கண்ணாமூச்சு காட்டும் இருள்

முகநூல் பக்கம்
தமிழின்பன்அதென்னவோ கண்ணை மூடிக்கொள்ளும்போது வரும் இருளுக்கு ஒரு பிரத்யேக குணம் உண்டு. அது அப்போதைய சூழலுக்கும் மனநிலைக்கும் ஏற்ப தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

தியானத்திற்கு மூடப்படும் இமைகள் என்றால் இருள் கொஞ்சம் கண்ணாமூச்சு விளையாடும். பல எண்ணங்களை உற்பத்தி செய்யும். அதற்கேற்ப சிவப்பு, மஞ்சள், நீலம் என்று வண்ணங்களைச் சிதறவிடும். சிதறிய வண்ணங்களைச் சேகரிக்க முற்படும்போது திடீரென வெண்மையை நிரப்பும். ‘சரி போ நீ என்ன வேண்டுமானாலும் செய்’ என்று அதை லட்சியம் செய்யாமல் உள்ளே திரும்பிக் கொள்ளும். அலட்சியத்தை மட்டும் விரும் பாது, அந்த நொடி அலை போல மிதந்து வந்து தன் மொத்த கருமையையும் சூழவிடும்.

ஆனந்தமான மனநிலையில் மூடப்படும் இமைகளை அதி ஆரவாரமா நட்சத்திரங்களைச் சிதறவிட்டு அதனிடையே மிக மெல்லியதா நாணத்தோடு எட்டிப் பார்க்கும். நட்சத்திரங்களின் பிரகாசத்தில் மெய் மறக்கும் அந்த நொடி பட்டென்று நட்சத்திரத் திரையைக் கிழித்து தன்னுள்ளே ஆனந்தமா இழுத்துக் கொள்ளும். கடவுளை எண்ணி மூடப்படும் இமைகளை உணரும் இருள், பல பரிமாணங்களைப் புகுத்திவிடும். இமைகளுக்குள்ளும் தீபத்தின் ஜோதியையும், கற்பூர நறுமணத்தையும், பூக்களின் சுகந்தத்தையும், அவனின் திருமுகத்தையும் காட்டும் மும்முரத்தில் தன்னையே மறந்துவிடும்.

துயரத்தில் மூடப்படும் இமைகளைக் கண்ட அந்த நொடி வெள்ளத்தைக் கொண்டு வரும். இருளுக்கு இருப்பதிலேயே கொண்டாட்டம், குற்ற உணர்வில் மூடப்படும் இமைகள். முற்றிலும் உணர்விழந்த, கொஞ்சம்கூட சலனமற்ற, மூச்சடைக்க வைக்கும் அழுத்தமான புதைமணல் இருள், அதி ஆச்சர்யமா வெளிச்சத்தைக் காட்டிலும் கூசவைக்கும்.

வெளிச்சம் வண்ணங்களைக் காட்டி அலைக்கழிப்பதில்லை, நட்சத்திரங்களைச் சிதறவிடுவதில்லை, சலனமற்று அழுத்துவதும் இல்லை, ஆர்ப்பரிப்பதுமில்லை. என்றும் தன்னிலை மாறாதது. வெளிச்சம் நிலையானது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :