மண்டேலாவும் முண்டாசுப்பட்டியும்

கடைசிப்பக்கம்
சுஜாதா தேசிகன்தமிழ் சினிமாவில் வரும் பெரும்பாலான படங்களை மொத்தம் பத்துக் கதைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் திரைக்கதை நன்றாக இருக்கும் படங்கள் பிழைத்துக்கொள்ளும். வித்தியாசமான நல்ல ‘ஒன்லைன்’ கதைகளும் இடைவெளிக்குப் பிறகு என்ன செய்வது என்று திருவிழாவில் தொலைந்த குழந்தை போல முழித்துவிட்டு கடைசியில் போலீஸ் வந்து, மேலே சொன்ன அந்தப் பத்துக்குள் சென்றுவிடும்.

வானத்தில் தோன்றும் ஒளிக்கீற்று போல எப் போதாவது வித்தியாசமான படங்கள் வருகிறது.

சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளி வந்திருக்கும் ‘மண்டேலா’ இந்த வகை. ஒரு கிராமத்து ஊராட்சித் தேர்தல் போட்டியில் இரண்டு ஜாதிப் பிரிவுகளின் வோட்டுகளும் சமமாகப் பிரிந்திருக்க, மரத்தடியில் முடி திருத் தகம் வைத்திருக்கும் ‘மண்டேலா’வின் (யோகி பாபு) ஒரு வோட்டு திடீர் என்று முக்கியத்துவம் பெற்று, அந்த வோட்டு எப்படி எல்லாம் விலை பேசப்படுகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் சீரியஸ் கதை.

நல்ல திரைக்கதை அமைத்து, சரியான நடிகர் களைத் தேர்வு செய்து, நல்ல திரைப்படமாக நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். போகிற போக்கில் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு காதல் கதையையும் சொல்லியுள்ளார்கள். படத்தில் வரும் அந்த நரைமுடி காட்சி மிக மெல்லிய கவிதை. ஒரு ஊஞுஞுடூ ஞ்ணிணிஞீ உணர்ச்சியைத் தெளிக் கிறது. பன்ச் டயலாக், மிகைப்படுத்தப்பட்ட

சண்டை, பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் மிக யதார்த்தமாக எடுக்கப்பட்ட திரைப்படம். படம் ஆரம்பித்து சற்று நேரத்தில் நாமும் அந்தக் கிராமத் தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

பல வருடங்களுக்கு முன் ‘முண்டாசுப்பட்டி’ என்ற ஒரு படத்தைப் பார்த்தபோது இதே போல் உணர்ந்தேன். டிஜிட்டல் கேமரா வாராத போட்டோ ஸ்டூடியோக்கள் இருந்த காலத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையை ரியலிசமாகக் கொடுத்திருந் தார்கள்.

போட்டோ எடுத்தால் ஆயுசு குறைந்துவிடும் என்று ஒரு (மூட)நம்பிக்கையை மையமாக வைத்து எடுத்த படம். என்றோ வெள்ளைக் காரன் ஒருவன் ஒரு கிராமத்தில் போட்டோ எடுக்க, அந்தச் சமயம் அந்தக் கிராமத்தில் கொரோனா போல ஒரு கொடிய நோய் தாக்க, போட்டோ எடுத்ததால்தான் இந்த நிலைமை. அதனால் இனி கிராமத்தில் யாரும் போட்டோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரு கட்டுப் பாடு விதிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில், உடம்பு முடியாமல் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கும் ஒரு பெரியவரை, அவர் இறந்த பிறகு போட்டோ எடுக்க, பக்கத்து ஊரிலிருந்து ஒரு போட்டோகிராபரை முன்னேற்பாடாக அழைக்கிறார்கள் ஊர் மக்கள்.

பெரியவர் இறக்கும் வரை ஊரில் தங்கும் அந்த போட்டோகிராபர் சைக்கிள் கேப்பில் பெரியவரின் பேத்தியைக் காதலித்து அந்தப் பெரியவர் இறந்த பிறகு அவரைப் படம் எடுத்து, பிரிண்ட் போட்டால் பெரியவர் படம் பதிவாகா மல்... அதற்குப் பிறகு நடக்கும் கலாட்டாவே மொத்தப் படமும்.

எளிமையான கதை, அதில் அதிகக் கூட்டம் இல்லாத கதாபாத்திரங்கள், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்புடன், நல்ல கதைக்களத்தில் இறுதி வரை டெம்போ குறையாமல் கதை சொன்னால் அந்தப் படம் நன்றாக இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு கதைகளிலும் இப்படி எல்லாம் நடக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பினாலும், ஒழுங் காக அமைத்த திரைக்கதையுடன் நம்மை நம்ப வைப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. அதுதானே சினிமா!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :