ஹாக்கி உலக ராணி


ஜி.எஸ்.எஸ்மகாபாரதப் போர் நடைபெற்ற குருகே்ஷத்திரம் ஹரியானா மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வாழ்க்கையுடன் தொடர்ந்து கடுமையாகப் போராடி விளையாட்டுத் துறையில் பெரும் வெற்றியை அடைந்து இருக்கிறார்.

சென்ற ஆண்டு, ‘உலகின் தலைசிறந்த தடகள போட்டியாளர்’ என்ற விருதை இவருக்கு வழங்கியது, ‘வேர்ல்டு கேம்ஸ்’ என்ற அமைப்பு. ஹாக்கி விளை யாட்டில் ஒருவர் இந்த விருதைப் பெற்றது இதுவே முதல் முறை. உலகின் பல நாடுகளில் உள்ள விளை யாட்டு விசிறிகள் பலரும் வாக்களித்து இவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

உலகின் தலைசிறந்த மகளிர் ஹாக்கி ஆட்டக்காரர்களில் ஒருவர் ராணி ராம்பால் என்பதில் சந்தேகமில்லை. அவர் அடித்த முக்கியமான சில கோல்கள் தான் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் இந்தியாவை இடம்பெறச் செதுள்ளது என்றால் அது மிகையல்ல. அமெரிக்க மகளிர் ஹாக்கி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டாம் பாதியில் ராணி அடித்த கோல்கள் மறக்க முடியாதவை.

2016ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இவர் பங்கு பெற்றபோது ஒரு சரித்திரம் படைக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் இந்திய ஹாக்கி மகளிர் பிரிவால் ஒலிம்பிக்ஸில் தேர்ச்சி பெற முடிந்தது. அதில் ஜப்பான் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்களை அடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தார் ராணி ராம்பால். இதற்கான அங்கீகாரம் ஒலிம்பிக்ஸ் முடிந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய போது அவருக்குக் கிடைத்தது. தேசிய அணியின் கேப்டன் ஆக்கப்பட்டார்.

அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பாகவே வேறொரு சாதனை செய்திருக்கிறார் ராணி ராம்பால். ஒலிம்பிக் அணியில் இடம் பெற்ற மிக இளம் விளையாட்டு வீராங்கனை இவர்தான். அப்போது அவருக்கு வயது வெறும் பதினான்கு!

ராணியின் தலைமையில் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஹாக்கி மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அதே ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கால் இறுதிச் சுற்றை வென்றது இந்த அணி. இந்த வெற்றிகளில் ராணியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

எத்தகைய பின்னணியிலிருந்து வந்து, இவர் இப்படி சாதனைகளைச் செய்திருக்கிறார் என்ற விஷயம் பலரின் புருவங்களை உயர்த்த வைக்கும். விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பும் பல பெண்களுக்கு ஊக்க மருந்தாக வும் இது அமையும்.

ஹரியானாவில் உள்ள ஷாபாத் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ராணி ராம்பால். அவரது தந்தை கட்டை வண்டி இழுத்து குடும் பத்தை நடத்தி வந்தவர். தன் பெற்றோருக்கு ஒரே மகள் ராணி.

பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பதில் முன்னணி யில் இருந்த மாநிலங்களில் ஒன்று ஹரியானா. அதிலும் ராணியின் குடும்பம் வசித்த மாவட் டம் மேலும் பழைமையானது; பின்தங்கியது. ஹாக்கியில் உயரம் தொட ஆசை என்று ராணி ராம்பால் கூறியபோது, அவரது பெற்றோர் மலங்க மலங்க விழித்தனர். தொடர் வெற்றிகளை தங்கள் மகளால் பெற முடியுமா என்ற சந்தேகம் கூட அந்தப் பெற்றோருக்கு எழவில்லை. மாறாக, ‘அரைக்கால் சட்டையுடன் மகள் விளையாட வேண்டியிருக்குமே, அதைத் தங்கள் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?’ என்பதுதான் அவர்களது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. நல்லவேளை யாக அந்த எண்ணத்தை பின்னுக் குத்தள்ளி மகளுக்கு அனுமதி அளித்தனர்.

மெல்ல மெல்ல ஹாக்கி விளையாட்டில் தடம் பதித்தார் ராணி. தேசிய அணியில் இடம்பெறும் அளவுக்கு தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த தன்ராஜ் பிள்ளை தான் இவரது ரோல் மாடல். துரோணாச்சார்யா விருது பெற்ற பிரபல பல்தேவ் சிங் இவருக்கு ஹாக்கி பயிற்சியாளராகக் கிடைத்தது பெரும் பேறாக அமைந்தது.

மிகக் கடுமையாக உழைத்தேன். ஒருவேளை என் இலக்கை நான் அடைய முடியாமல் போயிருந்தாலும் கூட, என்னுடைய மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறேன் என்ற திருப்தி கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது" என்று தனது சிறந்த மனநிலையை வெளிப்படுத்துகிறார் அர்ஜுனா, பத்மஸ்ரீ என்று பல அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும் ராணி ராம்பால்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :