வண்ணத்தில் கரைக்கிறேன்


தமிழ் செல்வன்
ஓவியம் : தமிழ்இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன் இனி யாரோடும் பகைமுரண் இல்லை யாவரும் கேளிர்." கடைசியாக தாமிரா தன் வலைப்பக்கத்தில் எழுதியது.

தாமிர மறைவு அவரது பெரிய நட்பு வட்டத்தை மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. தாமிரா எழுதிய முதல் சிறுகதை ‘குஞ்சு’ என்ற பெயரில் கல்கியில் வந்தது.

புதிய படைப்பாளர்களை உற்சாகப்படுத்தி அரவணைக்கும் திரு. கல்கி ராஜேந்திரன் சார் கண்டெடுத்து தொடர்ந்து ஊக்கப்படுத்திய படைப்பாளி தாமிரா. அதன் பின்னர் தாமிரா தொடர்ந்து பல பத்திரிகைகளில் குறிப்பிடும் படியாக எழுதிக் கொண்டிருந்தார்.

பாலசந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் மைக்ரோ தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பாலசந்தரின் கவனத்தை ஈர்த்தார். கே.பாலசந்தர் ‘அண்ணி’ என்ற புதிய தொடரை இயக்க, திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பு தாமிராவுக்குக் கிடைத்தது.

பாலசந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவிற்கு அடுத்து வசனகர்த்தாவாக அவரால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர் தாமிரா என்பது குறிப்பிடத்தக்கது. டூயட் மூவிஸ் பிரகாஷ்ராஜ் தன் குருநாதரைப் பெருமைப்படுத்தும் வித மாக நூறாவது படமான பாலசந்தர் டைரக்ஷனில் ‘பொய்’ தயாரானது. அதில் வசனகர்த்தாவாக தாமிராவைப் பெரிய திரையில் அறிமுகப் படுத்தினார் பாலசந்தர்.

எஸ் பிக்சர்ஸ் இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ தாமிராவுக்கு முதல் பட வாய்ப்பு. அதில் வசனம் எழுத எனக்கு வாய்ப்பளித்தார். பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க ‘என்னை அடையாளப்படுத்திய பாலசந்தரைப் போல நான் தமிழை அறிமுகப்படுத்துகிறேன்’ என்றார். ‘ரெட்டச்சுழி’ படத்தில் பிரபல இயக்குநர்களான கே.பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் நடிக்க வைத்தது தமிழ் சினிமாவின் புதிய முயற்சி.

எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது தாமிரா இயக்கியிருக்கும் தொலைக்காட்சிப் படமான ‘மெஹர்’. தமிழ் முஸ்லிம்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தச் சிறுகதையை இரண்டு மணிநேரப் படமாக உருவாக்கினார். மனித உணர்வுகளை அப்பட்டமாகச் சொல்லிச் செல்லும், நுட்பமான உணர்வுகளைத் தேர்ந்த இலக்கியப் படைப்பாக வழங்கினார்.

எழுத்தாளர் சல்மாவை கதை நாயகியாக அறிமுகப்படுத்தினார். கன்னடத்தில் வெளியான அமிர்ததாரே, மாத்தாடு மாத்தாடு மல்லிகே படங்களுக்கும் திரைக்கதை எழுதி னார். சஹானா, அண்ணி, மனைவி, அமுதா ஒரு ஆச்சர்யகுறி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களுக்குத் திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார்.

இயக்குநர் பாலசந்தரின் நினைவாக சிகரம் சினிமாஸ் என்ற சினிமா கம்பெனியை ஆரம்பித்து அதில் குருநாதரின் பட்டறையில் உருவான சமுத்திரக்கனியை ‘ஆண் தேவதை’ படத்தின் கதை நாயகனாக்கி இயக்கினார்.

இதைத் தொடர்ந்து சத்யராஜ், சீதா நடித்த ஒரு வெப் சீரிஸ் முடியும் தருவாயில் உள்ளது.தொலைக்காட்சித் தொடர் பெருங்குடியில் நடைபெற்றதால் தினமும் சென்று வர சிரமமாக இருந்தது. எனவே எங்களுக்குப் புதிய பைக்கை தனது பெயரில் பாலசந்தர் வாங்கித்தந்தார். அது இன்னமும் என்னிடம் உள்ளது. அவர் நினைவாக வைத்துள்ளேன்.

ஒரு முறை புதிதாகத் தொலைபேசி வாங்கி ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் செல்ல அங்கே சார்ஜரில் இருந்த போன் இல்லை.

பட மேனேஜர் அனைவரையும் சோதனை செய்து பார்த்துவிடலாம். அரை மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம் என்றுபோது மறுத்துவிட்டார் தாமிரா.

‘இது தேவையில்லாமல் அனைவரையும் சங்கடப்படுத்தும்’ என்று கூறி மறுத்துவிட்டார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் மேனேஜர் அருகே வந்து ‘நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் பாலசந்தரைச் சந்திக்கவும் என்று கூறினார். நாளைய படப்பிடிப்பு பற்றிப் பேசப் போகிறார் என்று விரைவாக வீட்டிற்குச் செல்ல, பாலசந்தர் தான் வைத்திருந்த தொலைபேசியைத் தாமிராவின் பையில் வைத்து,‘இதை உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். ‘வேண்டாம் சார். வேறு வாங்கிக் கொள்ளலாம்’ என்றபோது ‘நான் வேறு வாங்கிக் கொள்கிறேன். நீ செய்த செயலுக்கு உடனடியாக எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. தயவு செய்து இதை வாங்கிக் கொள்’ என்று கூறி வற்புறுத்தி அந்த செல்லை அன்புடன் அளித்தார். தாமிரா புதிய தொலைபேசி வாங்கியதும் அந்தத் தொலைபேசியை என்னிடம் தான் கொடுத்தார். அவர் நினைவாக வைத்துள்ளேன்.

கரைபுரண்ட படைப்பு நதியின் மரணத்தினை கண்ணீர் துளியால் எப்படி ஈடுசெய்ய முடியும்?

இழப்பின் பெருவலி மிகவும் கொடியது. அன்பு செய்யவும் கோபம் காட்டவுமாக இருந்த இனிய நண்பர் தாமிராவை இழந்து நிற்கிறேன்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :