கருணையே வென்றது!

ஆன்மிகக் கதை
கே.நிருபமாமகத நாட்டு அரசன் மாகதன் சிறந்த வீரன். அவன் திக்விஜயம் செய்து ஒவ்வொரு நாடாகக் கைப் பற்றி வந்தான். அவனை எதிர்த்துப் போராடி வெல்லும் சக்தி வேறு எந்த நாட்டுக்கும் இருக்க வில்லை. மாகதனிடம் தோற்ற நாட்டு கஜானாக்களை கொள்ளையடித்ததோடு, இளைஞர்களையும் சிறைப் பிடித்தான். அவனது படையெடுப்பு இப்படியே நடந்து கொண்டிருந்தது.

ஒருநாள் கோசல நாட்டை முற்றுகையிட்டு அந்நாட்டு படை வீரர்களை அழித்தான். கஜானாவிலி ருந்து தங்கம், விலையுயர்ந்த ரத்தினங்களை அபகரித்தான். இளைஞர்களை சிறைப்படுத்தினான். பிறகு, அந்நாட்டை விட்டு வெளியேற ஒரு ஆற்றைக் கடக்க வேண்டிருந்தது. கரை புரண்டு ஓடும் நதியில் முதலைகளும் இருந்தன. கோசல நாட்டவர்களுக்கு அந்த நதியைத் தாண்டுவது கைவந்த கலை. ஆனால், பிற நாட்டவர்கள் அந்த நீரில் மூழ்கி, முதலைகளுக்கு உணவாகி உயிரிழந்து போவது வழக்கம்.

மாகதன் கவலைப்படுவதைக் கண்ட மந்திரி, பிரபு! நாம் இந்நதியை கடந்துபோக ஒரு உபாயம் உள்ளது. நாம் சிறைப்பிடித்து வைத்திருக்கிறோமே, அந்த இளைஞர்களுக்கு நதியைத் தாண்டும் உபாயம் தெரியுமல்லவா? அவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரைத் தோளில் சுமந்துபோய் அக்கரையில் பாதுகாப்பாக இறக்கிவிட்டால் அந்த இளைஞர்களுக்கு விடுதலை அளிப்பதாகச் சொல்லுவோம்" என்றார்.

அரசனுக்கும் அதுவே சரியென்று பட்டதால் அவ்வாறே செய்தான். இளைஞர்களும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக்கொண்டு, மகத தேசத்தினரை ஒவ் வொருவராகக் கரை சேர்த்தனர். அதன்படி திடகாத் திரமான வாலிபன் ஒருவன் மாகதனை தனது தோளில் சுமந்து சென்று அக்கரையில் இறக்கி விட்டான். ஒப்பந்தப்படி அவனை விடுதலை செய்ய அரசன் முன்வந்தபோது, அவன் அதை மறுத்து, எனக்கு விடுதலை வேண்டாம்! நான் ஆயுள் முழுதும் உங்கள் அடிமையாகவே இருக்கிறேன்" என்றான். அரசனுக்கு தாளமுடியாத ஆச்சர்யம்! எல்லோரும் விடுதலையை எதிர்பார்க்கும்போது, நீ மட்டும் ஏன் வேண்டாம் என்கிறா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த இளைஞன் அக்கரையில் உட்கார்ந் திருந்த ஒரு வாலிபனைச் சுட்டிக்காட்டினான். அவனுக்கு இரண்டு கால்களும் முடமாகியிருந்தன. அரசே! அதோ அவன் தாய்க்கு ஒரே பிள்ளை! கம்பளங்கள் நெசவு செய்து வயதான தனது தாயைக் காப்பாற்றி வருகிறான். அவன் தற்போது உங்கள் கைதி! ஆனால், அவனால் உங்கள் ஆட்களைச் சுமந்து சென்று நதியைத் தாண்டி விடுதலையடைய முடியாது. அவன் உங்கள் நாட்டுக்கு கைதியாக வந்தால் அவனது தாய் பட்டினியால் இறந்துவிடுவாள்! எனக்கு யாரும் உறவினர்கள் இல்லை. எனக்கு பதிலாக அவனை விடுதலை செய்தால் அவன் தாய்க்கு உதவியாக இருக்கும்!" என்று வேண்டினான்.

இதைக்கேட்டு மாகதனின் மனம் கரைந்தது. அந்த வாலிபனை ஆரத்தழுவிக்கொண்டான். மண்ணாசை யால் எத்தனையோ உயிர்களைக் கொன்றிருக்கிறேன்! ஆனால், உனது மனித நேயம், தியாக புத்தி எனது கண்களைத் திறந்தது! நான் இந்தக் கணமே உங்கள் அனைவரையும் விடுதலை செய்கிறேன்! இனி, அனைத்து உயிர்களின் நலனுக்காகவும் பாடுபடுவேன்!" என்று சத்தியம் செய்தான்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :