கல்யாணப்பரிசு பிறந்த கதை

திரைக்கடலில் எழுந்த நினைவலைகள் 2
எஸ்.சந்திரமௌலிஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பதில் என்ன த்ரில் இருக்கிறது? ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலிக்க வேண்டும். அவர்களுள் ஒருத்தி, தன் காதலை மற்றரொருத்திக்காகத் தியாகம் செய்ய வேண்டும். அந்த இருவருமே, சகோதரிகளா இருந்துவிட்டால் அந்தத் தியாகத்துக்கு மேலும் வலிமை சேருமல்லவா?

இந்த வித்தியாசமான கதையின் கருவைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க கதையும் காட்சிகளும் என் மனத்திரையில் ஓடின. ‘கல்யாணப் பரிசு’ கதை ரெடி.

‘அமரதீபம்’, ‘உத்தமபுத்திரன்’ வெற்றிகளைத் தொடர்ந்து அடுத்தப் படத்துக்கான கதையைத் தேடிக் கொண்டிருந்த நேரம். ‘கல்யாணப் பரிசு’ கதையினை கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜனிடம் உணர்ச்சியோடு சொல்லி முடித்தேன். கிருஷ்ணமூர்த்தி முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லை. என்னை ஒரு குற்றவாளியைப் பார்ப்பதுபோல பார்த்தார்.

ஸ்ரீதர், எழுத்தாளர்கள் இன்னொருத்தர் கதையைத் திருடறது சகஜம். ஆனா நீ உன் கதையையே திருடறியே!" எனக்கு ‘திக்’ என்றிருந்தது. என்ன சொல்றே கிருஷ்ணமூர்த்தி?" ‘அமரதீபம்’ நீ எழுதின கதைதானே?" ஆமாம்."

அதிலே பத்மினி, சாவித்திரி ரெண்டு பேரும் சிவாஜியைத் தானே காதலிக்கிறாங்க?" அது ஒரு கோணத்தில் எழுதப்பட்டது. இது..." ரெண்டுமே முக்கோணம்தானே? வீனஸ் பிக்சர்ஸுக்கு வேறு நல்ல கதை ‘திங்க்’ பண்ணு. இதை எவனாவது ஏமாந்தவனாப் பார்த்து அவன் தலையில் கட்டு" என்றார்.

நான் அதனால் ஏமாற்றமடையவில்லை. காரணம் என் நேச்சர் அப்படி. நான் எப் போதுமே பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதில்லை. வந்தாலும் சரி. போனாலும் சரி என்ற மனோபாவம். ஆனாலும் நான் சொன்ன கதை நல்ல கதைதான் என்று நான் திடமாக நம்பிக் காத்திருந்தேன்.

பணக்காரி, சக்ரவர்த்தி திருமகள் போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த உமா பிக்சர்ஸ் அதிபர் ராமனாதன் செட்டியாருக்கு நல்ல கதையொன்று தேவைப்பட்டது. ராமனாதன் செட்டியார் கார் அனுப்பி வைத்தார்.

கதை என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே, நான் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். எந்தக் கதை தெரியுமா? தயாராக வைத்திருந்த கல்யாணப் பரிசு கதையைத்தான். உணர்ச்சிகரமா முக்கோணக் காதல் கதையைச் சொல்லி முடித்தேன். செட்டியார் முகத்திலும் சரி, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த டைரக்டர் சி.ஹெச். நாராயணமூர்த்தி முகத்திலும் சரி, நல்ல கதையொன்றைக் கேட்ட சந்தோஷம் தென்படவில்லை. பெரிய அளவில் படம் எடுக்கணும்னு திட்டம் போட்டு, சிவாஜி, பத்மினி, வைஜயந்திமாலான்னு பெரிய நட்சத் திரங்களை நடிக்க வைக்க வலுவானதொரு கதை எதிர்பார்த்தேன். நீங்க என்னவென்றால், படு சாதாரணமான கதையைச் சொல்றீங்களே!" என்றார். நான் சோர்ந்து போனேன்.

பிரம்மாண்டமான கதை தேடிய செட்டியாரிடம் ஒரு ஹிஸ்டாரிகல் டிரை பண்ணலாமே என்று டைரக்டர் ஆலோசனை சொல்ல, இறுதியில் ‘சித்தூர் ராணி பத்மினி’ என்ற வரலாற்றுக் கதையைப் படமெடுப்பது என்று தீர்மானித்தார்கள். அந்தச் சரித்திரக் கதைக்கு என்னை வசனம் எழுதித் தரும்படி அவர்கள் கேட்க, நானும் ஒப்புக்கொண்டேன்.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியது. ஆனால், செட்டியார் திட்டம் போட்டது போல, படம் வேகமா வளரவில்லை. காரணம் பணத் தட்டுப்பாடு. நாலைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். அதன்பின் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு தகவலும் இருக்காது. மறுபடி ஏழெட்டு நாட்களுக்கு ஷூட்டிங். மீண்டும் இடைவெளி.

எனவே நான், ஒட்டுமொத்தமா வசனம் எழுதிக் கொடுக்காமல், அவ்வப்போது தேவைக்கேற்ப வசனம் எழுதித் தந்தேன். ஒரு ஷெட்யூலுக்கும் இன்னொரு ஷெட்யூலுக்கும் ஏகமான இடைவெளி இருக்குமாதலால் விட்டுவிட்டு வசனம் எழுதுவது எனக்கும் சிரமமாக இருந்தது. எனவே எனக்கு அதில் அத்தனை ஆர்வம் இல்லை.

கல்யாணப் பரிசு கதைக்கு ஏற்ற ஹீரோ ஜெமினிகணேசன்தான் என்று முடிவாகியது. பி.ஆர்.பந்துலு படம் ஒன்றில் நடனமாடிய சரோஜாதேவி, முகபாவங்களை நன்கு வெளிப்படுத்திய காரணத்தால், அவரை இளம் கதாநாயகியாக நடிக்க வைப்பது என்றும் தீர்மானித்துவிட்டோம். இன்னொரு பெண் பாத்திரத்துக்கு ராஜசுலோசனாவை ‘புக்’ செய்தோம். ஆனால், விதி அல்லது துரதிர்ஷ்டம் அல்லது ஜாதகப் பலன் என்று ஏதோ ஒன்று அவர் விஷயத்தில் விளையாடி விட்டது. அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய பெரும் புகழ் அவருக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போய் விட்டது.

நான் ஒரு காரியமாக பம்பா போயிருந்த போது, சென்னையிலிருந்து ஒரு போன். ராஜசுலோசனா ஒரு ஒப்பந்த பாரம் வைத்திருக்கிறாராம். அதில் கையெழுத்துப் போடச் சொல்கிறார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

இது என்ன? நம் படத்தில் அவர் நடிக்கிறார். ஊதியம் தரப்போவது நாம். நம்முடைய காண்ட்ராக்டில் அல்லவா அவர் கையெழுத்துப் போட வேண்டும்? அவர் யார் நமக்கு கண்டிஷன் போட? அவர் நம் படத்தில் நடிக்கவே வேண்டாம். விட்டுவிடுங்கள்!" என்று சொல்லிவிட்டேன். அவர் இடத்தில் விஜயகுமாரி ஒப்பந்தமானார். படத்தின் முதல் ஷெட்யூலை முடித்தேன்.

‘ரஷ்’ போட்டுப் பார்த்தபோது எனக்கு டென்ஷனே இல்லை. நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். அதே நேரத்தில் நான் செய்திருந்த சில தவறுகளும் எனக்குத் தெரிய வந்து என்னைத் திருத்திக்கொள்ள உதவியது. உதாரணமாக, ‘கட் ஷாட்’ என்று நிறைய வைத்திருந்தேன். எதுவும் அளவுக்கு அதிக மானால் இடைஞ்சல் பண்ணும் என்று உணர்ந்தேன். என்றாலும் நான் ஒரு புதிய பாணியில் படப்பிடிப்பு நடத்தியிருந்தது அனைவருக்கும் புரிந்தது. பிடித்தும் இருந்தது. ‘கல்யாணப் பரிசு’ படத்தை இயக்கப் போவது நான்தான் என்பதும் உறுதியாகிவிட்டது.

கிளைமாக்ஸ்... படிப்படியாகப் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. முதல் பிரிண்ட் தயாரானதும் போட்டுப் பார்த்தோம்.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கிளைமாக்ஸ்’ பிடிக்க வில்லை. ‘மாற்றி விடலாம்’ என்றார்.

யூனிட் நண்பர்களும் இரு பிரிவாகப் பிரிந்து என் பக்கம் சிலரும் கிருஷ்ணமூர்த்தி பக்கம் சிலரும் பேசினார்கள். விவாதம் காரசாரமாக இருந்தபோதிலும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம், இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தோம் என்பதுதான்.

நான் சொன்னேன்: சில பிரிண்டுகள் இந்த கிளைமாக்ஸுடன் இப்படியே போகட்டும். வேறு சில பிரிண்டுகளில் கிளைமாக்ஸ் மாற்றி ரிலீஸ் செய்வோம்." இப்படி நான் விட்டுக்கொடுக்க, கிருஷ்ண மூர்த்தியோ இன்னும் ஒரு படி மேலே போய், அதெல்லாம் வேண்டாப்பா; உன் இஷ்டப்படியே விட்டுவிடுகிறேன்" என்றார்.

அவருடைய பெருந்தன்மை எனக்கு இரவு தூக்கம் பிடிக்காமல் செய்துவிட்டது. படம் வெற்றிபெற வேண்டுமே. என் கிளைமாக்ஸ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே!

காஸினோ தியேட்டரில், பால்கனியில் நண்பர்களுடன் அமர்ந்து முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படத்திலேயே முக்கியமான, ஆழமான சென்டிமென்டுடன் கூடிய காட்சி, கதாநாயகி தன் காதலனிடம் கேவிக் கேவி வசனம் பேசுகிறாள்: அத்தான் (கேவல்)... நீங்கள் (கேவல்)... என்னுடைய (கேவல்)...

என்னது! தியேட்டர் சவுண்ட்பாக்ஸில் கோளாறா? அல்ல வாஸ் ரிகார்டிங்கிலேயே கோளாறு ஏற்பட்டுவிட்டதா? ஏகப்பட்ட கேவல் ஒலி கேட்கிறதே! விஷயம் புரிந்ததும் ஷாக் வாங்கியது போலிருந்தது எனக்கு! படம் பார்க்கும் அத்தனை பேரும் கதாநாயகியுடன் சேர்ந்து கேவுகிறார்கள், கேலியாக! ஹிக்! ஹிக்! ஹிக்!

வார்த்தைக்கு வார்த்தை கேவல் ஒலி கொடுக்கச் சொன்னது டைரக்டரான என் தவறுதான். அதுதான் உள்ளத்தை நெகிழ்த்து வதற்குப் பதில் பரிகசிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.

‘இதை எப்படி நான் கவனிக்கத் தவறி னேன்?’ என்று என்னையே நொந்துகொண்டேன். அடுத்தகணம், படம் அடிவாங்கி விட்டது. அவ்வளவுதான். கிளம்புங்கள் போகலாம்" என்று நண்பர்களிடம் காதோடு கூறிவிட்டு, வெளியே வந்துவிட்டேன்.

என் மனச்சோர்வை நான் மறைத்துக் கொள்ள முயன்றும் பயனில்லை. தியேட்டர் மானேஜர் புரிந்துகொண்டுவிட்டார். பாதிப் படத்தில் போகாதீங்க ஸார். கொஞ்ச நேரம் ஆபீஸ் ரூமில் இருங்க. படம் முடியும்போது தான் சரியான ரியாக்ஷன் தெரியவரும்" என்றார். வேண்டாவெறுப்பா சம்மதித்தேன்.

அவர் சொன்னது மிகவும் சரி. ரசிகர்கள் அந்த ஒரு காட்சியைக் கிண்டல் செய்தபோதிலும், படத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். கிளைமாக்ஸ் உட்பட என்பது புரிந்தது. அப்போதுகூட ‘கல்யாணப் பரிசு’ அப்படி ஓர் அபார வெற்றிபெறப் போகிறது என்று நாங்கள் எண்ணவில்லை.

ஒரு சமயம் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘கல்யாணப் பரிசு’ கதையை அவரிடம் விரிவாகச் சொன்னேன். என்னயா பெரிசா நீட்டி முழக்கிக்கிட்டு... காதலிலே தொல்வியுற்றாள் கன்னியொருத்தி. கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி... இது தானேயா உன் கதை?" என்று கேட்டார்.

நான் பிரமித்துப் போனேன். மாதக்கணக்கில் நான் யோசித்து யோசித்து உருவாக்கிய கதையை இரண்டே வரிகளில் அடக்கி விட்டாரே! எனக்கு முதலில் ஏமாற்றமாகத்தான் இருந்தது. சற்று யோசிக்க, ‘அவர் சொன்னது உண்மைதானே’ என்று தோன்றியது. மேலும் யோசிக்க ‘அந்த வரிகளையே பயன்படுத்திக் கொண்டால் என்ன?’ என்றும் எண்ணம் எழுந்தது?

உடனே அவரிடம் மறுபடியும் போ, எங்கே, இன்னொருதரம் அந்த விமர்சன வரிகளைச் சொல்லுங்கள்!" என்றேன். சொன்னார். இதையே பாடலாக்கித் தரமுடியுமா?" என்று கேட்டேன்.

ஓ செய்யலாமே" என்றார். உருவாக்கியும் கொடுத்தார். அதையே ‘தீம் ஸாங்’காகப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். இடைவேளைக்கு முன்னால் இந்தப் பாடல் ஒலிக்கும். கதையும் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கும்.

படத்தின் முடிவில் அதே மெட்டில், சிறிது மாற்றத்துடன் பாடல் மீண்டும் ஒலிக்கும். ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்...’

பாடலுடன் அதன் பாவத்தை உணர்த்தும் சிறப் பான மெட்டும் சேர, ‘கல்யாணப் பரிசு’ படம் பார்த்த அனைவரது நெஞ்சத்தையும் விட்டு அகலாத பாடலாகி விட்டது அது. படத்தின் வெற்றிக்குப் பல காரணங்களுள் ஒன்றாக விளங்கியது. இன்றும்கூட, ‘கல்யாணப் பரிசு’ என்றால் பலருக்கு இந்தப் பாடல் இதயத்தில் பீறிட்டு எழும்.

படத்தில் அப்படி ஒரு பாடல் இடம் பெறக் காரணம் என்ன? அடிப்படை யில் ஒரு விமர்சனம்! ஆகவே நான் விமர்சனத்தைக் கண்டு பயப்படவே கூடாது. நமது சிந்தனாசக்தியை மேலும் ஊக்குவிக்கும் கருவியாக அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது புதுமைகள் செய்ய முடியும்.

அதேபோல, சினிமாவுக்குக் கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் மனத்தளவில் அதை நிறைய அசை போட வேண்டும். அப்புறம் நண்பர்களிடம் அதைச் சொல்ல வேண்டும். நண்பர்கள் என்றால், ‘அடடா அபாரம்’ என்கிற முகஸ்துதியாளர்கள் அல்ல. நம் கதையை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து, அலசி விமர்சிக்கும் துணிவுள்ள நண்பர்கள்.

அந்த நண்பர்களின் காட்டமான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவத்தை நாம் முதலில் பெறவேண்டும். ‘என்னடா இப்படிச் சொல்லிவிட்டானே’ என்று கருதாமல், ‘ஏன் சொன்னான்? அதில் என்ன நியாயம் இருக்கிறது?’ என்று எண்ணிப் பார்க்கும் சகிப்புத் தன்மை நமக்கு இருக்க வேண்டும்.

‘கல்யாணப் பரிசு’ படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி, படத்தின் வெள்ளி விழா வெகு விமரிசையாக் கொண்டாடப்பட்டபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உங்கள் படங்களுக்குப் பாட்டு எழுதுவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு படத்துக்கும் பணிபுரியும் சந்தர்ப்பத்தை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன்" என்று நெஞ்சம் நெகிழக் குறிப் பிட்டார்.

அடுத்தபடியா, ‘மீண்ட சொர்க்கம்’ படத்தை நான் இயக்கியபோதும், அதிலும் பட்டுக்கோட்டையாரையே பாடல்கள் எழுத வைப்பது என்று முடிவு செய்தேன். இசையமைப்பாளர் சலபதிராவ், நான், பட்டுக்கோட்டை மூவரும் பாடல் கம்போசிங்கிற்காக ஒரு சிட்டிங் உட்கார்ந்தோம்.அடுத்த முறை அமர்வதற்குள் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அமரராகிவிட்டார். எங்களுக்கெல்லாம் பெரிய ஷாக்! சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, முகம் வீங்கி இறந்துவிட்டார் அவர்" என்று சொன்னார்கள்.

பட்டுக்கோட்டை மீது மிகத் தீவிரமா அன்பு கொண்டிருந்த ஏ.எம்.ராஜா, பட்டுக் கோட்டையாரின் இறுதிச்சடங்கு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டார்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீது மதிப்பும் அன்பும் கொண்டு, அவரை என் எல்லா படங்களுக்கும் பாட்டெழுத வைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய என் எண்ணம், ஈடேறாமலே போவிட்டது துரதிருஷ்டம்தான்.

ஏ.எம். ராஜா

உங்களுக்குத் தெரியும் ஏ.எம். ராஜாதான் கல்யாணப் பரிசு படத்துக்கு மியூசிக் டைரக்டர். அதன் வெற்றியில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதுதான் ராஜா இசை அமைத்த முதல் படம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அந்தக் காலகட்டத்தில் விசுவ நான் - ராமமூர்த்தி, ஜி. ராமநாதன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு நான் ஏ.எம்.ராஜா வைத் தேர்ந்தெடுப்பானேன்? அது ஒரு கதை!

நான் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற் றிக் கொண்டிருந்த சமயம், நானும் ராஜாவும் ஒன்றாக ரயிலில் சேலம் சென்று வருவோம். அப்போது நான் வெறும் கதை, வசனகர்த்தா. ராஜா வெறும் பின்னணிப் பாடகர். ரயில் பயணத்தின்போது ஒரு சமயம் ஸ்ரீதர், உனக்கு நல்ல திறமை இருக்கு. நீ ஒருநாள் நிச்சயம் டைரக்டராயிடுவே" என்றார் ராஜா. நீ மட்டும் என்னவாம், பிரமாதமாப் பாடறே; சங்கீத ஞானம் நிறைய இருக்கு; சீக்கிரமே மியூசிக் டைரக்டராயிடுவே" என்றேன்.

அப்படின்னா ஒண்ணு செய்! நீ முதன் முதலில் டைரக்ட் செய்ற படத் தில் என்னை மியூஸிக் டைரக் டரா போடறதாச் சொல்லு." நிச்சயமா! நான் டைரக்ட் பண்ணறதுங்கற கனவு நன வானா அப்ப நீதான் மியூசிக் டைரக்டர்!" இப்ப இப்படித்தான் சொல்வே. நிஜமாவே வாய்ப்புக் கிடைக்கும்போது மறந்துடுவே!"

இப்படி தமாஷாகவும் சீரியஸாகவும் ராஜாவும் நானும் பேசிக்கொண்டிருப்போம். உண்மையாகவே டைரக்ஷன் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது மறப் பேனா? அதிலும் ராஜா ரொம்ப சென்ஸிடிவ் டைப் என்பது எனக்குத் தெரியும். எப்படித் தெரியும்? ‘அமரதீபம்’ படத் தயாரிப்பின்போது அது தெரியவந்தது. ‘தேன் உண்ணும் வண்டு’ என்ற பாடல் பதிவாக வேண்டிய தினம். பாடலை ராஜாவும் லீலாவும் இணைந்து பாடுவதாக இருந்தது.

திடீரென்று லீலாவின் அப்பா, ரிகார்டிஸ்ட் கிருஷ்ணயரிடம், என் பெண் ராஜாவுடன் ஒரே மைக்கில் பாடமாட்டாள். அவளுக்கென்று தனி மைக் வையுங்கள்" என்றார். அதுவரை அப்படிப் பழக்கமில்லை என்றாலும் கிருஷ்ணயர் லீலாவின் அப்பா சொல்லுக்கு மதிப்புத் தந்து செயல்பட்டார்.

ஆனால், இது ராஜாவை ரொம்பக் கலக்கி விட்டது. எதுக்குத் தனி மைக் வைக்கச் சொல்றாங்க? நான் கெட்டவனா? என் மேல் நம்பிக்கை இல்லையா? இத்தனை நாள் என்னோடு ஒரே மைக்கில் பாடினவங்க, இப்போ மட்டும் தனி மைக் கேட்டால் என்ன அர்த்தம்? திடீர்னு என் மேல் ஏன் சந்தேகம்?" என்று ஆரம்பித்துவிட்டார்.

அது மட்டுமல்ல, தனி மைக் வைச்சாத் தான் பாடுவேன்னு அவங்க கண்டிஷன் போட்டா, தனி மைக் வைச்சா பாட மாட்டேன்னு நான் ஏன் கண்டிஷன் போடக் கூடாது?" என்றும் கேட்டார். ரிகார்டிங் கேன்சல் ஆகிவிட்டது. ராஜாவின் மனம் எவ்வளவு புண்பட்டுவிட்டது என்பது தெரிந்து, நான் ஆறுதல் சொன்னேன். சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். நடக்கவில்லை.

ஸ்ரீதர், நீங்க எப்படியும் பாட்டை ரிகார்ட் பண்ணத்தான் போறீங்க. யார் பாடப் போறாங்க? லீலாவா? நானா? தீர்மானிச்சுக்குங்க! ரெண்டு பேரில் ஒருத்தர்தான் பாட முடியும்" என்று கூறிவிட்டார். ராஜா எவ்வளவு சென்ஸிடிவ் மனிதர் என்பது அப்போதுதான் எனக்குப் புரியவந்தது. அதனால் தான் மறக்காமல் கொடுத்த வாக்குறுதியை மீறாமல், அவரை கல்யாணப் பரிசு படத்துக்கு மியூஸிக் டைரக்டராக இருக்குமாறு அழைத் தேன். அவரும் படத்தின் வெற்றிக்குத் துணை நின்றார்.

அது சரி! அமரதீபத்தில் பாடியது யார்? ராஜாவா? லீலாவா? என்று கேட்கிறீர்களா? ராஜாதான். காரணம் அது ராஜாவுக்குத் தன்மானப் பிரச்னை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தீர்மானமா ராஜாவிடம் சொன்னேன். இந்தப் பாட்டை நீங்கள் பாடப்போறீங்க" ராஜாவுடன் சேர்ந்து பாடியவர் பி. சுசீலா.

(நினைவுகள் தொடரும்)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :