கொரோனா காலக் கல்வி பாதிப்புகள்


தனுஜா ஜெயராமன்இந்த கொரானா கால நாட்களில் தொழில்கள், வியாபாரம், வருவாய் எனப் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இளம் மாணவப் பருவத்தினரே. போன மார்ச்சில் ஆரம்பித்த லாக்டவுன் பிரச்னைகள் ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கும் மேலாக இரண்டாம் வருடமாகத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. இவை எப்போது முடிவுக்கு வரும் என்பதைக் கடவுளைத் தவிர யாருக்கும் தெரியாத ரகசியமே. இதனால் பல மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் என இரண்டுமே கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதில் கிராமப்புற மாணவர்களுக்குச் சில பிரச்னைகள் எனில் நகர்ப்புற மாணவர்களுக்கு வேறு பல சிக்கல்கள். பொதுவாகவே கிராமப்புற மாணவர்களின் தலையாயப் பிரச்னை என்பது கல்வியில் இடைநிற்றல். எப்போதும் அது வறுமையின் காரணமாகவோ பொருளாதாரப் பிரச்னைகளாலோ அதிகம் நடைபெறும். தற்போதைய கொரோனா காலச் சூழலில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பள்ளியில்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் சிறு சிறு வேலைகளுக்குச் சென்று பணம் ஈட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் கையில் பணம் புழங்கத் தொடங்கியதால் திரும்பவும் இவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதில் கட்டாயம் நடைமுறை சிக்கல்களை எதிர்பார்க்கலாம்.

இதில் மாணவப் பருவத்தில் புழங்கும் பண வசதிகளால் போதைப் பழக்கவழக்கங்கள் மற்றும் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களின் உபயோகங்கள் எனத் தடம்மாறிப் பயணிப்பதாக மாணவச் செல்வங்கள் மேல் பற்பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

கிராமப்புற ஆண் பிள்ளைகளின் பிரச்னைகள் இப்படியாக இருக்க, கிராமப்புறப் பெண் மாணவிகளின் பிரச்னை வேறு மாதிரி திசை திரும்புகிறது. குழந்தைத் திருமணம், படிப்பைப் பாதியில் நிறுத்தி இடையில் திருமணம் போன்ற பாதிப்பு கள் வருவதாகச் செய்திகள் வருவது பயத்தைத் தருகிறது.

மேற்படிப்பிற்குப் போகும் கிராமப்புற மாணவி களின் எண்ணிக்கை வருங்காலங்களில் குறைய வாய்ப்புள்ளது. பெற்றவர்களின் வருமான இழப்புகளும், பொருளாதாரப் பிரச்னைகளும் இக்குழந்தைகளின் இடைநிற்றலை அதிகரிக் கச் செய்பவையாக இருக்கும்.

பொதுவாக அரசுப் பள்ளியின் கிராமப் புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதிலும் பல்வேறு சிக்கல்கள். தனி செல்பேசி வசதி, இணையதள வசதி, நெட்வொர்க் வசதி களற்ற பல இடங்களில் எவ்வாறு ஆன்லைன் வகுப்புகளை நியாயப்படுத்த இயலும். வருங்காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையே பெருமளவு குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

நடுத்தர நகர்ப்புற மாணவர்களின் சிரமங்கள் வேறு மாதிரியானவை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முழு கல்விக் கட்டணத்தை ஒன்று பாக்கியில் லாமல் செலுத்திவிட வேண்டும். பள்ளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியார் பள்ளிகளில் இதே நிலை.

வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மாணவச் செல்வங்களுக்கும் தனி மொபைல் போன், தனி லேப்டாப், இன்டர்நெட் வசதிகள் கட்டாயம் செய்துதரப்பட வேண்டும். மாணவ மணிகள் முதல் வகுப்பு முதல் காலேஜ் வரை, காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டர் அல்லது மொபைல் முன் தவமாய் தவம் கிடக்க வேண்டும். வீட்டில் எத்தனை குழந்தைகளோ அத்தனைக்கும் தனி மொபைல். இதனை குழந்தைகள் சரியாகச் செய்கிறார்களா எனப் பெற்ற வர்கள் கண்காணிக்க வேண்டும்.

பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மொபைல்களின் உபயோகங்களைக் கண்காணிப்பதும் பெற்றவர்களின் கடமை.

பொதுவான அனைத்து மாணவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்னை என்னவென்றால், நாள்தோறும் கண்களைப் பதம் பாக்கும் மொபைல்போன்கள். மாணவர்களுக்கு விழித்திரையை பாதிக்கும் வெளிச்சக்கீற்றுகள் ஆகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும். பொது வாக அவர்களிடம் தரப்படும் மொபைல் போன்களால் உலக விஷயங்கள் அவர்களில் உள்ளங்கையில். அதில் சரிபாதியான உபயோகங்கள் தவறானவை என்பதைப் புள்ளிவிவரங்கள் புட்டுப் புட்டு வைக் கின்றன.

இந்தப் பள்ளியில்லா நாட்களில் மொபைல் தவிர்த்து அவர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இனி வரும் காலகட்டத்தில் நம் சமுதாயத்திற்குப் பெரும் சவாலாக அமையப் போகிறது எனில் மிகையாகாது. தினமும் நேரங்கழித்து எழுவது, கண்ட நேரத்தில் உணவு உண்பது, வெளி விளையாட்டிற்கு வழியில்லாததால் ஆன்லைன் கேம்களில் அமிழ்ந்துபோவது. வீட்டில் சோம்பேறியாகத் திரிவது, வயதுப் பிள்ளைகள் எனில் மொபைலில் பேசிக்கொண்டேயிருப்பது, ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோக்களில் ஆடியோ, பாடியோ, நடித்தோ அவர்களே

உருவாக்குவது என ஆன்லைனிலேயே நேரத்தைச் செலவழிக்கின்றனர்.

பொதுவாக, வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அவர்களை அலைக்கழிப்பது, அவர்கள் உடல் நிலையிலும் மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள், அவற்றைச் சமாளிக்க இயலாமல் பெற்றவர்களின் தடுமாற்றங்கள் மற்றொரு சிக்கல்.

வீட்டில் பெற்றவர்களின் சண்டைச் சச்சரவுகள், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றுமொரு உளவியல் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை. அதைக் கோபம், ஆத்திரம், வெறுப்பு, இயலாமை யாகத் திரும்ப வெளிப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. சிறு வயது காதல்கள், தோல்விகள், தற்கொலைகள் என அவர்களின் மனநிலையை மாற்றியிருக்கிறது, இப்பள்ளியில்லா சூழல்.

இதில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரச்னைகள் பரிதாபகரமானவை. ‘வகுப்புகள் உண்டா? தேர்வுகள் நடைபெறுமா? கேள்வித்தாள்கள் எப்படியிருக்கும்? மதிப்பெண்கள் எப்படி மதிப்பிடப் படும்? மேற்படிப்பு விஷயங்களை எப்படி கையாளப்போகிறோம்? தேர்வுக்குத் தயாராவது எப்படி?’ என்று எதைப் பற்றியுமே சரியாக அறியமுடியாமல் இருக்கும் ஒரு திரிசங்கு நிலை. மிகுந்த குழப்பமானதும் மிகுந்த கவலைக்கும் உரியது.

இதில் கல்லூரி மாணவச் செல்வங்கள் நிலை இன்னமும் மோசம். சிலர் கட்டணம் செலுத்தியதோடு சரி, கல்லூரி அனுபவம் எப்படியிருக்கும் என அறியாமலே இரண்டாம் வருடத்தைக் கடக்கப் போகிறார்கள். கல்லூரிக்குள் நுழையும் முதல் வருட காலேஜ் அனுபவமென்பது மிகவும் ரம்மியமானது. அதை இழந்த மாணவச் செல்வங்கள் பல்லாயிரம் பேர்.

சிலர் முதல் வருடத்தை மட்டும் கல்லூரியில் படித்துவிட்டு அப்படியே வெளியேறிவிடும் அபாயமும் இருக்கிறது. இவர்களின் ஆன்லைன் வகுப்புகளும், தேர்வு முறைகளும், அரியர் தேர்வுகளும், மதிப்பெண்களும் குழப்பங்கள் நிறைந்தவை. இவர்களின் வேலைவாய்ப்பைப் பெருமளவு பாதிக்கக்கூடியவை.

மொத்தத்தில் இவையனைத்துக் காரணி களுமே இவர்களின் எதிர்காலத்தைச் சத்தமில்லாமல் பதம்பார்க்கக் கூடியவை.

இனிவரும் காலங்களில் இவர்களைப் பெற்ற வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமுதாயத் திற்கும் இவர்களின் உடல் மற்றும் மனநிலை சார்ந்த பெரும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய ஆகப்பெரும் சவால்கள் காத்துக் கிடக்கின்றன. விழித்திருப்போம், விழிப்புடன் அணுகுவோம்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :