எங்கும் நிறைந்த அவதாரம்!

ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி (25.5.2021)
எம்.கோதண்டபாணி‘அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் இறைவன்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்துவதே பகவான் மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் வாக்கை நிறைவேற்றி, அவனை ரட்சிப்பதற்காக அவ தரித்தவர் ஸ்வாமி நரசிம்மர் என்பது அனைவரும் அறிந்த புராண வரலாறு. ஆனாலும், இது தவிர சில தெய்வ சங்கல்பங்களை நிறைவேற்றவும் இந்த அவதாரம் நிகழ்ந்தது என்பது அனைவரும் அறிய வேண்டிய அற்புத விஷயம் ஆகும்.

ஒரு சாபத்தின் காரணமாக பூலோகத்தில் அசுரனாகப் பிறவியெடுத்து வாழ்ந்து வந்தான் வைகுந்தத்தின் வாயிற்காப்பாளன் ஹிரண்யகசிபு. சாப விமோசனம் தந்து அவனை மீண்டும் வைகுந்தத்துக்கே திரும்ப அழைத்துக் கொள் வதென்பது நரசிம்ம அவதாரத்தின் ஒரு காரணம்.

ஹிரண்யகசிபுவின் மனைவி கயாதுவுக்கு, ‘உனக்குப் பிறக்கும் புத்திரன் மகா பாகவதனாகப் பிறப்பான். அவனை பகவானே நேரில் வந்து ரட்சிப்பார்’ எனும் நாரத மகரிஷி யின் வரத்தை மெப்பிப்பதென்பது மற்றொரு காரணம்.

பிரம்ம தேவனை நோக்கிக் கடும் தவமிருந்த ஹிரண்யகசிபுவுக்கு, உனக்கு மனிதர்களாலும், தேவர்களாலும், மிருகங்களாலும், பகலிலும், இரவிலும், உள்ளேயும், வெளியேயும், மரணம் சம்பவிக்காது" என அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் தோன்றியதே நரசிம்ம அவதாரம் என்பதும் இன்னுமொரு காரணம்.

பகவான் மகாவிஷ்ணு தேவரூபமும், மனித வடிவமும் இன்றி, கழுத்துக்கு மேல் சிம்ம வடிவமும், கழுத்துக்கு கீழே நர (மனித) வடிவமும் கொண்டு, வைசாக மாத சுக்லபட்ச சதுர்த்தி திதி ஸ்வாதி நட்சத்திரம் சித்த யோகத்தில் ஹிரண்யகசிபு வின் ஆஸ்தான மண்டபத்தின் தூண் ஒன்றில் தோன்றி னார். தனது நகங்களையே ஆயுதமாகக் கொண்டு, உள், வெளியின்றி வாயிலில் அமர்ந்து, பகல், இரவு இல்லாத பிரதோஷ வேளையில் தனது மடியில் கிடத்தி ஹிரண்யகசிபு வுக்கு மோட்ச பிராப்தியைக் கொடுத்ததாக நரசிம்ம அவதார வரலாறு நமக்கு உரைக்கிறது.

ஸ்ரீ நரசிம்ம வழிபாட்டுக்கு உகந்த நேரம் பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரையாகும். இன்று, இவ்வேளையில் விரதமிருந்து ஸ்ரீ நர சிம்மரை வழிபட்டால், வேண்டும் வரங்களைப் பெற்று வாழ்வில் சிறக்க லாம். இன்றைய தினத்தில் ஸ்ரீ நரசிம்மரின் படம் அல்லது விக்ரஹத்துக்கு சிவப்பு நிற பூக்களைக் கொண்டு சஹஸ்ரநாமா வளி, அஷ்டோத்ரம் போன்றவற்றைச் சொல்லி அர்ச்சித்து வழிபட வேண்டும். மிகவும் எளிதாகக் தயாரிக்கக்கூடிய நீர் மோர், பானகம் போன்றவற்றை அவருக்கு நிவேதனமாகப் படைக்கலாம்.

ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படும் அஹோபிலம், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ‘அஹோ’ என்றால் சிங்கம் என்று பொருள். ‘பிலம்’ என்றால் குகை எனப் பொருள். பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்து அருளியதால் இத்தல பெருமான், ‘பிரகலாத வரதன்’ எனவும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலைக் கோயிலில் பக்தன் பிரகலாதனுக்காக ஸ்ரீ நர சிம்மர் வெளிப்பட்ட, உக்ர ஸ்தம்பத்தை பக்தர்கள் இன்றும் தரிசித்து வணங்கலாம்.

மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க விரும்புவதாக ஸ்வாமியிடம் கருடன் விண்ணப்பித்தார். கருடனின் வேண்டுகோளை ஏற்ற பகவான், இத்தலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் அவருக்குக் காட்சி கொடுத்தார். கருடனும் அந்தத் திருமூர்த்தங்களை தரிசித்து வழிபட்டதாக இத்தல புராணம் கூறுகிறது. பகவான் காட்சி கொடுத்த ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே என்பது குறிப்பிடத்தக்கது!

பிரகலாதனுக்காக நரசிம்ம உருவம் தாங்கி ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, அவனது பிரார்த்தனையை ஏற்று அஹோபிலம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி நன்னாளில், ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அருள்புரியும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

ஸ்ரீ நரசிம்ம வழிபாட்டினால் எத்தகைய திருஷ்டி தோஷமும் அணுகாது. கணவன் மனைவி உறவு பலப்படும். எதிரிகள் தொல்லை ஒழியும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இவை தவிர, ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி நாளன்று இப் பெருமான் அருளும் கோயில்களில் பிரதோஷ வேளையில் நடைபெறும் பூஜையை ஏற்று நடத்தி வைத்தால் கடன் தொல்லைகள், தீராத நோய்கள், வறுமை பிணி, செய்வினை கோளாறுகள் உடனே நீங்கும்.

இத்திருநாளில் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர்க்கு ஸ்ரீ நரசிம்ம அவ தாரத் திருக்கதையை கூறி னாலோ அல்லது படித்துக் காண்பித்தாலோ பக்த பிரகலாதனுக்குக் கிடைத் ததுபோல் ஸ்ரீ ஸ்வாமியின் அனுக்ரஹம் கிடைக்கும்.

‘இந்தத் தூணில் இருக்கிறானா உனது நாராயணன்?’ என்று ஹிரண்யன் கேட்டதும், ‘ஆம்’ என்று பிரகலாதன் கூறிய அடுத்த நொடியே அங்கு ஆவிர்பவித்தவர் நரசிம்ம ஸ்வாமி அல்லவா? அதனால்தானே, ‘நாளை என்பது நரசிம்மனுக்குக் கிடையாது’ என்று ஆன்றோர் கூறிச் சென்றுள்ளனர். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை, செவிமடுத்த அடுத்த நொடியே அதை நிறைவேற்றித் தரும் மகிமை மிக்கவர் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி. ஆகவே, அவரது அவதாரத் திருநாளில் ஸ்வாமியின் திருப்பதம் சிந்தித்து வாழ்வில் நற்பேறுகள் பெறுவோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :