கடற்கரையில் பிறந்த காதலிக்க நேரமில்லை!

திரைக்கடலில் எழுந்த நினைவலைகள் 3
எஸ்.சந்திரமௌலி‘நெஞ்சம் மறப்பதில்லை’யைத் தொடர்ந்து ‘சித்ராலயா’ பேனருக்குச் சொந்தப் படம் எடுக்கத் தீர்மானித்தோம். உடனடியாக டைட்டில் மனத்தில் உதய மாயிற்று ‘காதலிக்க நேரமில்லை’.

தலைப்பு வித்தியாசமாக இருந்ததால் பார்ட்னர்களுக்கு உடனே பிடித்துப் போய் விட்டது.

ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமை செய் பவன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் படத்தில் என்ன செய்வது? அந்தச் சமயம் ‘கர்ணன்’ படத்தை கலரில் எடுத்துக் கொண்டிருந்தார் கள். சமூகப் படம் எதுவும் கலரில் அதுவரை வெளிவந்ததில்லை. எனவே அடுத்த படத்தை கலரில் எடுக்க முடிவு செய்தோம்.

முதல் தடவையாக வண்ணப்படம் எடுக் கிறோம் என்பதால் ‘கொடாக்’ நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணனை டெக்னிகல் ஆலோசக ராக வைத்துக்கொண்டோம். கதையைத் தீர்மானித்துப் படப்பிடிப்பும் தொடங்கினோம்.

முதல் ஷெட்யூல் முடிந்ததும் கலர் பிலிமை பிராஸஸ் செய்யக் கொடுத்தோம். பிரிண்ட் தயாரானதும் போட்டுப் பார்த்தோம். பிரமாத மாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் சிலர் பார்த்துவிட்டு ரொம்பப் பாராட்டினார்கள்.ஆனால் எனக்குத்தான் திருப்தியில்லை!

சில நாட்கள் கழித்து மறுபடியும் படத்தைப் போட்டுப் பார்த்தேன். நீண்ட நேரம் யோசித் தேன். பிறகு பார்ட்னர்களை அழைத்து, “படத்தை இதுவரை எடுத்ததோடு நிறுத்தி விடலாம்” என்று சொன்னேன்.

“ஏன்? ஏன்?” நண்பர்கள் அதிர்ச்சியுற்றுக் கேட்டனர்.

“வின்ஸென்ஸ் பிரமாதப்படுத்தியிருக் கிறார். படம் வண்ண ஜாலமாக இருக்கிறது. பாட்டு, இசை, நடிப்பு எல்லாம் சரி. ஆனால், கதை அம்சம் சரியில்லை” என்றேன். அதா வது என்னையே குறைகூறிக் கொண்டேன்!

டெக்னிகலாக என்னதான் புதிய முயற்சி என்று செய்து காட்டினாலும் ‘படத்தின் வெற்றிக்கு அழுத்தமான கதைதான் அஸ்தி வாரம்’ என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதுவும், ‘வண்ணத்தில் முதல் சமூகப் படம்’ என்று எதிர்பார்ப்புகளை வளர்த்த பின், அந்தப் படம் கதை அம்சத் திலும் மனநிறைவைத் தர வேண்டும். இல்லா விட்டால், ‘கலர் கொடுத்துவிட்டால் போதுமா?’ என்பதுபோல் பேச்சுக் கிளம்பி, படம் அடிவாங்கும்.

நான் விளக்கிச் சொன்னபிறகு, பார்ட்னர் களும் ‘பண நஷ்டமானாலும் சரி’ என்று ஒப்புக்கொண்டார்கள். ‘காதலிக்க நேர மில்லை’ படம் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டது. அப்படி நிறுத்தி வைத்ததானது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வசதி செய்து தந்தது. அதாவது எனக்குக் காதலிக்க நிறைய நேரம் கிடைத்தது! ஆம், அப்போது தான் என் வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடு களைச் செய்தார்கள்.

ஆளியாறு அணை கொடுத்த பொறி திருமணம் முடிந்தபின் கோவையில் செழியனின் திருமணத்துக்காக என் மனைவி யோடு சென்றிருந்தேன். அங்கே சிவாஜியின் மிக நெருங்கிய நண்பராகிய முத்து மாணிக்கத் தைச் சந்தித்தோம். நான் டைரக்ட் செய்த ‘விடிவெள்ளி’ படத்தை சிவாஜியுடன் இணைந்து தயாரித்தவர் முத்துமாணிக்கம். அந்த நெருக்கம் காரணமாக அவர், ‘நானும் என் மனைவியும் சில நாட்களுக்கேனும் தமது விருந்தினராகத் தமது சொந்த ஊரான வேட்டைக்காரன்புதூருக்கு வந்து தங்கி யிருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண் டார். அந்த ஊர் பொள்ளாச்சி அருகே உள்ளது. அவர் அழைப்பைத் தட்ட முடியாமல் ஏற்றோம்.

அந்தச் சமயம் நாங்கள் ‘பிக்னிக்’ போன ஓரிடம் ஆளியாறு அணைக்கட்டு. அப்போது தான் புதிதாகக் கட்டப்பட்டிருந்த அணை. மலை சூழ்ந்த ரம்மியமான சூழ்நிலை. அந்த அழகில் என் மனத்தைப் பறிகொடுத் தேன். அந்த நிமிஷமே என் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றியது.

‘இந்த இடத்தை நிலைக்களனாகக் கொண்டு காமெடி கலந்த ஓர் அழுத்த மான காதல் கதை எழுதினால்...? அதைப் படமாகவும் எடுத்தால்...?’ படம் சில்வர் ஜூபிலி கொண்டாடு வது போல் அப்போதே கனவு காண ஆரம் பித்தேன். படத்தின் டைட்டில் மட்டும் மாறவில்லை. அதே ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்புதான்!

ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த, (முடிந்துபோன முதல் ஷெட்யூலில் நடித் திருந்த) நடிக, நடிகையரைப் பயன்படுத்திக் கொள்ளவும் தீர்மானித்தேன். இவர்களில் பெரும்பாலோர் புதுமுகங்கள். அவர்களை நான் தேர்ந்தெடுத்த விதமே அலாதி.

வைஜயந்திமாலாவின் குழுவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஒரு நண்பர் என்னிடம் கொண்டுவந்து காட்டினார். பெயர் சாந்தி. முகவெட்டு என்னைக் கவரவே, நேரில் அழைத்துவரச் சொன்னேன். மேக்அப் டெஸ்ட் திருப்திகரமாக அமைந்தது. ஆனால், உடனடியாக அவரை அறிமுகப்படுத்த

சித்ராலயாவில் அப்போது படம் ஏதும் தயாரித்துக் கொண் டிருக்கவில்லை. எனவே, சித்ராலயாவில் மாதச் சம்பளம் பெறும் நடிகையாக சாந்தியை ஒப்பந்தம் செய்தேன்.

‘தில் ஏக் மந்திர்’ படம் தொடர்பாக அடிக்கடி நான் பம்பாய் சென்று வந்தபோது ஒரு சமயம், ஏர்ப்போர்ட்டில் நண்பர் செழியன் ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். “இவர் வசுந்தரா; ஏர்ஹோஸ்டஸ்ஸாகப் பணிபுரிகிறார். சினிமாவில் நடிக்கவும் ஆர்வமாயிருக்கிறார். பயன்படுத்திக்கொள்ள முடியுமா பாருங்கள்?” என்றார். நான் ஏறிய விமானத்தில் வசுந்தராவும் உபசரணைப் பெண்ணாக இருந்து பணியாற்றினார். பம்பாயில் இறங்குமுன்னர் அவரிடம், “விருப்பமிருந்தால் மேக்அப் டெஸ்டுக்கு வரலாம்” என்று சொன்னேன். “ஓ யெஸ்” என்றார் அவர் மகிழ்ச்சியும் நன்றியும் பொங்க.

பம்பாயிலிருந்து நான் திரும்பிய பிறகு வசுந்தரா போனில் நேரம் குறித்துக்கொண்டு ஒருநாள் வந்தார். மேக் அப் டெஸ்ட்டிலும் தேறினார். ஒப்பந்தமானார்.

சிங்கப்பூரிலிருந்து வந்து திருச்சி கல்லூரி யில் படித்தவரான ஓர் இளைஞரை கேமரா மேன் சுந்தரம் எனக்கு அறிமுகம் செய்தார். அந்த இளைஞரின் நடையுடை பாவனைகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவர்தான் ரவிச்சந்திரன்.

இம்மூவருமே ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்தார்கள்; ஆனால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு மாறுதல்! பெயர்கள் நவீனமாக இருக்கவேண்டும் என்ப தற்காக சாந்திக்கு ‘நிர்மலா’ என்றும் வசுந்தரா வுக்கு ‘காஞ்சனா’ என்றும் புதுப் பெயர்கள் சூட்டினேன்.

‘காதலிக்க நேரமில்லை’ மறு படப்பிடிப் புக்கு எல்லாரும் தயாராயிருந்தார்கள். ஆனால் கதை? அதுதான் சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது.

கதைத் தேடி கடற்கரைக்கு...

கதை... கதை.... நகைச்சுவை இழையோ டும் அழுத்தமான காதல் கதை... தேடினேன்... தேடினேன்.... சிக்கவில்லை!

ஒருநாள் பிற்பகல். நண்பர் கோபுவை “வா, பீச்சுக்குப் போகலாம்” என்று அழைத் தேன்.

“இந்தப் பதைபதைக்கிற வெயிலிலா? உனக்கு என்ன ஆச்சு?” என்று என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார் கோபு.

“பீச்சுக்கு நான் காற்று வாங்கவும் போகலை; வெயில் வாங்கவும் போகவில்லை. கதை கிடைக்கணும். கிளம்பு” என்றேன்.

“சரி, சரி, பங்குதாரர் என்றால் லாபத்தில் பங்கு மட்டுமா? நீ அனுபவிக்கிற கஷ்டத்திலும் பங்கு அனுபவிக்கணும்போல...” என்று முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டார் கோபு.

மெரினா பீச்சை அடைந்து வெயில் இல் லாத இடம் தேடினோம். ஒரு மரத்தடி நிழல் கிடைத்தது. “சினிமான்னா பெரிய ஓட்டல்ல ஏ.ஸி. ரூம் போட்டு, சகல சௌகரியங்களுடன் கதை எழுதுவாங்க... இப்படியா?” என்று கிண்டலாக அலுத்துக்கொண்டே மரத்தடியில் அமர்ந்தார் கோபு.

நானும் உட்கார்ந்தேன்; பிறகு எழுந்து நின்று அலைகளைப் பார்த்தேன்; சிகரெட் பற்ற வைத்தேன்; மரத்தைச் சுற்றி வந்தேன்; வானத்தைப் பார்த்தேன்; கீழே புல் தரையை நோக்கினேன்.

இப்படி அரை மணி நேரம் ஓடிய பிறகு,

சட்டென்று மனசுக்குள் ஒரு பொறி தட்டியது. அந்தப் பொறியை விசிறி நெருப்பாக்கிய படியே கோபுவுக்குக் கதை கூற ஆரம்பித்தேன்.

“கதை சிக்கிவிட்டது; வெரி இன்ட்ரஸ்ட் டிங். மேலே சொல்லு” என்றார் கோபு.

சொல்லிக்கொண்டே போனேன். அவ்வப் போது மறு சிந்தனை. சில மாற்றங்கள், கதை வளர்ந்தது.

மாலையில் பீச்சில் கூட்டம் மொய்க்க ஆரம்பித்த சமயம், நாங்கள் மனதில் கதையைச் சுமக்க முடியாமல் கலந்துகொண்டு சித்ராலயா ஆபீஸுக்குத் திரும்பினோம். உடனே பார்ட்னர்களுக்குச் செய்தி பறக்க, இரவு ஏழு மணிக்கு அத்தனை பேரும் குழுமிவிட்டனர்.

மறுபடி கதை சொன்னேன். இப்போது கதை மெருகேறி பளபளத்துக் கொண்டிருந் தது. நண்பர்கள் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். உடனடியாகப் படப்பிடிப்பு தொடங்கத் தீர்மானித்தோம்.

புதிய கதையில் அக்காவும் தங்கையுமாய் இரண்டு பெண்கள். முன்பு இந்த ரோல்களில் (முதல் ஷெட்யூலோடு நிறுத்தப்பட்டு விட்ட ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில்) காஞ்சனா வும் நிர்மலாவும் நடித்திருந்தனர். இருவரில் காஞ்சனாவின் நடிப்பு எனக்கு முழு திருப்தி அளித்தபோதிலும் நிர்மலா நடிப்பில் நான் எதிர்பார்த்த அளவு ‘மெச்சூரிட்டி’ கிடைக்க வில்லை. எனவே அவரை ஒதுக்கி, வேறு ஒருவரை ‘புக்’ பண்ண நினைத்தேன். யாரைப் போடுவது என்று யோசித்தபோது தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ராஜ்ஸ்ரீ ஞாபகத்துக்கு வந்தார். அவரிடம் இளமைக் கவர்ச்சியுடன் தேர்ந்த நடிப்பாற்றலும் இருந்தது. அவரையே தங்கை ரோலுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டேன்.

இதனால் நிர்மலாவுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாதே என்ற கவலையும் எனக்கு இருந்தது. எனவே அவரை அழைத்து, “வருத்தப்படாதே. அடுத்த படத்தில் உனக்கு ஏற்ற ஒரு காரெக்ட ரில் உன்னை அறிமுகப்படுத்தறேன்” என்று கூறி மேலும் விளக்கினேன்.

“ஒரு புதுமுகம் அறிமுகமாகும்போது, அந்தப் படம் வெற்றி பெற்றால்தான் அந்தப் புதுமுகத்துக்கும் நல்லது. எதிர்காலம் நல்லபடி அமையும். மாறாகப் படம் தோல்வி கண்டால், புது முகத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்! எனவே, உனக்கு ஏற்ற மாதிரி நல்ல கேரக்டர் அமைய வேண்டும்.

இன்னொன்று உன்னிடம் நான் எதிர் பார்க்கும் ‘மெச்சூரிட்டி’ உனக்கு வரவேண் டும். அதற்காக நீ தொடர்ந்து ஷூட்டிங்கு களுக்கு வா. என் டைரக்ஷனைக் கவனி. ஒவ் வொருவரும் எப்படி நடிக்கிறார்கள் என்று பார். இது ஒரு அனுபவப் பாடமாக அமைவ தோடு, உன்னுடைய கேமரா கூச்சத்தையும் பயத்தையும் போக்கும். இயல்பான நடிப்பு உன் வசப்படும். அதுவரை நீ தொடர்ந்து

சித்ராலயாவில் மாதச் சம்பளம் பெற்று வரலாம்.” அவர் சமாதானமானார்.

பாலையா

பாலையாவின் தீவிர விசிறி நான். அவர் நடிப்பைப் பார்க்கும்போதெல்லாம் ‘இவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை நம் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டும்’ என்ற ஆர்வம் என்னுள் எழும். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் என் ஆசை நிறைவேறும் வாய்ப்பு இருந்தது.

பாலையாவிடம் கதையையும் அவர் ஏற்க வேண்டிய பாத்திரத்தின் தன்மையையும் விளக்கிச் சொன்னதும் அவரும் சந்தோஷமாக நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் இன்னும் ஒரு சிக்கல் பாலையா விஷயத்தில் இருந்தது.

(நினைவலைகள் தொடரும்)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :