எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!

ஆலயம் கண்டேன்
சிவ.அ.விஜய் பெரியசுவாமி‘ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தைக் கண்டுவர, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன், தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூறினார். அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோக வனத்தில் கண்டார்.

ஸ்ரீராமபிரான் அளித்த கணையாழியைக் கொடுத்து விவரங்களைக் கூறினார். மகிழ்ந்த சீதா தேவி கொடுத்த சூளாமணியை பெற்றுக்கொண்டார் அனுமன். பின்னர், இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டு, ராவண தர்பாரில் ராமபிரானின் ஆற்றலை எடுத்துக்கூறி எச்சரித்தார். அனுமனின் வாலுக்குத் தீயிட்டனர். அத்தீயைக் கொண்டு இலங்கையை எரித்தார் அனுமன். மீண்டும் சீதை இருந்த அசோகவனம் சென்று சீதா தேவி பத்திரமாக இருப்பதை அறிந்துகொண்டு, ‘அனுமன் நற்செதி கொண்டு வருவான்’ என ஆவலுடன் காத்திருந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தார்.

சீதா தேவி கொடுத்தனுப்பிய சூளாமணியினை ஸ்ரீராமனிடம் அளித்து, ‘கண்டேன் சீதையை’ என்று உரைத்தார். பிரிவுத் துயரால் அதுநாள்வரை வாடிப் போயிருந்த ஸ்ரீராமனின் திருமுகம் மலர்ந்தது. பின்னர் ராமபிரான் தனது பரிவாரங்கள் மற்றும் வானர வீரர்களின் உதவியோடு கடலில் பாலம் அமைத்து இலங்கைக்கு போர் தொடுத்துச் சென்றார்.

ஸ்ரீராமபிரானுக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறுகிறது. இறுதியில் ஸ்ரீராமபிரானின் அம்பு, ராவணன் மார்பைத் துளைத்துச் செல்கிறது. ராவணன் மரணத்தைத் தழுவுகிறான். ஸ்ரீராமன் ஏற்கெனவே தன்னிடம் வந்திருந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு முடி சூடி விட்டு, அங்கிருந்து புஷ்பக விமானத்தில் சீதா தேவி, தம்பி லக்குவனுடனும் அயோத்தி திரும்புகிறார். அங்கு ஸ்ரீராமர், சீதா தேவி, அனுமன் மற்றும் தனது சகோதரர்களும், சுக்ரீவனும், விபீஷணனும் சூழ்ந்திருக்க சக்ரவர்த்தியாக பட்டாபி ஷேகம் செய்து கொண்டார் ஸ்ரீராமர்.

மேற்கூறியவை ராமாயணம் சுந்தர காண்டத்தின் ரத்தினச் சுருக்கமாகும். சுந்தர காண்டத்தின் அனைத்துச் சர்க்கங்களையும் பாராயணம் செய இயலாதவர்கள் இக்கட்டுரையின் மேற்கூறிய சுந்தர காண்டச் சுருக்கத்தை அனுதினமும் தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை பாராயணம் செது வந்தால் எந்த நற்காரியத்தை மனதில் உத்தேசித்து பாராயணம் செகிறோமோ, அந்த நற்காரியம் தடங்கலின்றி சுபமாக விரைவில் நிறைவேறும்.வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசர் எழுதிய ராம சரித மானஸ், இராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என ராமாயணம் பற்பல பெரியோர்களால் எழுதப்பட்டதை அறிந்திருப்போம்.அகத்திய மாமுனிவராலும் ராமாயணம் எழுதப் பட்டது. ஆம்! இதனைப் பற்றிய புராணக் குறிப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவண்பரிசாரம் திருத்தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

விடிந்தால் திருக்கயிலையில் உலகாளும் ஈசனுக் கும், அன்னை உமையவளுக்கும் திருக்கல்யாணம். தேவர்களும், முனிவர்களும் மட்டுமன்றி, உலகமே திரண்டிருந்தது அங்கே. அதுசமயம் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. தனது திருமணம் காண வந்த அன்பர்களின் கனம் தாங்காது, பூமி தாழ்ந்து விட்டதை அறிந்தார் சிவபெருமான். உடனே அகத்தியரை அழைத்து, பூமியை சமப்படுத்த வேண்டி அவரை தென்பகுதிக்குச் செல்ல ஆணையிட்டார். ‘தென் பகுதிக்கு தாம் சென்று விடுவதால் ஈசனின் திருமணக் கோலத்தை தரிசிக்க முடியாமல்போகுமே’ என அகத்தியர் சொல்ல, அகத்தியர் விரும்பும் தலங்களில் எல்லாம் தமது திருமணக் கோலத்தை காட்டியருளுவதாக கூறி அருளினார் சிவபெருமான். அகத்தியர் தென் பகுதிக்குப் புறப்பட்டார். பூமி சமன் ஆனது. அப்படி அகத்தியர் தென்பகுதி பொதிகையைக் கடந்து, தெற்கே வந்தபோது குமரியில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். அங்கே மீண்டும் ஈசனின் திருமணக் காட்சியைக் காண அகத்தியர் ஈசனை வேண்ட, அங்குள்ள அத்தி மரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக் கோலக் காட்சியைக் காட்டியருளினார்.

பின்னாளில் வந்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் இங்கு கோயில் எழுப்பிட, அகத்தியர் வழிபட்ட ஈசன் அகத்தீஸ்வரர் என்றும், இத்தலம் அகத்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படலாயிற்று. அகத்தியர் இத்தலம் வந்தபோது அருகிலுள்ள திருவண்பரிசாரம் எனும் திருப்பதிச்சாரம் தலத்தில் அனுமன் அகத்தியரிடம் ராமாயணம் இயற்றுமாறு கேட்டுக்கொள்ள, அனுமனின் விருப்பப்படி அகத்திய மாமுனிவர் ராமாயணம் இயற்றியருளினார். அகத்திய முனிவர் எழுந்தருளிய அகஸ்தீஸ்வரம் திருத்தலத்தில் ஸ்ரீ ராமபிரானுக்கும் தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்த ஸ்ரீராமர் திருக்கோயில் ஆண்டுகள் பல கடந்த பழைமை வாந்ததாகும். கருவறையில் ஸ்ரீராமபிரான், சீதா தேவி, லக்குவன் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் அனுமன் கண்டிப்பாக அருள்பாலிப்பார். இங்கு பக்தர்கள் ‘அனுமன் சாலிசா’ மற்றும் ‘சுந்தர காண்டம்’ பாராயணம், ஸ்ரீராம நாம பாராயணம் செது வழிபடுகிறார்கள். சுந்தர காண்டம் கூட்டுப் பாராயணம் மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திர நாட்களில் இங்கு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், அஷ்டமி, ஏகாதசி, நவமி திதி நாட்களிலும், புதன் கிழமைகளிலும் பக்தர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செதும், சுந்தர காண்டம் பாராயணம் செதும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப்பெறுகிறார்கள். தடைகளைப் போக்கி எண்ணங்களை ஈடேற்றும் திருத்தலமாக இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து சுந்தர காண்டம் பாராயணம் செது கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட்டால் வேண்டும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்.

ஸ்ரீராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் ராமாயணத்தின் பெருஞ்சிறப்புகளை வளரும் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீ ராமர் திருக்கோயிலில், ‘ராமாயண ஞான வேள்வி’ தொடர்ந்து பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஸ்ரீ ராமபிரானுக்கு திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அச்சமயம், தினமும் ராமாயணத்தின் அனைத்து காண்டங்களையும் சுருக்கி பக்தர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பேருரையும் நடைபெறுகிறது.

இந்த ராமாயண ஞான பெருவேள்வி திருவிழாவின் நிறைவு நாளான பத்தாம் நாளன்றும், ஸ்ரீராம நவமி நாளன்றும் ஸ்ரீராமபிரான் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருக்கோயில் வலம் வரும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறுகிறது. புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீராமபிரான் வலம் வரும்போது அன்பர்கள் ஸ்ரீராம நாமம் எழுதிய மாலை மற்றும் ஸ்ரீராம நாமத்தை தங்கள் கைப்பட எழுதிய புத்தகங்களையும் ஸ்ரீராம பிரானுக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

தம்பதிகள் இல்லற உறவு மேம்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், தடம் மாறிச் செல்லும் குழந்தைகள் நல்வழி பெறவும், இல்லற வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அகன்று, நல்லறம் காணவும் இத் தல வழிபாடு பெரிதும் துணை நிற்கும் என்கிறார்கள்.

அமைவிடம் : சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் எனும் ஊரிலிருந்து தெற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அகஸ் தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோயில்.

வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் இரவில் நடைபெறும் சப்த ரிஷி பூஜையின் போது காசி விஸ்வநாதருக்கு வில்வ தளங்களில் சந் தனத்தால் ராம நாமம் எழுதி சமர்ப்பிக்கிறார்கள்.அது மட்டுமல்ல, காசியில் இறப்பவர்களுக்கு சிவ பெரு மானே ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் பத்து பாக்களில் பாடி, ராமாயண காவியத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது ராமாயணத்தின் மகிமையினை எடுத்துச் சொல்லும். மன்னர் குலத்தில் வந்த இளவரசரான குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமர் மீதும், ராமாயணம் பிறர் சொல்லக் கேட்பதிலும் மிகுந்த ஆர்வம். ஒருமுறை ராமாயணம் கேட்கும்போது அளவுக்கு அதிகமான அவரது ஈடுபாட்டின் காரணமாக, அன்றுதான் ராமாயண நிகழ்ச்சிகள் நடப்பதாக பாவித்து தாம் யார் என்பதனையும் மறந்து, ஸ்ரீராமர் போர் செயக் கஷ்டப்படுகிறார் என்று ராமருக்கு உதவ தனது படையுடன் புறப்பட்டவர் குலசேகர ஆழ்வார் என்பது போற்றத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :