நீங்கள் கேட்டவை

கலைஞர் அணுகுமுறையை ஸ்டாலின் பெற வேண்டும்
தராசுமஹாலட்சுமி, பெங்களூரு.

? ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கும்?

வெற்றிக்களிப்பில் எல்லைமீறிய தொண்டர்களைக் கண்டித்ததாகட்டும், பதவி ஏற்றல் என்ற சம்பிரதாயத்துக்காகக் காத்திருக்காமல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் கலந்து கொண்டு அவசர ஆணைகளைப் பிறப்பிக்க ஆவன செய்ததாகட்டும் ஒரு நல்ல தொடக்கத் தின் அடையாளத்தைக் காட்டுகிறது. ஆனால் ஆட்சி என்பது முள்ளில் நடப்பது போன்றது. இப்போது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய சவால் கொரோனா. அதை ஒரு முதலமைச்சராக அவர் முறியடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய சவால் அவர்முன் உள்ளது. அந்த நடவடிக்கையின் ஒவ்வொரு முயற்சிக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

கருணாநிதியின் ஆகச் சிறந்த ஆட்சி 1996 முதல் 2001ம் வரை இருந்த ஆட்சி. உண்மையில் அவர் அப்பொழுது குடும்பத்தாரை அதிகம் அருகே விடவில்லை. அதே நேரம் மத்திய அரசோடு இணக்கமாக இருந்தார். அந்த அணுகுமுறையை ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

கொ. ரமேஷ்குமார், ராயபுரம்

? பேஸ்புக், பாஸ்புக் என்ன வித்தியாசம்?

அதிகம் இல்லை. முன்னதில் லைக்குகள் வரும்போது மகிழ்ச்சியாகவும், விமர்சனங்கள் வரும்போது வருத்தமாகவும் இருப்பதைப் போல... பாஸ்புக்கில் வரவுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், செலவுகளினால் பேலன்ஸ் குறைவதைப் பார்க்க வருத்தமாகவும் இருக்கும். முன்னதை, எல்லோரும் பார்ப்பதை விரும்புவோம். பின்னதை மற்றவர் பார்ப்பதை நாம் விரும்ப மாட்டோம்.

சந்திரமோகன், தூத்துக்குடி

? கொரோனா நெருக்கடியால் நமது மாணவர்கள் ஓராண்டு படிப்பை இழந்துவிட்டார்களே?

நம் நாட்டில் மட்டுமில்லை, ‘உலகம் முழுவதும் 2.4 கோடி குழந்தைகள் படிப்பை கைவிடும் அபாயம் நேர்ந்திருக்கிறது’ என்று ஐ.நா.சபை அபாயகர எச்சரிக்கை விடுத் திருக்கிறது. நமது கிராமப்புற மாணவர்கள் பலர் இப்போதே பள்ளியை மறந்து வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா அபாயம் முடிந்தவுடன் நாடு சந்திக்கப்போகும் மிகப் பெரிய சவால் இது.

அன்புச்சித்திரன், அரியலூர்

? கொரோனா சவாலைச் சமாளிக்க, இந்தியாவுக்குப் பல நாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகுகிறதே?

நமது முன்னாள் பிரதமர்கள் திட்டமிட்டு வகுத்த அணிசேரா, அயலுறவுக் கொள்கைகளை, தொடர்ந்து வந்த அரசுகள் கடைப் பிடித்து பல நாடுகளுடன் நல் லுறவை வளர்த்ததன் பரிசு இது. மேலும் உலகின் எந்த நாட்டில் பேரிடர் நிகழ்ந்தபோது இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டி யிருந்ததும் ஒரு காரணம்.

காயத்ரி செல்வராஜ், கோவூர்

? ‘வெற்றியை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?

ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவரின் முதிர்ச்சியைக் காட் டும் வார்த்தைகள்.

யூசுப் ஜாகிர், வந்தவாசி

? ஒருவர் அறிவாளி என்று எப்படி அறிந்துகொள்வது?

சில சமயம் அவர்கள் பேசுவதிலிருந்து. அல்லது எழுதுவதிலிருந்துதான். அண்மையில் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மார்கண்டேய கட்ஜு, அவர் முகநூலில் எழுதியிருப்பது இது.

“தமிழர்களே, நீங்கள் அறிவாளிகள் என்று நினைத் தேன். ஆனால் என்னுடைய முகநூல் பதிவுகள் மீதான உங்கள் கருத்துகள் உங்கள் மீதான என் கருத்தை மாற்றி யிருக்கின்றன’.

மாடக்கண்ணு, பாப்பான்குளம்

? கமல்ஹாசன், சீமான், தினகரன் போன்ற முதல்வர் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியது, பிரேமலதாவிற்கு டெபாசிட் போனது எல்லாம் வளரும், புதிய கட்சிகளுக்கு எதிர்காலமே கிடையாது என்பதன் அடையாளமா?

தமிழகத்தில் தேர்தலின்போது சில கட்சிகள் ஒற்றை இலக்க சதவிகிதத்தில் வாக்குகள் வாங்குகின்றன. அவற்றால் அக்கட்சிகளுக்கு நேரடியாக எந்தப் பயனும் கிடையாது. புள்ளி விவரத்துக்கு மட்டுமே பயன்படும். ஒரு பூஜ்ஜியம் ஒரு முழு எண்ணுடன் அடுத்ததாகச் சேர்ந் தால் மட்டுமே பயன் தரும்.

சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை அது இரட்டை இலக்கத்தை எட்டி நோக்கி, போகப் போகத்தான் பலனளிக்கும். அதுவரை இந்தக் கட்சிகளினால் எவருக்கும் பலனில்லை. நடந்து முடிந்த தேர்தலில் 134 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க. பெற்ற வாக்கு 37+%.

66 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் 33+%. இரண்டுக்கும் இடையே வெறும் நான்கே சதவிகிதம்தான் வித்தியாசம். ஆனால் தொகுதி எண்ணிக்கை வித்தியாசமோ, அறுபதுக்கும் மேலே. அதனால் இப்படி ஒற்றை இலக்க வாக்கு

சதவிகிதம் வாங்கும் சிறிய கட்சிகளால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக அவர்களுக்குப் பணமும் நேரமும் மக்களின் வோட்டுகளும் வீணாகிறது.

நெல்லை குரலோன், நெல்லை

? கமல்ஹாசன் கஷ்டப்பட்டு தோற் றும், துரைமுருகன் கஷ்டப்பட்டு வென்றும் இருக்கிறார்களே?

இஷ்டப்பட்டு அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும். ஆனால் இரு தேர்தல் முடிவுகளும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுக்கும் ஒரு முக்கிய பாடத்தைச் சொல்லியிருக்கிறது.

கல்கி நேசன், திருச்செந்தூர்

? மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வன்முறை வெடித்திருக்கிறதே?

மேற்குவங்கத்தில் தேர்தல்களும் வன்முறைகளும் உடன்பிறந்தவை என்பது பல தேர்த லில் நிரூபணமான விஷயம். அது புதிதல்ல. ஆனால் ‘பதவி ஏற்பு விழாவில் வன்முறையைச் சரியாக கையாளாதது உங்கள் தவறு’ என்று மம்தாவை கவர்னர் குற்றம் சாட்டினாரே, அதுதான் புதிது. இது மாதிரி இந்தியாவில் எந்த அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிலும் எந்த கவர்னரும் இப்படிப் பேசியதில்லை.

தமிழ்ச்செல்வி, ஈரோடு

? மறைந்த கலைஞர் பாண்டு பற்றி...

கொரோனோ அரக்கன் காவு கொண்ட மற்றோர் நடிகர். சிரிக்க வைப் பவர்களை அழித்து நம்மை அழவைப்ப தில் அந்த அரக்கனுக்கு என்ன சந்தோ ஷமோ? நகைச்சுவை நடிகராகப் பரவலாக அறியப்பட்ட பாண்டு ஒரு நல்ல ஓவியர். அறிவு ஜீவி. நிறைய படிப்பவர். கல்கியின் நீண்ட நாள் வாசகர். அவ்வப்போது இதழ் குறித்துப் பாராட்டுவார். குறைகளையும்

சுட்டிக் காட்டுவார். நல்ல ஓவியர். பாண்டு சென்னை ஓவியக் கல்லூரியின் மாணவர். ஓவியத்தில் பி.எச்டி. வாங்கிய ஒரே இந்திய ஓவியர். எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதற்கிணங்க அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவர்.

போஸ்டர் டிசைன்களில் கொலாஜ் ஸ்டைலில் இவர் வடிவமைத்த போஸ்டர்கள் நினைவில் இருக்கின்றன. இவரது மனைவி ‘திலகா’ என்ற பெயரில் ‘குமுதம்’ போன்ற இதழ்களில் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர். அவர் ‘குமுதம்’ இதழுடன் இணைந்திருந்த புகழ்பெற்ற எழுத்தாளர் புனிதனின் மகள்.

கே. இந்து குமரப்பன், விழுப்புரம்

? உதயநிதிக்கு மந்திரி சபையில் இடம் தரவில்லையே?

அது அவருக்கு, அவரது கட்சிக்கு, தமிழகத்துக்கு நல்லது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :