உங்களுடன்...

வாசக நெஞ்சங்களே, வணக்கம்.
- எஸ்.கல்பனாவாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. மனம்தான் சூழ்நிலையை தீர்மானிக்கிறது என்பதை அழகாக ஒரு சம்பவத்துடன் சொன்னார் ஒரு ஆன்மிக பெரியவர்.

வழக்கமாக கோயிலுக்கு வரும் ஒரு பெண்மணி பல நாட்களாக வராமலிருந்து, பின்னர் ஒருநாள் வந்திருக்கிறார். இதுபற்றி அர்ச்சகர் விசாரித்ததற்கு அந்தப் பெண் கோயிலுக்கு வருவதே மன நிம்மதிக்காகத் தான்... ஆனால் பாருங்கள்... இங்கும் செல்போனில் பலரும் சத்தமாகப் பேசுகிறார்கள். என்னால் மனம் ஒன்றி கடவுளை கும்பிட முடியவில்லை. அதனால்தான் இத்தனை நாள் வீட்டிலேயே இருந்து விட்டேன்" என்று சொல்லியுள்ளார்.

அந்த அர்ச்சகர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார்.

சரி... நீங்கள் கோயிலுக்கு வருவதும் வராததும் உங்கள் விருப்பம். ஆனால், இன்று சுவாமி அபிஷேகத்துக்கு உங்கள் கையால் கோயில் கிணற்றிலிருந்து இந்த பாத்திரத்தில் நீர் நிரப்பி கொண்டு வர முடியுமா? ஆனால், ஒரு சொட்டு நீர்கூட கீழே சிந்தி விடக்கூடாது. அப்படி சிந்தினால், அபிஷேகத்துக்குப் பயன்படாது. மேலும் அந்த தண்ணீர் பாத்திரத்துடன் ஒருமுறை பிராகாரத்தை சுற்றிவிட்டு வர வேண்டும்..." என்று அர்ச்சகர் கேட்க, அந்த பெண்மணி உடனடியாக சம்மதித்திருக்கிறார்.

அர்ச்சகர் சொன்னபடியே செய்து முடித்து, முகம் மலர தண்ணீர் பாத்திரத்தை கொடுத்திருக்கிறார். கோயில் அர்ச்சகர் அவரிடம், இன்றும் இப்போதும் கோயிலில் செல்போனில் பலர் பேசத்தான் செகிறார்கள். அவற்றை நீங்கள் கவனித் தீர்களா?" என்று கேட்க, ஒரு நிமிடம் திகைத்துப் போனாராம் அப்பெண்.

இல்லை.. யார் பேசுவதையும் நான் கவனிக்கவில்லை. என் கவன மெல்லாம் இந்த தண்ணீர் பாத்திரம் மீதுதான் இருந்தது. தண்ணீர் சிந்தி விடக்கூடாதே என்று மட்டுமே கவனம் வைத்து நடந்தேன். வேறு எதை யும் பார்க்கவில்லை" என்று அந்த பெண் பதில் சொல்ல, அர்ச்சகர் சொன்னார்.

அதுதான் சூட்சுமம். இனி நீங்கள் கோயிலுக்கு வரும்போது தெய்வத்தின்மீது மட்டும் கவனம் வைத்தால், பிற தொந்தரவுகள் ஒரு பொருட்டாகப் தோன்றாது" என்று சொல்ல, அப்பெண்மணி நிம்மதியுற்றாராம்.

மனம் செயும் மாயம்தான் எல்லாமே என்பதை உணர்ந்தால் எந்த பிரச்னையையும் சமாளிக்கலாம் என்று அந்த பெரியவர் சொன்னது உண்மைதானே?!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :