ஒரு வார்த்தை!


அனுஷா நடராஜன்இமாலயப் பிரதேசம். யாருமற்ற அந்தப் பனிமலையில் நடந்து கொண்டிருக்கிறது அந்த இந்திய இராணுவக் குழு! கடும் பனிப்பொழிவு. தாங்கமுடியாத குளிர், கனமான உடைமைகள்... ஆனால் என்ன? எல்லையைக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே!

தலைமை அதிகாரி முன் செல்ல, 15 சிப்பாய்களும் களைப்புடன் பின்தொடர்கின்றனர். எல்லோருக்கும் பசி, தாகம். சூடாகத் தேநீர் அருந்தினால் தேவலையாக இருக்கும்தான்; ஆனால், ஆள்நடமாட்டமே இல்லையே! அலுப்பாக நடந்து சென்றவர்களின் கண்களில்... அடடே ஒரு தேநீர்க் கடை தென்பட்டது. வேகமாக முன்னேறிப் பார்த்தால், தேநீர்க் கடைதான்; ஆனால் பூட்டப்பட்டிருந்தது. ஒரே ஏமாற்றம்!

ஸார், பூட்டை உடைச்சு நாம்பளே டீ தயாரிச்சா என்ன?" என்று கேட்டான் ஓர் இளைஞன்.

நோ... நோ... அது தப்பு!" என்று முதலில் மறுத்தாலும் இளகிய மனம் கொண்ட அந்த அதிகாரி, அரை மனதாக அதற்கு ஒப்புக் கொண்டார்.

இத்துப் போன பூட்டு, தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே பால் பவுடர், டீத்தூள், சர்க்கரை மட்டுமல்ல; பிஸ்கெட்டுகளும் இருந்தன. சிப்பாய்களுக்கோ ஒரே சந்தோஷம்!

சூடாகத் தேநீர் தயாரித்து, பிஸ்கெட்டுடன் ருசித்துப் பசியாறுகிறார்கள்; அதிகாரிக்கும் பரம திருப்தி! இராணுவ வீரர்கள் வெளியேற தயாராகிக் கொண்டிருக்க, அந்த அதிகாரியோ, ஐயாயிரம் ரூபாயை சர்க்கரை டப்பாவின் அடியில், யாரும் அறியாமல் வைத்து விட்டுக் கிளம்புகிறார்!

மூன்று மாதங்கள் கழிந்தன. அந்த இராணுவக் குழு முகாமுக்குத் திரும்பும் வழியில் அதே டீக்கடையைக் கடக்க நேரிடுகிறது.

இந்த முறை கடையில் முதியவர் ஒருவர் தென் படுகிறார். வாடிக்கையாளர்களை வரவேற்று

தேநீர் தந்து உபசரிக்கிறார் அந்த உரிமையாளர்.

இது நான் வளர்ந்த கிராமம். இன்று தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதால், பலரும் ஊரை விட்டே போய் விட்டார்கள். சில கிலோ மீட்டர்கள் தள்ளி வயதான என் பெற்றோரும் மனைவியும் இருக்கின்ற னர்" என்று ஆரம்பித்தவர், சொன்ன பரிதாபக் கதை களைக் கேட்டு அனைவருக்கும் சோகம் கவிந்தது.

கடவுளுக்குக் கண்ணே இல்லை" என்று சிப்பாய் ஒருவர் மனம் கலங்க, அப்படிச் சொல்லாதீங்க தம்பி! என் ஒரே மகனைத் தீவிரவாதிகள் ஏதோ தகவல் கேட்டு மிரட்டியுள்ளனர். அவனுக்கு அது தெரியாமல் போகவே, அவனை அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, என்னிடம் பணமே இல்லை. கடவுளைப் பிரார்த்தனை செய்தபடியே டீக்கடைக்கு ஓடோடி வந்தேன். உள்ளே இருக்கும் பொருள்களை விற்றால் ஏதாவது தேறுமான்னு பார்க்கப் போனேன். வெளிப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் என் ஒரே நம்பிக்கை யும் நொறுங்கியது. அழுதபடியே தேடினேன். நம்புங்க தம்பி. சர்க்கரை டப்பா அடியில்

ஐயாயிரம் ரூபாய் இருந்தது. அந்தக் கடவுள்தான் என் மீது இரக்கப்பட்டுப் பணத்தை வைத்து விட்டுப் போயிருக் கிறார்!" என்றார் தழுதழுத்தபடி!

15 சிப்பாய்களின் கண்களும் ஒரே சமயத்தில் ஆஃபீ சரின் முகத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கின. அவர் பனித்த கண்களை மறைத்துப் புன்னகைத்தார்!

இந்த கொரோனா சமயத்தில் எல்லாருக்கும் ஏதேதோ கஷ்டங்கள், தொழில் நசிந்து, வேலை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, மருத்துவமனை களில் குவிந்து, கைகளைப் பிசைந்து நிற்கிறார்கள்.

நாமும் நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளைத் தேவைப்படுவோருக்குச் செய்து மனிதநேயம் காப்போமா?

‘கருணை உள்ளங்கள் எல்லாமே கடவுள் இல்லம்தான்.’

அன்பே சிவம்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :