பொன்விழா காணும் பழநி ஆண்டவர் தியேட்டர் (17.7.71 17.7.21)


சந்திப்பு : பூர்ணிமா சந்திரமௌலிஒரு காலத்தில் நடிப்பிற்கும் நடிகர்களுக்கும் வாழ்வு கொடுத்து, அதை மக்களிடம் சேர்த்து, ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொடுத்த திரையரங்குகளின் நிலை இன்று கேள்விக்குறியாய் நிற்கிறது. சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் பலருக்கு சினிமா தியேட்டர் என்பது அவர்கள் வாழ்வின் அங்கம்! எத்தனையோ வருடங்கள் வெற்றிகரமாகவும் காலத்திற்கேற்ப வெளிவரும் திரைப்படங்களை வெளியிட்டும் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளின் வரிசையில் முக்கிய பங்குவகிக்கிறது,

தாஜ்மஹால் மும்தாஜ் நினைவாக ஷாஜகானால் எழுப்பப்பட்டது. அதைப் போல், எங்கள் ஐயாம்மா திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதால் அவர்கள் நினைவாக, ஸ்ரீ பழநி ஆண்டவர் தியேட்டரை" நிறுவினார் எங்கள் ஐயாப்பா.

கோடைக்கால விடுமுறையில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட, எங்கள் சிறுவர் சிறுமியர் பட்டாளமே நாகுத்தேவர் என்ற காவலாளியை ஏமாற்றி, உள்ளே சென்று விடுவோம்.

மின்சாரம் போய்விட்டால், என்னுடைய மூத்த அண்ணா, இருட்டில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்தால் கண் கெட்டு விடும். என்னுடன் தியேட்டருக்கு உடனே வா. பிறகு மின்சாரம் வந்தவுடன் இரவில் பாடங்களைப் படித்து விடு" என்று சொல்லி அழைத்துச் செல்வார்.

பாடத்தை மனப்பாடம் செய்வது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், திரைப்படம் தியேட்டரில் திரையிடும்போதே மாறி மாறிப் போடுவதால் திரைப்பாடல் மனப்பாடம் ஆகிவிடும். கடைசி நாள் என்றால், ரசிகர்களைக் குஷிப்படுத்த திரைப்பாடல்களை இருமுறை போடுவார்கள்.

காலம் மாறும், காட்சிகள் மாறும் என்பதற்கேற்ப எங்கள் தியேட்டரில் பூரிக்கிழங்கும், ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப இன்னம் வேறு தின்பண்டங்களும், காபி, தேநீர் என அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. என்னதான் தொலைக்காட்சியில் படம் பார்த்தாலும் அன்று திரை அரங்கின் ஸ்டேஜ் அருகே அமர்ந்து படம் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

‘வெயில்’ என்ற திரைப்படத்தில் ‘உருகுதே மருகுதே’ என்ற பாடல் காட்சியைப் பார்க்கும் போது, எங்கள் தியேட்டர் புரெஜக்டர் அறைதான் நினைவுக்கு வரும். அந்தத் திரைப்படத்தில் திரை அரங்கை இடிக்கும்பொழுது நெஞ்சே வலிக்கும். இப்போது அந்தத் திரையரங்கம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பழனியப்பரின் பேரன் அமர்நாத்திடம் பேசினோம்...

இந்த திரையரங்கம் உருவான வரலாறு என்ன?

எங்கள் தாத்தா திரு.ஓ.கு.கு.பழனியப்ப நாடார் தன் தமையனார் திரு.ஓ.கு.கு.பெரிய கருப்ப நாடாருடன் கூட்டு வியாபாரம் செய்து வரும் போது 1956ம் வருடம் சிவகாசியில் ஸ்ரீபழனியாண்டவர்புரம் காலனியை உருவாக்கினார்கள். அப்போதேலே அவுட்டில் தியேட்டருக்கு என்று ப்ளான் அப்ரூவல் வாங்கி விட்டார்கள். அரிசி ஆலைகள் நடத்தி வந்த அவர்கள் திரையரங்கம் நடத்தும் அனுபவத்திற்காக முதலில் 1963 முதல் டூரிங் டாக்கீஸ் ஸ்ரீ மஹாலிங்கம் டாக்கீஸ் என்ற பெயரில் நடத்தினார்கள். பின்பு 1971ம் ஆண்டு இந்த ஸ்ரீ பழனியாண்டவர் தியேட்டர் என்ற திரையரங்கத்தைத் துவங்கினார்கள்.

அந்தக் காலத்திலேயே தியேட்டரை உருவாக்குவதன் நோக்கம்?

அண்ணன் தம்பி ஒற்றுமையை அனை வருக்கும் பறைசாற்றுவதற்கான ஒரு பொழுதுபோக்குத் திட்ட மாகத்தான் தியேட்டரை நிறுவினார்.

தியேட்டரில் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் மிகவும் பின்தங்கி விடுவோம். விஞ்ஞான மாற்றத்தி னால் இளைஞர்ப் பட்டாளத்தின் கவனம் நம் தியேட்டர்ப் பக்கம் திரும்பி உள்ளது.பல தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. அதன் பழைமையும் பாரம்பரியமும் இன்றும் பலரைக் கோருகின்றது. முக்கியமாக பெண் களைத் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இந்தத் தியேட்டரை நம்பி அனுப்பலாம் என்ற நற்பெயரைச் சம்பாதித்து உள்ளது.

பல தொழில்நுட்பங்கள் தியேட்டரில் புகுத்தப் பட்டு உள்ளன. அதனால் தியேட்டரில் வருமானம் கூடியதா? அல்லது குறைந்ததா?

லாப-நஷ்டம் பார்த்தால் தொடர்ந்து தியேட்டரை நடத்த முடியாது. வியாபாரம் என்பதைத் தாண்டி மக்களைத் தியேட்டருக்கு வர வைப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.

இவ்வளவு முன்னேற்றம் அடைந்த தியேட்டரில் ஏன் தின்பண்டங்கள் விலையில் இவ்வளவு ஏற்றம்?

என்றோ தியேட்டரை நாடி வரும் ரசிகர்கள் இந்தத் தின்பண்டங்களின் செலவை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை. ஹோட்டலுக்குச் செலவழிப்பது போல் இது வும் ஒரு செலவு அவ்வளவுதான். ஒரு ரசிக னாக அதனை அவனுடைய அபிமான நடிகருக் காகச் செயும் காணிக்கையாகவே அவன் நினைக்கிறான்.

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படமானது எத்தனை பேர்களுக்கு அவர்களுடைய பள்ளி, கல்லூரி அனுபவம் மட்டுமின்றி அந்த வயதில் ஏற்படும் பருவக் கோளாறைத் தெளிவாக ஞாபகப்படுத்தி இருக்கிறது? திரை அரங்குகளைப் பொழுதுபோக்குச் சோலைகளாக மாற்ற அரசாங்கம் முன்வர வேண்டும். எந்தத் தொழிலையும் நசுங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?

எத்தனையோ நடிகர்கள் சினிமாவின் புகழைச் சம்பாதித்து இருப்பார்கள். அந்தப் புகழால்தான் பணத்தையும் சம்பாதித்து இருப்பார்கள். அன்று அவர்களை ஏற்றிவிட்ட ரசிகர்களுக்கு அவர்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறார்கள்? ஏன், சம்பாதித்ததை முதலீட்டாகப் போட்டு திரை அரங்கு களை மீட்டு எடுக்கும் முயற்சியில் செயல் படலாமே? ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா? கைதட்டி கரகோஷம் எழுப்பி, உங்கள் படத்தை நிறைய நாட்கள் ஓட்டச் செய்த ரசிகர்களை கைவிடலாமா? திரை அரங்குகள் மீண்டும் ரசிகர்களால், அரங்கம் நிறைந்த காட்சிகளாக மாற முயற்சி செய்வோமாக!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :