மனிதர்க்குத் தோழனடி பாப்பா!


இராம.பாலஜோதி
ஓவியம் : தமிழ்பால்கனியில் தொங்கிய மூங்கில் கூடை யில் அமர்ந்து, அம்மா போட்டுக் கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு எதிர்ப் பக்கத்தில் மோத்தி இல்லாத வெற்றிடம் என் மனதைப் பிசைந்தது இப் போதும் கூட. அரூபமாக என்னைப் பார்த்து வாலாட்டுவது போலவும் செல்லம் மிகுந்த குரலில், ‘எனக்கும் காபி வேணும்’ என்று கேட்டுச் சிணுங்குவது போலவும் இருந்தது.

மோத்தியைப் பிணைத்திருந்த சங்கிலியும் கழுத்துப் பட்டையும் இன்னும் அங்கேதான் இருந்தது. ஜன்னல் திண்டில் இன்னும் பிரிக் கப்படாமல் இருந்த பொறை, பிஸ்கட் பாக்கெட்டுகள் அடுக்குக் கலையாமல் அப்படியே இருந்தன. மோத்திக்கென்று வைக்கப்பட்டிருந்த உணவுப் பாத்திரங்களில் தண்ணீரையும் சிறுதானியங்களையும் நிரப்பி, பறவைகள் சாப்பிடுவதற்காக, பால்கனியின் மேல்சுவரின் மீது அம்மா வைத்திருந்தாள்.

மோத்தி இறந்து இன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டது. வீட்டில் எல்லோ ருக்குமான செல்லப்பிள்ளை. அதன் இழப்பு எங்களுக்குப் பேரிழப்புதான். அம்மா, அப்பா, தம்பி, நான் என்று யாருமே மோத்தியை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. உயிர்ப்பு கொண்ட நினைவுகளாக எங்களுக்குள் சுழன்று கொண்டே இருக்கிறான். மோத்தி வெறும் நாய் அல்ல. வழக்கமான வளர்ப்புப் பிராணி அல்ல. அது பேரன்பின் சிறு உருவம் நிபந்தனையில்லாத அன்பு ததும்பும் உயிர்க் குறியீடு. புகார்கள் இல்லாத வாழ்வின் நிழல்.

இந்த பால்கனி அவனது வசிப்பிடமே அல்ல. சங்கிலியால் அவனை நாங்கள் கட்டிப் போடுவதும் இல்லை. வீட்டிற்குள்ளாக, தோட்டத்தில் எங்கும் துள்ளிக்குதித்து ஓடுவதும் சிணுங்குவதும் விளையாடுவதுமாக எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பான். வாசலில் கூட, எல்லோரும் எழுதிவைப்பது போல ‘நாய் ஜாக்கிரதை’ என்று போர்டு வைக்கவில்லை. மாறாக, ‘மோத்தி இருக் கிறான்’ என்றுதான் எழுதி வைத்திருந்தோம். அவனை நாங்கள் யாரும் ‘நாய்’ என்று குறிப் பிடுவதில்லை. வேறு யாரையும் அப்படி அழைக்க அனுமதிப்பதும் இல்லை. ‘மோத்தி’ என்று அவனது பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் அவனது பெயர் இல்லாதது மட்டும்தான் குறை. அப்படிப்பட்ட மோத்தியின் சாவுக்கு நானே காரணமாகிவிட்ட குற்றஉணர்வு என் நெஞ்சை இன்னும் அறுத் தது. அன்று இரவு மட்டும் நான் பால்கனியில் நின்று அந்தத் தெரு நாய்களை விரட்டாமல் இருந்திருந்தால், மோத்தி இன்றைக்கு உயிருடன் இருந்திருக்கும்.

காபியைக் குடித்து கப்பைக் குனிந்து கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, என் கண்களில் கண்ணீர் ததும்பியது. பால்கனியை விட்டு இன்னும் விலகாத மோத்தியின் வாசனை என்னை என்னவோ செய்தது. என் நினைவு கள் மூன்று வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. அம்மா சமையல் அறைக்குள் மதிய உணவுக்கான வேலைகளில் மும்முரமாக இருந்தார். அப்பா, அவரது நண்பர் சச்சிதா னந்தம் அழைத்தாரென அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். நானும் தம்பி கார்த்தியும் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்குவது பற்றி டிஸ்கஷனில் இருந்தோம்.

“தீபிகா, உனக்கு கௌர்மெண்ட் வேலை கிடைச்சதும் ஓடிடுவே. நான் காலேஜ் இல்லாத நாட்களில்தான் கன்டெண்ட் பிடித்து, வீடியோ எடுக்கமுடியும். இதை யெல்லாம் நல்லா யோசித்து களத்துல இறங்க ணும்” என்றான் கார்த்தி.

“நீ சொல்றது சரிதான். சேனல் ஆரம்பிச்சா, இடையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது. வாரத்துக்கு ஒரு வீடியோ போட்டாலும் நச்சுனு இருக்கணும்” என்று கூறினேன் நான்.

கார்த்தி விஸ்காம் பைனல் இயர் படிக்கிறான். நான் குரூப்-1 தேர்வு எழுதி, நேர்காணல் முடித்து, அரசு வேலைக்காகக் காத்திருக்கிறேன். தம்பி, மிமிக்ரி செய்வதில் கரை கண்டவன். அந்தத் திறமையோடு ஒளிப் பதிவு, எடிட்டிங் போன்றவற்றில் திறமை

சாலி. இதையெல்லாம் வைத்துத்தான் யுடியூப் சேனல் ஆரம்பிப்பதென முடி வெடுத்து, மொட்டை மாடியில் உள்ள தனி அறையை ஸ்டூடியோவாக இரண்டு பேருமாகச் சேர்ந்து மாற்றி வைத்திருந்தோம். அப்பாதான் அதற்கான முதலீட்டுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சத்தை வங்கியில் பர்சனல் லோன் போட்டுக் கொடுத்திருந்தார்.

யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காத, லஞ்சம் பெறாத நேர்மையான அரசுப் பள்ளி யின் தலைமை ஆசிரியர். அப்படிப்பட்ட வரை வங்கியில் கடன் வாங்க வைத்துவிட் டோம் நானும் கார்த்தியும். அதன் காரண மாகவே, ஆரம்பிக்கும்போகும் புதிய யுடியூப் சேனலை, ஏதோ ஏனோதானோ என்று ஆரம் பிக்காமல், அசத்தலாக இருக்க வேண்டும் என்று கருதி, இரண்டு பேருமே உருப்படியான ஐடியா ஒன்றுக்காகக் காத்திருந்தோம். நிறைய விவாதித்தோம். முகநூல் நண்பர்களிடம் ஐடியாக்கள் கோரினோம். கூகுளில் தேடி னோம். நிறைய யுடியூப் சேனல்களைப் பார்த் தோம். எதுவும் நாங்கள் எதிர்பார்த்த தனித் தன்மையோடு இருக்கவில்லை.

இன்றைக்கும் அப்படியானதொரு விவாதத்தில்தான் இரண்டு பேரும் ஈடுபட் டிருந்தோம். அப்போது வாசலில் அப்பாவின் டூவீலர் சத்தம் கேட்டது.

அடுத்த சில வினாடிகளில் “தீபிகா... கார்த்தி...” என்று உற்சாகம் பொங்கும் குரலில் எங்களைக் கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா. அவரது கையில் மூங்கிலால் வேயப்பட்ட சிறிய கூடை இருந்தது. அப்பாவின் இந்த உற்சாகமும் கொண்டாட்டமான நடவடிக்கையும் எங்களை ஆச்சர்யப்படுத்தியது.

“என்னப்பா, ரொம்ப ஹேப்பியா வர்றீங்க? கையில் என்ன கூடை?” என்றேன் நான்.

“நம்ம வீட்டுக்குள் புது விருந்தாளி வந்திருக்கார்” என்றபடியே கூடையின் மேல்மூடியைத் திறந்தார். உள்ளே, மினுக்கும் சாக்லேட் நிறம் கொண்ட குட்டி நாய் சுருண்டு படுத்திருந்தது. எங்களைக் கண்டதும் எழுந்து, தனது குட்டி வாலை அசைத்தது.

“அப்பா... சூப்பர்ப்பா” என்றான் கார்த்தி.

“ச்சோ... ஸ்வீட்டி” என்றபடியே அந்தக் குட்டி நாயை எனது கைகளில் எடுத்துக் கொஞ்சினேன். என் முகத்துக்கு நேராக அதைக் கொண்டுசென்று எனது கொஞ்சலைத் தொடர்ந்தபோது, அது தனது குட்டி நாக்கால் என் மூக்கை நக்கியது.

“தீபி, என்கிட்டே கொஞ்சம் நேரம் குடு” என்று கார்த்தி வாங்கிக் கொஞ்சிக் கொண் டிருந்தான். அவனைப் பார்த்து மெல்லிய குரலில் குரைத்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டு கிச்சனிலிருந்து அம்மா வெளியே வந்தபடி கேட்டாள்.

“ஏதுங்க இது?”

“என்னோட ஃப்ரெண்ட் சச்சிதானந்தம் குடுத்தான். மூணு மாதங்களுக்கு முன்னாடி அவன் வீட்டு நாய் ஏழு குட்டிகள் போட்டிருந் தது. அதுல ஒண்ணுதான் இது” என்றார் அப்பா.

“சும்மாவா குடுத்தாரு?” கார்த்தி ஆச்சர்ய மாகக் கேட்டான். அவன் அப்படிக் கேட்டதில் அர்த்தம் இருந்தது. அது லேப்ரெடார் இன வகை நாய்க்குட்டி. இன்றைக்கு மார்க் கெட்டில் இந்த வகை குட்டி நாய்கள் பத்தா யிரம் வரை விலை போகிறது.

“அவன் சும்மாதான் குடுத்தான். நான்தான் ‘என்னடா சச்சு, நாயை எனக்கு லஞ்சமா குடுத்து, என் நேர்மைக்குப் பரீட்சை வைக்கிறீயா?’ன்னு கேட்டேன். அதனால், பேருக்கு ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கிட்டான்” என்றார்.

அம்மா அந்தக் குட்டியைப் பார்த்துவிட்டு, “ரொம்ப அழகா இருக்கு. புஜ்ஜி, டைகர், பப்பின்னு வழக்கமா பேர் வைக்காம, புதுசா இந்தக் குட்டிக்குப் பேர் வையுங்க” என்றபடியே சமைய லறைக்குச் சென்றுவிட் டார். நானும் கார்த்தியும் யுடியூப் டிஸ்கஷனை அப் படியே மறந்துவிட்டு, நாய்க்கு என்ன பேர் வைக்கலாமென்ற டிஸ்கஷனில் இறங்கினோம். பத்து நிமிடங்கள் ஓடியிருக்கும்.

“சார்... போஸ்ட்” என்று வாசலில் தபால் காரர் குரல் கேட்டது. கார்த்தி, குட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு எழுந்து சென்று போன வேகத்திலேயே திரும்பி வந்தான். “தீபிகா, தபால் உனக்குத்தான். ரிஜிஸ்தர் தபால். நீ கையெழுத்துப் போட்டுத்தான் வாங்கணுமாம்” என்றபடியே என் கையி லிருந்த குட்டியை வாங்கிக்கொண்டான். நான் வாசலுக்குச் சென்று, தபால்காரர் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு, தபாலை வாங்கி, அதனைப் பிரித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தேன்.

தபாலைப் படித்த அடுத்த வினாடி உற்சாகக் குரலில் கத்தினேன். என் குரலைக் கேட்டு மிரண்ட குட்டி குரைத்தது. அப்பாவுக் கும், தம்பிக்கும் நான் சொல்லாமலேயே விஷயம் புரிந்துவிட்டது.

“என்ன தீபிகா... வேலைக்கான ஆர்டரா?” என்று கேட்ட அப்பாவுக்கு “ஆமாம்பா” என்று சொல்லி முடிப்பதற்குள் தம்பி, “எந்த ஊரில் வேலை? என்ன வேலை?” என்று கேட்டான்.

“நம்ம ஊர்லதான்டா. நகராட்சில சுகாதார அலுவலர் பணி” என்றேன். பணி நியமனக் கடிதத்தை எல்லோரும் வாங்கிப் படித்தார்கள். அதில் திங்கள் கிழமை பணியில் சேர வேண் டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. உள்ளூரிலேயே வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?” என்றார் அப்பா.

“எல்லாம் மோத்தி வந்த நேரம்தான்” என்றாள் அம்மா. நாங்கள் எல்லோரும் ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்த்தோம்.

“மோத்தியா... யாரும்மா அது?” கார்த்தி தான் கேட்டான். கார்த்தியின் கையில் துள்ளிக் கொண்டிருந்த குட்டியை அம்மா கையில் ஏந்திய படியே, “இதோ இவன்தான் மோத்தி. இவன் நம்ம வீட்டுக்கு வந்த நேரம் தீபிகாவுக்கு வேலை கெடைச்சுடுச்சு. அதிர்ஷ்டக்காரன்டி இவன். நான் இவனுக்கு மோத்தின்னு பேர் வெச்சிருக்கேன். இனிமே எல்லோரும் அப்படித்தான் கூப்பிடணும். எங்கே, எல் லோரும் சேர்ந்து ஒரு தடவை கூப்பிடுங்க”, என்று அம்மா ஆர்டர் போட, நாங்கள் எல் லோருமாக ஒரே குரலில், “மோத்தி” என்று கத்தினோம்.

மோத்தி மிரண்டு குரைத்தது. நாங்கள் எல்லோரும் சிரித்தோம்.

வேலைக்குச் சேர்வதற்கு முன்பிருந்த இரண்டு நாட்களும் மோத்தியுடன்தான் என் பொழுதுகள் கழிந்தன. வீட்டில் எல்லோருக் கும் செல்லமாகிவிட்டான். அதென்னவோ தெரியவில்லை. என்னிடம் கூடுதல் ஒட்டுதல் அவனுக்கு. அந்தச் சமயத்தில்தான் யுடியூப்புக் கான ஐடியாவை மோத்தி எனக்குக் கொடுத் தான். கார்த்தியிடம் கூறினேன்.

“சூப்பர்க்கா. இன்னிக்கே ஷூட் பண்ணிடுவோம்” என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். ஐடியா இதுதான். மோத்தியின் நடவடிக் கைகளைப் படம்பிடித்து அதற்குப் பொருத்த மான டயலாக்குகளை அரசியல் தலைவர்கள், பிரபலத் திரைப்பட ஹீரோக்கள், காமெடி நடிகர்கள் குரலில் மிமிக்கிரி செய்வது. அந்த ஞாயிற்றுக்கிழமையே முதல் வீடியோவை அப்லோட் பண்ணினோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்றைக்கு ஒரு லட்சம் பார்வை யாளர்கள் அதைப் பார்த்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த மூன்றாம் நாளே மோத்தி யுடியூப் செலிபிரிட்டி ஆகிவிட்டான். அவனும் வளர்ந்தான். கூடவே, செல் வாக்கும் வளர்ந்தது.

அப்படிப் போட்ட வீடியோக்களில் பத்து லட்சம் பார்வையாளர் களைக் கடந்த முதல் வீடியோவை எங்களால் மறக்கமுடியாது. காரணம், அந்த வீடியோவுக்காக யுடியூப் நிறுவனம் மூன்று லட்ச ரூபாய் எங்க ளுக்குச் சன்மானம் அனுப்பி இருந்தது. மோத்தி சம்பாதித்த பணம். அதைப் பற்றிச் சொல்கிறேன்.

2019-ம் வருடம் ஒரு பண்டிகை நாளில் பிரபல டி.வி. ஒன்றில் யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘கூர்கா’ திரைப்படத்தைப் போட்டிருந் தார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக்கொண் டிருந்தோம். எங்களோடு மோத்தியும் அந்தப் படத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. மோத்திக்கு அப்போது ஒன்றரை வயசு. நன்றாக வளர்ந்திருந்தான். பெரிய டி.வி. திரையில் சினிமா பார்ப்பது அவனது பொழுதுபோக்கு.

அந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு நண்பனாக, துணையாக ஒரு வெள்ளை நிற லேப்ரெடார் நாய் வரும். அதனைச் சோம்பேறியாக, புத்திசாலித்தனமில்லாத நாயாகப் படத்தில் காட்டியிருப்பார்கள். அதைப் பலரும் திட்டித் தீர்ப்பது போல் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

அந்தத் திட்டுகிற காட்சிகள் வரும்போதெல் லாம் மோத்திக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். சட்டென்று எழுந்து டி.வி.க்கு அருகில் சென்று இரண்டு கால்களையும் சுவரின் மீது வைத்துக் குரைக்கும். நல்ல வேளையாக, மோத்திக்கு எட்டாத உயரத்தில் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. அதே படத்தில், நாயை யோகிபாபு பாராட்டும்போதெல்லாம் மோத்தி சிணுங்கும், வாலாட்டும். குஷியில் அங்கும் இங்குமாக ஓடும். டான்ஸ் ஆடும். வெட்கப்படும்.

கார்த்தி அதையெல்லாம் படம் பிடித்தான். மறுநாள் அதை எடிட் செய்து மோத்தி ‘கூர்கா’ படத்தைப் பார்த்து கோபமாகக் குரைக்கும் இடத்திலெல்லாம் நடிகர் வடிவேலு குரலில் திட்டு வது போல் மிமிக்ரி செய் தான். குஷி மூடில் மோத்தி இருக்கும் இடத்திலெல்லாம் வடிவேலு குரலில் பாடுவது போல் அமைத்தான். அந்த வீடியோ தான் செம வைரலாகி, மோத்தியைப் பிரபல மாக்கியது.

அதன்பிறகு, மோத்தி சம்பந்தப்பட்ட பழைய வீடியோக்களைப் பார்ப்பவர்களும் அதிகம் ஆனார்கள். மோத்தி மூலமாக வருமானம் வந்தாலும், அது மிகவும் பிரபலமானாலும் வாரத்துக்கு ஒரு வீடியோ மட்டுமே அப்லோட் செய்வது என்ற கொள்கையிலிருந்து கார்த்தி மாறவில்லை.

சுகாதார அலுவலராக வேலை பார்ப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. நகரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சிகரெட்டைப் பொது இடங்களில் பிடிக்கும் நபர்களுக்கு அறிவுரை. அதற்கு எதிரான நட வடிக்கைகள், கணேஷ், ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட லாகிரி வஸ்துகளை மறைத்து விற்கும் கடைகளில் ரெய்டு. மருந்துக்கடைகளில் உடல்நலம் சரியில்லாமல் வரும் நபர்களுக்குக் கடைக் காரரே ஊசி போடுகிற சட்டத்துக்குப் புறம் பான செயல் இவற்றையெல்லாம் தினமும் எதிர்கொள்ள வேண்டும்.

நகரத்தின் வீதிகள், பரபரப்பான பேருந்து நிலையம், மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தை இவற்றிலெல்லாம் மலை போலத் தேங்கும் குப்பைகளைத் தூய்மைப் பணி யாளர்களை வைத்து உடனுக்குடன் அப்புறப் படுத்த வேண்டும். நகரத்தின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தினமும் கண்காணிக்க வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற தொற்று வியாதிக் காலங்களில் பகல் இரவு என்று பார்க்காமல் பணி செய்ய வேண்டும்.

இதற்கிடையில், அரசியல்வாதிகளின் மிரட்டல், உள்ளூர் பிரமுகர்களின் உருட்டல் போனிலும் நேரிலும் வரும். இவற்றை யெல்லாம் கடந்து ஒரு நாளை நகர்த்துவது என்பது சவாலான காரியம்தான்.

டென்ஷனையும், மன அழுத்தத்தை யும் சுமந்தபடி, வேலை முடிந்து அலு வலக ஜீப்பில் வீட்டில் வந்து இறங்கும் போது, வாலாட்டியபடியே ஓடிவந்து, என்மீது தாவி ஏறி, கொஞ்சிக் குலாவி என்னை ரிலாக்ஸ் பண்ணுவது மோத்திதான்.

மொபைலைத் தூக்கித் தூர வீசிவிட்டு, மோத்தியுடன் ஒருமணி நேரம் செலவிடு வேன். அந்த நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் டி.வி.யைக்கூட அப்பா ஆஃப் செய்து விடுவார். மோத்தியுடன் செலவிடும் அந்த நேரத்தில் அலுவலக டென்ஷன் நெருக்கடி கள், பணி சார்ந்த மனஅழுத்தம் எல்லாம் மறைந்து, அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும். என்னுடைய ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிந்தது. மோத்தி என் தோழனாக மாறியிருந்தான்.

அதே போல் மார்ச் 3ஆம் தேதி வந்தாலே எங்கள் வீடு கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடும். 2017ஆம் வருடம் இதேநாளில்தான் மோத்தி எங்கள் வீட்டுக்கு மூன்று மாத க்யூட் குட்டியாக வந்தது. அந்த நாளையே மோத்தி யின் பிறந்த நாளாக நாங்கள் கொண்டாட ஆரம்பித்தோம். வளர்ப்புப் பிராணியின் பிறந்தநாள் என்றால் ஏதோ, ஏனோதானோ என்றெல்லாம் இருக்காது. படுபக்காவாக இருக்கும். அன்றைக்கு எங்கள் வீடு பலூன் களாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மோத்தியின் பெயர் எழுதிய ரெண்டு கிலோ கேக் இருக் கும். சாக்லேட், இது தவிர, முப்பது நபர் களுக்கு இரவு டின்னரும் தயாராக இருக்கும். கார்த்தியின் நண்பர்கள், எனது தோழிகள், அப்பாவின் நண்பர்கள், பக்கத்து, எதிர் வீட்டு வாண்டுகள் என்று வீடே மோத்தியின் பிறந்த நாளைக் கொண்டாட நிறைந்திருக்கும்.

கேக் அருகே மோத்தியை நிறுத்தி, அவன் சார்பாக நான்தான் மெழுகுவர்த்தியை அணைத்து, கேக் வெட்டுவேன். எல்லோரும் மோத்திக்கு வாழ்த்துக் கூறி, அவனுக்குப் பிடித்த உணவு பாக்கெட்டுகளையோ, பந்து போன்ற விளையாட்டுப் பொருட்களையோ பரிசளிப்பார்கள். இதுவரை இரண்டு பிறந்த நாட்களை மோத்திக்காகக் கொண்டாடி இருக்கிறோம். அந்த வீடியோக்களை யுடியூப்பில் பதிவேற்றி இருக்கிறான் கார்த்தி.

மூன்றாவது பிறந்தநாளை இன்னும் வெகு விமரிசையாகக் கொண்டாட, இந்த வருடம் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது தான், உலகையே பெரும் பீதிக்குள்ளாக்கி, லாக்டவுன் என்ற பொது முடக்கத்தை ஒட்டு மொத்த நாடுகளுக்கும் அறிமுகப்படுத்திய கொரோனா நம் நாட்டுக்குள்ளும் நுழைந்தது.

2020 மார்ச் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட லாக்டவுன், அடுத்த சில மாதங்களுக்கு பால்கனியில் மோத்தியைச் சங்கிலியால் பிணைக்கவும் அதன் சாவுக்கு நானே காரண மாகிவிட்ட பெருந்துயரத்தையும் கொண்டு வந்தது.

நகரத்தின் சுகாதார அலுவலர் என்பதால், கடந்த பிப்ரவரி முதல் இப்போது வரை வேலை. வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தேன். அதிலும் ஜூன் மாதம் வரையிலும் வேலை பெரும் சவாலாகவும் நெருக்கடிகள் நிறைந்ததாகவும் இருந்தது. தினமும் நான்கு மணி நேரம்தான் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, ஆயத்தமாகி ஆறு மணிக் கெல்லாம் குவாரண்டைன் முகாம்கள்... அரசு மருத்துவமனை.... என்று நாள் முழுக்க களஆய்வு நீளும். உழவர் சந்தை, பேருந்து நிலையத்தில் மாற்றப்பட்ட காய்கறி, மீன் மார்க்கெட், மொத்த வியாபாரிகள் ஏலம் விடும் இடம் என்று கண்காணிப்புகளை ரொம்பவும் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அடிக்கடி ஆய்வு செய் யும் இடங்களிலெல்லாம் சமூக இடைவெளி யைத் தீவிரப்படுத்தினேன். தூய்மைப் பணி யாளர்களைக் கொண்டு நகரத்தை எப் போதும் தூய்மையாக வைத்திருக்கச் செய் தேன். கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த சமூக உரையாடல், அறிவிக் கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் திறந்திருக்கும் மளிகைக் கடைகள், சிறு ஓட்டல்கள் போன்ற வற்றை சீல் வைப்பது என்று எனது நாட்கள் மூச்சுவிட நேரமின்றி பரப்பாகச் சென்று கொண்டிருந்தது.

விடுமுறை என்பதே இல்லாமல் வாரத்தின் எல்லா நாட்களும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நானும் எனது துறையைச்

சார்ந்த ஒவ்வொருவரும் தங்களை முழு அர்ப் பணிப்போடு ஈடுபடுத்திக்கொண்டிருந்த நாட்கள் அவை. சமூகத் தொற்று வராமல் கண்காணிக்கவும், மக்களை இந்த ஆட் கொல்லிக் கிருமியிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு மிகுந்த பணியாக இருந்தது அது.

இந்த ஓய்வு ஒழிச்சலில்லாத ஓட்டத்தில் மோத்தியைப் பார்ப்பதே அரிதான விஷய மாகிவிட்டது. நள்ளிரவில் அலுவலக ஜீப்பி லிருந்து இறங்கும்போது, பால்கனியின் கிராதி வழியாகக் கழுத்தை நீட்டிக் குறைத்தபடி என்னைக் கூப்பிடும். எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகளைத் திட்டமிடுதல், மறுநாளுக்கான ஆய்வு இடங்களைத் தெரிவு செய்தல், வாட்ஸாப் குழுக்களில் வரும் தகவல் களை ஃபாலோ செய்து நடவடிக்கை எடுத்தல் போன்ற காரணங்களால் பால்கனிக்குச் சென்று மோத்தியைப் பார்க்கமுடியாது. கொஞ்ச நாட்களில் மோத்தியே அதனைப் புரிந்துகொண்டு அமைதி ஆகிவிட்டதுதான் ஆச்சர்யமான விஷயம்.

ஒரு நாள்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவ ரின் வீட்டில், நகராட்சி ஆணையர், சம்பந்தப் பட்டவரை குவாரண்டைன் படுத்தும் பணி யிலும் அந்தத் தெருவை சீல் வைக்கும் வேலைகளிலும் அதிகாரிகளுக்கும் எங்களுக்கும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பணிகள் முடிந்து வீடு திரும்ப நள்ளிர வாகிவிட்டது.

ஜீப்பிலிருந்து இறங்கியபோது, அதிர்ந்து போனேன். வீட்டைச் சுற்றி பத்துத் தெரு நாய்கள் சூழ்ந்துகொண்டு ‘கர்க்முர்க்’ என்று எதையோ மென்றுகொண்டிருந்தன. நான் வந்ததை அந்த நாய்கள் கண்டுகொண்ட தாகவே தெரியவில்லை. உற்று கவனித்தேன். தரையில் சில பொறைகளும் பிஸ்கட்களும் சிதறியிருந்தன. அந்தச் சமயத்தில் மேலே யிருந்து மேலும் சில பொறைகள் கீழே வந்து விழுந்தன. நான் நிமிர்ந்து பார்த்தேன். பால்கனியிலிருந்து கழுத்தை வெளியே நீட்டி, தனது வாயில் கவ்வியிருந்த பாக்கெட்டி லிருந்து பொறைகளை உதிர்த்துக் கொண் டிருந்தது மோத்தி.

எனக்குச் சட்டென்று விஷயம் புரிந்துவிட்டது. உணவின்றி பசியில் அலையும் தெரு நாய்களுக்கு மோத்தி உணவளிக்கிறது. எனக் குப் பெரும் ஆச்சர்யமாக இருந்தது. அட, இது எவ்வளவு நாளாக நடக்கிறது. வேலை பிஸியில் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டேனே என்ற யோசனையோடு வீட்டுக்குள் நுழைந்து நேராக பால்கனிக்கு வந்தேன். மோத்திக்குத் தெரியாமல் அது என்ன செய்கிறது என்பதை ஒளிந்திருந்து கவனித் தேன். ஜன்னலில் ஏராள மான பொறை, பிஸ்கட் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதி லிருந்து ஒன்றை எடுத்து, வாயால் கிழித்து, அதை அப் படியே வாயால் கவ்வி, கீழே உதிர்த்துக் கொண்டிருந்தது மோத்தி. அது செய்யும் நல்ல காரியத்துக்கு இடையூறு செய்ய விரும்பாமல், வந்த சுவடே தெரியாமல் கீழே இறங்கி வந்தேன்.

தூக்கம் வராமல் டி.வி. பார்த்துக் கொண் டிருந்த கார்த்திக், “என்ன தீபிகா, மோத்தி பண்ற சேவையை இன்னிக்குத்தான் கவனிச் சியா?” என்று சிரித்தபடி கேட்டான்.

“ஆமாடா, எவ்வளவு நாளா நடக்குது?”

“இருபது நாளாச்சுக்கா.”

“எப்படி இதை நான் கவனிக்காம விட் டேன். எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? எப்படி ஆரம்பிச்சுது இது?” என்று ஆச்சர்ய மாகக் கேட்டேன். டி.வி.யை ஆஃப் செய்து விட்டு, கார்த்தி தன்னுடைய மொபைல் போனை ஆன் செய்து, என்னிடம் கொடுத் தான். “இந்த வீடியோக்களைப் பாரு, உனக் குப் புரியும்” என்றான். நான் அவனருகில் போதிய இடைவெளிவிட்டு அமர்ந்து, அவன் காட்டிய வீடியோக்களைப் பார்த்துச் சிலிர்த் துப் போனேன்.

அதில், ஒட்டிய வயிறுகளோடு தெரு நாய்கள் ஏதாவது உணவு கிடைக்காதா என்ற பரிதவிப்போடு தெருவில் அலைகின்றன. அதை பால்கனி வழியாகக் கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்கிறது மோத்தி. பிறகு, தனக்காக வைக்கப்பட்ட உணவை வாயில் கவ்வி, கீழே போடுகிறது. அதனை அந்த மூன்று நாய்களும் தின்று பசியைத் தீர்த்துக் கொண்டன.

அடுத்த வீடியோவில், அப்பா ஒரு மூட்டை நிறையப் பொறை, பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து வருகிறார். அதில் பத்துப் பத்து பாக்கெட்டுகளை ஜன்னலில் அடுக்கி வைக்கிறார். அன்றிரவு, அந்த பாக்கெட்டுகளை வாயால் கிழித்து தெரு நாய்களுக்குப் போடுகிறது மோத்தி. மூன்றாக இருந்த தெரு நாய்கள் இப்போது பத்தாக உயர்ந்திருக்கிறது. அத்தனை நாய்களும் அண்ணாந்து மோத்தி யைப் பார்த்து வாலாட்டுகின்றன. மோத்தியும் பதிலுக்கு வாலாட்டுகிறது. அந்த வீடியோக் களைப் பார்க்கவே அவ்வளவு பரவசமாக இருந்தது.

“சூப்பர் கார்த்தி, ஐந்தறிவு ஜீவனுக்கு எவ்வளவு ஈகை குணம் இருக்குப் பார்த்தியா? ஒரு காலத்துல மனுஷங்க எல்லோரும் இப்படித்தான் இருந்தாங்க. இப்போ, மிருகங் களெல்லாம் மனுஷங்க மாதிரி மாறிட்டு வருது. மனுஷங்க எல்லாம் மிருக குணங் களோட மாறிட்டு வர்றாங்க” என்றேன். அதனை அவன் ஆமோதித்தான்.

“தீபிகா... சாப்பிட இட்லியும் கிச்சடியும் பண்ணி வெச்சுருக்கேன். சாப்பிட வா” என்று அழைத்தாள் அம்மா.

“சாப்பிடுறதைவிட ரொம்ப முக்கியமான வேலை இருக்கும்மா. அதை முதல்ல முடிச்சுட றேன்” என்றபடி மீண்டும் பால்கனிக்குச்

சென்று லைட்டைப் போட்டேன். நான் வருவ தைக் கண்டு, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது மோத்தி. முதலில் பிணைப்புச் சங்கிலியி லிருந்து மோத்தியை விடுவித்தேன். அவ்வளவுதான். முன்னங்கால்களை என்மீது போட்டுத் தாவிக் கொஞ்சியது. அரைமணி நேரம் அதோடு பேசினேன்; பாராட்டினேன்; மோத்தி எல்லாவற்றையும் சிணுங்கலோடு ஏற்றுக் கொண்டது.

அன்றிலிருந்து வேலை முடிந்து எப்போது நான் வீடு திரும்பினாலும் முதல் வேலையாக, பால்கனிக்கு வந்து மோத்தியுடன் கொஞ்ச நேரம் உடனிருப்பேன். அப்போ தெல்லாம் கழுத்துச் சங்கிலியை நீக்கிவிடுவேன். தினமும் அவனைப் பார்க்க வரு கிறேன் என்பதில் மோத்திக்கு அவ்வளவு மகிழ்ச்சி யாக இருந்தது.

அப்படித்தான் கடந்த வாரம் மேலேறி வந்தேன். மோத்தி கீழே காத்திருந்த நாய்களுக்குப் பொறைகளை யும், பிஸ்கட்டுகளையும் போட்டுக் கொண்டிருந்தது. நான் காத்திருந்தேன். நான் வந்துவிட்டதை அறிந்து மிக வேகமாகத் தன் வேலையை முடித்துவிட்டு என்னைப் பார்த்துக் குரைத்தது.

அதற்குச் சங்கிலியைக் கழற்றிவிடு என்று அர்த்தம். நானும் மோத்தியைப் பிணைத்திருந்த சங்கிலியை அவிழ்த்துவிட்டு மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்தேன். மோத்தி வழக்கம் போல் என்னோடு விளையாட ஆரம்பித்தது. சில நிமிடங்களில் சென்றிருக்கும் கீழே இருந்து தெரு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் எட்டிப் பார்த்தேன். மோத்தி யும் தாவி நின்றபடி எட்டிப் பார்த்தது.

வழக்கமாக உணவைச் சாப்பிடக் கூடும் பத்து நாய்களுடன் புதிதாக ஐந்து நாய்கள் இருந்தன. எங்கிருந்தோ வந்த அவை மோத்தி போட்ட பொறைகளை அபகரிக்க முயற்சி செய்தன. தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை வேறு நாய்கள் தின்ன முயல்வதைக் கண்டு, மற்ற நாய்கள் அவற்றை எதிர்த்துக் குரைத்தன. பதிலுக்குப் புதிய நாய்களும் குரைத்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் களேபரம் அதிக மாகிவிட்டது. நாய்களின் குரைப்பு சத்தம், தூங்கிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களையும் எழுப்பி விட்டது. கீழே வாசலருகே நின்று கார்த்தி அந்தப் புதிய நாய்களை விரட்ட முயன்று கொண்டிருந்தான். நான் அவற்றை விரட்டு வதற்கு ஏதாவது கையில் கிடைக்காதா என்று அக்கம் பக்கம் பார்த்தேன். பொறை பாக்கெட் டுகள் கண்ணில் பட்டன. உடனே அதைப் பிரித்து, பொறையைக் கல்லாகப் பாவித்து, அந்தப் புதிய நாய்களை நோக்கி வீசினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

நான் அந்தப் புதிய நாய் களை விரட்ட முயல்கிறேன் என்பதைப் புரிந்துகொண்ட மோத்தி, சட்டென்று பால் கனியிலிருந்து கீழே குதித் தது. இந்தச் செயலை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மோத்தி குரைத்தபடி அந்த நாய்களை எதிர்த்தது. அவையோ, மற்ற நாய்களை விட்டுவிட்டு மோத்தியைச் சூழ்ந்து கொண் டன. ஐந்து நாய்களும் ஒட்டுமொத்தமாக மோத்தி மீது பாய்ந்து, அதைக் கடிக்கத் தொடங்கின. இதை எதிர்பார்க்காத மோத்தி, அவற்றிடம் மாட்டிக் கொண்டது.

“டேய்.... மோத்தியைக் காப்பாத்துடா” என்று கீழே நின்ற கார்த்தியிடம் கூறிவிட்டு, நான் வேகமாகக் கீழே இறங்கினேன்,

வாசலில் அம்மாவும் அப்பாவும் பதறிக் கொண்டிருந்தார்கள். கார்த்தியைக் காண வில்லை. மோத்தியையும் காணவில்லை. அந்த ஐந்து நாய்களையும் காணவில்லை.

நான் மாடியை விட்டு இறங்கி வருவதற்குள் மோத்தியை அந்தப் புதிய நாய்கள் இழுத்துக் கொண்டு சென்றன. துரத்திச் சென்ற கார்த்தியை அவை நெருங்கவிடவில்லை. மோத்தியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களும் ஓடினோம். பத்துக் கும் மேற்பட்டவர்கள் ஓடிவருவதைக் கண்ட அந்த நாய்கள் மோத்தியை அப்படியே

போட்டுவிட்டு ஓடின.

நாங்கள் எல்லோரும் நெருங்கிப் பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் இருந்தது மோத்தி. அந்த முரட்டு நாய்கள் என் மோத்தியைக் குதறி வைத்திருந்தன. ஈனஸ்வரக் குரலில் ஓலமிட்டது மோத்தி. அதன் கண்கள் என் னைப் பார்த்து ‘காப்பாத்திடு தீபிகா’ என்று பரிதவிப்போடு கெஞ்சின.

“மோத்தி” என்று கதறியபடி அதனருகில் அமர்ந்து கதறி அழுதேன். சற்று நேரத்துக் கெல்லாம் மோத்தி இறந்து விட்டது. அதை எங்கள் வீட்டுக்குப் பின்பக்கம் புதைத்தோம்.

‘தீபிகா’ என்று அழைத்த கார்த்தியின் குரல் கேட்டு, மோத்தியின் நினைவுகளி லிருந்து மீண்டேன். அவன் என் கண்கள் துளிர்த்திருந்ததைப் பார்த்து நான் மோத்தியைப் பற்றிய நினைவுகளிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதைப் புரிந்துகொண்டான். அவனுடைய மொபைலை என்னிடம் கொடுத்து, “இந்த வீடியோவைப் பாரு தீபிகா” என்றபடியே கொடுத்தான்.

அதனை வாங்கிப் பார்த்த நான் அப்படியே அதிர்ந்து போனேன். கடந்த வாரம் மோத்தி இறந்த சம்பவங்கள் அத்தனையும் படமாக்கப் பட்டிருந்தன. “எது கார்த்தி, இந்த வீடியோ?” என்று கேட்டேன்.

“எதிர் வீட்டுல இருக்கானே விக்னேஷ். அவன் எல்லாத்தையும் அன்றைக்கு வீடியோ எடுத்து இருக்கான். நேத்தி எங்கிட்டே வந்து கொடுத்து, “உங்க யுடியூப்ல போடுங்கண் ணே”ன்னு சொன்னான். அதான் வாங்கி வெச்சுருக்கேன்” என்றான்.

“நீ இந்த வீடியோவை என்ன பண்ணப் போறே கார்த்தி?”

“நேத்து நைட்டே உருக்கமா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன். அதை என்னோட குரல்ல மோத்தி பேசுற மாதிரி பதிவு பண்ணி, இன்னைக்கு நைட் யுடியூப்ல ஏத்திடலாம்னு இருக்கேன். லைக் அள்ளும். பத்து லட்சம் பேருக்கும் மேல பார்ப்பாங்க. பெரிய வைரல் வீடியோவா ஆகும். பணமும் லட்சக்கணக்கில் வரும்” என்றான்.

“கார்த்தி முதல்ல இந்த வீடியோவை அழிச்சுடு. விக்னேஷ் போன்ல இந்த வீடியோ இருந்தா, அதையும் அழிச்சிடு. யுடியூப்ல தயவு செய்து இந்த வீடியோவைப் போட்டு டாதே” என்றேன்.

கார்த்திக் என்னைக் குழப்பமாகப் பார்த்தபடியே, “ஏன் தீபிகா?” என்று கேட்டான்.

“மோத்தியோட சாவைப் பணமாக்குற எண்ணமே ரொம்பத் தப்புடா. அது நம்ம மோத்தி. அதோட சாவு மூலமா எந்த ஆதாயத்தையும் நாம் தேடக் கூடாதுடா. அது அசிங்கம். அத்தோட, அது பெரிய தவறான முன்னுதாரணமா ஆயிடும். இந்த வீடியோவை நீ யுடியூப்ல போட்டா, அது மோத்தியை நாம் அவ மரியாதை பண்ற மாதிரி” என்று ஆரம்பித்து, அவனுடன் பத்து நிமிடங்கள் பேசினேன். அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட கார்த்தி உடனடியாக அந்த வீடியோவை அழித்தான். உடனடியாக விக்னேஷுக்கும் போன் செய்து அவனிடமிருந்ததையும் அழித்துவிடக் கூறினான்.

நன்றியுள்ள என் மோத்திக்கு நான் நன்றி உள்ளவளாக இருந்த உணர்வில் மகிழ்ந்தேன். என் நினைவிலிருந்த மோத்தி என்னைப் பார்த்து வாலாட்டியது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :