ஆதி ரங்கர் ஆலயம்!


லதானந்த்விஷ்ணு பகவான் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு இணையான சிறப்பு வாந்தது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பெருமாள் அனந்த சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலாகும். வானுலகில் பாயும் விரஜாநதிக்கு இணையான புண்ணிய நதி காவிரியால் சூழப்பட்ட தீவாக இருக்கிறது ஸ்ரீரங்கப்பட்டணம்.

இந்தப் பட்டணத்துக்கு ஆன்மிகம், கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து ரயில் வசதி இருக்கிறது. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை எண் 275ல் சாலை வழியாகவும் அடையலாம். இந்தப் புண்ணிய ஸ்தலம் கர்நாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில், மைசூருக்கு 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

இந்தத் திருத்தலத்துக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் எனப் பெயர் வந்ததற்குக் காரணமே இங்கே உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி ஆலயம்தான். தென்னிந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான வைணவத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கே சேவை சாதிக்கும் ரங்கர் ‘ஆதி ரங்கர்’ என அழைக்கப்படுகிறார். ‘மத்ய ரங்கர்’ சிவசமுத்திரத்திலும், ‘அந்த்ய ரங்கர்’ ஸ்ரீரங்கத் திலும் எழுந்தருளியிருக்கின்றனர். மூன்று ரங்கர்களுமே காவிரியால் சூழப்பட்டுத் தீவாகத் திகழ்கின்ற இடங்களில் உள்ள கோவில்களில் அனந்த சயன ரூபத்தில் பக்தர்களுக்குக் காட்சி யளிக்கின்றனர் என்பது பெரும் சிறப்பு.

இந்த ஆலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட கங்கா வம்சத்தவர் களால் கட்டப்பட்டது.மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோயில் கட்டடம் வலுப்படுத்தப்பட்டு சிற்ப வேலைப் பாடுகளும் அதிகரிக்கப்பட்டன. ஹோசாளர் மற்றும் விஜயநகரக் கட்டடத் தொழில்நுட்பத்தின் கலவையாக இந்த ஆலயம் விளங்குகிறது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின்போது, ஸ்ரீரங்கப் பட்டணம், அரசர்கள் மற்றும் வைஸ் ராகள் ஆட்சி புரியும் இடமாக இருந்திருக்கிறது. இங் கிருந்தபடியே ஆண்ட மன்னர்களால் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற இடங்களில் ஆண்ட குறுநில மன்னர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர். விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு 1610ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை மைசூர் மன்னரின் ஆளுகையின்கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் வந்தது.

இங்கே உள்ள ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி ஆலயத் துக்கு முன்னர் உள்ள கல்யாணி சித்தி வினாயகர் ஆலயமும் புகழ்பெற்றது. லக்ஷ்மி நரசிம்மசாமி ஆலயம், ஜோதி மஹேஸ்வரா ஆலயம், பித்கோட்டா கணேசர் ஆலயம், பாண்டுரங்க சாமி ஆலயம், சத்யநாராயண ஸ்வாமி ஆலயம், ஆஞ்சநேயர் ஆலயம், ஐயப்பன் ஆலயம், கங்காதரேஸ்வர ஸ்வாமி ஆலயம், லக்ஷ்மி ஆலயம் ஆகியனவும் பக்தர்களால் தரிசிக்கப்பட்டு வருகின்றன.

மேலைக் கங்கா வம்சத்தின் ஆளுகைக் குட்பட்ட திருமலையா என்னும் படைத் தலைவரால் கி.பி.984 ஆம் ஆண்டு ஸ்ரீரங்க நாதஸ்வாமி ஆலயம் கட்டப்பட்டது எனக் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஷ்ணுவர்தன் என்னும் ஹோசால மன்னர் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ராமானுஜாச்சரியருக்குத் தானமாக வழங்கினார். ஹோசாள மன்னரான இரண்டாம் வீர பல்லாலா காலத்துக் கல்வெட்டின் மூலம் இந்த ஆலயத்தின் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட் டுப் பணிகள் நடைபெற்றதை அறியலாம்.

கோயிலின் நுழைவாயில் கோபுரத்தில் விஜயநகரக் கட்டுமானத்தின் சாயல்களைப் பார்க்கலாம். மைசூர் மன்னர்களும் கோயில் திருப்பணிகளுக்கு உதவியிருக்கின்றனர் என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். திப்புவின் கோட்டையில் இருந்து வெறும் 400 மீட்டர்கள் தூரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ஏனைய தெவங் கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், கோவிலாடியில் இருக்கும் ஆப்பக்கூடத்தான் பெருமாள் கோயிலும், திருக் கோஷ்டியூரில் அமைந்திருக்கும் சௌம்ய நாராயணப் பெருமாள் ஆலயத்திலும், திருஎவ்வுள்ளில் அமைந்திருக்கும் வீரராகவப் பெருமாள் கோவிலிலும், மன்னார்குடியில் அமைந் திருக்கும் ராஜகோபால ஸ்வாமி கோயிலிலும் அமைந் துள்ள விதத்தை ஒத்திருக்கிறது என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயத்தின் முகப்பில் கோபுர நுழைவாயில் உள்ளது. அதையடுத்து இரண்டு பெரிய செவ்வக வடிவில் அடுத்தடுத்து இரு பிராகாரங்கள் அமைந்திருக்கின்றன. அதன் பின்னர் வரும் மண்டபங்களைத் தாண்டினால் கர்ப்பக்கிருஹம் வரும். ஆலயத்தினுள் நவரங்க மண்டபம் மற்றும் முகமண்டபம் என இரு மண்டபங்களும் உண்டு. முகமண்டபத்தின் கூரை ஒரு மாலை வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மஹாவிஷ்ணுவின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.

இந்த ஆலயத்தின் மூலவர் ரங்கநாதர்; தாயார் ரங்கநாயகி; தீர்த்தம் காவிரி. கர்ப்பக்கிருஹத்தில் ஆதிசேஷன் மீது, கிடந்த கோலத்தில் ரங்கநாத ஸ்வாமி தரிசனம் தருகிறார். அவருக்கு ஆதிசேஷனின் ஏழு படங்களும் விரிந்து குடைபிடிக்கின்றன.

வலது கையைத் தலைக்கு வைத்திருக்கிறார். இடது கையை நீட்டிக்கொண்டிருக்கிறார். பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மா உருவங்களும் காட்சியளிக்கின்றன. காலருகில் லக்ஷ்மிதேவி வாசம் புரிகிறார். அங்கே காவிரி யன்னை இருப்பதாகவும் சொல்கின்றனர்.

நரசிம்மர், கோபாலகிருஷ்ணர், ஸ்ரீனிவாசர், வெங்கடேஸ்வரர், ஹனுமார், கருடர் மற்றும் ஆழ்வார்களுக்கான சிறிய கோயில்களும் இந்த ஆலயத்தி னுள்ளேயே இருக்கின்றன. புராண வரலாறுகளின்படி ஆதியில் கௌதமர், நாரத முனிவரிடம் இருந்து ‘பாஞ்சராத்திர’ ஆகம வழிபாட்டு முறையைக் கற்றுக் கொண்டு அதன்படி பெருமாளை வழிபட்டார் என்கிறார்கள். அப்படி முதன்முதலாக வழிபட்ட புண்ணிய தினத்தை இப் போதும் ‘ஸ்ரீரங்க ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சிறப்பு அபி ஷேக ஆராதனைகள் நடை பெறுவது வழக்கம். கௌதம பூஜை மற்றும் மங்களார்த்தி மிகவும் சிறப் பானது. அன்றைய இரவில் ஸ்ரீரங்கமுடி அலங்காரத்துடன் எம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஆலயம், இந்தியத் தொல்பொருள் துறையால் புராதனமான தேசியச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட் சின்னங்களை ‘யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாக (Unesco World Heritage Site)`அறிவிப்பதற்குப் பரிந்துரை செயப்பட்டிருக்கிறது.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :