வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!

ஸ்ரீ ராமநவமி தரிசனக் கோயில்
ராஜிராதாதெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரையின் அருகில் சிறு குன்றின் மீது அமைந் துள்ளது ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி திருக்கோயில்.

இக்கோயில் மூலவர் ஸ்ரீராமர் தனது இடது மடியில் அன்னை சீதா தேவியை அமர்த்தி சேவை சாதிக்கிறார். அவருக்கு இடப்புறம் லட்சுமணர் நின்ற திருக்கோயில் காட்சி தருகிறார்.

கருவறையில் சதுர்புஜராகக் காட்சி தரும் ஸ்ரீராமர் தமது நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு ஆகியவற்றைத் தாங்கிய கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பத்ரி எனும் முனிவருக்கு, ஸ்ரீராமர் காட்சி தந்ததால் இத்திருத்தலம், ‘பத்ராசலம்’ என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீராம பாதம் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் உருவான விதம் மிகவும் சுவாரசிய மானது. கோபண்ணா எனும் ஸ்ரீராம பக்தர் 17ஆம் நூற்றாண்டில் பத்ராசலத்தில் தாசில்தாராகப் பணி புரிந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் பத்ராசலம் நவாப்பின் ஆளுமையின் கீழ் இருந்தது. கோபண்ணா ராம நாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமனின் புகழைப் பரப்புவதும், ராமர் பெயரால் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வதையும் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் இவருக்கு அழகான ராம-லட்சுமண- சீதை ஆகியோர் ஒன்றாக இருக்கும் விக்ரகம் ஒன்று கிடைத்தது. தெய்வத் தன்மையுடன் ஜொலித்த அந்தத் திருச்சிலையை மூலவராக்கி ஒரு கோயில் கட்ட வேண்டுமென கோபண்ணா நினைத்தார். தனது ஆசையை மக்களிடம் சொல்லி நிதி உதவி கேட்டார். பத்ராசலம் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவர்கள், அறுவடை முடிந்ததும் உதவுகிறோம். அதற்குள் தங்களிடம் பணம் இருந்தால் கோயிலைத் கட்டத் துவங்கிவிடலாம்" எனக் கூறினர்.

அதுவரை மக்களிடம் வரி வசூல் செய்து, நவாப் பிடம் ஒப்படைக்க வேண்டிய பெருந்தொகை கோபண்ணாவிடம் இருந்தது. அதனைக் கொண்டு (1674 வாக்கில்) ஸ்ரீராமருக்கு மிக அற்புதமான ஒரு கோயிலை எழுப்பினார். ஆனால், ‘மக்களின் வரிப் பணத்தில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுகிறேன். பிறகு வசூல் ஆனதும் திருப்பித் தருகிறேன்’ என நவாப்பிடம் கூறவில்லை கோபண்ணா.

கோயிலில் ஒரு சுதர்சன சக்கரம் வைக்க விரும் பினார் கோபண்ணா. ஆனால், எவ்வளவோ முயன்றும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் ஸ்ரீராமரிடமே, ‘எனக்கு ஒரு சுதர்சன சக்கரம் கிடைக்க உதவ வேண்டும்’ என மனமுருக வேண்டினார். உண்மையான பக்தனை, ஸ்ரீராமர் கைவிடுவாரா? அன்றிரவு கோபண்ணாவின் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், கோதாவரி ஆற்றில் தாம் குறிப்பிடும் இடத்தில் ஸ்நானம் செய்தால், அங்கு நீங்கள் கேட்ட சுதர்சன சக்கரம் கிட்டும்" எனக் கூறி மறைந்தார். அதன்படி, ஸ்ரீராமர் குறிப்பிட்ட இடத்தில் கோபண்ணா ஸ்நானம் செய்தபோது, அவர் மிகவும் ஆச்சரியப்படும்படி அங்கு அவருக்கு ஒரு சுதர்சன சக்கரம் கிடைத்தது. அதனை கோயிலில் நிறுவி, கோயில் திருப்பணியை நிறைவு செய்தார் கோபண்ணா.

இந்தத் தகவல்கள் அனைத்தும் நவாப்புக்கு தெரிய வந்தது. ‘தனக்கு சேர வேண்டிய வரிப்பணத்தில் ஸ்ரீராமருக்கு கோயில் எழுப்புவதா?’ என கடும் கோபம் கொண்டார் நவாப்! கோபண்ணாவை தாசில்தார் பதவியிலிருந்து நீக்கியதுடன், ‘அரசுக்குத் தர வேண்டிய வரிப் பணத்தை தரவில்லை’ எனக் கூறி பன்னிரெண்டு ஆண்டுகள் அவரை கோல்கொண்டா கோட்டை சிறையில் அடைத்து சித்ரவதை செய்ய உத்தரவிட்டார்.

அப்போதும் கோபண்ணா உதவிக்கு அழைத்தது ஸ்ரீராமரைத்தான்! சிறையில் அவர் ஸ்ரீராமரை நினைத்து ஏக்கமுடன் எழுதிய பாடல்களை, ‘தாசர சதகம்’ என அழைப்பர். தம்மை நினைத்து உள்ளம் உருகப் பாடியவருக்கு எப்படி தாம் உதவுவது என யோசித்தார் ஸ்ரீராமர். ஸ்ரீராமர், தம்பி லட்சுமணனோடு, ‘ராமோஜி, லச்மோஜி’ என்ற பெயரில் நவாப்பை காண வந்தனர். ‘தாங்கள் கோபண்ணாவின் ஊழியர்கள். அவர் கட்ட வேண்டிய வரித் தொகைக்கு, அவர் சார்பாக தங்கக் காசுகளாகத் திருப்பித் தர உள்ளதாகக்’ கூறினர். இதனைக் கேட்டு திகைத்த நவாப், கோபண்ணா செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடாக தங்கக் காசுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு சாட்சியாக பத்திரமும் எழுதிக்கொடுத்தார்.

அதன்பின், ராமர்-லட்சுமணர் இருவரும் மாயரூபம் எடுத்து கோல்கொண்டா சிறைக்கு வந்து, அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோபண்ணாவின் தலையணைக்கு அடியில் அந்தப் பத்திரத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதிகாலை எழுந்த கோபண்ணா, தலையணையின் கீழே காகிதம் போன்ற முத்திரைதாள் இருப்பதைக் கண்டு, அதன் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்தார்.

அதேபோல், அன்று காலை எழுந்த நவாப் மனதிலும் திடீர் தெளிவு உண்டாகியிருந்தது! இரவு தன்னிடம் வந்து பொற்காசுகளைக் கொடுத்த இருவரைப் பற்றியும், அவர்கள் முகத்தில் தென்பட்ட ஒளியையும் கண்டு திகைத்து, ‘ஆஹா... வந்து சென்றது ஸ்ரீராமர்-லட்சுமணர்தான்’ என வியந்து, அவர்கள் கொடுத்த தங்கக் காசுகளுடன் கோல் கொண்டா சிறைக்கு வந்தார். நடந்தவற்றை கோபண்ணாவிடம் கூறி ஆச்சர்யப்பட்டதுடன், அவரை உடனடியாக விடுவித்து தன்னிடம் கொடுக்கப் பட்ட தங்கக் காசுகளையும் ஒப்படைத்தார்.

கோபண்ணா அவரிடமிருந்து அனைத்துத் தங்கக் காசு களையும் வாங்கிக்கொள்ளாமல் இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை நவாப்பிடமே தந்து விட் டார். அதன் பிறகு நவாப் ஸ்ரீராமர் பக்தராகி, கோயில் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற ஏராள மான உதவிகளைச் செய்தார் என்பது வரலாற்றுச் செய்தி.

ஸ்ரீராம நவமி உத்ஸவம் இந்தக் கோயிலில் அந்தக் காலத்திலேயே விமரிசையாக நடைபெற்றுள் ளது. இந்த உத்ஸவத்தில் ஸ்ரீராமருக்கு அணிவிக்க, நவாப் உயர்ந்த முத்து மாலையை வருடா வருடம் அனுப்பும் கைங்கர்யத்தைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது! இதை, இன்று தெலங்கானா அரசு நிறைவேற்றி வருகிறது. ஸ்ரீராம நவமியன்று ராமர்-சீதை திருக் கல்யாண வைபவம் இந்தக் கோயிலில் மிகச் சிறப் பாக நடைபெற்று வருகிறது! கோயில் துவஜஸ் தம்பத்தின் கீழ், ‘கோபண்ணா’ என்கிற பக்த ராமதாஸ், ஸ்ரீராமைரை கைகூப்பி தொழுதவண்ணம் காட்சி தரும் திருச்சிலையை தரிசிக்கலாம்.

பத்ராசலம் ஸ்ரீராமர் திருச்சிலை கோபண்ணாவுக்குக் கிடைத்தது பற்றியும் ஒரு சுவாரசியமான செய்தி சொல்லப்படுகிறது.

பத்ராசலத்துக்கு அருகில் பத்ரிரெட்டி பாளையம் என ஒரு கிராமம் உண்டு. இங்கு போகலதாமக்கா எனும் ஒரு பெண்மணி வசித்து வந்தாள்! அவள் சிறந்த ஸ்ரீராம பக்தை. அவளுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதனால் அவள் ஒரு சிறுவனை தத்தெடுத்து அவனுக்கு, ‘ராமன்’ என பெயர் சூட்டி வளர்த்து வந்தாள்.

ஒருநாள் காட்டில் சுள்ளி பொறுக்கச் சென்ற ராமன் திரும்பவில்லை. இதனால் திகைத்த போகலதாமக்கா, அவனைத் தேடி காட்டுக்குச் சென்றாள். புதர் மண்டியிலிருந்த ஒரு பகுதி யிலிருந்து ராமன், ‘அம்மா...அம்மா..." எனக் கூப்பிடும் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது அங்கிருந்த எறும்பு புற்றிலிருந்து அந்த சப்தம் வந்தது. எறும்புப் புற்றை அகற்றிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அங்கு ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் உள்ள சிலை கிடைத்தது.

‘இது ஸ்ரீராமனின் விளையாட்டுதான்’ எனப் புரிந்துகொண்ட போகலதாமக்கா அந்தச் சிலையை எடுத்து வந்து, ஓலையால் வேயப்பட்ட ஒரு கோயிலை எழுப்பி, அதனுள் அந்தச் சிலைகளை வைத்து வணங்கி வந்தாள். அந்தப் பகுதியில் பனை மரங்கள் அதிகம் என்பதால் பனம் பழம் அதிகமாகக் கிடைத்தது! போகலதாமக்காவுக்கோ தினமும் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்ய வசதி கிடையாது.

இதனால் அவளுக்குக் கிடைத்த பனம் பழத்தையே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டாள். இருந்தும் அவளது மனதில், ‘ஸ்ரீராமருக்கு தன்னால் சரியான நைவேத்தியம் செய்ய இயலவில்லையே’ என்ற வருத்தம் இருந்தது.

இதனை உணர்ந்த ஸ்ரீராமர் ஒருநாள் அவளது கனவில் தோன்றி, கவலை வேண்டாம்... எனது இந்தச் சிலைகளை தாசில்தார் கோபண்ணாவை சந்தித்து கொடுத்து விடு. அவர் எனக்குப் பெரிய கோயில் ஒன்றை எழுப்புவார். அப்போது நைவேத்தியங்களுக்கும் பஞ்சமிருக்காது! உனக்கும் திருப்தியான தரிசனம் கிடைக்கும்" எனக் கூறி மறைந்தார். பிறகுதான் போகலதாமக்கா அந்தச் சிலையை கோபண்ணாவைச் சந்தித்து ஒப்படைத்தார்.

கோயில் மண்டபத்தில் ஸ்ரீராமருக்கு, போகலதாமக்கா, பனம்பழம் வைத்து பூஜிக்கும் காட்சியை சிற்பமாக இன்றும் காணலாம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :