முகமூடி அணிகின்ற உலகிது

மேகங்கள் வாழும் சொர்க்கம் 6
ரமணன்
ஓவியம் : ரமணன்இந்திய நதிகளிலேயே ஆண் பெயரைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நதி பிரம்ம புத்திரா. இமயத்தில் திபெத் பகுதிகளிலிருந்து தொடங்கி, 1800 மைல் ஓடிக் கடலில் கலக்கிறது. அதன் பெரும் பகுதி இந்தியாவில் அசாம் மாநிலத்தில்தான் ஓடுகிறது. உலகிலேயே நதியின் நடுவிலிருக்கும் மிகப்பெரிய தீவு இந்தத் தீவில்தான் இருக்கிறது. அந்தத் தீவின் பெயர் ‘மஜோலி’.

கௌஹாத்தியில் இருந்து 300 கி.மீ. தொலை விலிருக்கும் மஜோலி தீவு அசாமின் கலாசாரம் பிறந்த தொட்டில் என வர்ணிக்கப்படுகிறது. 144 சிறிய கிராமங்களைக் கொண்ட இந்தத் தீவு இப்போது தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில முதல்வர் சர்பானாந்தாவின் தொகுதியைச் சேர்ந்தது இந்தத் தீவு.

ஜோர்ஹட் நகரில் நதிக்கரையில் தயாராக இருக்கும் படகு, கிளம்ப ஒரு மணி நேரம் தாமதமாகும் என்றார்கள். காரணம் நதியில் பரவியிருக்கும் பனிமூட்டம். இங்கு பயண நேரங்களை இயற்கைதான் தீர்மானிக்கிறது. எல்லா நாட்களிலும் அது ஒரே மாதிரியான மூடிலிருப்பதில்லை. படகுத்துறையின் அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது அசாம் சுற்றுலாத் துறையின் எம்.வி. மஹாபானு சொகுசுக் கப்பல். டாலரில் கட்டணம் வசூலிக்கும் இந்தக் கப்பல் மஜோலியைப் பார்க்கவரும் வெளிநாட்டினருக்காக கௌஹாத்தியில் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் கலைகளையும் கலைஞர்களையும் போற்ற மட்டுமே உருவாக்கப்பட்ட இந்தத் தீவு, இன்று அதன் அடையாளங்களை இழந்து ஒரு சராசரி இந்திய நகரமாகிவிட்டது என்பது அந்தப் பெரிய படகில் நம்முடன் ஏறிய மாணவர்கள், அரசுப் பணியாளர்களின் கூட்டமும் அவர்களுடையகார்கள், இருசக்கர வாகனங்களிலிருந்து தெரிகிறது. நாம் போகப் போவது பாரம்பரியமிக்க இடத்துக்குத்தானா? என்ற சந்தேகம்கூடத் தலைதூக்கியது.

கடலென விரிந்திருக்கிறது பிரம்மபுத்திரா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்ப்பரப்பு. ‘நதியில் பயணிக்கிறோம்’ என்ற உணர்வே இல்லை. தீவுக்கு ஒரு மணி நேரப் பயணம். திரும்பும்போது நதியை எதிர்த்து இரண்டு மணி நேரமாகுமாம் என்பதைக் கேட்ட பின்னர்தான் நதியின் வேகம் நமக்குத் தெரிகிறது.

15ஆம் நூற்றாண்டில் அன்றைய மன்னர்களின் ஆசியுடன் ரீமத் சங்கர தேவும் அவரது சீடர் மஹாதேவமும் புதிய வைஷ்ணவ சம்பிரதாயங் களைப் பரப்ப இங்கு ‘ஸத்ரா’ என்ற அமைப்புகளை நிறுவினர். கலைகளை முறையாகக் கற்று, அதில் ஒருமுகமாக மனத்தைச் செலுத்துவது உயர்ந்த பக்தி என்பதைக் கற்பிக்க, இந்த ஸத்ராக்கள் இயங்கின. இதில் இசை, நடனம், நாடகம், உபன்யாசம், ஓவியம், கைவினைக் கலைகள் கற்பிக்கத் தனித்தனி ஸத்ராக்கள் நிறுவப்பட்டு, அவற்றில் குரு பரம்பரையில் கலைகள் கற்பிக்கப்பட்டன.

அவற்றில் சில இன்றும் இயங்குகின்றன என்பதை அறிந்ததால் அவற்றைப் பார்க்கவே இந்தப் பயணம்.தீவின் முக்கியப் பகுதி முழுக்க முழுக்கக் கமர்ஷியலாகி இருக்கிறது. நகரத்தைத் தாண்டி மணல் மேடுகளான பாதையில் கிராமத்தை நோக்கிச் செல்லும் நம்மை நிறுத்துகிறது ஒரு அசத்தலான சின்ன ஏரி. போஸ்ட் கார்டு பிக்சர் போல அழகான தோற்றம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் சட்டென்று ஒரு அசலான கிராமத்துக்குள் நுழைகிறோம். இந்தக் கிராமத்தில்தான், அசாமின் மரபுக் கலைகளில் ஒன்றான முகமூடிகள் தயாரிக்கும் கலை 5000 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு, போற்றப்படும் சாமகுரி ஸத்ரா இருக்கிறது. இதன் பரம்பரையில் வந்த இன்றைய ஸத்ரதிகார் (தலைவர்) குஷ்கந்தா தேவ கோஸ்வாமியைச் சந்திக்கிறோம்.

முகமூடி என்பது சரியான சொல் இல்லை. ஆங்கில மாஸ்க் என்பது முக அடையாளம் தெரியாமல் மூடிக்கொள்வதைக் குறிப்பது. நாங்கள் செய்வது முகங்கள். அதனால்தான் முக சம்ஸ்கிரிதிற" என்கிறார்.பாகவத இதிகாசக் கதைகளின் பாத்திர முகங்களை, அந்தப் பாத்திரம் ஏற்பவருக்காகச் செய்வதுதான் இந்தக் கலை. இதில் முக்கியமான விஷயம் அந்தக் கலைஞர்களே அதைத் தயாரிக்கிறார்கள்.

ஒரு முகம் எப்படி உருவாகிறது என்பதைத் தேவ கோஸ்வாமி விளக்குகிறார்.ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசும் இவர் இந்தக் கலைஞர்களின் பரம்பரையில் வந்தவர். நாடகக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்ற கலைஞர். முதலில் மூங்கில் இழைகளால் உருவாக்கப்பட்ட முக அவுட்லைன். அந்த இழைகள் ஈரமாக இருக்கும்போது செயப்படு வதால், அது நல்ல வெயிலில் உலர்ந்தபின், அதன்மீது மெல்லியதாக நெயப்பட்ட கைத்தறி துணி போர்த்தப்பட்டு, அதன்மீது ஒரு கலவை பூசப்படுகிறது. இந்தக் கலவை பிரம்மபுத்திராவின் வண்டலிலிருந்து சலித்தெடுத்த மென்மையான மண், பசுவின் சாணி, வாழைமட்டைச்சாறு, மரப் பட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டது. இதை அந்தத் துணியின் மீது பூசி, விரல்களால் அழுத்தி, அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை உருவாக்க வேண்டும்.

இதை நிழலில் 3 அல்லது 4 நாட்கள் உலர வைக்க வேண்டும். பின்னர் அவற்றில் கண், உதடு போன்ற இடங்களை மெல்லிய கத்தியால் செதுக்கிச் சீராக்க வேண்டும். பின்னர் அதற்குப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் வண்ணங்கள் பூசவேண்டும். இந்த வண்ணங்களும் இயற்கைப் பொருட்களான, பச்சை இலை, மஞ்சள், எலுமிச்சைச்சாறு, வாழைப்பூ, கடுக்காய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது. இத்தனையும் கலைஞர்களாலும் அவரது குடும்பத்தாராலும் மட்டுமே செயப்படுகிறது.

அணிந்துகொள்ளும் முகம் அதிக எடையில்லாமல் ஆடையைப்போல எளிதாக அணியக் கூடியதாக இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் நிலையிலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மெனக்கெடல்.

இந்தக் கலையினால் எங்களுக்குப் பெரிய வருமானம் இல்லை. ஆனாலும், இது நமது பாரம்பரியம் என்பதிலும், ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் ராசலீலா விழாவில் இந்த மாவட்டத்தினர் மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்து பார்ப்பவர்கள் ஊக்குவிப்பதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடகக் கலைஞர்கள் இங்கு வந்து தங்கி இதைக் கற்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்" என்கிறார் தேவ கோஸ்வாமி.

நாங்கள் முகங்கள் தயாரிப்பை மட்டும் கற்பிக்கவில்லை. கதாபாத்திரத்தின் முகத்தை அணிந்திருக்கும் கலைஞருக்கு அதற்கான உடல்மொழியையும் கற்பிக்கிறோம், பாருங் களேன்" என்று ஒரு பூதகணத்தின் முகத்தையும் ஜடாயூ முகத்தையும் அணிந்து காட்டுகிறார். பின்னர் அவர் கைகளை விரிக்கும் விதமும் கால்களின் நிலையும் அந்தப் பாத்திரத்தைப் பேசுகின்றன. கைதட்டலாம் போலிருந்தது.

அருகிலிருக்கும் ராவணனின் முகத்தை அணிந்து காட்டச் சொல்லுகிறோம். அது முடியாது. ஒவ்வொன்றும் கலைஞர்களின் முக அளவுக்கேற்ப தயாரிக்கப்படுகிறது. ராவணனாக நடிப்பவரின் முகம் என்னுடையதைவிடப் பெரிது" என்று அவர் சொன்ன பின்னர்தான் இந்த முகங்கள் தயாரிப்பிலிருக்கும் மற்றொரு சிறப்பு தெரிந்தது.

மெல்லத் தங்கள் கலையை நவீனப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இவர் முகங்களில் தாடைப்பகுதி பேசுவதற்கேற்ப அசையும் வகையில் அமைத்திருக்கிறார். இது நடிகருக்கும் பேச எளிதாக இருக்கும்; அதே நேரத்தில் ரசிகர்களுக்கும் கேட்கும் வசனம் இயல்பாக இருக்கும்" என்கிறார்.

அறையின் ஒரு மூலையில் நான்கு அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் உக்கிரமாக நரசிம்மர். அதைத் தோளில் அணிந்துகொள் பவரின் கண்கள் வெளியே பார்ப்பதற்கும், நரசிம்மரின் கைகளை உள்ளிருந்தே இயக்கவும் வசதி செயப்பட்டிருக்கிறது. விருது வாங்கும் விழாவில் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அளிக்க இதைத் தயாரித்தேன். ஆனால், இத்தனை பெரியதற்கெல்லாம் அனுமதியில்லை. தில்லிக்குக் கொண்டுவர வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள்.

முகமூடி கலையைப்போல் இந்தக் கிராமங்களில் இசை, நடனம், மண் பாண்டங்கள், ஓவியம் கற்பிக்கும் ஸ்த்ராக்கள் இருக்கின்றன. இந்த ஸத்ராக்களின் முகப்பு ஒரு கோயில் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பெரிய கூடத்தில் நடன, இசைப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

அறையின் ஒரு புறத்தில் அலங்கரிக்கப்பட்டு பூஜை செயப்பட்ட கிருஷ்ணர். அதைச் சன்னிதி எனச் சொல்லமுடியாது. அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பூஜை இடம். அதன் கூடத்தின் ஓரத்தில் பெரிய முரசு. அந்தக் கூடத்தின் நடுவில் கலைஞர்களைத் தவிர எவரும் நடக்கக்கூடாது. பக்கத்திலிருக்கும் பாதை வழியாகச் சென்றுதான் நாம் கிருஷ்ணரைத் தரிசிக்க முடியும். கலை கற்கும் இடத்தை அவ்வளவு புனிதமாகக் கருதுகிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பும் பூஜைக்குப் பின்தான் தொடங்கு கிறது. கடவுள் பக்தி இல்லாதவர்களால் கலைகளைக் கற்றுக்கொள்ள முடியாது என்பது இவர்களின் நம்பிக்கை. நாம் சென்றபோது, மாலை நேரத்தில் வகுப்பு முடிந்து மாணவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானவர்கள் 7 அல்லது 8 வயது மதிக்கக்கூடிய வருங்கால நடனக் கலைஞர்கள். சின்னப் பஞ்சகச்சம் மாதிரியான உடை, அழுத்தமான ஆரஞ்சு கலர் ஜிப்பாவில் ஓடிவரும் காட்சியைப் பார்க்கிறோம். வைஷ்ணவ கலாசாரம் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில்கூட இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

திரும்பும்போது படகிற்குக் காத்திருக்கிறோம். அருகில் நிற்கும் தீவைச் சேர்ந்த உள்ளூர் பயணியிடம் பேசுகிறோம். 1000 சதுரக் கிலோ மீட்டராக இருந்த இந்தத் தீவு ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதும் பல கிராமங்கள் அழிந்து இன்று வெறும் 300 சதுரக் கிலோ மீட்டாராகிவிட்டது. நிறையத் திட்டங்கள் எல்லாம் பேப்பரில்தான் இருக்கிறது. தீவை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கச் செய்யும் முயற்சிகளைவிட இது முக்கியமில்லையா சார்?" என்றார்.

படகு வந்துவிட்டது. நமக்கு உட்காரச் சீட் கிடைப்பது தான் இப்போது முக்கியம் என்பதால் வேகமாக அதை நோக்கி நகருகிறோம்.

(பயணம் தொடரும்)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :