பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!

ஆலய தரிசனம்
சென்னிவீரம்பாளையம் செ.சு.சரவணகுமார்திருப்பூர் மாவட்டம், கூழையகவுண்டன்புதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். பக்தனின் பக்திக்கு மனமிரங்கி அந்தப் பரம்பபொருளே சுயம்புவா எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக குலத் தைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையும், மைத் துனரும் மதுரையிலிருந்து புறப்பட்டு அவி நாசி, சேவூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு வியாபரம் நிமித்தமாக குதிரையில் சென்றனர். இரவு நேரமானதால் அவர்கள் இத்தலத்தில் தங்கி ஓ வெடுத்தனர். மாப்பிள்ளை அதீத சிவ பக்தர். மறுநாள் காலை நீராடிய அந்த சிவ பக்தர் வழிபாடு செய எண்ணினார். தனது மைத்துனரிடம், ‘அருகில் சிவா லயம் ஏதேனும் உள்ளதா?’ என பார்த்து வரக் கூறினார்.

ஊர் முழுக்கத் தேடியும் சிவாலயம் இல்லாததை தனது மாப்பிள்ளையிடம் கூற, அந்த சிவ பக்தர் விரக்தியுடன், ‘எனக்கு ஏன் இந்த சோதனை?’ என சிவபெருமானை மனமுருகப் பிரார்த்தித்தார். அப்போது மைத்துனர், ‘கவலைப்படாதீர்கள். இப்போது தான் ஒரு முனிவர் சிவ வழிபாடு செது விட்டு போன இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது எனக் கூறி அழைத்துச் சென்றார்.

மாப்பிள்ளை, தனது மைத்துனர் அழைத்துச் சென்ற இடத்தில் அமைந்த சிவலிங்கத்தை வழிபட்டார். அதைத் தொடர்ந்து மைத்துனர் தனது மாப்பிள்ளையிடம், நீங்கள் இன்று நன்றாக ஏமாந் தீர்கள். நான் தங்களுக்குத் தெரியாமல் குதிரைக்காக வைத்திருந்த கொள்ளு பையில் மணலை நிரப்பி, சிவ லிங்கம் போல் உருவாக்கி, முனிவர் வழிபாடு செத தாக கூறி ஏமாற்றியதாகச் சொல்லி ஏளனம் செய்தார்.

அப்பாவியான அந்த சிவ பக்தர், ‘தனக்கு ஏன் இந்த சோதனை?’ என எண்ணி வேதனை அடைந்து உயிரை மாத்துக்கொள்ள முடிவெடுத்தார். அப்போது பக்தனின் பக்தியைக் கண்டு மெச்சிய பரம்பொருள் காட்சி தந்து, ‘நான் இங்கே லிங்க வடிவில் உள்ளேன். கவலை வேண்டாம்’ எனக் கூறி மறைந்தாராம். பின்னர் மணல் நிரப்பிய கோணிப் பையை எடுக்க மைத்துனர் முயன்றார். ஆனால், அது அசைக்க முடியாத நிஜ லிங்கமாக மாறியிருந்தது. பக்தனின் வேண்டுதலுக்காக சுயம்பு லிங்கமாக மாறிய சிவபெருமானின் திருவருள் மகிமையை உணர்ந்து சிவ பக்தர் பேரானந்தம் அடைந்தார். தனது செயலுக்கு வருந்திய மைத்துனர் மனம் திருந்தி தானும் சிவ பக்தரானார் என்பது வரலாறு.

கொள்ளு வைக்கும் பையை, ‘மொக்கணி’ என அழைப்பதுண்டு. ஆதலால் இத்தல இறைவனின் திருநாமம் ‘மொக்கணீஸ்வரர்’ என வழங்கலாயிற்று. அதன் பின்னர் இருவரும் மைசூர் சென்று, வரும் வழி யில் நடந்தவற்றை மகாராஜாவிடம் கூற, அவர் இத்தல இறைவனை வழிபட்டு ஆலயம் எழுப்பியதாக கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. புராண காலத் தில் இவ்வூரின் பெயர், ‘மொக்கணீச்சரம்’ என அழைக் கப்பெற்றுள்ளது. திருவாசகத்தில் மாணிக்க வாசகர், ‘கீர்த்தி திருத்தாண்டகத்தில்’ இத்தலம் பற்றி, ‘மொக் கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்க தாகக் காட் டிய தொன்மையும்’ எனக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முகப்பில் உள்ள சால விமானத்தில் குதிரையில் வந்த மாப்பிள்ளையும், மைத்துனரும் சிவபெருமானை பூஜித்த நிகழ்வை சுதை வடிவில் அமைத்துள்ளனர். பலிபீடம், நந்தி யெம்பெருமான் சன்னிதி கடந்து ஆலயத்தினுள் நுழைந்தால் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து கருவறையில் சுயம்பு வடிவான இறைவன் மொக்கணீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழகிய சிவலிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். அதீத நம்பிக்கை வைத்து ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்துக்கு ஆளானவர்கள் இங்கு வந்து வேண்டி மன அமைதி பெறுகிறார்கள். நம்பியவரால் ஏமாற்றமடைந்து வஞ்சிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் சிறப்பு பூஜை செது வழிபட்டால் மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் புது வாழ்வு அருள்வதாக இத்தலம் வந்து பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

மகாமண்டபத்தில் மூத்த விநாயகர், வள்ளி தெவானை சமேத முருகப்பெருமான், ஏழு குதிரைகள் பூட்டிய திருத்தேரில் சிவசூரியன், மாணிக்கவாசகர் ஆகியோர் தரிசனம் கிடைக்கின்றது. தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் இறைவி மீனாட்சியம்மை அற்புதப் பேரழகுடன் தரிசனம் தருகின்றார். பெண்களுக்கு இவள் மிகவும் இஷ்ட தேவி. கஷ்டங்களை களையும் நாயகி. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் வேம்பும், அரசும் இணைந்து வளர்ந்துள்ள மரங்களுக்கு கீழ் நாகர் திருமேனிகளுக்கு மத்தியில் ஜல விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் தினசரி காலை சிறப்பு பூஜை நடை பெறுகிறது. பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்கள் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதோஷ நாளன்று சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு பலனடைகிறார் கள். குடும்ப ஒற்றுமை, காரிய வெற்றி, தொழில் வளம், கல்வி ஞானம் ஆகிய வரங்கள் கைகூடிட சிறப்பு அர்ச்சனை செயப்படுகிறது. அமாவாசை தினத்தன்று மதியம் அபிஷேகத்துடன் துவங்கி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறு கின்றது. பௌர்ணமி நாளிலும் சிறப்பு பூஜை நடைபெறும். தல விருட்சமாக கருநொச்சி மற்றும் வில்வ மரம் உள்ளது.

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் 108 சங்காபிஷேக பூஜை நடைபெறுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகம், மஹா சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போது இவ்வாலய திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திருப்பணியில் பங்குபெற்று இறைவனின் பேரருளுக்குப் பாத்திரமாவோம்.

அமைவிடம் : அவிநாசியிலிருந்து சேவூர் செல்லும் சாலையில் 9 கி.மீ., சேவூரிலிருந்து குட்டகம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் கூழையகவுண்டன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆலயம் அமைந்துள்ளது.

தரிசன நேரம் : காலை 9 முதல் பகல் 11.30 மணி வரை. அமாவாசை நாளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை. பிரதோஷ நாட்களில் மாலை 4 முதல் இரவு 7 மணி வரை.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :