து வரும் அரிய சேவைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பெரிய பெரிய நிறுவனங்கள் கூட இவரோடு சேர்ந்து பணிபுரிய முன்வருகின்றனர்.

எங்கே புஷ்கரம் நடந்தாலும் அங்கே இவருடைய குழு சென்றுவிடுகிறது. பொதுமக்களிடம் முதலில் பெரும்பாலும் இவர்கள் எடுத்துக் கூறுவது, ‘பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாதீர்கள்... காகிதத்தில் மஞ்சள் குங்குமம் கட்டி எடுத்து வாருங்கள்... நதிகளில் நீங்கள் அதை பூசிக்கொண்ட பிறகு பேப்பரைத் தூக்கி எறிந்தாலும் அவை மீன்களுக்கு உணவாகின்றன அல்லது மக்கி விடுகின்றன. மக்காத பிளாஸ்டிக் பொருட்களை விற்காதீர்கள்’ என்று அங்கு கடைகளில் விற்கும் வியாபாரிகளிடமும் சென்று சொல்கிறோம். புண்ணிய நதிகளில் புஷ்கரம் நடக்கும்போது பத்து நாட்கள் ஒவ்வொரு குளியல் துறையிலும் பத்து பத்து பேர்களாக நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அங்கு கிடக்கும் குப்பைகளை பொறுக்கி ஒரு பெரிய பையில் போடுவதுமே முதல் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம்.

அதேபோல் வாரங்கல் மேடாரம் ஜாத்திரையின்போது அங்கு போய் நாங்கள் சுத்தம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பணிபுரிந்தோம். ஜம்பன்னாவாகு என்ற சின்னஞ்சிறு நதியில் மக்கள் குளிக்கும்போது கூட இவற்றை எல்லாம் எடுத்துக் கூறி ஜீவநதி பவுண்டேஷன் என்று எழுதியுள்ள துணிப்பைகளை எடுத்துச் சென்று அவற்றைக் கொடுத்து அவர்களிடம் பிளாஸ்டிக்கில் வாங்காதீர்கள்... இவற்றில் வாங்குங்கள். பிளாஸ்டிக்கை எங்களிடம் உள்ள குப்பைப் பையில் போடுங்கள் என்று பொறுமையாக எடுத்துக் கூறுகிறோம்.

எங்களுக்குத் தெரியும் இதெல்லாம் ஒரே நாளில் மாறிவிடாது என்று. ஆனால், கொஞ்சம் கொஞ்ச மாகத்தான் பணிபுரிந்து மக் களையும் வியாபாரிகளை யும் சமுதாய நலனோடு நடந்து கொள்ளும்படி எச்சரிக்க வேண்டியிருக் கிறது.

இதுவரை கிருஷ்ணா கோதாவரி நதிகளையும் ஸ்ரீசைலம் ராஜமுந்திரி பாஸரா போன்ற இடங் களில் நடந்த புஷ்கரங் களிலும் சென்று பணியாற்றி யுள்ளோம். யமுனை நதிக்கரையில் டெல்லியில் சென்று பணிபுரிந்தோம். அங்கு யாரும் குளிக்கவே செய்யவில்லை. வெறும் பூஜை செய்வதையும் அங்கு பிளாஸ்டிக் எண்ணெய் கவர்களைத் தூக்கி எறிவதுமாக நடந்து கொண்டார்கள்.

அந்த நதியின் அசுத்தத்தையும் அந்த மக்கள் மாசுபடுத்துவதையும் பார்க்கும்போது நம் தென்னிந்திய நதிகள் எவ்வளவோ மேல் என்று எங்களுக்குத் தோன்றியது. இதுவரை நான்கு நதிகளின் புஷ்கரங்களில் நாங்கள் பணியாற்றி விட்டோம். இன்னும் எட்டு நதிகளின் புஷ்கரங் களில் நாங்கள் சென்று குப்பை நீக்கும் பணி புரிந்தால் எல்லா புஷ்கரங்களிலும் ஒரு ரவுண்டு சுத்தம் செய்த திருப்தி எங்களுக்கு ஏற்படும். அந்தத் திசையில் நாங்கள் நகர்ந்து வருகிறோம். சிறிது சிறிதாகத்தான் மக்களிடம் பொறுப்புணர்ச்சியும் விழிப்புணர்வும் ஏற்ப டுத்த முடியும் என்பதை நாங்கள் பணி புரியும் போது அறிந்து கொள்கிறோம். பொறுமையாகத் தான் நாங்கள் செயலாற்றி வருகிறோம்.

நவராத்திரி பண்டிகைகளின்போதும், பக்தர்கள் பெருமளவில் நதி ஸ்நானம் செய்யச் செல்லும்போதும் இவர் தம் தன்னார்வ தொண்-டர் குழுக்களோடு சென்று சுத்தப்படுத்தி வரு-கிறார். அது தவிர ஒவ்வொரு மாதமும் கடைசி வாரம் இவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். தன்னார்வல தொண்டர்-களோடு சென்று நதிகளை தூய்மை படுத்துவதிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்-தவும் முயல்கிறார்கள்.

“புண்ணிய நதிகளை பெரும்பாலும் பிளாஸ்-டிக் மாசுகளில் இருந்து காப்பது தற்போது மிகவும் தேவையாக உள்ளது. அரசாங்கங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து நதிகளைக் காக்க பல்வேறு திட்டங்களை எடுத்து வந்தாலும் பொதுமக்களின் பொறுப்பின்மை காரண-மாக அது பெரிய பலனை அளிப்பதில்லை. அதனால் சுகாதாரம் மற்றும் கடமை உணர்வு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நதிகளில் கழிவு கலப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆலைக் கழிவுகளும் சாக்கடைகளும் புனித நதிகளில் சேர்க்கப்படுவது வருத்தமளிக்கிறது” என்கிறார்.

ஒரு தனிப் பெண்ணாக முன்வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் லட்சுமி துர்கா வின் முயற்சி பயனடைய நாமும் பாராட்டி வாழ்த்துவோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :