அரசின் தோல்வியும் அநியாய மரணங்களும்-கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறது. உலகமே அடங்கியிருந்த ஊரடங்கு நாட்களால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நிமிரவிடாமல் மீண்டும் ஏறி மிரட்டுகிறது கொரோனா.

முதல் அலையில் பாடம் கற்றுக்கொண்ட பல உலக நாடுகள், இந்த இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்கொண்டு சிறு சிறு தடுமாற்றங்களுடன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டன.

ஆனால் நம் நாட்டில் இரண்டாவது அலையின் விளைவாக மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகளுக்கு, அடிப்படை மருத்துவ உபகரணங்களுக்கு, மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் அலையிலிருந்து நமது மத்திய, மாநில அரசுகள் எந்தப் பாடமும் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. குறைந்தபட்சம், இரண்டாவது அலை வெகுவிரைவில் தாக்கப்போகிறது என்ற சுகாதாரப் பேரமைப்புகளின் எச்சரிக்கை கூக்குரல் கூட நமது அரசாங்கங்களின் காதுகளில் விழாததுதான் இன்றைய பேரவலத்துக்கான மூல காரணம்.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் கொரோனாவின் முதல் அலை இந்தியாவில் உச்சக்கட்டத்தைத் தொட்டுக்கொண்டிருந்தபோதே அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருந்தது. அது அடுத்து நம்மையும் தாக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டிய அரசு, டிசம்பர், ஜனவரியில் நோத்தொற்றின் வீரியம் குறைந்தவுடன் மெத்தன நிலைக்கு மட்டுமில்லாமல் வெற்றியாகக் கொண்டாட்ட நிலைக்கு நகர்ந்ததன் விலைதான் இன்றைய நிலை.

தடுப்பூசியைத் தயாரித்துத் தனது குடிமக்களை அடுத்த அலையிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தாமல், ஏற்றுமதி செதது முதல் தவறு என்றால்... வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 9 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு ஏற்றுமதி செதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அடுத்த தவறு. இன்றைக்குத் தடுப்பூசி, ஆக்சிஜன் இரண்டும் பற்றாக்குறை ஏற்பட்டு இந்தத் தேசத்தின் குடிமக்கள் மருத்துவமனை வளாகங்களில் அல்லது அதற்குப் போகும் முன்னரே ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருப்பது... நமது தலைமுறை இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சோகம்.

தில்லியில் நடந்த ஒரு சிறுபான்மை அமைப்பின் சிறிய கூட்டத்தால்தான் கொரோனா இந்தியாவிற்குள் வந்தது என்று பேசி முதல் அலையில் எழுந்த கொடூரத்தைச் சந்தித்த இந்த அரசு, கும்பமேளா போன்ற லட்சக்கணக்கான மக்கள் திரளை எப்படி அனுமதித்தது என்று பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுகின்றன.

முதல் அலையை விடவும், இரண்டாவது அலை மிகக் கோரமாகப் பரவுகிறது. பாதிப்புகளை அதிகமாக்குகிறது என்றால்... அரசாங்கங்களின் திட்டமிடலில் தோல்வி என்று மருத்துவர்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை அத்தனை பேரும் ஒருசேரக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த இரண்டாவது அலையில், கொரோனாவுக்கான ஒற்றைத் தீர்வாகத் தடுப்பூசி மட்டுமே முன்வைக்கப்படுகிறது. தடுப்பூசி காலத்தின் கட்டாயம் என்பதை நாட்டு மக்களுக்கான தன் இரவு உரையில் பிரதமர் சொன்ன மறுநாள் காலை அதன் விலை பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டிருப்பது அடுத்த அதிர்ச்சி.

மாண்புமிகு பிரதமர் அவர்களே! இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நீங்களும் உங்கள் தலைமை யிலான அரசும் இருக்கிறது.

செயல்படாமலிருக்கும் அரசு இயந்திரத்தை உடனடியாகச் செப்பனிட்டு அறிவித்திருக்கும் அவசரகாலத் திட்டங்களை உடனடியாகச் செயலாக்கி மக்களைக் காப்பாற்றுங்கள்.
Post Comment

Post Comment