காத்திருக்கும் சவால்கள்


ஆதித்யா
ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம்மக்கள் தீர்ப்பு

அண்ணாவிற்குப் பின் கருணாநிதி ஒரு பெரும் காலம் தூக்கிச் சுமந்த பெரும் பொறுப்பு ஸ்டாலினிடம் வந்திருக்கிறது. மாநிலத்தின் இன்னொரு பெரிய கட்சியும் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரு பிரிவுகளாகப் பிளந்து, மாநில நலனுக்காகக் குரலெழுப்ப இயலாத, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதே சாதனை என்று ஒரு ஆட்சிக் காலத்தை ஓட்டிவிட்ட நிலையில், கட்சியைத் தாண்டியும் மாநில அரசியலில் பெரிய சவால்கள். ஸ்டாலின் முன் நிற்கின்றன.

சுமார் 50 ஆண்டு காலப் பொது வாழ்வு, நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறை வாழ்க்கை, கட்சியில் படிப்படியான வளர்ச்சி, ஆட்சி நிர்வாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் - மேயர் - உள்ளாட்சித் துறை அமைச்சர் - துணை முதல்வர் என்ற அவரது பணித்திறன் மக்களை அவர் மாநிலத்தின் தலைமைக்கும் தகுதி படைத்தவர் எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அண்மையில் அவரது தொடர் நடவடிக்கைகளால்பொதுமக்களிடத்தில் ஸ்டாலின் மீது ஒரு அபிமானம் உருவாகியிருப்பதைத் தேர்தலுக்கு முன்னர் உணர முடிந்தது. அவர் மீது பெரிய குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். மக்களிடம் உள்ள எதிர்பார்ப்பே அவர் முன்னுள்ள பெரிய சவால்.

ஐந்து சவால்கள்

தளபதி ஸ்டாலின் முன்னே நிற்கும் மிக முக்கிய சவால்கள் ஐந்து. சரியான திட்டமிடல், திறன்மிகுந்த நிர்வாகம், விரைவான செயலாக்கம் ஆகியவை இணைந்த எழுச்சி ஒரு புயல் வேகத்தில் எழுந்தால் மட்டுமே ஸ்டாலினால் இந்தச் சவால்களைச் சந்திக்கமுடியும். வெற்றிகரமாகச் சந்தித்தால் மட்டுமே சாதனைகளுக்காக வரலாற்றில் இடம்பெற்ற தமிழக முதல்வர்கள் வரிசையில் இவரும் இடம் பிடிப்பார்.

ஆட்சியில் புதிய அணுகுமுறை

ஆட்சி அமைக்கப்போவது தி.மு.க.வா, தி.மு.க. கூட்டணியா என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தி.மு.க.விற்கு அறுதிப் பெரும்பான்மை என்ற ஆணையை மக்கள் வழங்கியிருந்தாலும் தி.மு.க. பா.ஜ.க. பாணியைப் பின்பற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

2014க்கும் 19க்கும் இடையே பல சிறு கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறின. ஆனாலும் பா.ஜ.க. முன்னர் இருந்ததைவிட 2019ல் அதிக இடங்களைப் பிடித்தது. ஆயினும், கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. எங்கள் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது, கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமலே ஆட்சி நடத்த முடியும் என்று திமிராக பா.ஜ.க. செயல்பட முடியும். ஆனால் செய்வதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத் துறைகள் தராவிட்டாலும், ஏதேனும் சில துறைகளை ஒதுக்கி, அமைச்சரவையில் சேர்த்தே வைத்திருக்கிறது. அடுத்த தேர்தல் வரும்போது இன்னும் சில கட்சிகளை இணைத்துக் கொள்ளவும் தயங்காது.

இதுதான் அரசியல் தந்திரம். இதன்மூலம் தான் பா.ஜ.க. பல மாநிலங்களிலும் பல பகுதிகளிலும் தன் செல்வாக்கைப் விரிவாக்கிக்கொண்டே போகிறது. இதை தி.மு.க. கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளும் தமிழகத்துக்குச் சோதனையாகவே இருக்கப் போகிறது. மத்தியிலிருக்கும் பா.ஜ.க. தி.மு.க.வை பலவீனப்படுத்த, கட்சிப் பிளவிலிருந்து அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும் ஆபத்தைப் புறந்தள்ள முடியாது. இத்தனை பிரச்னைகளுக்கும் இடையேதான் தி.மு.க. ஆட்சி நடத்த வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் சமாளிக்க வேண்டுமானால், கூட்டணிக் கட்சிகளையும் ஆட்சியில் இணைத்துக்கொண்டு, ஒன்றுபட்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கூட்டணியாகத் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று சொல்லாத நிலையிலும், தி.மு.க. தலைமை தானாக முன்வந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொன்னால், அது முதிர்ச்சியையும் பக்குவத்தையும் காட்டும்.

நிதி நெருக்கடி, மத்திய அரசின் ஒத்துழைப்பின்மை, நிறைவேற்றக் கடினமான ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை, (தில்லியில் செய்வதுபோல) மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும்போது குரல் எழுப்பவேண்டிய கட்டாயம், பல்வேறு விதங்களிலும் பா.ஜ.க. ஏற்படுத்தப்போகிற தலைவலிகள்... இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டுமானால், தனித்து நின்றே சமாளிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வுடன் இணக்கமாகவே போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படியானால் அ.தி.மு.க.விற்கு ஏற்பட்ட கதிதான் தி.மு.க.விற்கும் ஆகும்.

நடப்பு நிலைமைகளைப் புரிந்துகொண்டு, சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்த கருத்துடைய கூட்டணிக் கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு, நல்லாட்சிக்கு வழி செய்வதுதான் தமிழகத்துக்கும் நல்லது, தி.மு.க.வுக்கும் நல்லது.

தேர்தல் வாக்குறுதிகளும் நிதர்சனமும்

தேர்தலுக்கு முன் தி.மு.க.வின் வாக்குறுதிகளை ஸ்டாலின் பட்டியலிட்டுப் பேசியதையும் போட்டிப் போட்டுக்கொண்டு பழனிசாமியின் அறிவிப்புகளையும் கேட்ட கட்சித் தொண்டர்கள் வேண்டுமானால் அபாரமான வாக்குறுதிகள் எனப் பிரமித்திருக்கலாம். ஆனால் சாமானியனுக்குள் எழுந்த கேள்வி தமிழக நிதிநிலைமையில் இது எப்படி சாத்தியம் என்பதுதான். ஆகையால் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா காலப்போர் நிலையை விளக்கி குடும்பத் தலைவிகளுக்கான உரிமை ஊதியத்தைத் தவிர மற்ற வாக்குறுதிகள் படிப்படியாக காலபோக்கில்தான் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாக அறிவிக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான பணத்தை அவர்களது வங்கிக்கணக்கில் நேரிடையாகச் செலுத்தவேண்டும். இது கட்சித் தொண்டர்களின் பணி இல்லை என்பதை அவர்களுக்கும் மக்களுக்கும் தெளிவாக்க வேண்டும். நிதிநிலையைச் சீராக்க கட்சி சார்பில்லா வல்லுநர் குழுவை அமைத்து வழிகாண வேண்டும். டாஸ்மாக்கின் விலையை உயர்த்தலாம் தவறில்லை. ஆனால் அதன் நிர்வாகம் சீராக்கப்படவேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு என்றால் மக்கள் நல்வாழ்வுத் துறையை எத்தகைய கட்டமைப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, தொலை நோக்குடனும் செயலாற்றியிருந்ததை இந்த கொரோனா காலத்தில் பல முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதைப்போல முதல் முக்கியத்துவம் கொடுத்து பொது சுகாதாரத் துறையை மேலும் சீராக்க வேண்டும். மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்கள் தக்க முறையில் கௌரவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய மிகப் பெரிய தவறு இது. மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட இந்த விஷயத்தை உடனடியாக நீக்கி அவர்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும்.

கட்சியினரைக் கண்காணிக்க வேண்டும்

‘பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் காந்து கிடக்கிறார்கள். காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்ததுபோல புகுந்து விளையாடப் போகிறார்கள்’, ‘பசியுடன் காத்திருக் கிறார்கள்’ போன்றவை பொதுவாகப் பேசப்படும் கருத்து. இது ஏதோ தி.மு.க. எதிர்ப்பாளர்கள் சொல்வதல்ல, மக்களில் பலரிடமே இந்தக் கருத்து நிலவுகிறது என்பதுதான் உண்மை. இதைப் பொய்யாக்குவதில்தான் தி.மு.க.வின் உண்மையான வெற்றியிருக்கிறது. கட்சிப்பணிக்கு எப்படித் துடிப்புடன் தொண்டர்கள் களமிறங்கினார்களோ அதே போல் கொரோனா தடுப்பு விழுப்புணவுப் பணிகளுக்கு தி.மு.க. தொண்டர்களைக் களமிறக்க வேண்டும். கட்சிப் பணியைத் தாண்டி தி.மு.க. தொண்டர்கள் சமூகப் பணிகள் செய்வதிலும் வல்லவர்கள் என்ற நற்பெயரை எடுத்து அதை நிலைநாட்ட வேண்டும்.

தி.மு.க.வைக் காலத்தின் தேவைக்கேற்ப நவீனப்படுத்தும் வழிகளையும் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேசிய அரங்கில் தி.மு.க.வின் பங்களிப்பை அதிகரிக்கக் கூடுதலாக அவர் உழைக்க வேண்டியிருக்கும். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகள் நீர்த்துப்போகாமல், தமிழகத்தின் வேளாண்மைப் பிரச்னை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத, இயற்கையை அழித்து விடாத புதிய தொழில் கொள்கை, நீர்நிலைகள் மீட்டுருவாக்கத்துக்கான புதிய செயல் திட்டம், ஊழலுக்கு எதிரான எளிமையான செயல்பாடு, கட்சியினர் அவரவர் தொகுதி மக்கள் பணிகளோடு ஒருங்கிணைத்தல் என்று தி.மு.க.வின் போக்கில் நிறைய உத்வேகச் செயல்பாடுகளை ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். அவசியமானால் பழம்பெருச்சாளிகளுக்கு ஓய்வு கொடுத்து ஒதுக்கவும் தயங்கக்கூடாது.

தமிழக மாணவர்களின் நிலை

கடந்த இரண்டாண்டில் சரியான நிர்வாக அணுகுமுறை இல்லாமல் பெரும் குழப்பங்களுக்குள்ளானது தமிழகக் கல்வித்துறை. ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமுமே பழுதாகிக் கிடக்கின்றது. அனைத்தையும் சரியாக்குவது மிகப்பெரிய சவால். ஆனால் செய்ய வேண்டியது அவசியத்திலும் அவசியம். முந்திய அரசு தூக்கி எறிந்த பாரத் நெட் என்ற கிராமப்புற இணைய வசதி திட்டத்தை அதிரடி அவசரத்தில் செயலாக்க வேண்டும். இதன் மூலம் தமிழகக் கிராமப் பள்ளிகள் இணைய வசதி பெறும். இணைய வழிக் கல்வி எளிதாகும். பள்ளி வகுப்பு நேரங்கள் அதிகரிப்பு, விடுமுறைகள் குறைப்பு போன்றவற்றை அறிமுகப்படுத்தி மாணவர்கள் இழந்ததை மீட்கத் திட்டமிட வேண்டும். எண்ணற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்தச் செயலை தி.மு.க. அரசு முன்னெடுத்தால் மக்கள் மனதில் இடம்பெறும் கட்சியாக தி.மு.க. இருக்கும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :