ஒளி பாய்ச்சிச் சென்றது ஒரு நட்சத்திரம்


எஸ்.சந்திரமௌலிஒரு ஒளிப்பதிவாளராக, ஒரு இயக்குநராக வெளிச்சம் மிகுந்த சினிமா உலகின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்ட, மறைந்தவுடன் அஞ்சலி செலுத்தப்பட்ட ஒரு மிகச் சிறந்த கலைஞன் கே.வி.ஆனந்த். ஆனால், அவனது கல்லூரிக் காலத்துக்குப் பிந்தைய வாழ்க்கைப் பயணம் ஒரு புகைப்படக் கலைஞனாகவே தொடங்கியது என்பது பலருக்குத் தெரியாது. அந்தப் பயணத்தின் தொடக்கப்புள்ளி ‘கல்கி’ என்பதை இன்றைய கல்கி வாசகர்கள் கூட மறந்திருக்கலாம். ஆனந்தின் விரல் வண்ணத்தில் வெளியான கல்கி அட்டைப் படங்கள் சில நூறு இருக்கும். கல்கி வட்டத்துக்குள் ஆனந்த் ஒரு சுபயோக சுபதினத்தில் மிக சினிமாட்டிக்காக திடீரென்றுதான் என்ட்ரீ கொடுத்தான்(ர்). ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்.

அப்போது கல்கியில் மாதம் ஒரு மாவட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. மாதாமாதம் ஒரு மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மாவட்டத்தின் பிரச்னைகள், சாதனைகள், சுவாரஸ்யங்கள், மனித நேயங்கள் எனச் சகலமும் கல்கி வாசகர்களிடமிருந்து கடிதங்களாக வரப்பெற்று, நிருபர் டீம் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்து, பேட்டி கண்டு கட்டுரைகளாக்கும். கிளைமாக்ஸாக மாவட்ட கலெக்டரது பேட்டியும் நடக்கும். சுமுகமாகப் போக்கொண்டிருந்த இந்த மாதம் ஒரு மாவட்டம் பகுதியில், ஒரு சனிக்கிழமை காலையில் கல்கி நிருபர் டீம் அன்றைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்துக்காகத் தேனாம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் திண்டிவனத்துக்கு பஸ் ஏறக் காத்திருந்த நேரத்தில், வழக்கமான புகைப்படக்காரரான மனோகரனால் வரமுடியவில்லை என்று தகவல் வந்தது. திடீரென்று அழைத்ததால், சுமார் ஒருவார கால மாவட்டச் சுற்றுப்பயணத்துக்கு வழக்கமான மற்ற புகைப்படக்காரர்கள் வர இயலாது என கைவிரித்துவிட்டனர். கல்கி ராஜேந்திரன் அவர்களுக்குத் தகவல் சொன்னோம். ‘ஸ்டேட் பாங்க்கில் பணிபுரியும் ஒருவரது மகன் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் உள்ளவராம். பெயர் ஆனந்த். அவருடைய டெலிபோன் நெம்பர் கொடுக்கிறேன். அவரிடம் பேசிப் பாருங்கள்!’ என்றார். பேசினோம். அவர் வருவதற்கு ரெடி. ஆனால் ஒரு சிக்கல். கைவசம் ஃபிலிம் ரோல் ஸ்டாக் இல்லை. உடனடியாகப் புகைப்படக்காரர் யோகாவிடம் பேசியதும், அவர் நாலு ஃபிலிம் ரோல்கள் கொடுத்து உதவினார். கல்கி டீம் திண்டிவனத்துக்கு பஸ் ஏறியது.

பிற்பகலில், திண்டிவனத்துக்கு ஏழெட்டு கி.மீ. தூரத்தில் ஒரு கிராமத்துக்கு விசிட். அங்கே, நாங்கள் கிராமவாசிகளோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, புகைப்படங்கள் எடுத்தார் ஆனந்த். அடுத்து ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. கையோடு ஒரு டைரியை எடுத்து, புகைப்படம் எடுத்த கிராமவாசிகளின் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டார். நிருபர்கள் நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டோம். காரணம், வழக்கமாகப் பேட்டிகளின்போது உடன் வரும் புகைப்படக் காரர்கள், பெயர்களை எல்லாம் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். புகைப்படங்கள் எடுப்பதும், எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போட்டுக் கொடுப்படும்தான் அவர்கள் வேலை என்றுதான் இருப்பார்கள். அன்றே எங்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆச்சர்யத்தையும், அபிமானத்தையும் அள்ளிக் கொண்டு விட்டார் ஆனந்த்.

கல்கிக்கு ஆனந்த் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கிய பிறகு, மாவட்டக் கட்டுரைகளிலும், இதர பேட்டிகளிலும் புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. கிராமத்துக் கிழவிகள் முதல் வி.வி.ஐ.பி.க்கள் வரை பலரது உணர்ச்சி பொங்கும், ஆக்ஷன் நிறைந்த புகைப்படங்கள் பெரிய சைசில் வெளிவரத் தொடங்கின. கூடவே, அப்போது வெளியாகிக்கொண்டிருந்த ‘அசைடு’ ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆனந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொடுப்பார். அவற்றிலும், ஆழமான கட்டுரைகளுக்கு இணையாக அவரது புகைப்படங்களும் பேசும். சமூகப் பிரச்னைகள் தொடர்பான கல்கி கவர் ஸ்டோரிகளுக்காக, சப்ஜெக்ட்களுக்கு ஏற்றவாறு புகைப்படங்கள் எடுப்பது ஒரு சவால்தான். ஆனால், எப்படியாவது அதைச் சமாளித்து, குறித்த நேரத்தில் புகைப் படங்கள் எடுத்துக் கொடுத்துவிடுவார். ஒருமுறை முகமூடிக் கொள்ளைக்காரர்கள் குறித்த கவர் ஸ்டோரிக்கு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டி இருந்தது. அன்று மாலை எதேச்சையாக அடையாறில் ஆனந்தின் வீட்டுக்குப் போயிருந்தேன். நீண்ட நேரம் ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு, புறப்படும் நேரத்தில், ‘உங்களுக்கு முகமூடிக் கொள்ளைக்காரங்க யாரையாவது தெரியுமா?’ என்று புதிர்போட்டார்.

நான் எழுத்தாளர் ராஜேந்திரகுமார் ஸ்டைலில் ‘ஙே!’ என்று விழித்தேன். கல்கி கவர் ஸ்டோரி பற்றிச் சொல்லி, ‘ஒரு சின்ன ஹெல்ப் பண்றீங்களா? நாளைக்குக் காலையில அட்டைப்படம் கொடுத்தாகணும்’ என்றார். சிரித்துக்கொண்டே தலையாட்டினேன். அடுத்த நிமிடம் ஒரு டார்க் கலர் துணி என் கீழ் பாதி முகத்தில் கட்டப்பட்டது. கையில், ஆனந்த் வீட்டு கிச்சன் கத்தி. வீட்டுக்கு வெளியில், கேட் அருகில் என்னை நிற்க வைத்து, விளக்குகளை அணைத்து கும்மிருட்டாக்கினார். பிளாஷ் வெட்டியது. முகமூடி கொள்ளை கவர் ஸ்டோரிக்கு அட்டைப்படம் ரெடி. (அந்த முகம் மூடிய மாடல் நான்தான் என்ற ரகசியம் இங்கே உடைக்கப்படுகிறது.)

சுதந்திரமான புகைப்படக்காரராக கல்கி, அசைடு, (ஆனந்த் மட்டுமே அட்டைப் படங்கள் எடுத்த) கிரைம் நாவல்கள், இந்தியா டுடே என்று வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்தபோது, அவர் இந்தியா டுடே வில் ஸ்டாஃப் புகைப்படக்காரராக வேலைக் குச் சேர விரும்பிய முயற்சியில் வெற்றி பெறாத சூழ்நிலையில், ரொம்பவே மனமுடைந்து போனார் ஆனந்த். ஆனால், அதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக் கட்டம். தன் புகைப்பட ஆல்பங்களோடு ஒளிப் பதிவு ஜீனியஸ் பி.சி.ஸ்ரீராமைச் சந்தித்து, அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் ‘தேன்மாவில் கொம்பத்து’ (தமிழில் ரஜினி-மீனா நடித்த முத்து படத்தின் ரீமேக்) என்று ஒரு படம் எடுத்தார். அதற்கு ஒளிப்பதிவு செய்ய பி.சி.ஸ்ரீராம் அடுத்து ஜீவா ஆகியோரை அணுக, அவர்கள் பிசி என்று கைவிரித்தனர்.

ஸ்ரீராம், ‘கே.வி.ஆனந்தைக் கேளுங்கள்! நல்ல திறமைசாலி!’ என்று சர்டிஃபிகேட் கொடுக்க, கே.வி.ஆனந்துக்கு ஒளிப்பதிவாளராக முதல் பட வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகி ஷோபனாவுக்கு வேலைக்காரப் பெண் கதாபாத்திரம். முதல் நாள் ஷூட்டிங். கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன் புடைவை உடுத்தி வந்த அவரிடம், ஆனந்த், ‘வேலைக் காரி கேரக்டருக்கு இந்த காஸ்டியூம் கூடாது’ என்று சொல்ல, அவரோ டைரக்டரிடம் புகார் செய்ய, ‘ஆனந்த் சொல்வது சரிதானே?’ என்று பிரியதர்ஷன் சொல்லிவிட்டார். எதிலும், ஒரு யதார்த்தத்தை விரும்புபவர் ஆனந்த் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த ஆண்டு அந்தப் படத்துக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார்.

கல்கியில் கட்டுரைகளுக்குப் பங்களித்த ஆனந்த், கால ஓட்டத்தில் ஒரு ஒளிப்பதிவாளராகி, இயக்குநராகி, அயன் என்ற சூப்பர் டூப்பர் வெற்றிப் படத்தைக் கொடுத்தபோது, ஆனந்தின் வாழ்க்கை அனுபவங்களை தொடராக வெளியிட்டது கல்கி. தலைப்பு: ‘ஸ்டார்ட், கேமரா, ஆனந்த்’! இந்த அரிய அனுபவம் எத்தனை பேருக்கு வாய்க்கும்?

தன் சினிமாக்களின் கதைகளுக்கு அவர் புதிய கதைக்களன்களைத் தேடித் தேடிப் போவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த சப்ஜெக்ட்கள் குறித்து அவர் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மூழ்கிவிடுவார் தெரியுமா? ‘கனாக்கண்டேன்’ படத்துக்காகக் கந்துவட்டி குறித்த தகவல்கள், ‘கோ’ படத்துக்காக ஒரு பத்திரிகை புகைப்படக்காரர்களின் அனுபவங்கள், ‘அயனு’க்காகத் திருட்டு வி.சி.டி., கள்ளக்கடத்தல் உலகம், ‘மாற்றானு’க்காக சயாமிஸ் இரட்டையர் என்று பட்டியலே போடலாம்.

கடந்த முப்பது பிளஸ் ஆண்டுகளில் கல்கியில் எத்தனையோ பிரபலங்களின் மறைவை ஒட்டி அஞ்சலிக் கட்டுரைகள் எழுதவேண்டி இருந்துள்ளது. ஆனால், இந்தக் கட்டுரை எழுதும்போது ஏனோ மனசு ரொம்பவே கனக்கிறது. ஆனந்தைப் பற்றி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.

எழுதுவதற்கு என் கம்ப்யூட்டரின் கீபோர்டும் தயாராகவே உள்ளது. ஆனால், என் விரல்களும், மனசும் ரொம்ப எமோஷனலாகி, அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. ஓம் சாந்தி!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :